31 Jan 2013

உப்போ உப்பு

அப்பா அந்த கழுதைக் கதையைச் சொல்லுன்னு வந்தான் முருகன். 

ஒரு ஊரில ஒரு வியாபாரி இருந்தானாம். அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தானாம். அந்தக் காலத்தில எல்லாம் உப்ப வாங்கி மூட்டையில கட்டி, படியால அளந்துதான் உப்பு விப்பாங்க. உப்போ உப்புன்னு கூவுவாங்க. அந்த வியாபாரி பக்கத்து ஊருக்குப் போக ஒரு சின்ன ஆற்றுப் பாலத்துல நடக்கணும். ஒரு நாள் கழுதை கால் தடுமாறி தண்ணிக்கு உள்ள விழுந்திடுச்சாம். 
உப்பு என்ன ஆச்சு?
தண்ணில கரைஞ்சு போயிடுச்சாம். கழுதைக்கு ஒரே குஷி. அதுக்கு தெரிஞ்சிடுச்சு தண்ணில விழுந்தா உப்பு கரைஞ்சிடும்னு. அதுனால அடுத்த நாள் வேணுமின்னே விழுந்திச்சாம்.
வியாபாரிக்கு கழுதையோட குறும்பு புரிஞ்சிடுச்சாம்!
வீட்டுக்குப் போனா அவன் பொண்ணு சமையல் பண்ணி இருக்கல. அவனுக்கு கோவம் வந்திச்சாம்! பொண்ணுகிட்ட சொன்னான்,'' இதோ பாரு நீ செரியா சமைக்கலைனா இந்தக் கழுதைக்கு ஒன்னைய கட்டி வெச்சுடுவேன்,'' அப்பிடின்னானாம்.
கழுதைக்கு ஒரே குஷி. ஆகா இந்த அழகான பொண்ணு என்பொண்டாட்டியா வரணும்னா நாளையிலிருந்து ஒழுங்கா வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கோணும்னு சமத்தா மூட்டைய தூக்கிட்டுபோச்சாம்.
பொண்ணுக்கு பயம் வந்திடுச்சு! சின்னப் பொண்ணுதானே! இந்தக் கழுதைய கட்டிக்கிட்டு எப்படி வாழறதுன்னு நல்லா தினம் சமையல் செஞ்சுது! கழுத மட்டும் கனவு கண்டுட்டே இருந்தது!

முருகன் சிரித்துக் கொண்டே தூங்கிவிட்டான். தினமும் இந்தக் கதையைக் கேட்டால் தான் அவனுக்கு தூக்கம் வரும். காலைல எழுந்தா தினம் அப்பா அவனை உப்பு மூட்டை தூக்க வேண்டும். அதாங்க, முதுகில தூக்கி வெச்சுக்கிட்டா, கை இரண்டும் கழுத்தை வளைத்துக் கொள்ள, கால்களால் இடுப்பைச் சுற்றி வளைத்துக்  கொண்டு செல்லம் கொண்டாடுவான். அதிலதான் எத்தனை சந்தோஷம்!

உப்பு நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பொருள். உப்பில்லாமல் நாம் உணவுப் பொருள்களை சமைப்பதில்லையே! 
இவ்வளவு பிரபலமான உப்பைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா? 
கடல் உப்பு, கல்லுப்பு, சோடியம் குளோரைடு முதலிய செயற்கை உப்புகளையே நாம் உப்பு என்கிறோம்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமென்றால் மூன்று வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்கவேண்டுமாம். "ஆரோக்யத்துக்கும் வெள்ளைக்காரனுக்கும் என்னய்யா சம்பந்தம்" என்கிறீர்களா?

வெள்ளையா இருக்கிற மனுஷனைச் சொல்லவில்லை! உணவு! நம் உணவிலிருந்து விரட்ட வேண்டிய முதல் வெள்ளைக்காரன் உப்பு. 
அடடா, '' உப்பில்லாத பண்டம் குப்பையிலே'' என்ற பழமொழி என்னாவது?  
பழமொழி கிடக்கட்டும், உடம்பு சீராக இருக்க  உப்பைக் குறைக்க வேண்டும். 

அப்படின்னா, யாராவது உப்பு போட்டு சாப்பிடுவது இல்லையா, அப்பதானே வெக்கம், மானம், சூடு, சொரணை இருக்கும்னு சொன்னா என்னசெய்வது?

