10 Jan 2013

பெண்கள் -அன்றும் -இன்றும்-Savitri,Draupadi& the Modern woman

                                                                 இன்றைய தேதிக்கு எல்லோரும் பேசுவது டில்லி மாணவியைப் பற்றிதான். நினைக்க நினைக்க மனவேதனைதரும் ஒரு நிகழ்ச்சியாகவும், அதே சமயம் பெண்களுக்கு அறிவுரை கூறும் வாய்ப்பாகவும் இது ஆகிவிட்டது.  இரவு நேரத்தில் வெளியே போவது  தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  ஒரு குடும்பத்தலைவியாக  இருந்தால் போதுமென்றும், ஆடை அணிவதில் கவனம் தேவை எனவும் அறிவுரைகள்  வந்த வண்ணம் உள்ளன.

காலம் மாறும் போது கலாச்சாரங்களும் மாறத்தானே வேண்டும்? படித்த, வேலைக்குப் போகும், பட்டதாரிப் பெண் வேண்டும். கோதுமை நிறமுள்ள, அழகான, வசதியான கடவுள் மீது பயமுள்ள, குடும்பப்பெண்தேவை என்றுதானே மணமகள் தேவை விளம்பரங்கள் வருகின்றன?

 வீட்டு வாசப்படிய தாண்டாம எப்படி படிக்கிறது?  பெண்ணோ, பையனோ  நல்ல சம்பாத்யம் கிடைக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்று தானே  ஆசைப்படுகிறார்கள். செளகரியமான ஆடைகளை அணிவதில் தப்பொன்றும் இல்லையே! ஆனால் படிப்பினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி பட்டி மன்றமே வைக்கலாம். 

என் வீடு முக்கிய சாலையில் இருக்கிறது.இரவு ஒன்பது மணிவரை வேலைக்குச் செல்லும் பெண்கள்  நடமாட்டம் இருக்கதான் செய்கிறது.  காலத்தின் கட்டாயம்.! சில சமயங்களில் தனியே போக வேண்டியுள்ளது. என்ன செய்வது?

பாலியல்  பலாத்காரங்கள்  இராமாயண, மகாபாரத காலத்திலேயே ஆரம்பமானவைதான்.

 அரிச்சந்திர மகாராஜா தன் மனைவியை விற்றான். நளன் தன் மனைவியின் புடவையைப் பாதியாகக் கிழித்துக் கொண்டு காட்டில் அவளைத் தனியாக விட்டு விட்டு ஓடிப்போனான். துஷ்யந்தன் சகுந்தலையை மணந்து கொண்டதை மறந்தே போனான். இந்திரன் செய்த தவறுக்காக அகலிகை கல்லானாள்.

இராமாயணம் சீதாதேவியின் கற்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அநுமன் இலங்கையில் சீதா தேவியைப் பார்த்துத் திரும்பிய உடன் சொன்ன செய்தி என்ன? சீதையின் கற்பு பறி  போகவில்லை என்பதுதான். சரி, இராவணனைக் கொன்றபின்பு வரும் சீதைக்கு  அக்னிப் பரிட்சை வைக்கிறார் இராமர். அடுத்து மக்கள் வாயை மூட கர்ப்பிணியான சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறார். லவகுசர்கள் அஸ்வமேதக் குதிரையைப் பிடிக்க, மீண்டும் அக்னிப் பரிட்சை என்ற போதுதான்.........?

சீதாதேவி சொல்லியிருக்க வேண்டும், ''அடப் போய்யா, உன் தயவு இல்லாமல்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கினேன்! நாளைக்கு வேறு எவனாவது சொன்னான் என்று திரும்பவும் என்னைக் காட்டுக்கு அனுப்பமாட்டாய் என்று என்ன நிச்சயம்? உன்னோடு வருவதைவிட இறந்து போவது உத்தமம்''

சீதை பூமியைப் பிளந்து கொண்டு போனாள், தனக்கு நியாயம் கிடைக்காதென்று! சீதை எத்தகையவள்? தன்னுடைய ஒரு சொல்லால் அனைவரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டவள்; ஆனால் தன் கணவனின் பெயருக்கு மாசு ஏற்படக்கூடாதென்று பொறுமை காத்தவள். ஜனகமகாராஜாவின் மகள், தசரதனின் மருமகள், ஶ்ரீ ராமனின் பட்டமகிஷி, கணவனால் கைவிடப்பட்டு காட்டில்......! 

இன்றைய பெண்களிலும் எத்தனையோ பேர், கணவனின் சம்பளத்தைவிட அதிகம் சம்பாதித்தால் கணவனுக்கு அவமதிப்பு என்று, வற்புறுத்தலால் பதவி உயர்வுகளை வேண்டாமென்று தியாகித்த வர்களை நான் அறிவேன். படித்தும்  வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவியாய் இருப்பவர்கள் எத்தனையோ பேர்!    

