9 Dec 2011

காவிரி நதியுடன் கை கோர்த்து



                                             காலச்சுவடுகள்.


மலைசூழ் மாநகர் எனப் போற்றப்படும் சேலம் தமிழ் நாட்டின் ஒரு ஜில்லாவாகும். பல சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சுகவனேச்வரர் திருக்கோயில் இங்கே உள்ளது. மிகப் பெரிய அக்கோயிலில் அம்பிகையின் பெயர் சுவர்ணாம்பிகை. கோயிலின் எதிரில் பேலஸ் தியேட்டர். பக்கத்தில் தியசாபிகல் சொசைட்டி. இந்த சொசைட்டியின் ஆரம்பப் பாடசாலையில் தான் அடியேனுடைய அட்சர அப்பியாசம் ஆரம்பம். பக்கத்திலேயே வீடு. அந்தச் சின்ன குடியிருப்பு வீடு இன்னும் நினைவு இருக்கிறது.

1950ம் ஆண்டு என் தந்தையார் சேலம் புறனகர்ப் பகுதியில் புதிதாகத்தோன்றிய ஸ்வர்ணபுரியில் வீடு ஒன்று கட்டினார். நல்ல பெரிய வீடு. ஓடு இறக்கிய வாசல்  ஹால், இன்றைய வரவேற்பு அறைபோல. கூடவே அப்பாவின் ஆபீஸ் ரூம். அடுத்து கூடம். அப்பாவின் படுக்கை அறை. உள்ளே போனால் பூஜை யிடத்தோடு கூடிய பெரிய புழங்கும் இடம். இன்னொரு சிறிய ரூம், ஸ்டோர் ரூம். அடுத்து சமையலறை. எதிரில் இன்றைய பாஷையில் சாப்பாட்டு அறை. பின் பக்கம் குளியலறை, ஒன்றுக்கு இரண்டாக டாய்லெட். கண்டாமுண்டா சாமான்களை பத்திரப் படுத்தும் அறை.

புதிய வீட்டின் புதுமனை புகும் விழா முடிந்த கையோடு என்னை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் சேர்த்தார் என் அப்பா.என் அண்ணன் பாலனை லிட்டில் ப்ளவர் மாணவர் பள்ளியிலும், தம்பிகள் இருவரையும் வீட்டின் பக்கத்தில் இருந்த கலைமகள் ஸ்கூலிலும் சேர்த்தார். யார் என்னை தினமும் கொண்டு விட்டார்கள் என்று நினைவில்லை. நான்கு,ஐந்தாம் வகுப்புகள் படிக்கும் போது பெரிய அண்ணா ராஜப்பன் சைக்கிளில் கூட்டிப்போவார். ஒரு நாள் என் பாவாடை சைக்கிள் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு விட்டது. புதுப்பாவாடை என்று நினைக்கிறேன். அதைக் கிழியாமல் எடுப்பதற்க்குள் போதும் போதும் என்று ஆகி விட, பாவாடை முழுவதும் சைக்கிள் மை ஈஷிக்கொள்ள, வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆ,ஊ,என்று வசைபாட, அன்றோடு சைக்கிளில் அண்ணாவுடன் பறக்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன். அண்ணாவுக்கு சைக்கிளை வெகு வேகமாக,சைக்கிள் பாரைப் பிடித்துக் கொள்ளாமல், எங்கள் மூன்று பேரையும் வைத்துக்கொண்டு ஓட்டப்பிடிக்கும். ஊர்க்காரர்களுக்கு என்ன, கிருஷ்ணரைப் பற்றி கோபியர்கள் புகார் செய்தது போல் வீட்டில் மெனக்கெட்டு வந்து புகார் சொல்லிப் போவார்கள்.  நிறையமுறை அண்ணாவுடன் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். அது ஒரு ஜாலியான அனுபவம்.

image


காலையில் சாப்பாட்டுத்தூக்குடன், தோழிகளுடன் புளியம் பழம் பொறுக்கிக் கொண்டு , பள்ளிக்குப் போவது வருவது. அந்தக்காலத்தில் வீட்டுப்பாடம் எல்லாம் கிடையாது. சாயங்காலம் பூராவும் விளையாட்டு. ஆறு மணிக்கு விளக்கேற்றி வைத்து அம்மா ஸ்லோகங்கள் சொல்லிக்கொடுப்பதை கற்றுக் கொண்டு படிக்க உட்காருவோம். ஒன்பது மணிக்கு முன்னால் தூங்கிவிடுவோம்.

வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் போட்டிருந்தார் அப்பா. பின் பகுதியில் அவரைக் கொடியின் காய்கள் பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். சுவைக்கு கேட்கவே வேண்டாம்.வெண்டை, கொத்தவரங்காய், கத்தரி, முள்ளங்கி, கேரட் கீரைகள் என எல்லாக்காய்களும் காய்க்கும். காய்கள் மட்டும் போதுமா? ஒரு பகுதியில் கனகாம்பரம், டிசம்பர், ரோஜா,வாசலில் ராமபாணம் எனப்படும் மல்லிகைக் கொடி ஓட்டின் மேல் படர்ந்து பூத்துக்குலுங்கும். மாலை வேளைகளில் ஒட்டின் மேல் மெதுவாய் இறங்கி, எல்லா மொக்குகளையும் ஒன்று விடாமல் பறித்துக் கட்டி, அம்மாவிடம் அதற்காக நிறைய  திட்டும் வாங்கியிருக்கிறேன். ராமபாணப் பூவின் தெய்வீக மணத்தில் ஒரு மயக்கம்! வாசலில் குண்டு மல்லி, முல்லைப் பூங் கொடிகளும் உண்டு.

அசோகா, சவுக்கு, மரமல்லி, பாதாம் மரங்களும்,சிறிதாகப் பூக்கும் வெண்மை நிற நந்தியாவட்டைச் செடியும் வாசலில் இருந்தது. அப்பா தினமும் காலையில் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே இந்தப்பூக்களைப் பறிப்பார். கூடை நிறைந்ததும் ‘அன்னபூரணியை’ அழகாக அலங்காரம்  செய்வார். அவர் காலமாகி முப்பத்தைந்து வருடங்களாகியும் இன்னும் அவர் சொல்லும் ‘அன்னபூரணாஷ்டகம்’ என் காதுகளில் ஒலிக்கிறது.

வீட்டின் பக்கவாட்டில் மாதுளை, சப்போட்டா, கொய்யா மரங்கள் இரண்டு, சிவப்பு, வெண்மை சதைப்பற்று உள்ளது, எனப் பழமரங்களும் இருந்தது.வாசல் கேட்டை ஒட்டி திராட்சைக் கொடி ஒன்றை அப்பா வைத்தார்.  அந்தப்பக்கமாக வருபவர்களும், போகிறவர்களும் ‘இது என்ன கொடி சார் ‘ என்பார்கள். ‘திராட்சை’ என்றால், ‘சார், ஒரு நாயை அடித்து வேரில் புதையுங்கள், அப்போதுதான் இந்த ஊரில் திராட்சை காய்க்கும்,’ என்பார்கள். இதைக் கேட்டுக்கேட்டு அலுத்துப்போய் அப்பா ஒரு நாள் அந்தக்கொடியை வெட்டி விட்டார். இப்போது எழுதுவது எல்லாம் 1952 முதல் 1959 வரை என் நினைவில் நிற்பவை.

காலை வேளைகளில் அப்பா ஊரில் இருக்கின்ற சில நாட்களில், பல் தேய்ப்பது கூட தோட்டத்தில்தான் நடக்கும். காலணாவுக்கு வெற்றிலை வாங்கி வந்தால் ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். சத்தமாக அப்பாவின் குரல் கேட்டால் சண்டை நடப்பது தெரியும். அப்பாவின் அம்மா, என் பாட்டியின் கைங்கரியம். ஸ்லோகம் சொல்லிக்கொண்டெ அடிக்கடி அம்மாவுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருப்பாள். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து காப்பி போட்டு, சமையல் செய்துவிட்டு, ஏழு மணிக்கு எண்ணெய்க்கிண்ணம், குடம் சகிதம் கோயிலுக்குப் புறப்பட்டு விடுவாள். அரச மரத்தடிப் பிள்ளையாருக்குத் தண்ணீர் அபிஷேகம் செய்து, பூ போட்டு, விளக்கேற்றி மூன்று பிரதட்சணம் செய்து, வீடு வந்து ஜபமாலையை உருட்டிக் கொண்டே சகட்டுமேனிக்கு அம்மாவைத் திட்டிக்கொண்டு இருப்பாள். யாராவது பக்கத்தில் வருவது தெரிந்தால் உடனே ராம, ராம என ஜபம் செய்வது போல் பாசாங்கு செய்வாள். என்னை அடிக்கடி ஸ்லோகங்கள் படித்துக்காட்டச் சொல்வாள் ஆதலினால் தமிழ் மொழியில், படிப்பில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. ஹிந்து பேப்பர் சுப்ரமணிய ஐயர் வீட்டில் வெள்ளி தோறும் நடைபெறும் பஜனைக்கு, பாட்டிக்குத்  துணை நான்தான். ஆசை ப்ரசாதத்தின் மேல் தான் என்றாலும் திருப்புகழும் என்னைப் பற்றிக் கொண்டது.

