15 Dec 2011

நினைவுகள்

  1.                   பிரிக்கமுடியாத நினைவாய், பிரியமுடியாத உணர்வாய்,
                      உயிராய், ஒளியாய், ஒலியாய், ஒவியமாய்,காவியமாய்,
                      நீ,என் உயிரில், உள்ளத்தில், எண்ணத்தில் எப்பொழுதும்!

                      அன்று,
                      கடற்கரையில் கால் நனைத்து ஓடிவந்த அலைகள்,
                      காற்றினிலே ஓசையிடும் ஓலம் வந்து எதிரொலித்த
                      நேரம், நேசமுடன் மெரினாவின்  கடற்கரையில், நீ
                      எனக்காய்  பாடினாயே,  பாடல்கள் அனைத்தும்
                      ரகசியமாய் என் காதில்,  மென்மையுடன்  ஒலிக்கும்!

                      கடற்பரப்பில் நிலவொளியின் பாதையொன்று
                      மினுமினுக்க, அவ்வொளியில் கால்பதித்து, கரம்
                      கோர்த்துச் செல்ல ஆசைமிகும்!  அந்நாளில்
                      பேசிமகிழ்ந்த போதுகளை மனமிங்கே அசைபோட,
                      ”விட்டுப்பிரியேன்,” என ”தொட்டபெட்டாவின்,”
                      சிகரத்தில், வெட்டவெளியில், தேனிலவில், பட்டப்
                      பகலில் சொன்னவன் நீ!  என் உயிர் கவர்ந்து போனாய்!

                      உடல் மட்டும் இங்கே உன் நினைவுகளில்!
                      பூங்காவின் வழித்தடங்கள், கால் பதித்த தடயங்கள்,
                      கரம் கோர்த்து நடந்து சென்ற பாதைகளின் ஒரத்தில்,
                      வீசுகின்ற காற்றாய்,  கதிரவனின் பொற்கதிராய்,
                      நிலவொளியின் தண்கதிராய் உன்னை எங்கும்
                      தேடுகின்றேன்! நீ வருவாயோ மாட்டாயோ………
                      நான் வருவேன் உன்னிடத்தில்…………..,

                      முதுமையிலும் உன் காதல் இனிக்கிறது,
                      சோகத்திலும் என் நெஞ்சை நிறைக்கிறது.
     

No comments:

Post a Comment