31 Mar 2012

பாரத மாதாவிற்கு வந்தனங்கள்!

நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடத்திலேயே விமானப்படையில் சேர விளம்பரம் பார்த்து  விளையாட்டாக விண்ணப்பிக்க, நேர்முகத் தேர்வுக்கு வரும்படி அழைப்பு வர இந்தப்பையன் நான் அதில்தான் சேருவேன் எனப் பிடிவாதம் பிடித்து மைசூருக்குப்  போனான். உயரம், எடை, அவர்கள் நடத்திய கடுமையான  உடல்பயிற்சித் தேர்வுகளில் நன்றாகச் செய்ததால் படிப்பு முடிவதற்குள்  வேலையில் சேர உத்தரவு வந்துவிட்டது.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும், வேறு வேலைகளுக்கு முயற்சிக்கலாம், அல்லது மேல்படிப்பு படிக்க, அமெரிக்கா செல்ல முயற்சி செய்யலாம் என்று மனதை மாற்ற எண்ணியும் பிடிவாதம் காரணமாக விமானப் படையில் சேர்ந்தான்.

நாங்கள் பெங்களூர் மாற்றலாகி வந்த வருடம், அவனுக்கும் இங்கேயே இரண்டு வருடம்  பயிற்சிக் கல்லூரியில் டிரெயினிங்.  செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பிள்ளையார் சதுர்த்தி தினம். காலை ஒன்பது மணிக்கு ரயில்வே நிலையத்தில் ரிப்போர்ட் செய்யவேண்டும். விடியற்காலையில் எழுந்து, அவனுக்குப் பிடிக்கும் என்று கொழுக்கட்டைகள் செய்து, பொட்டலம் கட்டி ஸ்டேஷனுக்குப் போனது நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

அவனுடைய டிரெயினிங் காலம் முடியும் வரையிலும் ஒவ்வொறு பண்டிகைக்கும், அவனுக்குப் பிடித்த சமையல் செய்யச் சொல்லி, டிபன் கேரியரில் நிரப்பி, தான் சாப்பிட்டாரோ இல்லையோ, எங்கள் காதல் வாகனம் ''லூனா,''வில் என்னையும் வற்புறுத்தி ஏற்றிக் கொண்டு  வழிதெரியாமல் சுற்றி வந்து திண்டாடி, ஒரு வழியாய் ''ஜலஹள்ளி''யைக்  கண்டு பிடித்து அவன் ரசித்துச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டிருக்கிறார் அவன் தந்தை.

தேசத்தின் பாதுகாப்புக்காக சேவை செய்யும் ஒரு பணியில் மகன் இருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயந்தான் என்றாலும் வசதிகளற்ற, தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடையது.

கட்டுப்பாடுமிக்க இவர்களுடைய வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக பொது வாழ்க்கை! பரோடா, ஶ்ரீநகர், லூதியானா, மும்பை என எல்லா ஊர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும் என் கணவருக்கு மனதில் ஒரு குறைதான். தன் பிள்ளையும் நண்பர், உறவினர் குழந்தைகளைப் போல  கை நிறைய வெளி நாடுபோய் சம்பாதிக்கவில்லை என்று!  ஆனாலும் எல்லோரிடமும் தன் பிள்ளையின் 'Rank,' சேர்த்துதான் பெருமையாக சொல்லுவார்! எல்லோருக்கும் தேச சேவைக்காக தங்கள் குழந்தைகளை அனுப்பும் வாய்ப்பு கிடைப்பதில்லையே!

 நாங்கள் ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்த போது நூறடிக்கு ஒருவராக பாதுகாப்பு கவசம் அணிந்து, கையில் கனமான துப்பாக்கியை ஏந்திக் கொண்டு கடும் குளிரில் நின்று கொண்டிருந்த ஜவான்களைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தேன். பெருமையடைந்தேன்.  என்னுடைய குழந்தைகளாக அவர்களை நினைத்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடந்தது. அமிர்தசரஸ் பொற்கோவிலைத் தரிசித்தபின்  (Wagah) 'வாகா' எல்லையை அடைந்தோம். மாலையில் தேசக் கொடி இறக்கும் வைபவம்! பார்வையாளர்களால் நிரம்பியிருந்த அரங்கில் பாரதமாதாவிற்கு ஜே என்ற கோஷம்  வானை நிரப்பியது. பாதுகாப்பு வீரர்கள் கால்களை வீசி வீசி நடக்க, பார்வையாளர்கள் தேசியக் கொடியை கைகளில் வைத்து அசைக்க  எங்கும் தேசபக்தி வெள்ளம்!

என் கைகளுக்கும் கிடைத்தது தேசியக் கொடி! இரு கைகளிலும் அதனைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு ''பாரத் மாதா கி ஜே'' என்ற கோஷத்தால் நிரம்பிய வான வெளியில் ,  காற்றில் அசைந்த தேசக் கொடியைப் பார்த்து நின்ற அத்தருணம்  என் கண்ணீர் மலர்கள் பூமித் தாய்க்கு சமர்ப்பணமாயிற்று! இந்தியத் தாயின் மகளாய், அவளுடைய பாதுகாப்பிற்காக மகனை அர்ப்பணித்த தாயாய் பூரிப்படைந்தேன்.

பார்லிமெண்ட் தாக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் இருந்த  வீரர்கள் அனைவரையும் மீண்டும்அழைத்தது ராணுவம். நாடு தாக்கப்பட்டால் தயார் நிலையில் இருக்கவேண்டிய நிர்பந்தம்.  இந்தியாவின் ஒவ்வொரு ஊரின் ரயில் நிலயங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ரயில்களைச் சூழ்ந்தது மக்கள் கூட்டம்.

கிராம ஜனங்கள் விற்பனைக்குக் கொண்டுசெல்ல வேண்டி வைத்திருந்த உணவு,
காய்கறி மூட்டைகளை ஜவான்களுக்கு அளித்து, கட்டியணைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்த செய்திகளைச் சொல்லக்கேட்டு, நம் நாட்டு மக்களின் தேசப்பற்றையும், ஓற்றுமையுணர்வையும் உணர்ந்து பெருமையடைந்தேன்.

மஹாகவி பாரதி பாடினானே,

''ஆயிரம் உண்டிங்கு ஜாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?''---என்று!

ஆம் நம் நாட்டு மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இமாலயப் பனியிலும், குளிரிலும், மழையிலும், வெயிலிலும், இருபத்து நான்கு மணி நேரமும், முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்  நாட்டுக்காகப் பணிபுரியும் நம் வீரர்களின் பணி மகத்தானது.   இளமைக் காலம் முழுவதையும் நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் ஒவ்வொரு இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வந்தேமாதரம்! பாரதத் தாய்க்கு என்றும் வெற்றி உண்டாவதாக! ஜெய பாரதம்!




No comments:

Post a Comment