14 Dec 2011

பாலனென்ற அண்ணன்.(9.9.1943-22.11.2011)

 1.       

  image
  ” பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா ,” என்ற பாடல்  எங்கோ ஒலிக்கிறது! பாலன் நினைவு வந்து விட்டது. பாலன் என்றால் குழந்தை என்றல்லவா பொருள்! அது என்ன பாலன் என்று பெயர் வைத்தீர்கள்?

                       அட, அவன் பெயர் பாலசுப்பிரமனியன். பாலா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டு பாலன் என்றே ஆகிவிட்டது. அதனால் என்ன, கேரளாவில் பாலன் என்ற பெயர் பிரபலமானது தான். இரண்டு அண்ணன்களுக்குத் தம்பி, இரண்டு தம்பிகளுக்கும், இரண்டு தங்கைகளுக்கும்  அண்ணன். ஶ்ரீ.வைத்தியனாத ஐயர், லஷ்மி அம்மாவிற்கு சீமந்தம் பண்ணாத முதல் புத்திரன். ஆம், ஶ்ரீ வைத்யனாத ஐயருக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவள்தான் அம்மா.

                        1943ஆம் வருடம் செப்டம்பர் மாதம், 9ஆம் தேதி, ஆவணி, பூராட நட்சத்திரத்தில் செக்கச்செவேல் என்று குழந்தையைப் பெற்றெடுத்தாள் லஷ்மி அம்மா. அவனும் வளர்ந்தான், கூடவே ஆஸ்த்துமா. சாதாரணமாக எல்லோருக்கும் தந்தைவழி, தாய் வழிப் பாட்டனார் சொத்துக்கள் கிடைக்கும். வீடு, வயல், நகை, பணம் என்று. ஆனால் பிறவியிலேயே அவனுக்குக் கிடைத்த சொத்து என்ன தெரியுமா? வாழ்னாள் முழுவதும், கடைசி மூச்சு வரையிலும், மருந்துகளையே நம்பி வாழும் நிலையை ஏற்படுத்திய ஆஸ்துமா நோய்தான். இதுவென்ன ஆஸ்துமா நோயெல்லாம் சாதாரணம், மருத்துவ வசதிகள்  நிறைய உள்ளனவே என்று நீங்கள் சொல்லலாம்! 1950 களில் அவ்வளவு மருத்துவங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. குடும்பச் சொத்து, யாரும் பங்குக்கு வராதது, மருந்துகள், மருத்துவர்களுக்கு கட்டுப்படுமா?

                      சிறு வயதில் ஸ்வர்ணபுரியில் நான் பெரும்பாலும் பாலனுடைய நண்பர்கள்,ஜகதீஷ்,கணேஷ், சுந்தர் ஆகியோருடன் நிறைய விளையாடியிருக்கிறேன். ஜகதீஷ் என் தோழி பிரேமாவுடைய அண்ணன். அதனால் பாலன் தன் தங்கைக்கும் பிரேமா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தான். நானும் அவனும் வேணுமான அளவு சண்டை போட்டிருக்கிறோம். ரொம்ப கோபம் வந்தால் என்னை, காளி, மஹாகாளி, பத்ரகாளி என்று  திட்டுவான். மற்றபடி அவனுக்கு மூச்சு  வாங்க ஆரம்பித்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். உடனே  அம்மா குமட்டி அடுப்பை பற்ற வைத்து இரும்பு வாணலியை ஏற்றி, அரிசி உமியை மூட்டையாகக் கட்டி வாணலிச்  சூட்டில் சுட வைத்த உமி மூட்டையால் ஒத்தடம் கொடுப்பாள். சித்தரத்தைக் கஷாயம் தயாராகும். இப்படியாக  வளர்ந்த பாலனுக்கு குன்னூர் குளிர் இன்னும் பகையானது. அவனும் தினம் ஊட்டியில் உள்ள அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரிக்கு டிரெயினில் போகவேண்டும். அவனுக்காக ஒரு சூடு தாங்கும் டிபன் கேரியர் வாங்கப்பட, அதையும் தூக்கிக் கொண்டு போவான்.

