12 Apr 2012

நந்தன வருஷம்

நல்லா இருக்கீங்களா, என்று நேரிலோ தொலைபேசியிலோ கேட்காதவர்களே இருக்கமுடியாது.   ஏதோ இருக்கேங்க, போயிட்டிருக்கு என்று பதில் சொல்பவர்களாகதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே எதோ ஒரு வடிவில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு நாமே எதையாவது வரவழைத்துக் கொள்கிறோம்.

இந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து விடுதலை பெற மனிதன் பலவாறு முயன்று வருகிறான். இறைவழிபாடு, யோகம், தியானம் எனப் பல பாதைகள் அவன் முன்னே!

 'சும்மா இரு சொல்லற,' என்பார் அருணகிரிநாதர்! அவரே சொல்லிட்டார், 'சும்மா அதப்பண்ணு, இதப்பண்ணு என்காதே, நான் ஒன்னும் செய்யமாட்டேன்,' என்று சொன்னால் அது சோம்பேறித்தனம்.

சும்மா இரு என்றால் மனதை அடக்கவேண்டுமாம்! கோடிப் பணம் கொடுத்தாலும் அந்த ஒன்றை மட்டும் செய்யமுடியாதே!  ஒரு கணத்தில் ஒரு மூட்டை எண்ணங்கள்.

 ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. சந்நியாசி ஒருவருடைய மடத்திற்கு ஒரு வழிப்போக்கர் வருகிறார். அவரை சாப்பிட அழைக்கிறார்கள். இலை போட்டு உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.  அவர் முன்னால் சந்யாசி, கையில் கோலோடு! பக்கத்தில் ஒரு குரங்கு.

இந்தக்குரங்கு இருந்த இடத்தைவிட்டு அசைந்தால் சந்யாசி கம்பைத் தட்டுவார்.  குரங்கு கொஞ்ச நேரம்  சும்மா இருக்கும். பிறகு மறுபடியும்  நகரும். இப்படியாக கொஞ்ச நேரம் போயிற்று. சாப்பிடுகிறவருக்கோ ஒரே எரிச்சல். என்னடா இது, நிமிஷத்திற்கு ஒரு முறை கம்பைத் தட்டினால் ருசித்து சாப்பிடமுடியவில்லையே என்று சந்யாசியிடம் சொன்னார்,    

''சுவாமி, பாவம் குரங்கு! சும்மா அதை ஏன் மிரட்டி அடிக்கிறீர்கள்?
ஐயா, நான் கையில் உள்ள கம்பை கீழே போட்டுவிட்டால் இந்தக்
குரங்கு சும்மா இருக்காது. நீங்கள் பாட்டுக்கு சாப்பிடுங்கள்.
பாவம் குரங்கு. விட்டுவிடுங்கள்!
நிச்சயமாக? அப்புறம் நீங்கள் வருத்தப்படக்கூடாது!" இப்படியாக சந்யாசி கம்பைக் கீழே போட்டார்.

குரங்குக்குத் தெரிந்து விட்டது எஜமானர் அடிக்கமாட்டார் என்று. மெதுவாக வழிப்போக்கரின் இலையின் பக்கத்தில் போனது. கொஞ்சமாக சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. வழிப்போக்கர் விரட்ட குரங்கு அவர் தலைமேல் ஏறிற்று. அலறி அடித்துக் கொண்டு எழுந்தார் அவர். அவ்வளவுதான் அவருக்கு உணவு.
சந்யாசியிடம் சொன்னார், ஐயா, கையில் நீங்கள் கம்பு ஏன் வைத்திருந்தீர்கள் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது!

நம்முடைய மனமும் இந்தக்குரங்கைப் போன்றதுதான். அதனால்தான் பெரியவர் முதல் குழந்தைவரை எல்லோருக்குமே பிடித்த மிருகம் குரங்கு. எப்பொழுது பார்த்தாலும் நிம்மதியாக இருக்கவிடாமல் ஏதேதோ எண்ணங்கள். மனம் தான் நினைவுகளின் உற்பத்தித்தலம். பழைய நினைவுகளை சேர்த்துவைக்கும் பொக்கிஷ அறை.

இந்த மனதை நம் வசப்பட வைக்க முடியும் என்று முயன்று வென்றவர்கள் காட்டும் பாதைகளில் ஒன்றுதான் பக்தி. ஆயிரம் நாமங்களை மனனம் செய்கிறோம். அது மனதை ஒருமுகப்படுத்தும். கூடவே இறைவனைக் கற்பனை செய்து கண்முன் கொண்டு வருவது அடுத்தபடி.