சீதாதேவியின் வாழ்க்கை நமக்கு என்ன சொல்கிறது? கணவனால் கைவிடப்பட்டாலும், ஒரு பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது. தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்று காட்டுகிறது! நம் பாரதத்தில் எத்தனையோ சீதைகள்!

அடுத்து பாஞ்சாலியைப் பார்ப்போம்! கெளரவர் சபையில், பீஷ்மர் முதல் அத்தனைபேரும் கூடியிருக்கும் சபையில் நியாயம் கேட்கிற திரெளபதியைக் காட்டுகிறது மகாபாரதம்!

வீட்டுமாசாரியன் என்ன சொல்கின்றான்?'' ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம், தானமெனத் தந்திடலாம். சாத்திரப்படி தருமன் உன்னைப் பணயம்  வைத்ததில் தப்பில்லை'' என்கிறான்!

'' பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்! பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்!
கண்பார்க்க வேண்டும் ! என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.''பாஞ்சாலி! 

யார் துணைக்கு வந்தார்கள்? நெடுமரமென நின்ற ஐந்து கணவர்கள்..................! சபையினோர்? வீற்றிருந்தார்!

துணைக்கு  வந்தது யார் என மிக அழகாகச் சொல்கிறார் பாரதி! ''உட்சோதியிற்  கலந்தாள்;--அன்னை  உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்''
ஆம், தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆன்ம ஜோதியிலே கலந்தாள்! என்ன செய்தாள் ''கலந்தாள்''!
கலப்பது என்றால் என்ன? பிரிக்கமுடியாதது!சர்க்கரையைப் பாலில் கலந்தபின்  இரண்டும் ஒன்றாகிவிடுகிறது அல்லவா?அது போல இறைவனோடு  இரண்டறக் கலந்தாள்! அடுத்த வரி என்ன? ''''உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்.'' அர்த்தம் புரியவில்லை என்றால் என்ன செய்வது என, கலந்தாள் என்று சொன்னால் போதாது என்று ''ஒருமையுற்றாள்'' --ஒன்றிப் போனாள் என்கிறார் மகாகவி. 

அவளுடைய, இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கக் கூடிய சக்தியால் அவள் தன்னைத்தானே காத்துக் கொண்டாள்! அதுதான் உண்மை!

சாவித்திரி, சத்தியவான் கதை என்ன சொல்கிறது? சாவித்திரி தான் செய்த  யோகசாதனையால் பெற்ற ஆன்ம விழிப்புணர்வால், யமனுடன் போராடி சத்யவானை மீட்கிறாள் என்கிறார் ஶ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி மகாகாவியத்தில்.

இந்தியாவில்  பெண்கள் ஏன் சாவித்திரி நோன்பு போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும்? ஆண்கள் செய்வதில்லையே என்று கேட்கிறார்கள்! இந்த நோன்புகள் தங்களுடைய ஆன்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவே வைக்கப் பட்டுள்ளன என்பதை மாதர்கள்  உணரவேண்டும்.

குடித்தாலும், அடித்தாலும்  கழுத்தில் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றுக்கு மதிப்புக் கொடுத்து, கணவனையும், குழந்தைகளையும் காப்பாற்ற இரவுபகல் பாடுபடும்  பெண்களை நானறிவேன்.

இந்தியப் பெண்கள்  மேற்கத்திய ஆடைகளை அணிவதும், ஏட்டுக் கல்வியும், பெரிய பதவிகளில் கை நிறைய சம்பாதிப்பதையும் மட்டும்   பெருமை என எண்ணாமல், தங்கள் உடலை வலிமையுடையதாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு, முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தர வேண்டும்.  தியானம்செய்யவும், ஆன்ம விழிப்புணர்வு பெறவும் முயற்சி செய்ய வேண்டும். இது பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையைத் தரும்.'' மனதில் உறுதி வேண்டும்,''   இதுவே உண்மையான கல்வியாகும். 







4 comments:

  1. Accham ellai,Accham Ellai, Accham anbathilayae..

    ReplyDelete
  2. எழுத்தில் முதிர்ச்சி அழகாய் உள்ளது.. எழுதியதற்கு நன்றி :)

    ReplyDelete
  3. அதியற்புதமானதொரு கட்டுரை! இன்றைய தேதியில் ஆண் பெண் இரு சாராரும் படித்துப் பயன் பெற வேண்டிய அனுபவக் கட்டுரை.

    மிக்க நன்றி அம்மா.

    amas32

    ReplyDelete
  4. that is a tribute to womanhood......woman is sarvavyappi...present everywhere,like air....sirstikartha....no jeev can sustain without her.....like god...that is why the gruntled men take her for granted.....

    ReplyDelete