1.கடவுளின் ரோஜா, நீலநிற சொர்க்கத்தின் சிந்தூரக்கறை,
ஆனந்த ரோஜா, இனிய ஜோதி, வானவில்லின் வர்ணஜாலப் பரவசம்!
மானுடத்தின் இதயத்தில் குதித்தெழுவாய், ஓ அற்புதமே சுடரே,
நாமமற்றவனின் மலர்க்கொடியே, தெய்வத்திறனுடையவனின் அரும்பே.
2. இறைவனின் ரோஜா, முழுமையில் பூக்கும் மெய்யறிவு,
ஒளியின் ரோஜா, இறுதிநோக்கின் மாசற்ற இதயம்!
எங்கள் மண்ணின் மனதில் வாழ்வாயாக; ஓ விளக்கமுடியாத,
பொன்னே, மலரே, காலமற்றவனின் முதன்மைச் சூரியனே,
உன்னதப்பொழுதின் அதிதியே.
3. ஆண்டவனின் ரோஜாவே, முடிவற்ற சக்தியின் செந்நிறமே, வல்லமையின் செவ்வடிவே,
ஆற்றலின் ரோஜாவே, உன் வைரஒளிச்சுடர் இரவின் கருமையை ஊடுருவும்!
மானுட மனத்திட்பத்தின் சுடர் விளக்கே, உனது ஆச்சர்யத்திட்டத்தை வரை பட மாக்குவாய்.
அமரத்துவத்தின் வடிவே, மனிதனில் தெய்வீக வெளிப்பாடே.
4. தெய்வீக ரோசாவே, தெய்வ அவதாரத்தின் ஆசைக் கருஞ்சிவப்பே,
வாழ்க்கையின் ரோசாவே, இதழ்கள் கூட்டத்தின் இசைக்கும் வர்ணஜாலமே!
இனிய மந்திர ஒலியியைத்து, மானுடர் உடலை உருமாற்றி, பூமியையும் சொர்க்கத்தையும்
இணைத்து, காலத்தின் குழந்தைகளுக்கு இறவா வரமருள்வாய்
.
5. இறைவனின் ரோஜாவே, நிலைபேறுடையவனின் திருமுகத்தில் திகழும்
ஆனந்த பரவசத்தின் நாணச் சிவப்பே. அன்பின் ரோஜாவே, அனைவரின் ஆழ்மன
மாணிக்கமே, கருணையின் செந்நிற விழைவே, இயற்கையின் மடியில் விம்மி ஏங்கும்
இதயத்தினின்றும் மேலெழுவாயாக! இப்பூவுலகை விந்தைகளின் விளைநிலமாய்,
வாழ்க்கையை பேரின்பத்தின் முத்தமாக்குவாய். ———-ஶ்ரீ அரவிந்தர்.
வெண் தாமரையே, அவதார புருஷனே, மஹாயோகியே,
புதுவையை புனிதப் புண்ணிய பூமியாக்கிய தேவனே,
ரோஜாவைப் பாடிய இனிய கோகிலமே,
செந்தாமரைக் கண்ணனே, தெய்வீக ஒளியை
பொன் மேனியிலே தாங்கிய அரவிந்தமே.
No comments:
Post a Comment