13 Jul 2012

ஆட்டோ, ஆட்டோ........

ஆட்டு என்றால் விளையாட்டு, கூத்து என்று பொருள் சொல்கிறது அகராதி. அட இந்த பத்மினியும், வைஜயந்தி மாலாவும் என்னமா ஆடறாங்க, 'சபாஷ் சரியான போட்டி' என்கிறது வஞ்சிக் கோட்டை வாலிபன் சினிமா!
மழையும், காத்தும் பேயாட்டம் ஆடும்-- வானிலை அறிக்கை!
என்ன ஆட்டம் போடறே, அப்பன் வீட்டுக்குப் போ-- புருஷன்!
என்னமா என்னைய ஆட்டிப் படைக்குதுங்க-மனைவி!
ஆடுதல் வல்லானின் ஆட்டத்தால்தான் இந்த உலகம் இயங்குகிறது. அவன் ஆட்டி வைக்கிறான் நாம் ஆடுகிறோம். கடவுளைப் போல நம்மை ஆட்டிப் படைப்பது ஆட்டோ!

அட, கார் இல்லாதவர்களுக்கு இருபத்து நாலு மணி நேரமும் பயணிப்பதற்காகவே இருக்கிறது ஆட்டோ! ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டி வைக்கிறதாலதான் ஆட்டோன்னு பேரு வந்திருக்க வேண்டும். எலும்பு சிகிச்சை நிபுணர்களோடு இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு எல்லாம் ஏதாவது 'tie up' இருக்குமோன்னு சந்தேகப்பட வைக்கிறது ஆட்டோப் பயணங்கள். பள்ளங்களிலே படக் என்று இறங்கி, வேகத்தடைகள் மேலே வெகு வேகமாக ஏறிக் குதித்து நம் உடம்பிலே இருக்கிற எலும்புகள் மளுக் என்று அபாய அறிவுப்பு கொடுக்க, கொஞ்சம் மெதுவாப் போறீங்களா என்று பணிவாக வேண்டிக்கொள்ளாவிட்டால் கண்டிப்பாக ஆட்டோ, 'ஆர்த்தோ க்ளினிக்' வாசலிலதான் போய் நிற்கும்.

ஒரு நாள் ஆட்டோ சாரதியிடம் சொன்னேன் கொஞ்சம் மெதுவா போப்பான்னு. பிலுபிலுன்னு திட்டித்தீர்த்துவிட்டான். ஆட்டோக்களுக்கெல்லாம் முதல் எதிரி ரோடுதானாம். இந்த பெங்களூரு மஹாநகரத்தை பரிபாலனம் செய்யும் அதிகாரிகளில் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் சாலைகளுக்கு எதிரிகள். இம்சை மன்னன் இரண்ய கசியபுவுக்கு அடுத்தார் போல சாலைகளை மாற்றி மாற்றித் தோண்டி ஆட்டோ பாகாங்களை ரிப்பேர் செய்யும் பரம எதிரிகள் என்றார்.

மெட்ரோ ரயிலா, தோண்டு, கேபிள் போடணுமா அந்தப்பக்கம், சாக்கடைக் குழாய் போடணுமா இந்தப் பக்கம், தண்ணீர் பைப் போடணுமா தோண்டு எல்லாப் பக்கமும் என்று தோண்டிவிட்டு அப்படியே போட்டுவிட்டுப் போயிடராங்க. பெங்களூரில ரோட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்க ரகசிய போலீஸ்தான்மா வரணும், ஆட்டோ டிரைவர் ராஜேஷின் சரியான தீர்ப்பு.

எப்படியோ வேற பொழப்பு இல்லன்னு ஆட்டோதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன். நஞ்சுண்டையாவின் புலம்பல் இது. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லே, இந்த டாக்டருங்க பாருங்க சரியா கவனிக்கிறது இல்ல. அம்மா ஒரு நிமிஷம்  ஓரத்தில நிறுத்திட்டு ஒரு டீ குடிச்சிட்டு வந்திடறேன். வெயிட்டிங் சார்ஜ் கம்மிபண்ண முடியுங்களா?