                       இவ்வாறு இருக்கையில் ஒரு முறை அவனுக்கும் மிகவும் மோசமான மூச்சிரைப்பு வந்துவிட எல்லோரும் பயந்தே போனோம். டாக்டர் வரவழைக்கப்பட்டு ஊசி போட்டபின் தான் அவனுக்கு சரியானது. அப்போது  எட்டாம் வகுப்பில் சரித்திரப்பாடத்தில் எங்களுக்கு பாபர், ஹுமாயூன் பற்றிய பாடம் இருந்தது. தன் மகன் ஹுமாயூனுக்கு உடல் நலம் மோசமான போது தகப்பனார் பாபர், தன் மகன் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, தன் மகனின் நோயைத் தனக்குத் தந்து அவனைக் காப்பாற்ற வேண்டும் என வேண்ட  அவ்வாறே பாபர் இறந்தார் எனவும், ஹுமாயூன் பிழைத்ததாகவும் கதை. நானும் அப்படியே பாலன் கட்டிலை சுற்றி வந்து அவனுடைய ஆஸ்த்மா எனக்கு வரட்டும் என்றும், அவனுக்கு குணமாக வேண்டும் என்றும்  வேண்டிக்கொண்டேன். இதைப் படிப்பவர்கள் சிரிக்கலாம். ஆனால் என்னுடைய களங்கமற்ற மனமும், அவன் மூச்சுத் திணறி பட்ட கஷ்டமும் என்னை அப்படித்தான் செய்யத் தூண்டியது. துரதிர்ஷ்ட வசமாக எனக்கு ஆஸ்த்துமா வந்தது, அவனுடையது போகவில்லை. அவனுக்கு குணமாகியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

                               பிறகு அவனும் காரைக்குடி செட்டினாடு பாலிடெக்னிக்கில் படிக்கப்போனான். அவன் படிப்பு முடிய, நான் கல்லூரியில்! நான் இரண்டாம் ஆண்டு படிக்கையில் அவனுக்கு வேலை கிடைத்து வரங்காவ் சென்றான். வாழ்க்கை மிகவும் குறுகியது! குழந்தைப் பருவம் கண்ணனுடைய பிருந்தாவனம் போன்றது. கவலையில்லாமல் சுற்றித் திரிந்து, ஆடிப்பாடி, தாயின் அன்பில், தாலாட்டில், அவளுடைய பாசத்தில், நேசத்தில், ஊறித் திளைத்து, சகோதர, சகோதரிகளுடன்பேசிச் சிரித்து, மகிழ்ந்து, ஆனந்த வாழ்க்கை அப்போதே முடிந்து விடுகிறது.! ஆம் அவரவர் வழியில், காலம் காட்டிய பாதையில் திசை மாறிப்போனோம். அன்பும், பாசமும், அக்கறையும் மென்மையாகப் பேசும் இயல்பும் உடையவன். ஆஸ்த்மா என்னும் ஆஸ்தியால், அதற்காக அவன் சாப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவால், அவன் பட்ட கஷ்டங்கள் அதிகம்.

                               வீட்டின் விசேஷங்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் சந்தித்திருக்கிறோம், ஆனால் தன்னுடைய கஷ்டங்கள் பற்றி என்றும் அவன் சொல்லியதில்லை. திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் அவனுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு நல்லவேளையாக பரம்பரை ஆஸ்த்தியைக் கொடுக்காமல் பொன்னும், பொருளும், பணமும் வைத்துச் சென்றான். நம்முடைய பிறப்பும், வாழ்க்கையும் நம்முடைய கைகளில் இல்லை, ஆண்டவன் வகுத்தபடியயே நடக்கிறது  என்ற மாபெரும் உண்மையை உணர்வோமானால் வாழ்க்கை சந்தோஷமானதே.

                           சென்ற ஆண்டு,நவம்பர் மாதம் 22ஆம் தேதி,விண்ணுலகு எய்திய அவனுடைய, ஆன்மா சாந்தி அடையவும், மீண்டும் பிறக்கையில், நோயின்றிப் பிறக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
                                                    
   

No comments:

Post a Comment