23 Apr 2012

வானம் பார்க்கும்.........

மழைத் துளி மழைத்துளி, என்று வானம் பார்த்து நிற்கிறது பூமி. எங்கேயோ சிறு மேகங்கண்டால் மனமெல்லாம் பூரிக்க காதலன் வரும் வழிபார்த்து நிற்கும் பேதைப் பெண் போல சிலிர்த்துப் பார்க்கும்! தன் மீது தாகத்தால் தவிக்கும் வேர்கள் கண்டு வருந்தும். பறந்து, திரிந்து நீர் வேண்டிப் பரிதவிக்கும் பறவைகளைப் பார்த்துப் பார்த்து நெஞ்சம் நெகிழும். சூரியக் கதிர்களால் வாடிய மரம், செடி, கொடிகளின் இலைகள் தலைசாய்த்து நிற்கக் கலங்கும்.

மேகங்களற்ற தூய நீலவானம் கண்டு ஆனந்தித்த நாட்கள் பூமிக்கு உண்டு!  கரிய மேகம் கண்டு  விஷமச்சிரிப்போடு இளங்காதலனைப் போல கரியவளே, உடல் கருத்தவளே என்று கேலி செய்த நாட்கள் உண்டு. கரு மேகக் குவியல்கள் நடுவே வெளுத்த நாரைக் கூட்டங்கள் பறப்பதைப் பார்த்து மெய் மறந்ததுண்டு. மழை பொழியும் முன்னே மின்னல்களின் களிநடனம் கண்டு ஆடல் வல்லானை அழைத்ததுண்டு. இடி இடிக்க பயந்ததுபோல் நடித்ததுண்டு!

கருமேகமே வருவாயாக! மழை நீரைப் பொழிந்து மண் தாகம் தணிப்பாயாக. மேகங்கள் முழங்கட்டும், மின்னல் நடனம் ஆடட்டும், வானவில்லின் வர்ண ஜாலம்  வந்து வந்து சூரியக் கதிரோடு ஒளிந்து விளையாடட்டும். மண்ணின் மணம் மனமெங்கும் நிறையட்டும்.

வா மழையே வா! வந்து பூமியை அணைப்பாயாக!
மழைத் துளி மழைத் துளி மண்ணின் மேலே!
மண்ணின் மணமோ விண்ணின்மேலே!
எண்ணத்துளிகள், கண்ணீர்த் தடங்கள்
எழுத்தின் மேலே! மேலே!மேலே!
மழை மழை எனப் புலம்பி அழைக்கிறது பூமி! மனிதர்களும் தான்.


2 comments:

  1. வணக்கம் அம்மா. .கடலூர் என தேடிய போது..தங்களது ப்ளாக்ஸ்பாட் கிடைத்தது...நிறைய கடலூரை பற்றி நிறைய எழுதி உள்ளீர்கள்...மிக மகிழ்ச்சி. St. Anne's குறித்து எழுதி உள்ளீர்கள்..கடலூரை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை...முடிந்தால் எழுதுங்களேன்..நன்றி..(எனக்கு வயது 49 ..கடலூரில் தான் வாழ்கிறேன்..) - அப்பாஜி, கடலூர்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா! எனக்குத் தெரிந்தவற்றை எழுதுவேன்.என் எழுத்துக்களை படித்தமைக்கு நன்றி.

    ReplyDelete