கேட்கிறவனைப் பார்த்து நீ சிரி. உப்பினால் உடம்பு உப்பும், தெரியுமா? இரத்த அழுத்தம் வரும். சிறுநீரகம், இருதயம், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும். உப்பில் மனித உடம்புக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் இல்லை. காய்கறிகளிலும், கீரைகளிலும் உள்ள இயற்கையான உப்புச் சத்தே நம் உடலுக்குப் போதுமானது. அதனால்தான்  இலை தழைகளைத் தின்னும் மிருகங்கள்  ஆரோக்யமாக இருக்கின்றன.

உப்பு அதிகமானால் அது உணவுப் பொருள் அல்ல என புழு, பூச்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உப்புப் போட்டு ஊற வைத்த ஊறுகாய்களை அவை சாப்பிடுவதில்லை.
நம் உடலில் உள்ள தண்ணீரை தேவைப் படும் போது உபயோகிக்க முடியாமல் தடையாக இருப்பது உப்புதான். உடலில் உள்ள கால்சியம் சத்தைத் திருடி, பற்களையும், எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்வது உப்புதான்.

''உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்,'' என்பது பழமொழி. உப்பு எந்த அளவு கூடுதலாக உள்ளதோ அந்த அளவு தண்ணீரையும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும். அதனால் சிறு நீரகங்களின் வேலையும் கூடுதலாகிறது.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்பன அறுசுவைகள். அறுசுவை உணவை உண்ண வேண்டும் எனப் பழங்காலச் சித்தர்கள் கூறியுள்ளனர். அவர்கள் சொல்லியுள்ள உப்புச்சத்துக்கள்  காய்கள், பழங்கள் ஆகியவற்றில் இயற்கையாக  உள்ளனவாகும்.

என்னுடன் பணியாற்றிய பாலா திரிபுரசுந்தரி வீட்டிற்கு அழைப்பின் அன்பிற்காக சென்றிருந்தோம். வடை, பொங்கல் கொடுத்து உபசரித்தார்கள். வடையை வாயில் வைத்ததும் முகம் அஷ்டகோணல் ஆயிற்று! உப்பு, உப்பு, உப்பு! பாலா சிரித்தார்? என் கணவருக்கு உப்பு தூக்கலாக இருந்தால்தான் பிடிக்கும் என்றார். மிக அதிகமோ என்றார்! தெரியாமல் அதிகம் போட்டாரா அல்லது நிஜமாகவே அவங்க வீட்டுக்காரருக்கு உப்பு அதிகம் வேண்டுமோ நானறியேன்! "உப்பிட்டவனை உள்ளளவும் நினை,'' என்பது இன்னொறு பழமொழி. இன்றுவரை வடையைப் பார்த்தால் பாலா ஞாபகம்தான் வருகிறது! 
(Fewer Englishmen adding salt at the table
The number of people in England adding salt to food at the table fell by more than a quarter in the five years following a national campaign, according to research published in the British Journal of Nutrition.
The Hindu, 31.1.2013)







13 Jan 2013

தேன்கூடு.

'தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு,' என்ற பாடல் அமரதீபம் படத்தில்! எழுதியவர்  கே. பி. காமாட்சி என்கிறது கூகுள் வலைத்தளம் .ஒரு காலத்தில் புகழ் பெற்ற பாடல்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்''தேன் சிந்துதே வானம்.'' படம் பொண்ணுக்குத் தங்கமனசு. பொன்னா, பொண்ணா தெரியவில்லை. வானம் எங்கேயாவது தேனைச் சிந்துமா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. கவிஞர் எழுதியது, டைரக்டர் இடத்திற்குத் தக்கவாறு பாட்டைப் புகுத்தி இருக்கிறார். இசை செவிக்கு இனிமையாக இருக்கிறது.

தேன் என ஆரம்பிக்கும் திரைப்படப் பாடல்கள் ஒருசில இருக்கின்றன. தேன் மொழி என்று பலரும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்ர்கள்.

இந்தத் தேன் என்ற பெயர், எப்பொழுதும் திருவருட்பா படிக்கையிலே இனிக்கும்.அதற்கும் மேலாக எங்கள்  குடியிருப்பில்  தேனீக்கள் கூடு கட்டுவதும் அதை எங்கள் 'செக்யூரிட்டி' ஆட்கள், ஆட்களைக் கூட்டிவந்து அழிப்பதும் வழக்கமாக நடப்பவைதான். எங்கு பார்த்தாலும் உயிரிழந்த தேனீக்களைப் பார்க்கையில் மனம் நோகும். மனிதனின் பேராசையை எண்ணி வருந்தும்.