எங்கள் வீட்டின் வலது பக்கம் அந்தக்காலத்தில் சினிமா புகழ்’ கேமராமேன்’ டபிள்யு.ஆர் சுப்பாராவ் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். அவருடைய சகோதரர் குடும்பமும் சேர்த்துக் கூட்டுக் குடும்பம். ஏழெட்டுக் குழந்தைகள். வீடே கலகலவென இருக்கும். அங்கே போய்விட்டால் நேரம் போவதே தெரியாது.

முதல் வீட்டில் சுப்ரமணிய ஐயர் குடும்பம்.அவருக்கு மூன்று பெண்கள்.
மங்களம், சாரதா, சாந்தா என்று பெயர். இடது கைப்பக்கம் நாலு வீடு தள்ளி குருமூர்த்தி ஐயர்,பொன்னம்மா டீச்சர்,நன்னையர் வீடுகள். விளையாட நிறைய குழந்தைகள் இருந்ததால் எப்போதும் ஆட்டமும்  ஓட்டமும்தான்.

கோவிலுக்குப் பக்கத்தில் மாதர் சங்கக் கட்டடம். சகுந்தலா மாமிதான் பிரசிடெண்ட். அவள் பெண் இந்திரா நன்றாக டான்ஸ் ஆடுவாள். எனவே கிருஷ்ணஜயந்தி சமயத்தில் பாட்டும் டான்சும் அமர்க்களப்படும். இந்திராதான் எப்போதும் கிருஷ்ணர்!
1956ல், அதாவது, நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது  என் தங்கை பிரேமா பிறந்தாள்; ஒரு நாள் மாலை நான் பள்ளி விட்டு வந்து கொண்டிருந்த போது அம்மா வேலைக்காரப் பெண்ணுடன் வருவதைப் பார்த்தேன். செயிண்ட் மேரிஸ் கான்வெண்டைச் சேர்ந்த ஆஸ்பத்திரிக்கு அம்மாவுடன் போய் வந்தேன். பாவம் அம்மா, மூச்சு முட்ட 2  கிலோமீட்டர் நடக்கவேண்டுமென்றால், அதுவும் நிறை மாத கர்ப்பிணியாய்?

அதன் பிறகு அம்மா ஒரு நாள் என்னையும், என் அண்ணா பாலனையும், சொசைட்டி ஆபீசில் பணி புரியும் கிறித்துவ நண்பர் ஒருவருடன் ஸ்டேஷனுக்கு, அதாவது சேலம் ஜங்ஷனுக்கு இரவு நேரத்தில்
அனுப்பினாள். என் அம்மாவின் அம்மா, ரயிலில் இருந்து இறங்கி பெயர் சொல்லிக் கூப்பிடுவாள் என்றும், நாங்கள் இருவரும் பாட்டியை அடையாளம் கண்டுகொண்டு அழைத்து வரவேண்டும் என்றும் ஏற்பாடு. எனக்கு பத்து வயது, பாலனுக்கு பன்னிரண்டு, மோகனுக்கு ஏழு, ரவிக்கு ஆறு வயது. ஸ்டேஷனில் ரயிலும் வந்தது, பாட்டியும் வந்தாள். சாமானங்களுடன் இறங்கிய பாட்டி, கமலா, பாலா என்று கத்தவும், உடன்
வந்த நண்பர் எங்களைப் பக்கத்தில் அழைத்துப் போய், அடையாளம் கண்டு பாட்டியுடன் வீடு வந்தோம்.

மருத்துவச்சியின் துணையுடன் பிரேமா பிறந்தாள். அன்று மீண்டும் அந்த நண்பருடன் சொசைட்டி ஆபீஸ் சென்று, [அந்தக்காலத்தில் எஸ்.டி டி.,புக் செய்யவேண்டும்] அப்பாவுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. பல சமயங்களிலும் நான் யோசித்ததுண்டு, அம்மாவுக்கு ஏன் அப்பாவிடம் அவ்வளவு கோபம் வருகிறது என்று. அப்போது விவரம் தெரியாத வயசு.ஆறு குழந்தைகளுக்கு தகப்பனான பிறகும், ஏழாவது குழந்தை பிறக்கும் சமயத்தில், கூட இருக்காமல் அப்படி என்ன வேலை? அண்ணாவுடன் சேர்த்து ஐந்து குழந்தைகளுக்கும் சமைத்து, எல்லா வீட்டு வேலைகளையும் எப்படித்தான் செய்தாளோ? கோபம் வராமல் என்ன செய்யும்? இந்தக் காலத்தில் ஆண்கள் பரவாயில்லை.  பெண்களும் ஆளக்கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதுதான்.

