12 Dec 2011

ஆண்டவனோடு அரை மணி நேரம்.[மொழிபெயர்ப்பு]


”வாழ்க்கையை நோக்கி உன்னால் புன்முறுவல் பூக்க முடியுமானால், வாழ்க்கையும் எப்போதும் உன்னை நோக்கிப் புன்முறுவல் பூக்கும்”.
ஆண்டவனுடைய வழிகாட்டுதலை உணர்ந்து, அதன் படி நடக்க விரும்பி, தெய்வீகத் தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது சாதாரண வாழ்விலும்,யோக வாழ்விலும் சிக்கலாக இருக்கிறது. மனிதனுக்கு, தானே அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவில்லை. இறைவனே அந்தத் தொடர்பை ஏற்படுத்துகிறான். அவனே உன்னை வந்து அடைகிறான். உன் மனசாட்சியை ஒழுங்குபடுத்துகிறான். சொல்ல வேண்டியதைச் சொல்லி, செய்யவேண்டியதைச் செய்கிறான். மின்சார இணைப்பை செருகி, பட்டனைத்  தட்டிவிட்டால்  எவ்வாறு  விளக்கு  எரிகிறதோ, அது போல நீயும் இறைவனோடு  தொடர்பு கொள்ள வேண்டியதுதான். மற்ற எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்.
”மனிதன் மட்டும் ஆன்மிக விழிப்படைய தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டால் எல்லாமே மாறி விடும்,” என்கிறார் ஶ்ரீ அரவிந்தர். எனவே முக்கியமானது உன் அனுமதியே. ”நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். குறைபாடற்றவனாக, நிறைவானவனாக இருக்க விரும்புகிறேன். தெய்வீக நிலையை அடைய விரும்புகிறேன்.”என்று உன் விருப்பத்தை வெளியிட்டு, உன்னைத்  திறந்த மனத்துடனும், உண்மையாகவும், அவன் கரங்களில் ஒப்படைப்பாயாக.
உன்னுடைய அனைத்து ஆசைகளும்,விருப்பங்களும் உன் ஆத்ம நிவேதனத்திற்கும்,இணைப்பிற்கும் தடையாக வரக்கூடும்.

ஆராய்ந்து பார்க்குமிடத்து உனக்கு நான் அறிவுறுத்துவது என்னவென்றால்,”காலையில் எழுந்தவுடன் அரைமணி நேரம் ஆண்டவனுக்காக செலவிடு. இதை உன் வாழ்வின் கொள்கையாய் செய். இறைவனுக்காக மட்டுமே அரைமணியாவது  செலவிடுவேன் என்று சங்கல்பித்துக் கொள். உன்னுடைய குறைபாடுகள், தயக்கங்கள்,சந்தேகங்கள், நம்பிக்கையின்மை,ஆகிய எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தீர்மானத்தைச் செய்
.
ஒவ்வொரு நாளும் காலையில் அரை மணி நேரமாவது அவனுடன் பேசு. உன்னுடைய பிரச்சனைகளை அவன் முன் வை. உன் பேரார்வ விழைவுகளை அவனிடம் கூறு. உனக்கு மிகவும் நெருக்கமான, பிரியமானவர்களிடம் சொல்வது போல், எல்லாம் வல்ல, எல்லாம் அறிகின்ற, அந்த தெய்வத்தினிடம் அவன் உன் குரலைக் கேட்பான் என்ற நம்பிக்கையோடு செலவிடு.

ஒரே ஒரு நாள் முயற்சி செய்; விளைவைப் பார்.ஒரு நாளில் உனக்குத் தெரியும் என்ன பலன் கிடைத்தது, என்ன கிடைக்குமென்று. இதை ஒரு முறை ஒழுங்காகச்  செய்தால் வாழ்னாள் முழுவதும் செய்ய விரும்புவாய்.

உங்களில் யாரெல்லாம் இறைவனின் வழிகாட்டுதல் தேவையென உணர்கிறீர்களோ,நியதிப்படி வாழ விரும்புகிறீர்களோ,அவர்களுக்கெல்லாம்  இறைவனை அடைய மேற்கொள்ள வேண்டிய முதற்படி இதுவே ஆகும். முந்தைய பிறவிகளில் இருந்தும், பிறந்ததிலிருந்தும்,குழந்தைப் பருவத்திலிருந்தும் பல்வேறு வினைப்பயன்கள் மனத்தளவில் ஊன்றப்பட்டுள்ளன. அவை நாம் இறைவனோடு தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

ஆனால் ஒரு முறை தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டு விட்டால், இறைவன் எல்லாவற்றையும் சரி செய்கின்றான். இதுவே நம் துன்பங்களை எல்லாம் விலக்க எளிய வழியாகும். மற்ற எல்லா முறைகளிலும் கடினமான தவம் தேவைப்படுகிறது. நீங்கள் இறைவனுடன் பேசும் பொழுது உங்கள் ஆர்வத்தில், எண்ணத்தில் இருக்கும் தவறுகள் எல்லாம் மறைந்து போவதைக் காண்பீர்கள். உங்கள் குறைபாடுகளை உணர்ந்து திருத்திக் கொள்வீர்கள்.நம் வாழ்க்கை முழுவதும் இறைவணுக்கு அர்ப்பணிக்கும் பிரார்த்தனையாக இருக்கவேண்டும்.
   [Translation of the article ‘Half an hour with God.’]

No comments:

Post a Comment