ஒரு தனி மனிதனால் இந்த அக்கிரமத்தைத் தடுக்கமுடியுமா?

'சார், மாடி வீட்டு அம்மா போன் செஞ்சு கூப்டாங்க. அதான் வந்தேன். உங்க கிட்ட கேட்காம ஒன்னும் செய்யக் கூடாதுன்னு செக்யூரிட்டி சொல்லிட்டாரு!' சலாமடித்து சிரித்த செக்யூரிட்டிக்கு தயக்கம்தான். ஒரு வேளை சம்மதிப்பார் என்று ஒரு நப்பாசை.

மணிக்கு ஒரே கோபம்! இதப் பாருப்பா, நீ போயிடு. மாடி அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்.

ஒரு 'நெட்லான்'  வலை போடுங்கள் என்று அந்த அம்மாளிடம் சொல்லியாகிவிட்டது . கேட்டால்தானே! இவர்களுக்கு ஜால்ரா போட பக்கத்தில் இருப்பவர்கள்! ஒரு பாட்டில் தேன் 'ஓஸியில்' கிடைக்கிறது என்பதற்காக இப்படியா ஆலாகப் பறப்பார்கள்?

இவர்களில் யாருக்காவது ஒற்றுமை என்பதன் பொருள் தெரியுமா? சேர்த்துவைக்கும் கலைதான் புரியுமா? யாராவது கஷ்டப்பட்டால்  எடுத்து  அனுபவிக்கத் தெரியும்! சை, என்ன மனிதர்கள்! இந்தத் தேனீக்களுக்காவது தெரிகிறதா, மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் கூடு கட்டக் கூடாதென்று!
பறந்து பறந்து மலர்கள்தோறும் சென்று, தன் சின்னஞ்சிறு வாயில் துளித் துளியாகக் கொண்டுவந்து சேமிக்கும் தேன்! எத்தனை நாள் உழைப்பு? அதை ஒரு நொடியில் கலைக்க மனிதனால்தான் முடியும்!

அன்று குடியிருப்பில் வசிக்கும் சின்னப்பெண் கேட்டது, ''தாத்தா, அந்தத் தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்தால் தேனீக்கள் எல்லாம் இறந்து போய்விடும் அல்லவா?'' ஆம், என்று சொன்னவுடன் அந்தக் குழந்தை சொல்லிற்று,'' தேனீக்களைக் கொன்று எடுக்கும் தேனை நான் இனிமேல் ஒரு நாளும் சாப்பிடமாட்டேன் '' அந்தக் குழந்தை மனதின் கருணையும், இரக்கமும் அவரை நெகிழ வைத்தன.
தேனீக்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றனர் குழந்தைகள்.

தேனீக்கள் எப்போதும் உயர்ந்த இடத்திலேயே வாழும்.
நாமும் உயர்ந்த நோக்கத்தோடு கூடிய வாழ்வை வாழவேண்டும்.

தேனீக்கள் தன் இனத்தோடு சேர்ந்தே வாழும். மனிதனும் தன் அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடி வாழவேண்டும்.

பல மைல்கள் பறந்துசென்று கூட தேன் எடுத்துவரும்! நாமும் மேற்கொண்ட நோக்கத்திற்கு, சாதனைக்குத் தக்க பலன் கிடைக்கும்வரை இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.

தேனீக்கள் தேன் எடுக்கும் போது மலர்கள் மீது முழுமையாக உட்காராது. மேலும் மொத்தமாக மீதம் வைக்காமல் எல்லாத்  தேனையும் எடுக்காது. கொஞ்சம் மீதி வைத்திவிட்டுதான் எடுக்கும்! அது போல நாமும் தேவையானவற்றை தேவையான அளவு மட்டுமே அனுபவிக்க வேண்டும்.

தேனீக்கள் எப்பொழுதும் கூட்டிலிருந்து பூவிற்கும், பூவிலிருந்து கூட்டிற்கும்தான் செல்லும். இடையில் காணும் எதன் மீதும் கவனம் செலுத்தாது!  நாமும் நம் நினைவை கெட்ட விஷயங்களில் திருப்பாமல் இறைவன் நினைவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

உத்தவர் என்பவற்கு ஶ்ரீ கிருஷ்ணர் சொன்ன 24 வழிகாட்டிகளில் தேனீயும் ஒன்று எனும் பெருமையுடைத்து தேனீக்கள்!