இந்தப் பிறவியில் நாம் அடையக்கூடிய பெரிய செல்வம் சிவபெருமானின் திருஅருளைப் பெறுவதுதான் என்கின்ற வள்ளலார் சிவபெருமானை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அழகைப் பாருங்கள்.
சற்றே கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள்.  இதோ, காட்சி தருகிறார் முக்கண்ணனார்.

''கங்கைச் சடையழகு! அதைப் பார்த்தவுடன் காதல் பெருகுகிறது. அச்சடைமேல் பிறைநிலா. அதன் மேல் கொன்றைமலர் மாலை. மாலையின் மேல் வண்டுகள் அணிவகுத்து நிற்கின்றன.
சிவபெருமானின்  அழகிய நெற்றியில் திலகம்.  தன்னைப் பார்க்கின்றவர்கள் மேல் அருள்மழைபொழியும் கண்ணழகு.
தன்னை நேசிக்கின்ற அடியவர்கள் இதய மலரின் மணத்தை முகரும் நாசித்திருக் குமிழின் நல்லழகு.
ஒளி நிறைந்த முல்லை அரும்புகளைப் போல் இருக்கிறது புன்முறுவல். பவழம் போல் சிவந்த
இதழ்கள்! அவர் என்ன செய்கிறார்? வந்த அடியார்களை  இனிக்க இனிக்க வாவென்று மலர் போன்ற வாயினால் அழைக்கின்றாராம்.
அடியவர்கள் செய்யும் விண்ணப்பங்களை கேட்டு அருள் புரியும் செவி. அன்பர்களின்  தேன் மொழிகளைக் கேட்கும் சங்கக் குழை அணிந்த காதுகள்.
சைவம் தழைப்பதற்காக அருள் சுரக்கும் திருவழகு நிறைந்த தெய்வமுகம், முகத்திலிருந்து பொழியும் கருணை, அமுதச் சிரிப்பு.
ஆலகால விஷத்தை அருந்தி, அதனை அன்னை தடுத்து நிறுத்த நீலமணி போல ஒளிரும் கழுத்து.
அன்பர்கள் மனதைப் போல தூய்மை ஒளிரும் வெண்ணீறு அணிந்த திருத் தோள்கள்!
சிவந்தகை மலரில் மான்; செங்கமலக் கையில் மழு! அடியவர்களின் அச்சத்தைப் போக்கும் அபயம் காட்டும் மலர்க்கை; சீரும், சிறப்பும், அருளும் பெறச் சரணமடையக் காட்டும் கைத்தலம்.
பாம்பணியும், வெண்ணீரும் அழகு செய்யும் திருமார்பு! யானைத்தோல் ஒளிரும் இடுப்பு.
மெய்யான அன்பர்களின் உள்ளத்தை எல்லாம் சேர்த்துக் கட்டியிருக்கின்ற வீரக்கழல்கள்.
பதினாறு சித்திகளும் அடைந்த யோகியர்கள் சிந்தையிலே தேனெனத் தித்திக்கும் சேவடிகள்!
மாலும், அயனும், வேதங்களும் காண முடியாத செல்வத் திருவடிகள்.
செம் மலையில் காட்சிதரும் பசுங்கொடிபோல், அம்பிகைக்கு இடப்பாகம் அளித்த, செம்பவளத் திருமேனி."

இத்தகைய பொன்மேனித் திருக் கோலத்தை  தினமும்  பார்த்திருந்தால்  அல்லல்கள் நீங்கும், அவன் புகழைப்  பாடுகின்றவர்கள்  பக்கத்திலே  நின்று  கேட்டால்  வினைகள்  விடை  பெற்றுப்  போகும், துயரமெல்லாம் போகும், தீமையெல்லாம்  ஓடிவிடும்  என்கின்றார்  வள்ளல் பெருமான்  திருஅருட்பாவில்.

இந்தக்  கேசாதி பாத வர்ணனையை மெதுவாக மனக் கண்களினால் கண்டு உள்ளமும், உயிரும், அறிவும் ஒன்றாக நிலைத்து நிற்க நாமே அவன் என்ற பாவனையோடு செய்தால் நிச்சயமாக மனம் நம் வசப்படும்.

இந்த நந்தன வருஷத்  தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழ 
ஜோதி  ஸ்வரூபமான தெய்வசக்தியை வணங்குகிறேன். 

         
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!








2 comments:

  1. இந்த நந்தன வருடத்திலும் இன்னும் பலப்பல வருடங்களும் உங்கள் அருமையான எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிகமிக நன்றி நண்பரே. மீண்டும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நந்தன வருட நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete