15 Apr 2012

Honorable Begging

 சமீபத்தில் எங்கள் குடும்ப வட்டத்தில் ஒரு நிச்சயதார்த்தம்! எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று சொன்னவர்கள் ஒரே வாரத்தில் எல்லாம் ரத்தாகிவிட்டது என்று செய்தி சொல்ல ஆச்சரியமானது!  என்ன காரணமோ?
பையனின் அம்மாவுக்கு ஆசை, பெரிய பெரிய ஆசை!
இரண்டு சாண் அகலத்தில் ஜரிகை போட்ட புடவைகள் மைசூர், காஞ்சி, ஆரணி,  பட்டுகளை
மருமகள் கட்டினால்தான் கழுத்தில் தாலி ஏறுமாம். அந்தப் பெண் பார்த்தது! பட்டுப் புடவைகளைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் என்னைக் கல்யாணம் பண்ண வந்தானோ! நோ கல்யாணம் என்றது.

இன்னொன்று! இப்போதுதான் இருக்கிறதே 'வலை' விரித்துப் பார்த்து, தேடிவந்து பொண்ணு குடுங்க என்றார்கள். மிச்ச கதையெல்லாம் வேண்டாம். நிச்சயதார்த்தமும் நடந்தது.

மேல்கொண்டு பேச வந்தாங்க மாமியார் மேடம்.
1. பெரீய கல்யாண மண்டபம் நாங்கள் ஒத்துக் கொள்வது தான் புக் செய்யவேண்டும்.
2. எங்களுக்குத் தெரிந்த சமையல்காரர்தான்.
3. உறவுகளுக்கு  எல்லாம் கொடுக்க லட்டு, முறுக்கு, மைசூர்பாக், மிக்சர் பாக்கெட்டுகள் வகைக்கு 100, சீர் தவிர வேண்டும்.
4. பையனுக்கு வைரமோதிரம், பிரேஸ்லெட், மைனர் செயின், பெண்ணுக்கு பெரிய வைரத்தோடு.

எங்களுக்கு இதெல்லாம் செய்யமுடியாது. எங்கள் சக்திக்கு உட்பட்ட அளவு செய்வோம் என்றாள் பெண்ணின் அம்மா.

பையன் பெண்ணிடம் சொல்கின்றான், இதோபார் நீதான் இன்னும் படிக்கின்றாயே 'Education loan,' வாங்கு. செலவு செய். இல்லாவிட்டால் என் அம்மாவிடம் கடன் வாங்கிக் கொள். பின்னால் திருப்பிக் கொடு, என்று. எப்படி இருக்கிறது பாருங்கள்!

பத்து லட்சம் செலவு செய்து,'' கடன் வாங்கிக் கல்யாணம்''  பண்ணிக்கொள்ள அவன் என்ன மஹாராஜாவா? கல்யாணத்தை நிறுத்திவிட்டேன் என்று சொன்னாள்  அந்தப் பெண்.
சபாஷ், சரியான முடிவு என்றேன்.

எங்களுடைய கார் சாரதியின் உறவுப் பெண். சொந்த முயற்சியில் படித்திருக்கிறாள். நல்ல வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம். பையனுடைய அம்மா ஒரு லட்சம் விலையுள்ள மோட்டார் பைக் கேட்கிறாளாம். HONORABLE  BEGGING!

கழுத்தில தாலியக்கட்டறவன் என்கிற ஒரே காரணத்துக்காக கேட்கறத எல்லாம் வாங்கிக் குடுக்க காசு காய்க்கிற மரமா இருக்கு?  நிம்மதியா இருக்கறதவிட்டு, கல்யாணம் ஒரு கேடா? ஒன்னும் வேண்டாம் அப்பிடின்னு சொல்லிடிச்சு பொண்ணு! அச்சா! நல்லமுடிவு!

பெண்கள் தைரியசாலிகளாகி வருவது பெருமைக்குரியது!

வாங்கி வைத்த பட்டுப்புடவைகள் எல்லாம் 'காட்ரெஜ்,' பீரோவில்.
தங்க நகைகள் எல்லாம் வங்கி லாக்கரில்!
வெள்ளிப் பாத்திரங்கள் இரும்புப் பெட்டியில்! சும்மா அது வேணும் இது வேணும் என்று ஆட்டிவைக்கிறது சரியா?

மொத்தத்தில் "பெண்ணுக்கு முதல் எதிரி பெண்தான்" என்பது என் அபிப்ராயம்.
இந்த  சீர் செனத்தி கொடுக்க இயலாமையின் காரணமாகவே பெண் குழந்தைகள் வேண்டாம் என்கிறார்கள் என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி.

இருக்கின்ற பணக்காரர்களைப் பார்த்து, இல்லாதவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.  எளியவர்களுக்கு  உள்ள ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி! அதில்தான் எத்தனை நகை விளம்பரங்கள்! ஆசைக் கனலை மூட்டும் பட்டுப் புடவை, அழகு சாதன ஏமாற்றல்கள்! அடுத்தபடியாக எப்படி ஆட்டிப் படைப்பது என்று கற்றுத் தர தொலைக்காட்சி மாமியார்கள், வில்லிகள்!

இம்சிப்பவளும்,  இம்சைப்படுபவளும் பெண்தான் என்று நினைக்க ஆச்சரியம்தான்!

என்றைக்கு இந்த ஆடம்பரங்களையும், அனாவசிய செலவுகளையும் விட்டுவிட்டு, எளிமையான திருமணம் செய்யப்போகிறோம்?

ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் எங்கள் குடும்பம் என்று ஒரு பாடம் வரும். அது போல 'குடும்பக் கல்வி,' என்று இனிமேல் மனித உறவுகளைப் பற்றி பாடம் நடத்த வேண்டும்.  பெண்களுக்கு பள்ளிகளில் 'கராத்தே' கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பயப்படாதீங்க! எல்லாம் ஒரு  தற்காப்புக்குத் தான்.

நேற்று வந்த அவள் விகடன் செய்தி ஒன்று! மருத்துவம் படிக்கும் போது சகமாணவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள் ஒரு பெண். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சந்தேகம் காரணமாக மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தினானாம் அந்த முட்டாள் டாக்டர்.

குடும்பங்கள் எல்லாம் தீவுகளாகிவிட்ட இந்த காலகட்டத்தில்  பரஸ்பரம் நம்பிக்கையும், மதிப்பும், விட்டுக்கொடுத்தலும், மனிதாபிமானமும் குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். அதற்கு எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம்  என்பதையும் மறுப்பதிற்கில்லை.

முதியோர் வழிகாட்டவும், வாழ்த்தவும், உறவுகள் கைகொடுக்கவும் என இருந்தது ஒரு காலம்.
இப்போது முதியோர்களுக்கு வழி காட்டிவிட்டோம்! உறவுகளையே காணவில்லை!

பட்டப்படிப்பு வேறு, மனித உறவுகள் வேறு! இரண்டிற்கும் தொடர்பேயில்லை!  நிச்சயமாக அன்பையும், பரஸ்பர நம்பிக்கையையும், விட்டுக்கொடுத்தலையும், போதிக்கும் மனித உறவுகள் பற்றிய கல்வி அவசியம்தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நீங்க எப்படின்னு கேட்கறீங்க. காதில விழுது!
நாங்க மனித நேயத்திற்கும், அன்பிற்கும் எப்போதோ அடி பணிந்தவர்கள்.

















No comments:

Post a Comment