தேன் மிக உயர்ந்த  மருத்துவ குணம் உடையது.  இனிப்பானது. எத்தனை காலம் சென்றாலும் தேன் கெட்டுப்போகாது.  இறைவன் தேனென இனிக்கின்றான் என வள்ளல் பெருமான்,''தேனென இனிக்கும் திருவருட் கடலே''  எனவும்,  ''தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டு,'' எனவும், இன்னும் தேனுக்கு  உவமை சொல்லும் பல பாடல்களும்  பாடியுள்ளார். 

''தேனென்று பாகென்று உவமிக்கொணா தெய்வ வள்ளிக் கோன் '' என்கிறார் அருணகிரிநாதர்.

திருவாசகம் முழுமையுமே தேனென இனிப்பது எனப் பாராட்டப்பட்டுள்ளது.

ஒரு வழிப்போக்கன் காட்டு வழியே போனான். தவறிப் போய் பள்ளத்தில் உருண்டு விடுகிறான். ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். கடவுளே என்னைக் காப்பாற்று என ஓலமிடுகிறான். அப்போது மேலே உள்ள தேன் கூடு ஒன்றிலிருந்து தேன் சொட்டுச் சொட்டாக அவன் வாயில் விழுந்ததாம். உடனே அவன் தன் நிலைமையை மறந்துவிட்டு தேனின் சுவையில் மயங்கினானாம்.  

கடைக்குப் போய்விட்டு வந்தவர் தேனி வளர்ப்பு இலாகா ஆளையும் கூட்டி வந்தார். அவர் மொட்டைமாடியில் தேன் சேகரிக்கும், பெட்டியை வைத்தார்.  தேன் எடுத்தால் பரவாயில்லை. தேனீக்களை நெருப்பு வைத்துக் கொல்லமாட்டார்கள் என்ற திருப்தி அவருக்கு. எப்படியோ தேன் கிடைத்தால் சரி என்ற ஆனந்தம் குடியிருப்பவர்களுக்கு.  தேனீக்கள் மட்டும் எந்தக் கவலையுமின்றிப் பறந்து மகிழ்ந்தன.






10 Jan 2013

பெண்கள் -அன்றும் -இன்றும்-Savitri,Draupadi& the Modern woman

                                                                 இன்றைய தேதிக்கு எல்லோரும் பேசுவது டில்லி மாணவியைப் பற்றிதான். நினைக்க நினைக்க மனவேதனைதரும் ஒரு நிகழ்ச்சியாகவும், அதே சமயம் பெண்களுக்கு அறிவுரை கூறும் வாய்ப்பாகவும் இது ஆகிவிட்டது.  இரவு நேரத்தில் வெளியே போவது  தவிர்க்கப்பட வேண்டும் என்றும்,  ஒரு குடும்பத்தலைவியாக  இருந்தால் போதுமென்றும், ஆடை அணிவதில் கவனம் தேவை எனவும் அறிவுரைகள்  வந்த வண்ணம் உள்ளன.

காலம் மாறும் போது கலாச்சாரங்களும் மாறத்தானே வேண்டும்? படித்த, வேலைக்குப் போகும், பட்டதாரிப் பெண் வேண்டும். கோதுமை நிறமுள்ள, அழகான, வசதியான கடவுள் மீது பயமுள்ள, குடும்பப்பெண்தேவை என்றுதானே மணமகள் தேவை விளம்பரங்கள் வருகின்றன?

 வீட்டு வாசப்படிய தாண்டாம எப்படி படிக்கிறது?  பெண்ணோ, பையனோ  நல்ல சம்பாத்யம் கிடைக்கும் வேலைக்குப் போக வேண்டும் என்று தானே  ஆசைப்படுகிறார்கள். செளகரியமான ஆடைகளை அணிவதில் தப்பொன்றும் இல்லையே! ஆனால் படிப்பினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி பட்டி மன்றமே வைக்கலாம். 

என் வீடு முக்கிய சாலையில் இருக்கிறது.இரவு ஒன்பது மணிவரை வேலைக்குச் செல்லும் பெண்கள்  நடமாட்டம் இருக்கதான் செய்கிறது.  காலத்தின் கட்டாயம்.! சில சமயங்களில் தனியே போக வேண்டியுள்ளது. என்ன செய்வது?

பாலியல்  பலாத்காரங்கள்  இராமாயண, மகாபாரத காலத்திலேயே ஆரம்பமானவைதான்.

 அரிச்சந்திர மகாராஜா தன் மனைவியை விற்றான். நளன் தன் மனைவியின் புடவையைப் பாதியாகக் கிழித்துக் கொண்டு காட்டில் அவளைத் தனியாக விட்டு விட்டு ஓடிப்போனான். துஷ்யந்தன் சகுந்தலையை மணந்து கொண்டதை மறந்தே போனான். இந்திரன் செய்த தவறுக்காக அகலிகை கல்லானாள்.

இராமாயணம் சீதாதேவியின் கற்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அநுமன் இலங்கையில் சீதா தேவியைப் பார்த்துத் திரும்பிய உடன் சொன்ன செய்தி என்ன? சீதையின் கற்பு பறி  போகவில்லை என்பதுதான். சரி, இராவணனைக் கொன்றபின்பு வரும் சீதைக்கு  அக்னிப் பரிட்சை வைக்கிறார் இராமர். அடுத்து மக்கள் வாயை மூட கர்ப்பிணியான சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புகிறார். லவகுசர்கள் அஸ்வமேதக் குதிரையைப் பிடிக்க, மீண்டும் அக்னிப் பரிட்சை என்ற போதுதான்.........?

சீதாதேவி சொல்லியிருக்க வேண்டும், ''அடப் போய்யா, உன் தயவு இல்லாமல்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கினேன்! நாளைக்கு வேறு எவனாவது சொன்னான் என்று திரும்பவும் என்னைக் காட்டுக்கு அனுப்பமாட்டாய் என்று என்ன நிச்சயம்? உன்னோடு வருவதைவிட இறந்து போவது உத்தமம்''

சீதை பூமியைப் பிளந்து கொண்டு போனாள், தனக்கு நியாயம் கிடைக்காதென்று! சீதை எத்தகையவள்? தன்னுடைய ஒரு சொல்லால் அனைவரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டவள்; ஆனால் தன் கணவனின் பெயருக்கு மாசு ஏற்படக்கூடாதென்று பொறுமை காத்தவள். ஜனகமகாராஜாவின் மகள், தசரதனின் மருமகள், ஶ்ரீ ராமனின் பட்டமகிஷி, கணவனால் கைவிடப்பட்டு காட்டில்......! 

இன்றைய பெண்களிலும் எத்தனையோ பேர், கணவனின் சம்பளத்தைவிட அதிகம் சம்பாதித்தால் கணவனுக்கு அவமதிப்பு என்று, வற்புறுத்தலால் பதவி உயர்வுகளை வேண்டாமென்று தியாகித்த வர்களை நான் அறிவேன். படித்தும்  வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவியாய் இருப்பவர்கள் எத்தனையோ பேர்!    

சீதாதேவியின் வாழ்க்கை நமக்கு என்ன சொல்கிறது? கணவனால் கைவிடப்பட்டாலும், ஒரு பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது. தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்று காட்டுகிறது! நம் பாரதத்தில் எத்தனையோ சீதைகள்!

அடுத்து பாஞ்சாலியைப் பார்ப்போம்! கெளரவர் சபையில், பீஷ்மர் முதல் அத்தனைபேரும் கூடியிருக்கும் சபையில் நியாயம் கேட்கிற திரெளபதியைக் காட்டுகிறது மகாபாரதம்!

வீட்டுமாசாரியன் என்ன சொல்கின்றான்?'' ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம், தானமெனத் தந்திடலாம். சாத்திரப்படி தருமன் உன்னைப் பணயம்  வைத்ததில் தப்பில்லை'' என்கிறான்!

'' பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்! பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்!
கண்பார்க்க வேண்டும் ! என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.''பாஞ்சாலி! 

யார் துணைக்கு வந்தார்கள்? நெடுமரமென நின்ற ஐந்து கணவர்கள்..................! சபையினோர்? வீற்றிருந்தார்!

