2 Apr 2012

தேடித் திரிகின்ற கண்கள் மடியிலே பால்மணம் மாறாத பச்சைக்  குழந்தையை வைத்துக்கொண்டு புன்னகை முகத்துடன் பூக்கட்டி,  வருவோர் போவோரையெல்லாம்,'' வாசனை  மல்லி வங்குங்கம்மா,'' என்று கூவி அழைக்கும் பொன்னம்மா!

மடக்குக் கட்டில் மேல் புத்தகங்களைப் பரப்பி வைத்து யாராவது வாங்க மாட்டார்களா என்று முகம் பார்க்கும் கன்னையன்!

சாக்குப் பையை மண்ணிலே விரித்து பச்சைமிளகாய், இஞ்சியை கூறுகட்டி விற்கும், காலத்தின் கோடுகளை முகத்தினிலே பிரதிபலிக்கும் வயதான பாட்டியம்மா!

கால்களில் செருப்புக்கூட இல்லாமல் கோணிப்பையை தோளிலும், நாய்களை விரட்டவும்,குப்பையைக் கிளறவும் நீண்ட கழியைக் கைகளிலே பிடித்துக்கொண்டு  ஒரு மஹாராணியைப் போல் கம்பீரமாக நடந்து போகும்  குப்பையில் பேப்பர்களையும், அட்டைகளையும் பொறுக்கி விற்கும்  சின்னத் தாய்!

சீசனுக்கு ஏற்ற மாதிரி ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் விற்கும் தமிழ் நாட்டுத் தங்கராசு!

மாமூலாக பச்சை வாழைப்பழம் வாங்கும் பஸ் நிலைய, தள்ளு வண்டிக்காரா  அப்துல் பாய்!

பச்சைக் கிளிபோல, பளபளக்கும் காவிரிப் பாசன வெற்றிலையும், காரமடிக்கும்  மைசூர், கும்பகோணம் வெற்றிலைகளை  ஈரத்துடன் கூடை கூடையாக,  பக்கவாத்ய   சுண்ணாம்பு, பாக்குடன்  விற்கும் பழனி!

சிவத்த நிறமும்,வெளுத்த சிரிப்பும்  வரவேற்க, பர பரவென  குரல் கொடுத்து, விறுவிறுவென பில் போட்டு மடமடவென  காசை வாங்கி கல்லாவை நிரப்பும்  அன்னபூரணா அரிசிக் கடை பசவராஜ்!

''என்ன சார், நல்லா இருக்கீங்களா ?'' எனப் புன்முறுவல் பூக்கும் மருந்துக் கடைக்காரர்.

காலை நேரத்தில் காதுக்கு பூபாளம், நாவுக்கு டிகிரி காப்பி; ''பீபெரியா, ரோபெஸ்ட்டாவா, மிக்ஸா, பில்டரா, நைசா,'' என்று கேட்கும் காப்பிப் பொடிக் கடை அனந்தா!

''பார்வதி, பரமேஸ்வரா பந்தாயித்து, ஏனு ஸார் சமாச்சாரா,''எனப் புன்னகைக்கும் தாட்சாயணி!

ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்தில் தலையில் முண்டாசுக் கட்டுடன் சைக்கிளில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கும் 70 வயது இளைஞர்  தாசப்பா!

 இருக்கும் இடம் தேடித்தேடி, மானுடக் கண்களுக்குத் தெரியாது மறைந்து கிடக்கும் மதுவை, மலர்கள் தோறும் சென்றணைத்துக் கவர்ந்து வரும் தேனியின் கூட்டை, நெருப்பிட்டுக் கலைத்து, தேனெடுக்க அனுமதி கொடுக்கவில்லை என்று கோபத்துடன் முகம் சிணுங்கும் பீஹாரி!

அன்பைப் பொழிந்து செய்த ரவாகேசரியும் கையுமாக அப்பா என்று ஆழ்மனதின் நேசமுடன்  பாசக்குரல் கொடுக்கும் ரமா!

ஆன்மீக தாகங் கொண்டு அனுதினமும், அன்னைக்கு மலர்களினால் அலங்காரம்! அரவிந்த மாமுனியின் தெய்வீக வாழ்க்கை வழிவகுக்கும் சாவித்ரி வழிநடக்கும் அன்பர் வட்டம்!

வள்ளலார் புகழை மடைதிறந்த வெள்ளமெனப் பாடும் கார்த்திகேயன்!இத்தனை நட்புக்கும்  நடுவே........

 உடற்பயிற்சிக்கு நடைபாதை, ஓய்வெடுக்க சிமெண்ட் இருக்கை, விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம், முதியோரும், இளையவரும் முன்னாலே வந்து முகம் பார்த்துச் சிரித்து, அரசியல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை அலச  ஆசனங்கள் போடப்பட்ட வட்டச் சிறு கூடமுள்ள  அழகான பூங்கா...

விடியலிலே முகம் காட்டி, காலை  வணக்கத்தை தென்றலின் துணையோடு மெல்லெனப் புகலும் சில்வர் ஓக் மரம்!

ஓயாமல் ஓடுகின்ற வாகனங்களின் ஓசை  நடுவே, செவியற்ற மகிழ்ச்சியினை சொல்லாமல் சொல்லி, ஆனந்தமாய் வான் பார்க்கும் எங்கள் குடியிருப்பு!

சின்னக் குழந்தையைப் போல் மாடிப் 'பால்கனியில்,' வருகின்ற வழி மேலே விழி வைத்துப் பார்த்து நிற்பாய்!

இப்போதோ,

போவையிலே வருவையிலே வெள்ளைச் சிரிப்போடு, கையும் பையுமாய் உன்  நரைத்த தலை எங்காவது தெரிகிறதா என்று  பார்த்துத் திரிகின்றன என்  கண்கள்!!!!!!!!

2 comments:

  1. Madam, one would like to say a million words about your Thamizh and your writing. But your subjects [this and the previous one about your son] kindle many emotional thoughts about the vagaries of life. The words get choked in our throats. Reading your writing is a pleasure.

    ReplyDelete
  2. Thank Mr.S.J. It is very very kind of you to comment about my writing. All credit goes to my family who encourage me to write and to look at life from a different angle. So I am with my Mac.Your thoughts gives me fresh energy to write more.Vanthanangal.

    ReplyDelete