28 Apr 2012

கோடை விடுமுறைக் கோலாகலங்கள்

கோடை விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை என்று ஏதாவது ஒரு குடும்பத்தார்  நிச்சயாமாக வருவார்கள். அவர்களுடைய குழந்தைகளும்  நாங்களும் சேர்ந்து கொண்டால் வீடு ரெண்டுபடும். காலையில் ஒன்பது மணிக்கு எல்லாம் சாப்பாடு போட்டுவிடுவார்கள். பிறகென்ன விளையாட்டுகள்  ஆரம்பித்துவிடும்.

பக்கத்து வீட்டுப் பசங்களும் சேர்ந்து கொள்ள  நான்குபேர் கேரம் ஆடுவார்கள். இன்னொறு நாலுபேர் சீட்டுக் கட்டை வைத்துக் கொண்டு செட் சேர்க்கும் ஆட்டம். அரைமணி நேரம் போனால்  இடம் மாறிவிடுவார்கள். 

நாங்கள் குன்னூரில் இருந்தபோது எங்கள் சித்தப்பாவின் மகன்கள் மூன்று பேர் விடுமுறைக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு  எப்பொழுதும் கிண்டலும் கேலியும்தான். எங்கள் வீட்டில் ''கேரம் போர்ட்''கிடையாது எனவே பக்கத்தில் இருந்த சந்தனக்கட்டை ஐயங்கார் வீட்டில் கடன் வாங்கி ஆட்டத்தில் மூழ்கினோம்.
ஏய், நாங்கதான் ஜெயித்தோம் தோத்தங்குளி,தோத்தாங்குளீ என்று என் அண்ணன் பாலன் கத்த, சித்தப்பா பையன் நடைக்கு (நடராஜன்) கோபம் வர, கேரம் போர்டைக் காலால் ஒரு உதை உதைக்க ''போர்ட்'' டப்'பென்று நட்ட நடுவில் உ..டை..ந். .து  போக எல்லோரும்  கப்சிப்!

அப்பாவுக்கு விஷயம் போக எல்லோருக்கும் அர்ச்சனை! முக்கியமாக எங்களுக்கு! வந்த விருந்தினர்களைக் கோபிக்க முடியுமோ? புதிய ''போர்ட்'' சந்தன மாமா வீட்டுக்குப் போயிற்று.

மதிய நேரம் தயிர் சாதம் கிடைக்கும். பிறகென்ன தாயக்கட்டம் களைகட்டும்! எங்கள் பாட்டியும் சேர்ந்து கொள்வாள். சின்னக் குழந்தையைப் போல் சண்டை போடுவார்கள். பேரன் சொல்வான், ''பாட்டி ஏமாத்தாதே, நான் பாத்துட்டே இருக்கேன். ஏன் என் காய வெட்டினே? அநியாயம். அவள் காய வெட்டாம  என்ன வெட்டினியா? இரு இரு வரேன்.'' என்பான். அவனுக்கு வேண்டிய தாயம் விழாது.

மீண்டும் வெட்டுவாள் பாட்டி. இவன் கத்துவான். செகுட்டில அறைவேன் என்பாள் பாட்டி! அழுகுணி ஆட்டம் ஆடாதே, அழுகுணி, அழுகுணி என்பான் இவன். அடடா, சண்டை மண்டை உடையும். கடைசியில் ஒரே தள்ளு.  அவ்வளவுதான் ஆட்டம் க்ளோஸ்.

''திரும்ப விளையாடக் கூப்பிடு,   வரேனா பார்! போடா,'' என்று தூங்கப் போவாள் பாட்டி.
அப்பா வீட்டில் இல்லையென்றால் சாயங்காலமும் தொடரும் ஆட்டம்.  இருந்தால் சத்தம் வராது. மறுநாள்தான். தினந்தோறும் திருநாள்!

அந்த தாயக் கட்டை இப்போது பழைய நினைவுகளில் உருட்ட ஆளில்லாமல் ஓய்ந்து போய் கிடக்கிறது. மலரும் நினைவுகளில் தாயக் கட்டை மஹாத்மியம் அடிக்கடி பேசப்படுகிறது!இப்போது ஆடலாமா என்றால், பாட்டி இல்லாமல் தாய ஆட்டமா? மஜா இருக்காது. நோ சான்ஸ்! என்கிறார்கள்.

