13 Jan 2013

தேன்கூடு.

'தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு,' என்ற பாடல் அமரதீபம் படத்தில்! எழுதியவர்  கே. பி. காமாட்சி என்கிறது கூகுள் வலைத்தளம் .ஒரு காலத்தில் புகழ் பெற்ற பாடல்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்''தேன் சிந்துதே வானம்.'' படம் பொண்ணுக்குத் தங்கமனசு. பொன்னா, பொண்ணா தெரியவில்லை. வானம் எங்கேயாவது தேனைச் சிந்துமா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. கவிஞர் எழுதியது, டைரக்டர் இடத்திற்குத் தக்கவாறு பாட்டைப் புகுத்தி இருக்கிறார். இசை செவிக்கு இனிமையாக இருக்கிறது.

தேன் என ஆரம்பிக்கும் திரைப்படப் பாடல்கள் ஒருசில இருக்கின்றன. தேன் மொழி என்று பலரும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்ர்கள்.

இந்தத் தேன் என்ற பெயர், எப்பொழுதும் திருவருட்பா படிக்கையிலே இனிக்கும்.அதற்கும் மேலாக எங்கள்  குடியிருப்பில்  தேனீக்கள் கூடு கட்டுவதும் அதை எங்கள் 'செக்யூரிட்டி' ஆட்கள், ஆட்களைக் கூட்டிவந்து அழிப்பதும் வழக்கமாக நடப்பவைதான். எங்கு பார்த்தாலும் உயிரிழந்த தேனீக்களைப் பார்க்கையில் மனம் நோகும். மனிதனின் பேராசையை எண்ணி வருந்தும்.

ஒரு தனி மனிதனால் இந்த அக்கிரமத்தைத் தடுக்கமுடியுமா?

'சார், மாடி வீட்டு அம்மா போன் செஞ்சு கூப்டாங்க. அதான் வந்தேன். உங்க கிட்ட கேட்காம ஒன்னும் செய்யக் கூடாதுன்னு செக்யூரிட்டி சொல்லிட்டாரு!' சலாமடித்து சிரித்த செக்யூரிட்டிக்கு தயக்கம்தான். ஒரு வேளை சம்மதிப்பார் என்று ஒரு நப்பாசை.

மணிக்கு ஒரே கோபம்! இதப் பாருப்பா, நீ போயிடு. மாடி அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்.

ஒரு 'நெட்லான்'  வலை போடுங்கள் என்று அந்த அம்மாளிடம் சொல்லியாகிவிட்டது . கேட்டால்தானே! இவர்களுக்கு ஜால்ரா போட பக்கத்தில் இருப்பவர்கள்! ஒரு பாட்டில் தேன் 'ஓஸியில்' கிடைக்கிறது என்பதற்காக இப்படியா ஆலாகப் பறப்பார்கள்?

இவர்களில் யாருக்காவது ஒற்றுமை என்பதன் பொருள் தெரியுமா? சேர்த்துவைக்கும் கலைதான் புரியுமா? யாராவது கஷ்டப்பட்டால்  எடுத்து  அனுபவிக்கத் தெரியும்! சை, என்ன மனிதர்கள்! இந்தத் தேனீக்களுக்காவது தெரிகிறதா, மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் கூடு கட்டக் கூடாதென்று!
பறந்து பறந்து மலர்கள்தோறும் சென்று, தன் சின்னஞ்சிறு வாயில் துளித் துளியாகக் கொண்டுவந்து சேமிக்கும் தேன்! எத்தனை நாள் உழைப்பு? அதை ஒரு நொடியில் கலைக்க மனிதனால்தான் முடியும்!

அன்று குடியிருப்பில் வசிக்கும் சின்னப்பெண் கேட்டது, ''தாத்தா, அந்தத் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்தால் தேனீக்கள் எல்லாம் இறந்து போய்விடும் அல்லவா?'' ஆம், என்று சொன்னவுடன் அந்தக் குழந்தை சொல்லிற்று,'' தேனீக்களைக் கொன்று எடுக்கும் தேனை நான் இனிமேல் ஒரு நாளும் சாப்பிடமாட்டேன் '' அந்தக் குழந்தை மனதின் கருணையும், இரக்கமும் அவரை நெகிழ வைத்தன.
தேனீக்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றனர் குழந்தைகள்.

