6 May 2017


முகப்பானை
அலுவலகத்தில் வேலை செய்வோர் விடுமுறை எடுத்துக் கொள்ள விரும்பினால் 'பாட்டி செத்துட்டாங்க' லீவு வேணும் என்று அந்தக்காலத்தில் கேட்பார்களாம் !காரணங்கள் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமானதல்ல என்கிறார் பாரதியார். ஆனால் பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் அல்லவா?' பானைக்குள் தேளிருந்து பல்லால் கடித்தது, அதுதான் லீவு எடுத்தேன் என்று சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது? பானை....பானை

குயவன் திறமையாகச் செய்யும் மண்பானையைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் உண்டா? மண் பானை நீர் வெயில் காலத்தில் தேவாமிர்தம்! மண்பானைச் சமையல் உடல் நலத்திற்கு நன்மை செய்யும். பானை வயிறு உடையவன் வினாயகப் பெருமான். மனிதர்களுக்குப் பானை வயிறு இருந்தால் தொப்பை

மண்பானையை விடுங்கள், வெண்கலப்பானை தெரியுமா?

கேரளமாநிலத்தில் புகழ் பெற்றது வெண்கல உருளிகள்செம்பும், ஈயமும் கலந்த கலவையே வெண்கலம். இந்த உருளிகள் மிகவும் கனமாயிருக்கும். உயரம் குறைவாக, வட்ட வடிவில் தேய்த்துக் கிளற வாகாயிருக்கும். நன்றாகத் தேய்த்து உபயோகப் படுத்தப் படுத்த வெள்ளிபோல் பளபளக்கும்கேரளக் கோயில்களில் நைவேத்யமாகச் செய்யப்படும் 'அடைப்பிரதமன், பாயசம்' எல்லாம் இதில்தான் செய்வார்கள். வெண்கலத்தால் பானை போல செய்யப்படும் பாத்திரம்தான் வெண்கலப்பானை!

 எங்க வீட்டில்  அழகான வெண்கலப்பானை உண்டு. வாய் குறுகியும்,அடி பெருத்தும் இருக்கும்.அதில்தான் அம்மா அந்தக்காலத்தில் பாலைக் குறுக்கி, திரட்டுப் பால் செய்வாள். நிதானமான தணலில் அடிபிடிக்காமல் பால் கொதிக்கும். மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் திரட்டுப்பாலின் சுவை இன்னும் என் நாவுக்கு
சொந்தம்

என்ன இப்போது வெண்கலப்பானை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். சீதாவின் வீட்டிற்கு அவள் சினேகிதிகள் வந்திருந்தார்கள். எங்கே உன் மாமியாரைக் காணோம் என்று ரகசியமாகக் கேட்டாள் ரமா. கையை உள்ளே காட்டி, முகத்தை உப்பிக்காட்டினாள் சீதா! " வெங்கலப்பானையா, என்ன ஆச்சு?" எனச்சிரித்தாள் ரமா! அதாவது மாமியாருக்கு மருமகள் மீது கோபம், முகத்தைத்தூக்கி உம்மென்று வைத்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்!

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே கூட ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் பல வெங்கலப்பானைகள்! வெண்கலப்பானை அழகானது
அப்படியென்றால் வெங்கலப் பானை சமையல் பாத்திரம் இல்லையா?இல்லை வெங்கலம், வெம்மையான பாத்திரம் தொட்டால் சுடும்! உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும்
உலக நாடக மேடையில் ஒரு சிலர் வெங்கலமாக இருக்கிறார்கள். உம்மணாமூஞ்சிகள்!

மனிதனுக்குத் தன் மனதிலுள்ள பொறாமை, கோபம், எரிச்சல் ஆகிய கீழ்மைக் குணங்களை என்ன செய்வது என்று தெரியாத போது தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்துக் கடுஞ்சொற்களை வீசுதல், பழித்தல் எனத் தன்வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அதில் அவனுக்கோர் நிம்மதி கிடைக்கிறது. பார்த்தாயா நான் அவனை ஒரு கிழி கிழித்துவிட்டேன் என்று பெருமையடித்துக் கொள்கிறான். தன்னிடம் யாரும் நெருங்காதவாறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறான். சிடு மூஞ்சி என்ற பட்டப்பெயர் பெறுகிறான். அங்குதான் வருகிறது வெங்கலப்பானை!

சமீபத்தில் ஜெயநகரில் உள்ள வங்கிக்குப் போயிருந்தேன். ஓராண்டுக்கு முன் அதே வங்கிக் கிளையில் பணியாற்றியவர்கள் எல்லோரும் போனவுடன் வணக்கம் சொல்வார்கள், என்ன வேண்டுமென்று கேட்டு  செயலாற்றுவார்கள். சீனியர் சிடிசன் என்ற ஒரு மரியாதையிருக்கும். நிறைய புது முகங்கள் இப்போது. அதனாலென்ன? ஆளாளுக்கு வெங்கலப்பானை முகமூடி அணிந்திருக்கிறார்கள்.

மோதிஜியின்  பணப்பரிமாற்றமில்லா வாழ்வுதான் நல்லது போல! அது போலவே சாப்பிடும் அவசியமில்லா மனிதனை கடவுள் படைத்தால், அல்லது வலை மூலமாக அரைக்கணத்தில் செய்திப் பரிமாற்றங்கள் செய்வதுபோல் பசித்தவன் வயிறு நிறைந்தால்  வங்கிக்குப் போகவேண்டாம் என்று ஞானம் வந்துவிட்டது! நடக்குமா?

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால் முகத்தசைகள் இறுகி பார்க்க சகிக்கமுடியாமல் பயமுறுத்தும். அதுவே அமைதியான முகத்தில் தசைகள் இளகி பளபள என  ஜொலிக்கும். பார்ப்பவர்களுக்கும் அன்பை வழங்கும். முகத்தில் சிரிப்பு மலர காசா, பணமா செலவு? வெங்கலப்பானையாய் இருக்காதீர்கள், புன்னகை பூக்கவைக்கும் மலராய் இருங்கள்! 🌻அதை விடுங்கள்.....

ஞானப்பானை' கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் வாழ்ந்தவர், குருவாயூரப்பனிடம் அதீத பக்தி பூண்டவர் "பூந்தானம்" என்பவர். அவர் பாடிய பாடல்கள் சந்தான கோபாலம், ஞானப்பான, என்ற பெயர்களில் நூல்வடிவில் உள்ளன.
'ஞானப்பான' என்றால் "ஞானத்தைத் தரும் களஞ்சியம்" எனப்பொருள்படும்.
அதாவது 'பான' என்றால் களஞ்சியம். கலைக்களஞ்சியம் என்கிறோம் அல்லவா?

'ஞானப் பான', ஒரு வேளை வெங்கலப் பானையாகாமல் இருக்க மனிதர்களுக்கு உதவுமா?

F7B50B6F-7253-468C-A598-F1CEB097A5BD-1-2048x1536-oriented.png

1 comment: