7 Jan 2013

ஒரு சமையலறை பேசுகிறது.............!?!.....

 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சு, அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க. சும்மா இரு!
 ஓ! அதுதான் பாத்திரம் எல்லாம் சத்தம் போடுதோ?

ஆமாம், இரு இரு, கொஞ்சநேரத்துக்கு முன்னாலே ஐயாவும் அம்மாவும் சத்தம் போட்டுப் பேசினாங்க.
அம்மா டம்ளர 'டங்'குனு வெச்சங்களா, ஐயா கிண்ணம், கரண்டி, டம்ளர்னு எல்லாத்தையும் எடுத்து வீசிட்டு வெளியில போயிட்டாரு. அம்மாக்கு கோபம் இன்னும்  தீரல அதுதான், அழுதுட்டு, நிக்கிது பாவம்.
ஒரு காப்பி குடிச்சா சரியாவும், இந்த மருமகப் பொண்ணயும் காணமே?

காலைல இது பாட்டுக்கு அடுப்பு மேல பால வைச்சுட்டு எங்கியோ போயிருச்சா, அடுப்புத் தணல கம்மியாதான் வெச்சுருந்தத பாத்தேன், சொல்ல சொல்ல கேக்காம பால் பொங்கலோ பொங்கல்!  பொசு பொசுன்னு தீஞ்ச நாத்தம்! காத்து சும்மா இருக்கா! லூசுப் பய எல்லார் மூக்கிலயும் நுழைஞ்சு காட்டிக் குடுத்துட்டுது! என்ன பால் பொங்கின நாத்தம், நம்ம வூட்டிலயான்னு எல்லாரும் ஓடியாந்துட்டாங்க! அந்தப் பொண்ணுக்கு செம அர்ச்சனை!

நேத்து தங்கச்சிப் பொண்ணு நான் சமைக்கறேன்னு, அடுப்படிக்கு வந்துதா! கடாய அடுப்புல வெச்சுட்டு, எண்ண, கடுகு, உளுத்தம்பருப்பு கூட  நாலு மிளகா வத்தலப்போட்டுதா, ஒருநெடி ஏறிச்சு பாரு, எல்லாரும் கண்ணுல தண்ணியோட, அச்சு...அச்சுன்னு தும்ம ஆரம்பிச்சுட்டாங்க!

ஆமா, நீ சொல்லிதான் எனக்குத் தெரியணுமா? நானும்தானே தும்மினேன்!

இந்த மிக்ஸி சத்தத்தில நீ சொல்றது எதுவும் எனக்குக் கேட்கல. ப்ளீஸ் வெயிட்.

ஆமா, அததான் சொல்லவந்தேன். குக்கர்ல வெயிட்டப்போடாம இந்த அம்மா எங்கியோ போயிடிச்சு.
மேசை மேல செல் போனு, அது வேற அடிக்குது. என்ன சத்தம் போ! பத்து மணி வர 'எங்கே நிம்மதி'ன்னு நீயும் நானும் பாட வேண்டியதுதான்.

அட, என்ன சொல்ற நீ, ஒரு வீட்டில நிம்மதிய குடுக்கும் இடம் சமையக்கட்டுதான். நெருப்பும், காத்தும், தண்ணியும் ஒத்துமையா வேலை செய்யற இடம்.
 பாரு, ஐயா ராத்திரி வந்து இங்க உக்காந்து தான் ரொம்ப நேரம் படிச்சுக்கிட்டு இருந்தாப்பல.

வீட்டுப் பொண்ணுக சத்தம் போடாம அழுவணும்னா இங்காதானே வாராங்க!

தங்கச்சிப் பொண்ணு வீட்டுக்காரர் பாரு, யாராச்சும் வராங்களான்னு பாத்துட்டே வந்து,....
வந்து, அட வெக்கமா இருக்கு, நீயும் தானே பார்த்தே!

ஆமா, அதுல ஒரு சந்தோஷம்தான். காலைல அம்மா வந்து, சாமி பாட்டு எல்லாம் போடறாங்க, கேட்க சந்தோஷம்!

சமயலறையிலேந்து வர சாம்பார், ரச வாசனை, அப்பளம், வடை பொரிக்கும் மணம், பண்டிகை நாள்னு தெரியுது.

விசேஷ நாளில ஒன்னா சேரும்போது பெண்கள் மகாநாடு நடத்தர இடமும் இதுதானே! 

நேத்து கேட்டேல்ல ஒரே கூத்துதான். ஐயா சொல்லிட்டார்,''ஏம்மா இந்த வெண்டக்காயையும், சேப்பங்கிழங்கையும் ஒரே நாளில் சமைகிறே?'' ரசம் வெச்சு வெண்டக்காய மொறு மொறுன்னு பண்ணிட்டிருக்கலாமில்ல? 

எண்ணெய் ஜாஸ்தி சேர்த்தா கொலஸ்ட்ரால்! பாயசம்  பண்ணுன்னா சர்க்கரை வியாதி!
 உப்பு அதிகமானா 'பிளட் பிரஷர்,'  காரம்  சேர்த்தா அல்சர். தேங்கா அரைச்சுவிடுன்னா பித்தம்!

வரவர உன் சமையலே பிடிக்கலன்னு சொன்னாரா, போய் டாக்டர கேளுங்க. இல்ல நீங்களே சமைச்சுக்குங்கன்னு சொல்லிட்டாங்க அம்மா. அதுக்கு அப்புறம்தான் பாத்திரக் கிரிக்கெட் நடந்தது. 

நாளைக்கு சரியாவும். 

 உஷ், யாரொ வராங்க, சும்மா இரு.

அட பக்கத்து வீட்டு அம்மா! அவங்க  வீட்டில பாரு தனியா சமையல் ரூம் இல்லியாம்! பொதுவா நடுவில 
புது மாதிரியாமில்ல!  

கொஞ்சம் சும்மா இரு என்றது ''மைக்ரோ,''

''புதிய பிரெஸ்டிஜ் இண்டக் ஷன் அடுப்பு,'' சிரிக்கிறது.























                                        

1 comment:

  1. WoW! Your imagination runs riot and it is fantastic. Wonderful write up. Today nights dinner is upma & dosai with tomato pickle, chutney and sambar, all microwaved.

    ReplyDelete