தேனீக்கள் எப்போதும் உயர்ந்த இடத்திலேயே வாழும்.
நாமும் உயர்ந்த நோக்கத்தோடு கூடிய வாழ்வை வாழவேண்டும்.

தேனீக்கள் தன் இனத்தோடு சேர்ந்தே வாழும். மனிதனும் தன் அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடி வாழவேண்டும்.

பல மைல்கள் பறந்துசென்று கூட தேன் எடுத்துவரும்! நாமும் மேற்கொண்ட நோக்கத்திற்கு, சாதனைக்குத் தக்க பலன் கிடைக்கும்வரை இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.

தேனீக்கள் தேன் எடுக்கும் போது மலர்கள் மீது முழுமையாக உட்காராது. மேலும் மொத்தமாக மீதம் வைக்காமல் எல்லாத்  தேனையும் எடுக்காது. கொஞ்சம் மீதி வைத்திவிட்டுதான் எடுக்கும்! அது போல நாமும் தேவையானவற்றை தேவையான அளவு மட்டுமே அனுபவிக்க வேண்டும்.

தேனீக்கள் எப்பொழுதும் கூட்டிலிருந்து பூவிற்கும், பூவிலிருந்து கூட்டிற்கும்தான் செல்லும். இடையில் காணும் எதன் மீதும் கவனம் செலுத்தாது!  நாமும் நம் நினைவை கெட்ட விஷயங்களில் திருப்பாமல் இறைவன் நினைவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

உத்தவர் என்பவற்கு ஶ்ரீ கிருஷ்ணர் சொன்ன 24 வழிகாட்டிகளில் தேனீயும் ஒன்று எனும் பெருமையுடைத்து தேனீக்கள்!

தேன் மிக உயர்ந்த  மருத்துவ குணம் உடையது.  இனிப்பானது. எத்தனை காலம் சென்றாலும் தேன் கெட்டுப்போகாது.  இறைவன் தேனென இனிக்கின்றான் என வள்ளல் பெருமான்,''தேனென இனிக்கும் திருவருட் கடலே''  எனவும்,  ''தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு,'' எனவும், இன்னும் தேனுக்கு  உவமை சொல்லும் பல பாடல்களும்  பாடியுள்ளார். 

''தேனென்று பாகென்று உவமிக்கொணா தெய்வ வள்ளிக் கோன் '' என்கிறார் அருணகிரிநாதர்.

திருவாசகம் முழுமையுமே தேனென இனிப்பது எனப் பாராட்டப்பட்டுள்ளது.

ஒரு வழிப்போக்கன் காட்டு வழியே போனான். தவறிப் போய் பள்ளத்தில் உருண்டு விடுகிறான். ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். கடவுளே என்னைக் காப்பாற்று என ஓலமிடுகிறான். அப்போது மேலே உள்ள தேன் கூடு ஒன்றிலிருந்து தேன் சொட்டுச் சொட்டாக அவன் வாயில் விழுந்ததாம். உடனே அவன் தன் நிலைமையை மறந்துவிட்டு தேனின் சுவையில் மயங்கினானாம்.  

கடைக்குப் போய்விட்டு வந்தவர் தேனி வளர்ப்பு இலாகா ஆளையும் கூட்டி வந்தார். அவர் மொட்டைமாடியில் தேன் சேகரிக்கும், பெட்டியை வைத்தார்.  தேன் எடுத்தால் பரவாயில்லை. தேனீக்களை நெருப்பு வைத்துக் கொல்லமாட்டார்கள் என்ற திருப்தி அவருக்கு. எப்படியோ தேன் கிடைத்தால் சரி என்ற ஆனந்தம் குடியிருப்பவர்களுக்கு.  தேனீக்கள் மட்டும் எந்தக் கவலையுமின்றிப் பறந்து மகிழ்ந்தன.


No comments:

Post a Comment