அரவிந்தருக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?
அரவிந்தர் பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தபோதிலும் அவருக்கு அந்த நாட்டின் மீது பற்றுதல் ஏதும் இருக்கவில்லை. மாறாக அவருக்கு இந்திய நாட்டின் மீது தனியானதொரு பாசம் இருந்தது. அவர் இந்தியாவை வெறும் பூமியாக நினைக்கவில்லை. உயிருள்ள தாயாகவே கருதினார். சிறுவயதிலிருந்தே தாயன்பைப் பெறாத அரவிந்தர் தான்பிறந்த நாட்டை தன் தாயாகக் கருதியதில் வியப்பில்லை.
அவருடைய தந்தையார் கிருஷ்ணாதன்தாஸ் தன் பிள்ளைகளுக்குப் பண உதவி செய்யவில்லை என்றாலும் இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய செய்திகளை, செய்தித்தாள்களின் வெட்டப்பட்ட பகுதிகளை அனுப்பி தெரிவித்து வந்தார்.எனவே தன்னுடைய கடமை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டியதுதான் என்று எண்ணியதால்தான் அரசாங்கப் பதவி வகிக்க அவர் விரும்பவில்லை.
அரவிந்தர் லண்டனில் படித்துவந்த காலத்தில் 'மஜ்லிஸ்' என்ற மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவராக விளங்கி பல உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை ஆற்றினார்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய மாணவர்களின் ரகசியக்குழு ஒன்று இருந்தது.
அதற்கு " தாமரையும் குத்துவாளும்" என்று பெயரிட்டிருந்தனர். அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் இந்தியாவின் விடுதலைக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக சத்யப்பிரமாணம் செய்ய வேண்டும். அரவிந்தர் லண்டனை விட்டுக் கிளம்புவதற்குமுன் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது.
அரவிந்தர் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும், பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்குச் செல்லாததால் ஐசிஎஸ் பட்டம் அவருக்குக் கிடைக்கவில்லை. பின் என்ன செய்வது என்று எண்ணிய தருணத்தில் அரவிந்தரின் தந்தையின் சினேகிதர் ஜேம்ஸ் காட்டனின் உதவி மீண்டும் கிடைத்தது.
அந்த நேரத்தில் லண்டன் வந்திருந்தார் பரோடா மஹாராஜா, சர் சாயாஜிராவ் கெய்க்வாட். அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்தவராகவும், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். அரவிந்தர் மகாராஜாவைச் சந்தித்தார். 200 ரூபாய் சம்பளத்தில் அவரது உதவியாளர் பணியைப்பெற்றார்.
பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தின் தவவாழ்வை முடித்துக்கொண்டு 1893 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி, தனது 21 ஆம் வயதில் பம்பாயின் அப்பலோ பந்தர் துறைமுகத்தில் S.S. Carthage என்ற பெயருடைய கப்பலில் பயணித்த அரவிந்தர் இறங்கினார்.
இந்தியத்தாயின் வரவேற்பு எப்படி இருந்தது? இதுநாள்வரை இல்லாத ஒரு
மிகப்பரந்த அமைதியைத் தன் மகனுக்கு அளித்து அரவிந்தரை அணைத்துக் கொண்டாள் அன்னை பவானி. அதுவே அவருடைய லட்சியத்திற்கு அவள் அளித்த அனுமதியாகும்!
"A vast calm descended upon him with his first step on Apollo Bunder."
அதே நேரத்தில் அவர் தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து துயரம் கொண்டார்.
ஆம், தனது ஐ சி எஸ் பாஸ் செய்த அருமை மகன் வரும் நாளுக்காகக் காத்திருந்த கிருஷ்ணதான்தாஸின் தலையில் பேரிடியாக விழுந்தது அவர் பயணம் செய்த கப்பல், போர்ச்சுகல் நாட்டினருகே முழுகிப் போயிற்று என்ற தவறான செய்தி.
ஏற்கெனவே அவரது மனைவியார் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகியிருந்தார்.எந்த வைத்தியத்தாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதிர்ச்சிக்கு ஆளான கிருஷ்ணதான் தாஸ் மனமுடைந்து அரவிந்தரின் பெயரைக் கூறியவாறு உயிர் நீத்தார்.
விதியின் விளையாட்டை யாரே அறியமுடியும்?ஏழு வயதில் பெற்றோர்களைப் பிரிந்த சகோதரர்கள் திரும்பி வந்த போது தந்தை உயிருடன் இல்லை! தாயோ மக்களை அடையாளம் காணும் நிலையில் இல்லை!!!
( ஶ்ரீ அரவிந்தர், இந்தியா திரும்புதல், தந்தை உயிரிழத்தல், ஆழ்ந்த அமைதியின் வரவேற்பு)
No comments:
Post a Comment