துணைக்கு  வந்தது யார் என மிக அழகாகச் சொல்கிறார் பாரதி! ''உட்சோதியிற்  கலந்தாள்;--அன்னை  உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்''
ஆம், தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆன்ம ஜோதியிலே கலந்தாள்! என்ன செய்தாள் ''கலந்தாள்''!
கலப்பது என்றால் என்ன? பிரிக்கமுடியாதது!சர்க்கரையைப் பாலில் கலந்தபின்  இரண்டும் ஒன்றாகிவிடுகிறது அல்லவா?அது போல இறைவனோடு  இரண்டறக் கலந்தாள்! அடுத்த வரி என்ன? ''''உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்.'' அர்த்தம் புரியவில்லை என்றால் என்ன செய்வது என, கலந்தாள் என்று சொன்னால் போதாது என்று ''ஒருமையுற்றாள்'' --ஒன்றிப் போனாள் என்கிறார் மகாகவி. 

அவளுடைய, இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கக் கூடிய சக்தியால் அவள் தன்னைத்தானே காத்துக் கொண்டாள்! அதுதான் உண்மை!

சாவித்திரி, சத்தியவான் கதை என்ன சொல்கிறது? சாவித்திரி தான் செய்த  யோகசாதனையால் பெற்ற ஆன்ம விழிப்புணர்வால், யமனுடன் போராடி சத்யவானை மீட்கிறாள் என்கிறார் ஶ்ரீ அரவிந்தர் தன் சாவித்திரி மகாகாவியத்தில்.

இந்தியாவில்  பெண்கள் ஏன் சாவித்திரி நோன்பு போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும்? ஆண்கள் செய்வதில்லையே என்று கேட்கிறார்கள்! இந்த நோன்புகள் தங்களுடைய ஆன்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவே வைக்கப் பட்டுள்ளன என்பதை மாதர்கள்  உணரவேண்டும்.

குடித்தாலும், அடித்தாலும்  கழுத்தில் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றுக்கு மதிப்புக் கொடுத்து, கணவனையும், குழந்தைகளையும் காப்பாற்ற இரவுபகல் பாடுபடும்  பெண்களை நானறிவேன்.

இந்தியப் பெண்கள்  மேற்கத்திய ஆடைகளை அணிவதும், ஏட்டுக் கல்வியும், பெரிய பதவிகளில் கை நிறைய சம்பாதிப்பதையும் மட்டும்   பெருமை என எண்ணாமல், தங்கள் உடலை வலிமையுடையதாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு, முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தர வேண்டும்.  தியானம்செய்யவும், ஆன்ம விழிப்புணர்வு பெறவும் முயற்சி செய்ய வேண்டும். இது பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையைத் தரும்.'' மனதில் உறுதி வேண்டும்,''   இதுவே உண்மையான கல்வியாகும். 







7 Jan 2013

ஒரு சமையலறை பேசுகிறது.............!?!.....

 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சு, அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க. சும்மா இரு!
 ஓ! அதுதான் பாத்திரம் எல்லாம் சத்தம் போடுதோ?

ஆமாம், இரு இரு, கொஞ்சநேரத்துக்கு முன்னாலே ஐயாவும் அம்மாவும் சத்தம் போட்டுப் பேசினாங்க.
அம்மா டம்ளர 'டங்'குனு வெச்சங்களா, ஐயா கிண்ணம், கரண்டி, டம்ளர்னு எல்லாத்தையும் எடுத்து வீசிட்டு வெளியில போயிட்டாரு. அம்மாக்கு கோபம் இன்னும்  தீரல அதுதான், அழுதுட்டு, நிக்கிது பாவம்.
ஒரு காப்பி குடிச்சா சரியாவும், இந்த மருமகப் பொண்ணயும் காணமே?

காலைல இது பாட்டுக்கு அடுப்பு மேல பால வைச்சுட்டு எங்கியோ போயிருச்சா, அடுப்புத் தணல கம்மியாதான் வெச்சுருந்தத பாத்தேன், சொல்ல சொல்ல கேக்காம பால் பொங்கலோ பொங்கல்!  பொசு பொசுன்னு தீஞ்ச நாத்தம்! காத்து சும்மா இருக்கா! லூசுப் பய எல்லார் மூக்கிலயும் நுழைஞ்சு காட்டிக் குடுத்துட்டுது! என்ன பால் பொங்கின நாத்தம், நம்ம வூட்டிலயான்னு எல்லாரும் ஓடியாந்துட்டாங்க! அந்தப் பொண்ணுக்கு செம அர்ச்சனை!

