12 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர் -5




இந்தியா வந்த ஶ்ரீ அரவிந்தரின் மனநிலை என்ன?  அவருடைய லட்சியம் என்ன?
தன் தாய் நாட்டையும், பெற்றோரையும் பல ஆண்டுகள் பிரிந்து, பல துன்பங்களுக்கு ஆளானவராக இருந்தாலும் இந்தியா திரும்பியதும் அளப்பரிய அமைதியால் ஆட்கொள்ளப்பட்ட அரவிந்தர் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருந்தார்! ஆனால் ஆன்மிக வாழ்வும், அரசியலும் அவருடனே பயணித்தன.

கடவுளின் அருள் பெற்றவர்களை அவனே வந்து தன்னைக் காண்பித்து, ஆட்கொள்வான் என்பதற்கு அரவிந்தரின் வாழ்க்கை சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பிற்காலத்தில் அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் தன்னுடைய லட்சியத்தைப் பற்றி மனம் திறந்துகூறுகிறார்.  " எல்லோரும் தம் தாய்த் திருநாட்டை மலைகளும்,நதிகளும், காடுகளும், வயல் வெளிகளும் நிறைந்த வெறும் பூமியாகக் கருதுகிறார்கள். ஆனால் நானோ உயிருள்ள என் தாயாகக் கருதுகிறேன். ஒரு பூதம் தன் தாயின் மேல் அமர்ந்து அவளின் இரத்தத்தை உறிஞ்சுவதை வேடிக்கை பார்க்க ஒரு மகனால் முடியுமா? அந்த நேரத்தில் அவன் தன் மனைவியுடன் கொஞ்சி விளையாடி, மக்களோடு அமர்ந்து உண்டு மகிழ்வானா? தன் தாயைக் காப்பாற்ற ஒடிச் செல்வானா?

வீழ்ந்து கிடக்கும் இந்த பாரதசமுதாயத்தை வீறு கொண்டு எழச் செய்யும் சக்தி என்னிடம் இருக்கிறது. நான் ஆயுதங்களைக் கொண்டோ, துப்பாக்கி ஏந்தியோ பிரிட்டிஷாருடன் போரிடப்போவதில்லை! என் அறிவின் தெளிவினால், எழுத்தின் வலிமையால்தான் அதை சாதிக்கப் போகிறேன்!

கடவுள் என்னை அதற்காகவே படைத்தார். பதினான்காம் வயதில் இந்த சுதந்திர தாகத்தின் விதை என்னுள் விதைக்கப்பட்டது! எனது பதினெட்டாம் வயதில் அது வளர்ந்து வேர்விட்டு உறுதியாகிவிட்டது. இந்தியாவின் சுதந்திரமே என் வாழ்நாளின் லட்சியமாகும்."
இந்த லட்சியத்தின் காரணமாகவே அவர் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றர்.

அதே சமயத்தில் அவர் ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் கடவுளைக் காண விரும்பினார்.
"என்னுடைய இன்னொரு விருப்பம் எப்படியாவது கடவுள் என்று ஒருவர் இருப்பாராகில் அவரை நான் நேரில் காணவேண்டும். உணரவேண்டும்.அதற்கும் ஏதாவது ஒரு வழி நிச்சயமாக இருக்கும். எத்தனை கடினமான பாதையாக அது இருப்பினும் நான் அந்தப் பாதையில் நடக்கத் தீர்மானித்து விட்டேன்.இன்றைய மதங்கள் இறைவன் நாமத்தை சொல்வதைக்கூட தற்பெருமைக்காக, விளம்பரத்திற்காக செய்கின்றன. எனக்கு அது வேண்டாம் .

முக்தியடையவோ, தனிப்பட்ட என் சுக செளக்கியங்களுக்காகவோ நான் கடவுளை அறிய விரும்பவில்லை. பாரத நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும்,வீழ்ந்து கிடக்குமிந்த நாட்டு மக்கள் வீறு கொண்டு எழவேண்டும் என்பதே என் விருப்பம்

 அடுத்ததாக ," என்னுடைய இன்றைய திறமை,பெருமை, கல்வி, அறிவு, செல்வம் அனைத்தும் இறைவன் எனக்கு அளித்தவை என்றே நான் கருதுகிறேன்.எனக்கு மிகத்தேவையானவற்றுக்கு மட்டுமே நான் என் பணத்தை செலவழிப்பேன். மீதியுள்ளது இறைவனுடையதாகும்." இதுவே அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சமாகும்.(மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)

(ஶ்ரீ அரவிந்தர், தேசப்பற்று, மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)
Ref:SriAurobindo
A biography and a history,by K.R. Srinivasa Iyengar

No comments:

Post a Comment