29 Apr 2012

யார் நல்லவர்?

                                      ''மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்        
                                       மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே,
                                       வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
                                       வெட்டி விட்டோமென்று கும்மியடி!''

பாரதியாரின்  ''பெண்கள் விடுதலைக் கும்மி''யிலிருந்து இந்த  நான்கு வரிகள் கண்முன்னே!
ஏன் தெரியுமா?
நேற்று முன் தினப் பத்திரிகைச் செய்தி!  அட, என்ன செய்தி? வீட்டுக்குள் இடம் இல்லையென்று பெற்ற தாயை மாட்டுத் தொழுவத்தில் வைத்துக் காப்பாற்றும் மகனைப் பற்றியது தாங்க..

 அவன்  வீட்டுக்குள் இடப்பற்றாக்குறை!

''வெளியே போ, என்று துரத்திவிடாமல் வீட்டிலதானே இருக்கிறாள் என் தாய்! அவளுக்கு நான்கு பெண்கள்! மூன்று பிள்ளைகள்! மத்த யாரும் கவனிக்காம இருக்கும் போது நாந்தான் பார்த்துக் கொள்கிறேன். பகலிலும் இரவிலும் சாப்பாடு கொடுக்கிறாள் என் மனைவி! ஏன்யா பெரிசு பண்றீங்க? நேற்று கூட அவளுக்கு  காய்ச்சல். டாக்டர் கிட்ட கூட்டிப்போய் மருந்து வாங்கிக் குடுத்துருக்கேன். போங்கய்யா, பொழப்பத்தவங்களே!'' என்கிறான் பிள்ளை.

மாட்டுத்தொழுவத்தில்  கன்றுக்குட்டிக்குப் பக்கத்தில் ஒரு பாயில் ஒரு தலைகாணி, ஒரு போர்வை! ஈக்கள்மொய்க்க, கொசுக்கள் ரீங்காரமிடும். மாட்டுச் சாணமும், மூத்திரமும்!  இரவு நேரங்கள் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
நிஜமாகவே அவன்  நல்லவந்தான்.

பலவருடங்களுக்கு முன்னே எங்கள் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு குடும்பம். தாய், தந்தை, இருமகன்கள். ஒரே பெண். பெரிய பையன் கல்யாணம் செய்துகொண்ட கையோடு மனைவி வீட்டோடு போய் விட்டான். பெண் மணமாகி கொஞ்சம் தள்ளி நல்லபடி வாழ்ந்தாள். இரண்டாவது பையன் கல்யாணம் செய்து கொண்டான். குழந்தைகளும் பிறந்தார்கள். இதனிடையே பெரியவர் காலமானார். மருமகள் அவள் அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் வீடு  பார்த்தாள்.  பின்னாலேயே பிள்ளை!
இந்த அம்மா தனியே விடப்பட்டார். வெளியேயிருந்து யாரும் பேசக்கூடாது என்று வெளிக் கதவைப் பூட்டி விட்டுப் போய் விடுவார்கள். தனிமை அந்த அம்மையாரை படுக்கைக்குத் தள்ளியது.  வாரம் ஒரு முறை வந்து வேலைக்காரி  குளிக்க வைத்துப் போவாள். சாப்பாடு? சமையல் செய்யவோ, துளி வெந்நீர் வைக்கவோ அடுப்பும் கிடையாது. மதிய நேரத்தில் அந்த அம்மாவின் பெண் கஞ்சி  கொடுத்துவிட்டுப்      போவாள். அவ்வளவு தான்.

ஒரு  வாரம்  சென்றிருக்கும்  நல்ல கடுமையான  ஜுரத்தில்  பிதற்றும்  சப்தம்  கேட்டது.  ஜன்னல்
 சற்றே  திறந்திருக்க  உள்ளே  எட்டிப்பார்த்தேன்.  அடையாளமே  தெரியாதவாறு, வெட்டப்பட்ட  தலைமுடி,  குழி விழுந்த கண்கள்.  பாத்ரூம் வாசலில் சுருண்டு கிடந்த அவர்களைப் பார்த்துப் பதறிப் போய் அவர்களின் பெண்ணுக்கு தொலை பேசியில் சொல்ல, ''என்னங்க செய்யறது. தம்பி    சம்சாரம்      சாவிய  வாங்கிட்டுப் போயிடிச்சு. எங்க வீட்டுக்காரர் என்னைய போகக் கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க,'' என்றாள்.

நல்ல வேளையாக அந்த அம்மாளைக் கடவுள் இன்னும் சோதிக்காமல்  தன்னுடன் சேர்த்துக் கொண்டான். பூப் பல்லக்கென்ன, மேளதாளம் என்ன, கடைசி ஊர்வலம் வெகு ஜோர்!  உயிருடன் இருக்கும் போது  ஒரு வாய் சோறு போடாமல்  செத்தபின் என்ன வேண்டிக்கிடக்கிறது.

ஏன், எப்படியென்று தெரியவில்லை மனைவி செய்வதை எல்லாம் சர்வ சாட்சியாய்ப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தான் இந்தப் பிள்ளை.

யார் நல்லவர்?

                       ''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
                        தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
                        பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
                        எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
                        பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
                        புனிதநீ  ஆதலால்  என்னை
                        அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
                        அம்மைஅப்  பாஇனி ஆற்றேன்.''
                                                        -  திருஅருட்பா
                                      











28 Apr 2012

கோடை விடுமுறைக் கோலாகலங்கள்

கோடை விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை என்று ஏதாவது ஒரு குடும்பத்தார்  நிச்சயாமாக வருவார்கள். அவர்களுடைய குழந்தைகளும்  நாங்களும் சேர்ந்து கொண்டால் வீடு ரெண்டுபடும். காலையில் ஒன்பது மணிக்கு எல்லாம் சாப்பாடு போட்டுவிடுவார்கள். பிறகென்ன விளையாட்டுகள்  ஆரம்பித்துவிடும்.

பக்கத்து வீட்டுப் பசங்களும் சேர்ந்து கொள்ள  நான்குபேர் கேரம் ஆடுவார்கள். இன்னொறு நாலுபேர் சீட்டுக் கட்டை வைத்துக் கொண்டு செட் சேர்க்கும் ஆட்டம். அரைமணி நேரம் போனால்  இடம் மாறிவிடுவார்கள். 

நாங்கள் குன்னூரில் இருந்தபோது எங்கள் சித்தப்பாவின் மகன்கள் மூன்று பேர் விடுமுறைக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு  எப்பொழுதும் கிண்டலும் கேலியும்தான். எங்கள் வீட்டில் ''கேரம் போர்ட்''கிடையாது எனவே பக்கத்தில் இருந்த சந்தனக்கட்டை ஐயங்கார் வீட்டில் கடன் வாங்கி ஆட்டத்தில் மூழ்கினோம்.
ஏய், நாங்கதான் ஜெயித்தோம் தோத்தங்குளி,தோத்தாங்குளீ என்று என் அண்ணன் பாலன் கத்த, சித்தப்பா பையன் நடைக்கு (நடராஜன்) கோபம் வர, கேரம் போர்டைக் காலால் ஒரு உதை உதைக்க ''போர்ட்'' டப்'பென்று நட்ட நடுவில் உ..டை..ந். .து  போக எல்லோரும்  கப்சிப்!

அப்பாவுக்கு விஷயம் போக எல்லோருக்கும் அர்ச்சனை! முக்கியமாக எங்களுக்கு! வந்த விருந்தினர்களைக் கோபிக்க முடியுமோ? புதிய ''போர்ட்'' சந்தன மாமா வீட்டுக்குப் போயிற்று.

மதிய நேரம் தயிர் சாதம் கிடைக்கும். பிறகென்ன தாயக்கட்டம் களைகட்டும்! எங்கள் பாட்டியும் சேர்ந்து கொள்வாள். சின்னக் குழந்தையைப் போல் சண்டை போடுவார்கள். பேரன் சொல்வான், ''பாட்டி ஏமாத்தாதே, நான் பாத்துட்டே இருக்கேன். ஏன் என் காய வெட்டினே? அநியாயம். அவள் காய வெட்டாம  என்ன வெட்டினியா? இரு இரு வரேன்.'' என்பான். அவனுக்கு வேண்டிய தாயம் விழாது.

மீண்டும் வெட்டுவாள் பாட்டி. இவன் கத்துவான். செகுட்டில அறைவேன் என்பாள் பாட்டி! அழுகுணி ஆட்டம் ஆடாதே, அழுகுணி, அழுகுணி என்பான் இவன். அடடா, சண்டை மண்டை உடையும். கடைசியில் ஒரே தள்ளு.  அவ்வளவுதான் ஆட்டம் க்ளோஸ்.

''திரும்ப விளையாடக் கூப்பிடு,   வரேனா பார்! போடா,'' என்று தூங்கப் போவாள் பாட்டி.
அப்பா வீட்டில் இல்லையென்றால் சாயங்காலமும் தொடரும் ஆட்டம்.  இருந்தால் சத்தம் வராது. மறுநாள்தான். தினந்தோறும் திருநாள்!

