16 Mar 2012

யாராவது கேட்கட்டும்.......

வீடு என்றால் விடுதல், மேலுலகம், குடியிருக்கும் இடம் என்று அர்த்தம்.
சாதரணமாக வீடு என்ற சொல் குடியிருக்கும் இடத்தையே சுட்டிக்காட்டுகிறது.

''என்னங்க வீட்டுக்குப் போறீங்களா? ''
ஆமாம் போவணும்னுதான் ஆசை,  இன்னும்  நேரம் வரலைனு சொன்னா அடுத்தவாட்டி பார்த்தாகூட  பேசமாட்டாங்க.
என்னப்  பாக்கரவங்க  எல்லாரும்  ஒட்டுமொத்தமா கேக்கர  முக்கியமான கேள்வி இதுதாங்க!
நல்லா இருக்கீங்களா? எங்க இருக்கீங்க?
அடுத்த கேள்வி, வீட்ட என்ன பண்ணினீங்க?
வீட்ட என்ன சமச்சா சாப்படமுடியும்? சும்மாதான் பூட்டி வெச்சிருக்கேன்.
இந்தக் காலத்துல எல்லாரும் தனிய இருக்கதான் பிரியப் படராங்க. செக்யூரிட்டி இருக்குல்ல. நீங்க பாட்டுக்கு இருக்கலாமே?
இருக்கலாம் தான். எனக்கு தனியா இருந்து பழக்கமில்லேங்க!
சரிதான் வாடகைக்கு குடுங்கம்மா! வாடகை பணத்த நல்லா செலவு செஞ்சு நல்லா உடம்ப பார்த்துக்குங்க- இது பூக்காரி அமலா!
சாமானங்க சேர்த்து வாடகைக்கு விட்டா, கூட வாடகை கிடைக்கும் மேடம்! [furnished quarters]
நீங்க வீட்டை விக்கப் போறதா கேள்விப் பட்டேனே! விக்கப் போறீங்களா?
Paying guest accomadation  மாதிரி  செய்யலாம். சொல்லுங்க, நம்ம பசங்க இருக்காங்க!
சும்மா எதுக்கு மாதா மாதம் maintenance வேற குடுக்கரீங்க, தனி ஆள் ஒருத்தர் கேட்கறார்!

பார்த்தீங்களா? வீடு என்னுடையது. எல்லோருக்கும் என் வீட்டின் மீது என்ன அக்கரை என்று!
அந்த  வீட்டை நாங்கள் எப்படி வாங்கினோம் என்று யாருக்காவது தெரியுமா? ஏற்கெனவே இருந்த வீட்டை விற்று, பேங் லோன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க சிக்கனமாக செலவு செய்து, கஞ்சப்பிசினாரி என்று எல்லாரிடமும் கெட்டபேர் வாங்கிய கதை இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய கணவருக்கு பூர்வீக சொத்து எதுவும் கிடையாது. எங்களுடைய உழைப்பில், தியாகத்தில் வாங்கிய வீடு அது.

உங்களுக்கு என்ன சொந்த வீடு இருக்கிறது!! என்று வெளிப்படையாகவே தங்கள் மனதை திறந்து காட்டியவர்கள் பலர். நாங்கள் யார் பொருள் மேலும் ஆசை வைக்கவில்லை. கஷ்டங்கள் பலவற்றுக்கும் இடையே கிடைத்தது அந்த வீடு. நாங்கள் இருவரும் சேர்ந்து யோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வீட்டைப் பற்றி எல்லோருக்கும் என்ன அக்கரை பாருங்கள்!

சமீபத்தில் ஒருவர் கேட்டார், ''உங்க வீட்டில யார் இருக்காங்க?''
நான் சொன்னேன், எங்க வீட்டுக்காரர் இருக்கார், என்று.

என்னை ஒரு மாதிரி மேலயும், கீழயும் பார்த்து விட்டு பேசாமல் நடையைக் கட்டினார்.
அவருக்குத் தெரியும் என் கணவர் இல்லை என்று! ம் ம் யாராவது கேட்கட்டும்!................








No comments:

Post a Comment