சாந்த்பாஷாவின் ஆட்டோ! எங்க போகணும்? மாமூலான கேள்வி.
ஜே. பீ நகர், முதல் பகுதி. மீட்டார் சரியா இருக்கா?
இருக்கு. எந்த ரூட்டில போகணும்? ரிங்ரோட்டில போனா திரும்பாம நேரா போயிடலாம். (எனக்கு திரும்பி வரணுமே)
எத்தனை சிக்னல்ல நிக்கணும்! அந்த ரூட் வேண்டாம்- நான்.
எப்படி சொல்றீங்களோ அப்படியே போறேன், ஏறுங்க.

சோமசேகர் வழி கேட்டுக்கொண்டே போனார். ரைட்டா, லெப்டா, நேரேயா? ஒரு நிமிடம் ஏதோ நினைவு, சடார் என்று வேறே வழியில் திருப்பிட்டார்.
என்னப்பா இது?
நீங்க சொல்லலையே? ( அதாவது நமக்கு வழி தெரியுமான்னு செக்கிங்)

ஒரு நிமிஷம், சிலிண்டர் மாத்திடறேன்னு சொல்பவர்களும், ரெண்டே நிமிஷம் காத்து நிரப்பிக்கறேன் என்பவர்களும், ஓரங்கட்டி வண்டியை நிறுத்தி செல்லில் பேசுபவர்களும், எல்லாவண்டிகளையும் முந்திக் கொண்டு போய் நம்மை பயமுறுத்துபவர்களும், முணுமுணுத்துக் கொண்டே ஓட்டும் மூட் அவுட் ஆனவர்களும், ஸ்பீக்கரில் பாட்டுப் போட்டு தலைவலி வரவழைப்பவர்களும் என பலமுகங்கள் உடைய ஆட்டோ ஓட்டுனர்கள்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம்! எந்த ஆட்டோவில் ஏறினாலும் ஓட்டுனர் பெயரும், வண்டி எண்ணையும் எழுதி வைத்துக் கொள்வதுதான் அது. சில நாட்களில் போகும் போது வெங்கடேஷ கவுடாவும், வரும் போது வெங்கடேஷும் ! பெருமாள் ஆசீர்வாதம்! இன்னார் உடைய ஆட்டோவில் போனேன் என்றால் சிரிப்பாள் என் பெண்! பஷீர், நூருல் ஹாசன், சங்கரலிங்கம், மாரி கவுடா எனப் பெயர் பட்டியல் நீளும்.

பச்சை நிற ஆட்டோக்கள் சீட்டோடு நம்மைக் கீழே கவிழ்க்கும் சதித் திட்டம் போடுவதில்லை என்பதால் அதில்தான்பெரும்பாலும் பயணிப்பது. என்னதான் சொல்லுங்க, பெங்களூரிலிருந்து சென்னை போக ஆகும் செலவைவிட நாலுமடங்கு காசு ஆட்டோக்களில் போக செலவு செய்யவேண்டும் சென்னை மாநகரிலே! கரெக்டாக சில்லறையைக் கூட திருப்பித் தந்துவிடும்  பெங்களூர் ஆட்டோ சாரதிகளுக்கு ஒரு 'ஜே' போடதான் வேண்டும்.

என்னதான் ஆட்டிவைத்தாலும் ஆட்டோ இல்லையென்றால் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படிப் போவது? ஆட்டோக்கள் வாழ்க! ஆடல் வல்லான் வாழ்க!












3 comments:

  1. :) True really appreciated cheap fares of Bengaluru autos, comparing Chennai autos. We were 150Rs for some distance which Chennai guys would usually ask 350-500. But one bystander threatened the autowallah to put the meter and believe it was less the Rs.70.
    ஆட்டோக்காரர்களின் பெயர்களையும் கேட்டு வைப்பது - ச்சோ ஸ்வீட் :)

    ReplyDelete
    Replies
    1. I don't ask the names.Their name, address,Blood group details are pasted in Bengaluru Autos.So I just note down like instead of worrying about something. But I like it.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete