25 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர்-6

 ஶ்ரீஅரவிந்தர்-6

பரோடாவில்..
(ஶ்ரீஅரவிந்தர் பரோடாவில் 1893, பிப்ரவரி 8 முதல், 1906, ஜூன் 18 ஆம் தேதிவரை 13 ஆண்டுகள் சாயாஜிராவ் மகாராஜாவின் சமஸ்தானத்தில் பணியாற்றினார். பணியில் சேரும் போது அவருடைய வயது 21.  தனது 34 ஆம் வயது வரை பணியாற்றிய பின் அவர் வங்கத்திற்குச்சென்றார்.)

 அரவிந்தருக்கு அவரது தந்தையார் மறைந்த துயரச் செய்தி துன்பத்தை அளித்தது. ஆனாலும் கடமை உணர்வு மிக்க அரவிந்தா ஊருக்குச் செல்லாமல் பரோடா மகாராஜாவின் சமஸ்தானத்தில் அவரது உதவியாளராகச் சென்று சேர்ந்தார். அங்கு பலவிதமான அரசாங்கப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்.  சில நாட்களுக்குப் பின் பரோடா சாயாஜிராவ் கல்லூரியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டார்.பிறகு துணை முதல்வரானார்.

ஆனால் மகாராஜா அழைக்கும் போதெல்லாம் சென்று முக்கியமான கடிதங்களையும், அவர் ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளையும்,அரசாங்கத்தின் முக்கியமான தஸ்தாவேஜுகளையும் தயார் செய்து கொடுப்பார்.

ஒரு முறை மகாராஜா சொன்னார்," அரவிந்த்பாபு, மிகச் சிறந்த இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் எளிய நடையில் எழுதிக் கொடுங்கள். இதை நான் வாசித்தால் யாரும் இதை நான் தயாரித்ததாக எண்ணமாட்டார்கள்!

அரவிந்தர் - " எப்படி இருந்தாலும் நீங்கள் தயாரித்த சொற்பொழிவு என்பதை யாரும் நம்பப் போவதில்லை! சொல்ல வந்த கருத்து இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள், போதும். மொழியின் ஆளுமையைப் பற்றி கவலைப் படாதீர்கள். "

சாயாஜிராவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்ற அவர் தயங்கியதே இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன், அக்கறையாக செய்து கொடுப்பதில் மகிழ்வார். அவர் மிகக் குறைவாகவே பேசுவார். கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பார்.மற்ற நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதிலும், கவிதை, கட்டுரைகள் எழுதுவதிலும் நேரத்தைச் செலவழித்து வந்தார்.

பரோடா வந்த ஆறு மாதங்களில் இந்திய அரசியல் நிலைமை,  மக்களின் மனநிலை,  அரசியல்தலைவர்கள், அவர்களுடைய கொள்கைகள், ஆகிய அனைத்தையும் அறிந்து கொண்டார்.

 கே.ஜி. தேஷ்பாண்டே என்பவர் கேம்பிரிட்ஜில் அரவிந்தரின் நண்பர்.
அவர்  " இந்துப்பிரகாஷ்" என்ற பத்திரிகையின் எடிட்டராக இருந்தார்.அவர் அரவிந்தரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அவர்களுடைய லட்சியம், அரசியல் முன்னேற்றம்,  ஆகியவற்றைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டார்.🙏

19 Apr 2017

வண்ணங்கள்

சென்ற வாரம் ஒரு நாள் கண்ணாடி பாட்டில்கள் விற்கும் கடையொன்றுக்குச் சென்றிருந்தேன். ஜெயநகரில்தான்! பீங்கான் மற்றும் சமையலறைச் சாமான்கள் சிலவும் அங்கே உண்டு.

ஊறுகாய் பாட்டில்கள் எல்லாம் பழைய காம்ப்ளான், ஹார்லிக்ஸ் பாட்டில்கள்! பார்த்து அலுத்துப் போனதால் புதிதாய் வாங்கலாம் என்றுதான்.

எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் இங்கே பாட்டில்கள் உள்ளன. குட்டியூண்டு பாட்டில்கள் ஊருக்குப்போகும்போது மாத்திரைகள் போட்டுக்கொள்ள வசதியாய்! சும்மா கொலுவில்கூட வைத்து அழகு பார்க்கலாம்!

பாட்டில்கள் வாங்கி முடித்த நேரத்தில் கண்ணில் பட்டது பூச்சாடிபோன்ற ஒரு குடுவை.  உடனே செல்லமாக என் அறையில் வளரும் கொடியொன்றை வைக்க ஆசை கொண்டேன். லேசான குடுவைதான்.

பத்திரமாகக் கொண்டு வந்து அதைச் சற்றே சிறு கற்களால் நிரப்ப ஆரம்பித்தேன்! டொக்கென்று விரிசல்.ம்...என்ன செய்வது.?