இந்த நிலையில் ஏழு போதாதென்று எட்டாவதாக வந்தவள் தான் லஷ்மி! ஆமாம் எங்கள் வீட்டுப் பசு மாடு. முக்கியமாக பிரேமாவிற்காக வாங்கிய லஷ்மிக்கு வலது பக்கத்தோட்டப் பகுதியில் கொட்டகை போடப்பட்டது. பசும்புல், சோளத்தட்டை, வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு எல்லாம் கூடவே வந்தது. பாவம் அம்மா, ஊற வைத்த பருத்திக் கொட்டை அரைப்பதற்கு ரொம்பக் கஷ்டம், அதனோடு புண்ணாக்கையும் சேர்த்து அரைப்பாள். மாட்டுக் கொட்டாயை சுத்தம் செய்தல், சாணி தட்டுதல், மாட்டைக் குளுப்பாட்டுதல் என முதுகொடியும் வேலைதான். ஆனால் பசும் பால் சுவையோ சுவைதான். வெள்ளித்தட்டில் சாதம் போட்டு, பால்விட்டுப் பிசைந்து சாப்பிடு சாப்பிடு என்பாள் அம்மா. எனக்குத் தெரியாது, ஒரு நாளாவது அம்மா பால் சாப்பிட்டாளா என்று!

கேட் திறந்திருந்தால் லஷ்மிக்கு குஷிவந்து விடும். ஒரே ஓட்டம் தான். அதுவும் பின்னால் யாராவது ஓடி வருவதைப் பார்த்துவிட்டால் இன்னும் வேகமாக ஓடுவாள். அம்மா ஓடிப் போய் கூப்பிட்டால் தான் நிற்பாள். லஷ்மியைத் துரத்திக் கொண்டு, லஷ்மி ஓடுவாள்! ஆம், அம்மாவின் பெயரும் லஷ்மி.

பசு மாடு வீட்டில் இருந்தாலே அழகுதான். அதன் முகத்திலேதான் எத்தனை அமைதி. அந்த சாந்தம் தான் லஷ்மீகரம். எங்கள் லஷ்மியும் குழந்தை பெற்றாள். கன்றுக் குட்டிக்கு அம்மா ராகிக் கஞ்சி வைத்து நீளமான மூங்கில் குழாயில் ஊற்றிப் போட்டுவாள். கடைசியில் கன்றுக்கு நோய் வந்து இறந்து போனது. அப்பாவும் குடும்பத்தை நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு கூட அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். லஷ்மியும் விற்கப்பட்டாள்.

சுவாமிபடங்கள் வைக்கப்பட்டிருந்த ஹாலில் உள்ள ரூம் தான் எங்களுடைய விளையாட்டு மைதானம். ரவியும், மோகனும் கட்டில் மேல் உள்ள படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜிகுபுகு என்று ரயில் ஓட்டுவார்கள். அப்பா வீட்டில் இருந்தால் கப்சிப், ஆனால் சாப்பிடும் போது மாட்டிக் கொள்வோம். பொது அறிவுக் கேள்விகளை அப்பா கேட்பாரென்பதால் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடுவோம். அப்பா என்றால் சிம்மசொப்பனந்தான்!

நான் ஏழாம் வகுப்பு படித்தகாலத்தில் தான் சுஜாதா பக்கத்து வீட்டிற்கு குடி வந்தாள். அவளுக்கு சாவித்திரி டீச்சரைப் பிடிக்கும்.டீச்சருக்கும் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் இருந்ததால் நட்பு வளர்ந்தது. ஆம், சுஜாதாவின் அம்மாதான் பிரபலபாடகி அனந்தலஷ்மி சடகோபன். அவர்களுடைய பாடல்
களை, அதுவும் ஊத்துக்காடாருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
  
ஏழுவயது வரையான என் குழந்தைப்பருவம் இனிமையானதுதான். பாட்டு,விளையாட்டு என சிட்டுக்குருவியைப் போல சுதந்திரமாகத் திரிந்த நாட்கள் அவை. பள்ளிக்கூடம் ,அந்த மாதா கோயில்,பள்ளியைச் சார்ந்த தோட்டம், நடந்து செல்லும் புளிய மரங்கள் அணி வகுத்த சாலை, பச்சைப்பசேலென்று இரு புறமும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்கள், தண்ணீர் நிறைந்த ஏரி, சாமரம் வீசும் சுகமான தென்றல் காற்று, கள்ளமில்லாத ஒரு சிறுமி, ஒருநதியைப் போல…..! ஆம், ஒவ்வொரு பெண்ணும் ஒரு நதிதான்,……………….!
  
என் அப்பாவிற்கு பிரமோஷனுடன் கூடிய டிரான்ஸ்வர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு! குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம்.குன்னூரில் சந்திப்போம். மலை சூழ் மா நகரிலிருந்து,  மலைகளின் அரசி,.நீலகிரிக்கு….. 
                                    ——————————————

No comments:

Post a Comment