நேத்து தங்கச்சிப் பொண்ணு நான் சமைக்கறேன்னு, அடுப்படிக்கு வந்துதா! கடாய அடுப்புல வெச்சுட்டு, எண்ண, கடுகு, உளுத்தம்பருப்பு கூட  நாலு மிளகா வத்தலப்போட்டுதா, ஒருநெடி ஏறிச்சு பாரு, எல்லாரும் கண்ணுல தண்ணியோட, அச்சு...அச்சுன்னு தும்ம ஆரம்பிச்சுட்டாங்க!

ஆமா, நீ சொல்லிதான் எனக்குத் தெரியணுமா? நானும்தானே தும்மினேன்!

இந்த மிக்ஸி சத்தத்தில நீ சொல்றது எதுவும் எனக்குக் கேட்கல. ப்ளீஸ் வெயிட்.

ஆமா, அததான் சொல்லவந்தேன். குக்கர்ல வெயிட்டப்போடாம இந்த அம்மா எங்கியோ போயிடிச்சு.
மேசை மேல செல் போனு, அது வேற அடிக்குது. என்ன சத்தம் போ! பத்து மணி வர 'எங்கே நிம்மதி'ன்னு நீயும் நானும் பாட வேண்டியதுதான்.

அட, என்ன சொல்ற நீ, ஒரு வீட்டில நிம்மதிய குடுக்கும் இடம் சமையக்கட்டுதான். நெருப்பும், காத்தும், தண்ணியும் ஒத்துமையா வேலை செய்யற இடம்.
 பாரு, ஐயா ராத்திரி வந்து இங்க உக்காந்து தான் ரொம்ப நேரம் படிச்சுக்கிட்டு இருந்தாப்பல.

வீட்டுப் பொண்ணுக சத்தம் போடாம அழுவணும்னா இங்காதானே வாராங்க!

தங்கச்சிப் பொண்ணு வீட்டுக்காரர் பாரு, யாராச்சும் வராங்களான்னு பாத்துட்டே வந்து,....
வந்து, அட வெக்கமா இருக்கு, நீயும் தானே பார்த்தே!

ஆமா, அதுல ஒரு சந்தோஷம்தான். காலைல அம்மா வந்து, சாமி பாட்டு எல்லாம் போடறாங்க, கேட்க சந்தோஷம்!

சமயலறையிலேந்து வர சாம்பார், ரச வாசனை, அப்பளம், வடை பொரிக்கும் மணம், பண்டிகை நாள்னு தெரியுது.

விசேஷ நாளில ஒன்னா சேரும்போது பெண்கள் மகாநாடு நடத்தர இடமும் இதுதானே! 

நேத்து கேட்டேல்ல ஒரே கூத்துதான். ஐயா சொல்லிட்டார்,''ஏம்மா இந்த வெண்டக்காயையும், சேப்பங்கிழங்கையும் ஒரே நாளில் சமைகிறே?'' ரசம் வெச்சு வெண்டக்காய மொறு மொறுன்னு பண்ணிட்டிருக்கலாமில்ல? 

எண்ணெய் ஜாஸ்தி சேர்த்தா கொலஸ்ட்ரால்! பாயசம்  பண்ணுன்னா சர்க்கரை வியாதி!
 உப்பு அதிகமானா 'பிளட் பிரஷர்,'  காரம்  சேர்த்தா அல்சர். தேங்கா அரைச்சுவிடுன்னா பித்தம்!

வரவர உன் சமையலே பிடிக்கலன்னு சொன்னாரா, போய் டாக்டர கேளுங்க. இல்ல நீங்களே சமைச்சுக்குங்கன்னு சொல்லிட்டாங்க அம்மா. அதுக்கு அப்புறம்தான் பாத்திரக் கிரிக்கெட் நடந்தது. 

நாளைக்கு சரியாவும். 

 உஷ், யாரொ வராங்க, சும்மா இரு.

அட பக்கத்து வீட்டு அம்மா! அவங்க  வீட்டில பாரு தனியா சமையல் ரூம் இல்லியாம்! பொதுவா நடுவில 
புது மாதிரியாமில்ல!  

கொஞ்சம் சும்மா இரு என்றது ''மைக்ரோ,''

''புதிய பிரெஸ்டிஜ் இண்டக் ஷன் அடுப்பு,'' சிரிக்கிறது.