சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார், ”காசு வாங்காமல் சாப்பாடு போட்டால் அது அன்னதானம்தானே?
ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். புத்தர் ஒரு முறை தன் முந்தைய பிறவி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாராம். ஒரு சக்கரவர்த்தியின் மூன்றாவது மகனாக, மகாசத்வர் என்ற பெயருடன் பிறந்த புத்தர் மிகச் சிறு வயதிலேயே எல்லா உயிர்களையும் தன் குழந்தையாக நடத்தினார்.
ஒரு நாள் சக்கரவர்த்தி தன் மூன்று மகன்களுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடச் சென்றார். வழியில் ஓர் பெண்புலி குட்டிகளை ஈன்ற அயர்ச்சியில் பசியுடன் படுத்திருந்தது. இந்தத் தாய்ப் புலிக்கு மீண்டும் உயிரளிக்க என்ன வழி என்று மஹாசத்வர் கேட்டார்.
புதிய ரத்தமும், மாமிசமும் தான் அதனை உயிர்ப்பிக்கும் என்றனர் அனைவரும்.
யார் இந்தப் புலிக்கு தன் சதையையும், இரத்தத்தையும் கொடுத்து அதன் குட்டிகளையும் காப்பாற்றுவார்கள் என்று கேட்டார் மகாசத்வர்.
யார் கொடுப்பார்கள்? என்று பதில் வந்தது.
மஹாசத்வரின் மனம் உருகியது. அவர் எண்ணினார், இது வரையும் பல பிறவிகளையும் எடுத்து, சம்சாரத்திலே உழன்று, ஆசை, கோபம்,அறியாமை காரணமாக பிறருக்கு மிகச்சிறிய அளவிலேயே உதவியிருக்கின்றேன். இப்போது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு மகிழ்ந்த மஹாசத்வர் மற்றவர்கள் அனைவரையும் செல்லுமாறு கூறினார்.
பின்னர் அமைதியாக, சப்தமின்றி பசியோடு படுத்திருந்த புலியின் முன்பு சென்று படுத்துக்கொண்டார். புலியோ அயர்ச்சியின் காரணமாக வாயையும் திறக்கமுடியாத நிலையில் இருந்தது. இதை உணர்ந்த சத்வர் அருகிலிருந்த ஓர் கூரிய குச்சியினால் தன் உடலைக் கிழித்து புலி இரத்தத்தை உறிஞ்சும் படியாக செய்தார். புலி அவரை உண்டது.
புலிக் குட்டிகளைக் காப்பாற்ற தன்னையே உணவாகக் கொடுத்த இந்த செய்கையானது, மறு பிறவியில் அவர் மிக உயர்ந்த பிறவி எடுக்க காரணமாயிற்று. அவர் உடலை உண்ட புலியும், அதன் குட்டிகளும் மறு பிறவியில் அவருடைய சீடர்களாகப் பிறந்தனர். இத்தகைய கருணைச் செயலை புத்தரால் மட்டுமே செய்ய இயன்றது. தன்னையே பிறருக்காக தியாகம் செய்வதே மிகப் பெரியகருணைச் செயலாகும் என்கிறது,”The Tibetan book of living and dying.”
”கருணை எனும் ஜீவநதியின் ஊற்று பெருக்கெடுக்குமானால் அதுவே மரணத்தை வெல்லும் மிக உயர்ந்த அமிழ்தம், உலக மக்களின் வறுமையை நீக்கக் கூடிய, எடுக்க எடுக்க வற்றாத செல்வம், அனைவருடைய நோய்களையும் நீக்கக் கூடிய தெய்வீக மருந்து, பிரபஞ்சத்தோடு மானுடத்தை இணைக்கும் பாலம்” என்று சொல்கிறது புத்தமதம்.
இதையே அருட் பிரகாச வள்ளலாரும் எடுத்துச் சொல்கிறார். ஜீவர்களுடைய பசிப் பிணியைப் போக்குவதே மிகப்பெரிய தவம். தன்னுடைய உடல் உழைப்பால் பெற்ற செல்வத்தில் சிறிதளவாவது பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், உணவு அளித்தல் தவம். போதும் போதும் என்று மனிதனை சொல்லவைக்கக் கூடியது உணவு ஒன்றேயாகும்.
இதையே அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில், அட நிறையக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, “நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்” என்கிறார். கொஞ்சம் நல்லவரா, ”பிடி சோறு இட்டு உண்மின்,” என்கிறார்.
இப்போது சொல்லுங்களேன் அன்னதானம் என்றால் என்னவென்று.
No comments:
Post a Comment