அந்த தாயக் கட்டை இப்போது பழைய நினைவுகளில் உருட்ட ஆளில்லாமல் ஓய்ந்து போய் கிடக்கிறது. மலரும் நினைவுகளில் தாயக் கட்டை மஹாத்மியம் அடிக்கடி பேசப்படுகிறது!இப்போது ஆடலாமா என்றால், பாட்டி இல்லாமல் தாய ஆட்டமா? மஜா இருக்காது. நோ சான்ஸ்! என்கிறார்கள்.

இன்னிக்குப் பேப்பர்லே என்ன நியூஸ் படிச்சியா? அப்பா கேட்பார்.  அசட்டுச் சிரிப்போடு
 ஓடிவிடுவோம்."ஹிண்டு '' பேப்பர் படிச்சா இங்லீஷ் நல்லாவரும். படிச்சால்தானே என்று அங்கலாய்ப்பார்.   

ஆயிற்று. நான்கு மணிவரை வீட்டுக்குள்ளே ஒளிந்து விளையாட்டு! வண்ணான் பெட்டி, கட்டிலடி, ஸ்டோர் ரூம், படுக்கையும், போர்வைகளும் என்று வீடு இரண்டு படும். ரோதனை பொறுக்க முடியாமல் வெளியிலே போங்க என்று துரத்துவாள் அம்மா.

ஆறு மணிவரை போலீஸ் திருடன், ஒளிந்து விளையாட்டு, நொண்டியாட்டம், பச்சைக்குதிரை (அதுதாங்க ஹை ஜம்ப்) எல்லாம் விளையாடி அப்பாடா என்று அழுக்கு மூட்டையாய் வீட்டுக்கு வந்து மினி குளியல் ஆனபின் இறை வழிபாடு. அம்மா குத்து விளக்கு ஏற்றி பெண் குழந்தைகளுக்கு ''விளக்கே திருவே வேதனுடன் நற்பிறப்பே," ஸ்லோகங்களை சொல்லவைப்பார். பாட்டு, டான்ஸ் எல்லாம் நடக்கும்.

கோடைக் காலம் வடகம், வற்றல்கள் செய்து வருடத் தேவைகளுக்கு சேமித்து வைக்கும் நேரம்.
புளி, பருப்பு, மிளகாய் என எல்லாவற்றையும் மாடியிலே காயப்போட்டு, காவலுக்கு வாண்டுகள்! அவ்வப்போது வடகங்கள் காணாமல் போகும். தென்னங்குச்சியிலே புளியை உருட்டி வைத்து அம்மாவுக்குத் தெரியாமல் கொண்டுவந்த உப்பைத் துளி சேர்த்து லாலிபாப் மாதிரி சாப்பிடும் ருசியே தனி. புளியங்கொட்டைகளை சேமித்து ஒற்றையா இரட்டையா ஆட்டமும் நடக்கும். இந்தப் புளியங் கொட்டைகளை குமட்டி அடுப்பில் போட்டுச் சுட்டு தின்றால் நன்றாயிருக்கும்.

புளியைப் பற்றி எண்ணும் போது  புளிய மரங்களின் நினைவு வருகிறது. நெடுஞ்சாலைகளில் கண்ணுக்கு விருந்தாய், இருபுறமும் வீரர்களின்  அணிவகுப்புப் போல  நெடிதுயர்ந்து  நின்று, சுமைதாங்கிகளுக்கும்  நிழல் தந்து, யாருக்கும் எந்தக்கெடுதலும் செய்யாத புளிய மரங்கள்  வெட்டிச்சாய்க்கப் பட்டுவிட்டன.

 மரங்களற்ற  நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போதுகளில் மனம் துயரடைகிறது. ஏன் தெரியுமா? ஏழு ஆண்டுகள் புளியமரச்சாலையிலே பயணம் செய்திருக்கிரேன். புளியமரங்கள் என்னுடைய தோழர்கள்.

இரவு நேரங்களில் அந்தாக்ஷரி நடக்கும். கரண்ட் போய்விட்டால் ரொம்ப ஜாலியாக இருக்கும். எல்லோரும் தெருவிலே இறங்கி விளையாட ஆரம்பித்துவிடுவோம். சீக்கிரமாக கரண்ட் வந்துவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் ''குலை குலையா முந்திரிக்கா, நிறைய நிறைய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி," என்று சத்தமாகப் பாடி,ஓடி விளையாட முடியவில்லையே என்று வருத்தமாகிவிடும்.