இரண்டு நாட்களாக அலமாரியில் தூஙகியது ஓய்வாக. இன்று பொழுது போகாமல் சுற்றிய நேரத்தில் கண்ணில்பட்டது கலர் ட்யூபுகள். பாட்டிலின் கலர் மாறிப்போச்சு.

இப்படியாக பாட்டிலில் வண்ணம் பூசியதற்காக ...ஆனந்தம்.

12 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர் -5




இந்தியா வந்த ஶ்ரீ அரவிந்தரின் மனநிலை என்ன?  அவருடைய லட்சியம் என்ன?
தன் தாய் நாட்டையும், பெற்றோரையும் பல ஆண்டுகள் பிரிந்து, பல துன்பங்களுக்கு ஆளானவராக இருந்தாலும் இந்தியா திரும்பியதும் அளப்பரிய அமைதியால் ஆட்கொள்ளப்பட்ட அரவிந்தர் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருந்தார்! ஆனால் ஆன்மிக வாழ்வும், அரசியலும் அவருடனே பயணித்தன.

கடவுளின் அருள் பெற்றவர்களை அவனே வந்து தன்னைக் காண்பித்து, ஆட்கொள்வான் என்பதற்கு அரவிந்தரின் வாழ்க்கை சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பிற்காலத்தில் அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் தன்னுடைய லட்சியத்தைப் பற்றி மனம் திறந்துகூறுகிறார்.  " எல்லோரும் தம் தாய்த் திருநாட்டை மலைகளும்,நதிகளும், காடுகளும், வயல் வெளிகளும் நிறைந்த வெறும் பூமியாகக் கருதுகிறார்கள். ஆனால் நானோ உயிருள்ள என் தாயாகக் கருதுகிறேன். ஒரு பூதம் தன் தாயின் மேல் அமர்ந்து அவளின் இரத்தத்தை உறிஞ்சுவதை வேடிக்கை பார்க்க ஒரு மகனால் முடியுமா? அந்த நேரத்தில் அவன் தன் மனைவியுடன் கொஞ்சி விளையாடி, மக்களோடு அமர்ந்து உண்டு மகிழ்வானா? தன் தாயைக் காப்பாற்ற ஒடிச் செல்வானா?

வீழ்ந்து கிடக்கும் இந்த பாரதசமுதாயத்தை வீறு கொண்டு எழச் செய்யும் சக்தி என்னிடம் இருக்கிறது. நான் ஆயுதங்களைக் கொண்டோ, துப்பாக்கி ஏந்தியோ பிரிட்டிஷாருடன் போரிடப்போவதில்லை! என் அறிவின் தெளிவினால், எழுத்தின் வலிமையால்தான் அதை சாதிக்கப் போகிறேன்!

கடவுள் என்னை அதற்காகவே படைத்தார். பதினான்காம் வயதில் இந்த சுதந்திர தாகத்தின் விதை என்னுள் விதைக்கப்பட்டது! எனது பதினெட்டாம் வயதில் அது வளர்ந்து வேர்விட்டு உறுதியாகிவிட்டது. இந்தியாவின் சுதந்திரமே என் வாழ்நாளின் லட்சியமாகும்."
இந்த லட்சியத்தின் காரணமாகவே அவர் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றர்.

அதே சமயத்தில் அவர் ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் கடவுளைக் காண விரும்பினார்.
"என்னுடைய இன்னொரு விருப்பம் எப்படியாவது கடவுள் என்று ஒருவர் இருப்பாராகில் அவரை நான் நேரில் காணவேண்டும். உணரவேண்டும்.அதற்கும் ஏதாவது ஒரு வழி நிச்சயமாக இருக்கும். எத்தனை கடினமான பாதையாக அது இருப்பினும் நான் அந்தப் பாதையில் நடக்கத் தீர்மானித்து விட்டேன்.இன்றைய மதங்கள் இறைவன் நாமத்தை சொல்வதைக்கூட தற்பெருமைக்காக, விளம்பரத்திற்காக செய்கின்றன. எனக்கு அது வேண்டாம் .

முக்தியடையவோ, தனிப்பட்ட என் சுக செளக்கியங்களுக்காகவோ நான் கடவுளை அறிய விரும்பவில்லை. பாரத நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும்,வீழ்ந்து கிடக்குமிந்த நாட்டு மக்கள் வீறு கொண்டு எழவேண்டும் என்பதே என் விருப்பம்

 அடுத்ததாக ," என்னுடைய இன்றைய திறமை,பெருமை, கல்வி, அறிவு, செல்வம் அனைத்தும் இறைவன் எனக்கு அளித்தவை என்றே நான் கருதுகிறேன்.எனக்கு மிகத்தேவையானவற்றுக்கு மட்டுமே நான் என் பணத்தை செலவழிப்பேன். மீதியுள்ளது இறைவனுடையதாகும்." இதுவே அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சமாகும்.(மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)

(ஶ்ரீ அரவிந்தர், தேசப்பற்று, மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)
Ref:SriAurobindo
A biography and a history,by K.R. Srinivasa Iyengar

3 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர்-4



அரவிந்தருக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?

