2 May 2017

ஶ்ரீஅரவிந்தர்-7



இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய வரலாற்றைப் பற்றி சற்றே அறிந்து கொள்வது இங்கே அவசியமாகிறது.
(1885 ஆம் ஆண்டு உமேஸ்சந்திர பானர்ஜி,சுரேந்திரநாத்பானர்ஜி, ஆலன் அக்டேவியன் ஹ்யூம்,வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.
1888 டிசம்பர் 27 ல் இக்கட்சியின் தலைவராக தாதாபாய் நவ்ரோஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது முயற்சியால் காங்கிரஸ் கட்சி, Indian National  Congress  என்ற பெயர் மாற்றம் பெற்றது.
இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட காங்கிரசில் இரண்டு உட்பிரிவுகள் இருந்தன.
பாலகங்காதரதிலகர் தலைமையில் தீவிர வாதிகளும்,கோபாலகிருஷ்ண கோகலேதலைமையில் மித வாதிகளும் செயல் பட்டனர்.
இவர்கள் ஆங்கில அரசில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்தனரே அன்றி விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானவர்களாக இருக்கவில்லை.)

எனவே இந்திய மக்களின் மனதில் சுதந்திர தாகத்தை மூட்டும் பெரும்பணியில் அரவிந்தர் ஈடுபட்டார். " New Lamps for old" என்ற தலைப்பில் காங்கிரசின் மிதவாதிகளை கடுமையாக விமர்சித்து விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதினார். அவர்கள் கொண்டுவரும் அரசியல் தீர்மானங்களால் எந்தப் பயனுமில்லை என்று சாடினார்.

தீப்பொறி பறக்கும் இவரது எழுத்துக்கள் ஆங்கிலேயர்களை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் கலக்கியது.

அரவிந்தரின்   நுட்பமான செய்திகளைச் சொல்லும் சக்தி, ஆங்கில மொழியின் ஆளுமை, நேர்மை, தைரியம்,கொழுந்துவிட்டு எரியும் தேசப்பற்று, சுயநலமின்மை ஆகியவை காங்கிரசாரின் மனதில் எழுதுவது யார் என்ற கேள்விக்குறியை எழுப்பியது! கோபப்படச் செய்தது.

 அப்படி என்னதான் எழுதினார் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம்....
  1. "காங்கிரசின் லட்சியத்தில், சுய ஆட்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நேர்மை இல்லை, முழுமனதான ஈடுபாடு இல்லை!சரியான வழிமுறை இல்லை! ......அதாவது வழிநடத்தும் தலைவர்கள் சரியில்லை.....நாம் இப்போது குருடர்களால்.... ஒற்றைக்கண்ணர்களால்  ( காங்கிரஸ் கட்சியால்) வழிநடத்தப்படுகிறோம்..."
....we are at present the blind led, if not by the blind, at any rate by the one - eyed....

  2. நம் லட்சியத்தில் தெளிவும்,அதை நடைமுறைப் படுத்துவதில் சரியானதிட்டமிடுவதும்தான் அரசியலில் வெற்றி பெறுவதன் ரகசியம். ஆனால் தோற்றுவிட்டோம் என்பதுதான் உண்மை!

  3. நேர்மையின் மற்றொரு பெயர் வலிமை, சக்தி! மன உறுதி! நம்முடைய முதல் எதிரி வெளியில் இல்லை! நம்முடைய பயந்தாங்குளித்தனம்தான் நமது முதல் எதிரி!
நம்முடைய ஆற்றலின்மை, சுயநலம், போலித்தனம் அல்லது பாசாங்கு, கண்மூடித்தனமான நம்பிக்கைகள், உணர்ச்சிவயப்படுதல் இவற்றை வீசி எறிந்துவிட்டு வீறு கொண்டு  எழவேண்டும் .

சற்று  மென்மையாக எழுதும்படி வேண்டுகோள் வர மனமில்லாமல் ஒப்புக்கொண்ட அரவிந்தர் சில நாட்களில் எழுதுவதை நிறுத்தினார்.