நல்லவேளை யாரும்  ''யூ.பீ. எஸ்'' மிஷினைக் கண்டு பிடித்திருக்கவில்லை. ஆனந்தமான அந்த நாட்கள் இன்றைக்கும் மனதிலே  சந்தோஷத்தையும், முகத்திலே சிரிப்பையும் வரவழைக்கிறது.























23 Apr 2012

வானம் பார்க்கும்.........

மழைத் துளி மழைத்துளி, என்று வானம் பார்த்து நிற்கிறது பூமி. எங்கேயோ சிறு மேகங்கண்டால் மனமெல்லாம் பூரிக்க காதலன் வரும் வழிபார்த்து நிற்கும் பேதைப் பெண் போல சிலிர்த்துப் பார்க்கும்! தன் மீது தாகத்தால் தவிக்கும் வேர்கள் கண்டு வருந்தும். பறந்து, திரிந்து நீர் வேண்டிப் பரிதவிக்கும் பறவைகளைப் பார்த்துப் பார்த்து நெஞ்சம் நெகிழும். சூரியக் கதிர்களால் வாடிய மரம், செடி, கொடிகளின் இலைகள் தலைசாய்த்து நிற்கக் கலங்கும்.

மேகங்களற்ற தூய நீலவானம் கண்டு ஆனந்தித்த நாட்கள் பூமிக்கு உண்டு!  கரிய மேகம் கண்டு  விஷமச்சிரிப்போடு இளங்காதலனைப் போல கரியவளே, உடல் கருத்தவளே என்று கேலி செய்த நாட்கள் உண்டு. கரு மேகக் குவியல்கள் நடுவே வெளுத்த நாரைக் கூட்டங்கள் பறப்பதைப் பார்த்து மெய் மறந்ததுண்டு. மழை பொழியும் முன்னே மின்னல்களின் களிநடனம் கண்டு ஆடல் வல்லானை அழைத்ததுண்டு. இடி இடிக்க பயந்ததுபோல் நடித்ததுண்டு!

கருமேகமே வருவாயாக! மழை நீரைப் பொழிந்து மண் தாகம் தணிப்பாயாக. மேகங்கள் முழங்கட்டும், மின்னல் நடனம் ஆடட்டும், வானவில்லின் வர்ண ஜாலம்  வந்து வந்து சூரியக் கதிரோடு ஒளிந்து விளையாடட்டும். மண்ணின் மணம் மனமெங்கும் நிறையட்டும்.

வா மழையே வா! வந்து பூமியை அணைப்பாயாக!
மழைத் துளி மழைத் துளி மண்ணின் மேலே!
மண்ணின் மணமோ விண்ணின்மேலே!
எண்ணத்துளிகள், கண்ணீர்த் தடங்கள்
எழுத்தின் மேலே! மேலே!மேலே!
மழை மழை எனப் புலம்பி அழைக்கிறது பூமி! மனிதர்களும் தான்.


15 Apr 2012

Honorable Begging

 சமீபத்தில் எங்கள் குடும்ப வட்டத்தில் ஒரு நிச்சயதார்த்தம்! எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று சொன்னவர்கள் ஒரே வாரத்தில் எல்லாம் ரத்தாகிவிட்டது என்று செய்தி சொல்ல ஆச்சரியமானது!  என்ன காரணமோ?
பையனின் அம்மாவுக்கு ஆசை, பெரிய பெரிய ஆசை!
இரண்டு சாண் அகலத்தில் ஜரிகை போட்ட புடவைகள் மைசூர், காஞ்சி, ஆரணி,  பட்டுகளை
மருமகள் கட்டினால்தான் கழுத்தில் தாலி ஏறுமாம். அந்தப் பெண் பார்த்தது! பட்டுப் புடவைகளைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் என்னைக் கல்யாணம் பண்ண வந்தானோ! நோ கல்யாணம் என்றது.

இன்னொன்று! இப்போதுதான் இருக்கிறதே 'வலை' விரித்துப் பார்த்து, தேடிவந்து பொண்ணு குடுங்க என்றார்கள். மிச்ச கதையெல்லாம் வேண்டாம். நிச்சயதார்த்தமும் நடந்தது.