இன்னிக்குப் பேப்பர்லே என்ன நியூஸ் படிச்சியா? அப்பா கேட்பார்.  அசட்டுச் சிரிப்போடு
 ஓடிவிடுவோம்."ஹிண்டு '' பேப்பர் படிச்சா இங்லீஷ் நல்லாவரும். படிச்சால்தானே என்று அங்கலாய்ப்பார்.   

ஆயிற்று. நான்கு மணிவரை வீட்டுக்குள்ளே ஒளிந்து விளையாட்டு! வண்ணான் பெட்டி, கட்டிலடி, ஸ்டோர் ரூம், படுக்கையும், போர்வைகளும் என்று வீடு இரண்டு படும். ரோதனை பொறுக்க முடியாமல் வெளியிலே போங்க என்று துரத்துவாள் அம்மா.

ஆறு மணிவரை போலீஸ் திருடன், ஒளிந்து விளையாட்டு, நொண்டியாட்டம், பச்சைக்குதிரை (அதுதாங்க ஹை ஜம்ப்) எல்லாம் விளையாடி அப்பாடா என்று அழுக்கு மூட்டையாய் வீட்டுக்கு வந்து மினி குளியல் ஆனபின் இறை வழிபாடு. அம்மா குத்து விளக்கு ஏற்றி பெண் குழந்தைகளுக்கு ''விளக்கே திருவே வேதனுடன் நற்பிறப்பே," ஸ்லோகங்களை சொல்லவைப்பார். பாட்டு, டான்ஸ் எல்லாம் நடக்கும்.

கோடைக் காலம் வடகம், வற்றல்கள் செய்து வருடத் தேவைகளுக்கு சேமித்து வைக்கும் நேரம்.
புளி, பருப்பு, மிளகாய் என எல்லாவற்றையும் மாடியிலே காயப்போட்டு, காவலுக்கு வாண்டுகள்! அவ்வப்போது வடகங்கள் காணாமல் போகும். தென்னங்குச்சியிலே புளியை உருட்டி வைத்து அம்மாவுக்குத் தெரியாமல் கொண்டுவந்த உப்பைத் துளி சேர்த்து லாலிபாப் மாதிரி சாப்பிடும் ருசியே தனி. புளியங்கொட்டைகளை சேமித்து ஒற்றையா இரட்டையா ஆட்டமும் நடக்கும். இந்தப் புளியங் கொட்டைகளை குமட்டி அடுப்பில் போட்டுச் சுட்டு தின்றால் நன்றாயிருக்கும்.

புளியைப் பற்றி எண்ணும் போது  புளிய மரங்களின் நினைவு வருகிறது. நெடுஞ்சாலைகளில் கண்ணுக்கு விருந்தாய், இருபுறமும் வீரர்களின்  அணிவகுப்புப் போல  நெடிதுயர்ந்து  நின்று, சுமைதாங்கிகளுக்கும்  நிழல் தந்து, யாருக்கும் எந்தக்கெடுதலும் செய்யாத புளிய மரங்கள்  வெட்டிச்சாய்க்கப் பட்டுவிட்டன.

 மரங்களற்ற  நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போதுகளில் மனம் துயரடைகிறது. ஏன் தெரியுமா? ஏழு ஆண்டுகள் புளியமரச்சாலையிலே பயணம் செய்திருக்கிரேன். புளியமரங்கள் என்னுடைய தோழர்கள்.

இரவு நேரங்களில் அந்தாக்ஷரி நடக்கும். கரண்ட் போய்விட்டால் ரொம்ப ஜாலியாக இருக்கும். எல்லோரும் தெருவிலே இறங்கி விளையாட ஆரம்பித்துவிடுவோம். சீக்கிரமாக கரண்ட் வந்துவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் ''குலை குலையா முந்திரிக்கா, நிறைய நிறைய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி," என்று சத்தமாகப் பாடி,ஓடி விளையாட முடியவில்லையே என்று வருத்தமாகிவிடும்.

நல்லவேளை யாரும்  ''யூ.பீ. எஸ்'' மிஷினைக் கண்டு பிடித்திருக்கவில்லை. ஆனந்தமான அந்த நாட்கள் இன்றைக்கும் மனதிலே  சந்தோஷத்தையும், முகத்திலே சிரிப்பையும் வரவழைக்கிறது.No comments:

Post a Comment