இந்த காலகட்டத்தில் சம்ஸ்கிருத, குஜராத்தி, பெங்காலி, மராத்தி மொழிகளையும் பயின்றார். வேதங்களும், உபநிஷதங்களும், பகவத் கீதையும் அவர் மனதைக் கவர்ந்தன.
ஆகச்சிறந்த படிப்பு என்று கருதப்பட்ட ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர், ஆங்கிலக்கல்வி பயின்று ஐரோப்பிய நாகரிகம் அறிந்தவர் பரோடாவில் எவ்வாறு தோற்றமளித்தார்?
அவருடன் இரு ஆண்டுகள்  தங்கி வங்கமொழியை கற்றுக் கொடுக்க வந்த தீரேந்திர குமார் ராய் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

 " நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது கோட்டும் சூட்டும்,கருப்புக் கண்ணாடியும் அணிந்த, முன்கோபமும், சகிப்புத் தன்மையுமில்லாத ஆங்கில கனவான் ஒருவரைதான் கற்பனை .செய்திருந்தேன்.

ஆனால் என் கண்முன் காட்சி தந்தவரோ, கூச்சசுபாவமுடைய, மாநிற இளைஞன்! கனவு காணும் அருள்நிறைந்த விழிகள், நடுவகிடு எடுக்கப்பட்ட,தோள்களில்சரியும் மென்மையும் பளபளப்பும் நிறைந்த கூந்தல். கரடுமுரடான வேட்டி,அதன்மேல் கோட்டு, பழமைவாய்ந்த காலணிகள். எளிமையான அவரது தோற்றம் என்னை வாயடைத்துப் போகச் செய்தது.கிரேக்கம்,பிரெஞ்சு,லத்தீன் மொழிகளிலே தேர்ச்சி பெற்ற அறிஞரா இவர் என ஆச்சர்யப்பட்டேன்.

அது மட்டுமா, அவரது தூய்மையான இதயத்தைப் பிரதிபலிக்கும் குழந்தைத்தனமான புன்னகை,மன உறுதியைக் காட்டும் உதடுகள்,சுய நலமற்ற, உலகப்பற்று சற்றும் இல்லாத ஆளுமை, உலகத் துயரங்களை நீக்குவதற்காக தன்னையே தியாகம் செய்யத்தயங்காத மனத் திண்மை! அவர் சாதாரண மனிதனாகவே எனக்கு தோன்றவில்லை.சுயக் கட்டுப் பாடுடைய, சந்யாசியாகவே அவர் வாழ்ந்தார்.அவர் கோபப் பட்டு நான் பார்த்ததே இல்லை''என்கிறார் ராய்.

பரோடாவின் பிரபல வக்கீல் ஶ்ரீயுத் பட்கர். அவர் சொல்கிறார், அரவிந்தருக்கு பணத்தின் மீது பற்று கிடையாது. மூன்றுமாதத்திற்கு ஒரு முறை ஒரு பையில் கட்டப்பட்ட அவரது ஊதியத்தைக் கொண்டுவருவார். வந்தவுடன் தனது மேசையின் மேல் உள்ள ஒரு தட்டில் அதனைக் கொட்டுவார். அது அங்கேயே இருக்கும். அலமாரியில் வைத்துப் பூட்டும் பழக்கமெல்லாம் அவருக்கு கிடையாது. எவ்வளவு செலவழித்தோம் என்பதற்கான கணக்கும் வைத்துக் கொள்ளமாட்டார்.

ஒரு நாள் நான் அவரை ஏன் இப்படி பணத்தைப் போட்டு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.சிரித்தவர் சொன்னார்,"நல்லவர்களுடன் வாழ்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். கடவுளே என் வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொள்கிறார். எனக்குத் தேவையானதை நான் எடுத்துக் கொள்கிறேன். மிச்சமெல்லாம் அவனுடையதுதான். "

ஶ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர், ஶ்ரீரமணர், வள்ளலார் முதலிய வணங்கற்குரிய தவசீலர்களும் பணத்தின் மீது பற்றில்லாதவராக வாழ்ந்தனர்.

(லண்டனில் இருக்கும் போதும் அரவிந்தருக்குக் கிடைத்த குறைவான நிதிஉதவியை சகோதரர்களுடன் பங்கிட்டுக் கொண்டே அவர் வாழ்ந்தார். அதேபோல் இந்தியா வந்தபின் தன் தாயின் பராமரிப்புக்கு உரிய தொகையை அரவிந்தரே கொடுத்து வந்தார்)


( பரோடாவில் அரவிந்தர், பணிகள், பத்திரிகைக் கட்டுரைகள், குணநலன்கள், காங்கிரஸ் தோன்றிய வரலாறு,)       இன்னும் வரும்.


No comments:

Post a Comment