18 Mar 2012

நட்பின் அலைகள்

ஒரு மாலைப் பொழுதில் எங்களுடைய அறிமுகம் நண்பர் வீட்டில் நிகழ்ந்தது. அற்புதமாகப் பாடுவார் என்றும், பாடும் போது அவர் வீட்டிலுள்ள குருவாயூர் அப்பன் படம் வைக்கப்படும் ஊஞ்சல் தானே ஆடும் என்றும், ராமகிருஷ்ணா மடத்தில் வளர்ந்தவர் என்றும் நண்பர் கூறினார்.

ஒல்லியான உடம்பு, நல்ல உயரம், பளிச்சென்ற முகம், பரஸ்பரம் அறிமுகம் ஆனோம். மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் அரும்பாக்கத்தில் வசிப்பதாகக் கூறினார். மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான பாகங்கள் விற்கும் கடையில் வேலை. சொல்ப வருமானம். பஜனைகளில் ஆர்மோனியம் வாசிப்பார்.

சிறிது சிறிதாக எங்கள் நட்பு வளர்ந்தது. சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். பேச்சிலும் பாட்டிலும் பொழுது போகும். ஒரு நாள் மாலை அவர் வீட்டிற்குப் போனோம். சிறிய சமையலறையோடு கூடிய ஒற்றை அறை. வறுமை நிறைந்த வாழ்க்கை. ஆனால் மனம் நிறைந்த அன்பு!  போதுமென்ற மனம்  என்பதற்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது.

தியானம் செய்வது எப்படி என்பதை நான் அவரிடமும் கற்றுக்கொண்டேன். அகஸ்திய கீதங்களை அற்புதமாகப் பாடுவார். அவரிடம் கற்றுக் கொண்ட பாடல்களை அடிக்கடி வாய் முணுமுணுக்கும். இந்த நிலயில் அவருக்கு மூன்றாவதாகப் பையன் பிறந்தான். வறுமையே வாழ்க்கை ஆயிற்று. இந்த பக்தி, பஜனை இவற்றுக்கெல்லாம் வறுமையை போக்கும் சக்தி இல்லவே இல்லை.

உத்யோக நிமித்தம் நாங்கள் பெங்களூர் வந்தோம். ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் சென்னை  சென்றபோது அவர் கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்.எப்படி மாறினார்? எப்படி முடிந்தது?

ஐம்பது வயது வரை ஒரு சனாதன தர்மத்தைப் பின் பற்றி வாழ்ந்தவரால் பைபிளும் கையுமாக எப்படி மாற முடிந்தது? மனதில் ஊறி ஊறி சதா சர்வமும் நாராயணா, கோவிந்தா, கிருஷ்ணா, முருகா என்ற நாக்கினால், இறை நாமங்களை எப்படி மறக்கமுடியும்? ''செந்தமிழ் தேன் தரும் நா, வற்றாப் பெரும் செல்வம் பொழிந்திடும் கை''என்ற பாடல் வரிகள் எல்லாம் ஆழ்மனத்திலிருந்து எவ்வாறு அழியும்!
மதங்களினால்  மனிதனின் வறுமை ஒழியுமா? நோய்கள் தீருமா? பசிப் பிணி நீங்குமா?

தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதில் மனிதனைப் போல் வல்லவன் எவனும் இல்லை!
கடவுள் மதங்களில் இல்லை!  நம்முடைய துன்பங்களுக்கு எல்லாம் நாமே காரணம் என்பதை உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  சாதி சமய சழக்கை விட்டேன் அருள் சோதியைக் கண்டேனடி என்ற வள்ளல் பெருமானாரின் அருட்பா காதுகளில் ஒலிக்கிறது.

நேற்று கைபேசியில் பேசிய அவர் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பஜனைதான் செய்கிறோம் வாருங்கள் என்றார் அவர் மனைவி. ஆன்ம ஞானம் பெற்ற எனக்கு மதங்கள் இல்லை.






4 comments:

  1. Kadavul madhangalil illai. Arumai. Enjoyed this post.

    ReplyDelete
    Replies
    1. உலக மக்கள் எல்லோரும் இதை உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

      Delete
    2. how very true.kadavul madangalil illai. nam manthil mattume irukka vendum.

      nice reading ur blog mam
      so many instances like this we come across daily.

      Delete
  2. படித்தவர்களும் படிக்காத பாமரர்களும் ஒரு சேர நம்புவது, 'மதங்கள் வேறுபடுவது போல கடவுளர்களும் வேறுபடுகின்றனர்.' Unfortunate!

    ReplyDelete