14 May 2017

ஶ்ரீஅரவிந்தர் -8


இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு வகித்தவர்கள் வங்காளிகள். இன்றைக்கும் அந்தமான் சென்று அங்குள்ள " செல்லுலார் ஜெயில்" என அழைக்கப் படும் சிறை வளாகத்தைக் காண்போர் அங்கு உயிர் நீத்த வங்காள  விடுதலைச்சிங்கங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கம் முழுமையாக ஆங்கிலேயர் வசமானது.அது வங்கத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனக்கருதப்படுகிறதுமக்கள் ஐரோப்பிய நாகரிகம் என்ற மதுவுண்டு அடிமைத்தனத்தில் திளைத்திருந்தனர்.

ஆகவே மக்களுடைய  மனதில் பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் தன் முதல் கடமையென அரவிந்தர் தீர்மானித்தார். அதே சமயம் ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் போராடி சுதந்திரம் பெற, துப்பாக்கி ஏந்திப்  போரிடும் வீரர்களைத் தயார்செய்ய வேண்டும். அதற்கு சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

அந்தக்காலத்தில் வங்காளிகளுக்கு யாரும் போர்ப்பயிற்சி அளிக்கக் கூடாது என ஒரு சட்டம் இருந்ததுஆனால் 1899 ஆம் ஆண்டு தன் நண்பர்களின் உதவியுடன் ஜாடின் பானர்ஜி என்ற பெயருடைய  வங்காள இளைஞனை யாரும் அறியாமல் பரோடா சமஸ்தான ராணுவத்தில் சேர்த்து போர்ப் பயிற்சி பெற வைத்தார் அரவிந்தர்.ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் கல்கத்தாவிற்கு அனுப்பி வங்காள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கத் தேவையான பணம், செய்ய வேண்டிய வேலைகள், தேவையான பொருட்கள் ,தீவிரவாதிகளை தயார் செய்யும் முறை ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் அளித்தார். ஜாடின் திறமையும்,பொறுப்பும்,உடல் வலிமையும் உள்ளவராக இருந்தார். எனவே வங்காளத்தின் மூலை முடுக்குகளில் உள்ள இளைஞர்களைப் பல குழுக்களாகச் சேர்த்து சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கத் தயார் செய்துவந்தார்.

1902 ஆம் ஆண்டு கல்லூரி விடுமுறையின் போது வங்கம் சென்ற அரவிந்தர் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றார். வங்கத்தின் சுதந்திரப் போராட்ட புரட்சியாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கையில் வாளும்,மற்றொரு கையில் பகவத்கீதையையும் ஏந்தி, பாரதத்தாயின் சுதந்திரத்திற்குப் பாடு படுவேன், . தீவிர வாதிகளின் குழுக்களைப்பற்றி யாரிடமும்  எதையும் சொல்லாமல் ரகசியம் காப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்ய வைத்தார். மகாராஷ்ட் ராவில் லோகமான்யதிலகர் தலைமையில் இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் செயல் பட்டுவந்தன.

அரவிந்தரின் சகோதரர் ' பாரின்' சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தார். அரவிந்தரின் வழி காட்டுதலால் வங்கத்தின் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட உதவி செய்தார். பல இடங்களிலும் தீவிரவாத பயிற்சி முகாம்களை ஏற்படுத்தினார். விளையாட்டுத் துறை என்ற பெயரில் குதிரை ஏற்றம், கம்பு சுழற்றுதல்,துப்பாக்கியைக் கையாளுதல், ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டன. ஆயிரக்கணக்கான வங்க இளைஞர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முன் வந்தனர். 1903 ஆம் ஆண்டு மீண்டும் வங்கம் சென்று அனைத்தையும் பார்வையிட்டார்  அரவிந்தர்

1905 ஆம் ஆண்டு ஆங்கில அரசு வங்காளத்தை இரண்டாகப்பிரித்தது. அது இந்திய வரலாற்றில் கருப்புதினமாகக் கருதப்படுகிறது. இப்பிரிவினைக்கு  இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தது. இந்துக்கள் இதனை எதிர்த்தனர்.இந்தியா முழுவதும் வங்கப்பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.பொதுக் கூட்டங்களும்போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஸ்வராஜ்யம், சுதேசி இயக்கம் தோன்றியது. சிதறிக்கிடந்த இந்திய நாட்டில் முதன்முதலாக தேசிய இயக்கமாக விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

இந்த காலகட்டத்தில் , 'நாட்டுப்பற்றும், இந்தியத்தாயின் மேல் அன்பும் உடைய இந்த நாட்டுமக்களுக்கு ஆன்மிகவலிமை கண்டிப்பாக வேண்டும்' என்பதை வலியுறுத்தும் ஶ்ரீ அரவிந்தரால் எழுதப்பட்ட " பவானிமந்திர்" என்ற தீவிரவாதப் புத்தகம் இந்தியா முழுதும் வழங்கப்பட்டது.

வலிமையின் அன்னை(சக்தி) எனவும், இந்தியத்தாய் எனவும் அழைக்கப்படும் அன்னை பவானிக்கு மிக உயரமான, தூய்மை வாய்ந்த இடத்தில் கோயிலொன்று  கட்டப்படவேண்டுமென்றும், தங்களுடைய குடும்ப,சுக சவுகரியமான வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தயங்காத கர்மயோகிகள் இங்கே அன்னையின் முன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவோம் என சத்யப்பிரமாணம் செய்ய வேண்டுமென்றும் இந்த நூல் கூறிற்று.

இந்திய நாட்டின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விழைந்தனர்.

(ஶ்ரீஅரவிந்தர், பரோடா, வங்காள இளைஞர்கள்,போர்ப்பயிற்சி.)No comments:

Post a Comment