அரவிந்தர் பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தபோதிலும்  அவருக்கு அந்த நாட்டின் மீது பற்றுதல் ஏதும் இருக்கவில்லை. மாறாக அவருக்கு இந்திய நாட்டின் மீது தனியானதொரு பாசம் இருந்தது. அவர் இந்தியாவை வெறும் பூமியாக நினைக்கவில்லை. உயிருள்ள தாயாகவே கருதினார். சிறுவயதிலிருந்தே தாயன்பைப் பெறாத அரவிந்தர் தான்பிறந்த நாட்டை தன் தாயாகக் கருதியதில் வியப்பில்லை.

 அவருடைய தந்தையார் கிருஷ்ணாதன்தாஸ்  தன் பிள்ளைகளுக்குப் பண உதவி செய்யவில்லை என்றாலும் இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய செய்திகளை, செய்தித்தாள்களின் வெட்டப்பட்ட பகுதிகளை அனுப்பி தெரிவித்து வந்தார்.எனவே தன்னுடைய கடமை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டியதுதான் என்று எண்ணியதால்தான்  அரசாங்கப் பதவி வகிக்க அவர் விரும்பவில்லை.

அரவிந்தர் லண்டனில் படித்துவந்த காலத்தில் 'மஜ்லிஸ்' என்ற மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவராக விளங்கி பல உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை ஆற்றினார்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய மாணவர்களின்  ரகசியக்குழு ஒன்று இருந்தது.
 அதற்கு " தாமரையும் குத்துவாளும்" என்று பெயரிட்டிருந்தனர்.  அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் இந்தியாவின்  விடுதலைக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக சத்யப்பிரமாணம் செய்ய வேண்டும்.  அரவிந்தர் லண்டனை விட்டுக் கிளம்புவதற்குமுன் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது.


அரவிந்தர் ஐசிஎஸ்  தேர்வில் வெற்றி பெற்றாலும், பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்குச் செல்லாததால் ஐசிஎஸ் பட்டம் அவருக்குக் கிடைக்கவில்லை. பின் என்ன செய்வது என்று எண்ணிய தருணத்தில் அரவிந்தரின் தந்தையின் சினேகிதர் ஜேம்ஸ் காட்டனின் உதவி மீண்டும் கிடைத்தது.
அந்த நேரத்தில் லண்டன் வந்திருந்தார் பரோடா மஹாராஜா, சர் சாயாஜிராவ் கெய்க்வாட்.  அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்தவராகவும், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். அரவிந்தர் மகாராஜாவைச் சந்தித்தார். 200 ரூபாய் சம்பளத்தில்  அவரது உதவியாளர் பணியைப்பெற்றார்.

பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தின் தவவாழ்வை முடித்துக்கொண்டு 1893 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி, தனது 21 ஆம் வயதில் பம்பாயின் அப்பலோ பந்தர் துறைமுகத்தில் S.S. Carthage என்ற பெயருடைய கப்பலில் பயணித்த அரவிந்தர் இறங்கினார்.

இந்தியத்தாயின் வரவேற்பு எப்படி இருந்தது? இதுநாள்வரை இல்லாத ஒரு
மிகப்பரந்த அமைதியைத் தன் மகனுக்கு அளித்து அரவிந்தரை அணைத்துக் கொண்டாள் அன்னை பவானி. அதுவே அவருடைய லட்சியத்திற்கு அவள் அளித்த அனுமதியாகும்!
"A vast calm descended upon him with his first step on Apollo Bunder."

அதே நேரத்தில் அவர் தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து துயரம் கொண்டார்.
ஆம், தனது ஐ சி எஸ் பாஸ் செய்த அருமை மகன் வரும் நாளுக்காகக் காத்திருந்த கிருஷ்ணதான்தாஸின் தலையில் பேரிடியாக விழுந்தது அவர் பயணம் செய்த கப்பல், போர்ச்சுகல் நாட்டினருகே முழுகிப் போயிற்று என்ற தவறான செய்தி.

ஏற்கெனவே அவரது மனைவியார் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகியிருந்தார்.எந்த வைத்தியத்தாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதிர்ச்சிக்கு ஆளான கிருஷ்ணதான் தாஸ் மனமுடைந்து அரவிந்தரின் பெயரைக் கூறியவாறு உயிர் நீத்தார்.

விதியின் விளையாட்டை யாரே அறியமுடியும்?ஏழு வயதில் பெற்றோர்களைப் பிரிந்த சகோதரர்கள் திரும்பி வந்த போது தந்தை உயிருடன் இல்லை! தாயோ மக்களை அடையாளம் காணும் நிலையில் இல்லை!!!

( ஶ்ரீ அரவிந்தர், இந்தியா திரும்புதல், தந்தை  உயிரிழத்தல், ஆழ்ந்த அமைதியின் வரவேற்பு)