மேல்கொண்டு பேச வந்தாங்க மாமியார் மேடம்.
1. பெரீய கல்யாண மண்டபம் நாங்கள் ஒத்துக் கொள்வது தான் புக் செய்யவேண்டும்.
2. எங்களுக்குத் தெரிந்த சமையல்காரர்தான்.
3. உறவுகளுக்கு  எல்லாம் கொடுக்க லட்டு, முறுக்கு, மைசூர்பாக், மிக்சர் பாக்கெட்டுகள் வகைக்கு 100, சீர் தவிர வேண்டும்.
4. பையனுக்கு வைரமோதிரம், பிரேஸ்லெட், மைனர் செயின், பெண்ணுக்கு பெரிய வைரத்தோடு.

எங்களுக்கு இதெல்லாம் செய்யமுடியாது. எங்கள் சக்திக்கு உட்பட்ட அளவு செய்வோம் என்றாள் பெண்ணின் அம்மா.

பையன் பெண்ணிடம் சொல்கின்றான், இதோபார் நீதான் இன்னும் படிக்கின்றாயே 'Education loan,' வாங்கு. செலவு செய். இல்லாவிட்டால் என் அம்மாவிடம் கடன் வாங்கிக் கொள். பின்னால் திருப்பிக் கொடு, என்று. எப்படி இருக்கிறது பாருங்கள்!

பத்து லட்சம் செலவு செய்து,'' கடன் வாங்கிக் கல்யாணம்''  பண்ணிக்கொள்ள அவன் என்ன மஹாராஜாவா? கல்யாணத்தை நிறுத்திவிட்டேன் என்று சொன்னாள்  அந்தப் பெண்.
சபாஷ், சரியான முடிவு என்றேன்.

எங்களுடைய கார் சாரதியின் உறவுப் பெண். சொந்த முயற்சியில் படித்திருக்கிறாள். நல்ல வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம். பையனுடைய அம்மா ஒரு லட்சம் விலையுள்ள மோட்டார் பைக் கேட்கிறாளாம். HONORABLE  BEGGING!

கழுத்தில தாலியக்கட்டறவன் என்கிற ஒரே காரணத்துக்காக கேட்கறத எல்லாம் வாங்கிக் குடுக்க காசு காய்க்கிற மரமா இருக்கு?  நிம்மதியா இருக்கறதவிட்டு, கல்யாணம் ஒரு கேடா? ஒன்னும் வேண்டாம் அப்பிடின்னு சொல்லிடிச்சு பொண்ணு! அச்சா! நல்லமுடிவு!

பெண்கள் தைரியசாலிகளாகி வருவது பெருமைக்குரியது!

வாங்கி வைத்த பட்டுப்புடவைகள் எல்லாம் 'காட்ரெஜ்,' பீரோவில்.
தங்க நகைகள் எல்லாம் வங்கி லாக்கரில்!
வெள்ளிப் பாத்திரங்கள் இரும்புப் பெட்டியில்! சும்மா அது வேணும் இது வேணும் என்று ஆட்டிவைக்கிறது சரியா?

மொத்தத்தில் "பெண்ணுக்கு முதல் எதிரி பெண்தான்" என்பது என் அபிப்ராயம்.
இந்த  சீர் செனத்தி கொடுக்க இயலாமையின் காரணமாகவே பெண் குழந்தைகள் வேண்டாம் என்கிறார்கள் என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி.

இருக்கின்ற பணக்காரர்களைப் பார்த்து, இல்லாதவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.  எளியவர்களுக்கு  உள்ள ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி! அதில்தான் எத்தனை நகை விளம்பரங்கள்! ஆசைக் கனலை மூட்டும் பட்டுப் புடவை, அழகு சாதன ஏமாற்றல்கள்! அடுத்தபடியாக எப்படி ஆட்டிப் படைப்பது என்று கற்றுத் தர தொலைக்காட்சி மாமியார்கள், வில்லிகள்!

இம்சிப்பவளும்,  இம்சைப்படுபவளும் பெண்தான் என்று நினைக்க ஆச்சரியம்தான்!

என்றைக்கு இந்த ஆடம்பரங்களையும், அனாவசிய செலவுகளையும் விட்டுவிட்டு, எளிமையான திருமணம் செய்யப்போகிறோம்?

ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் எங்கள் குடும்பம் என்று ஒரு பாடம் வரும். அது போல 'குடும்பக் கல்வி,' என்று இனிமேல் மனித உறவுகளைப் பற்றி பாடம் நடத்த வேண்டும்.  பெண்களுக்கு பள்ளிகளில் 'கராத்தே' கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பயப்படாதீங்க! எல்லாம் ஒரு  தற்காப்புக்குத் தான்.

நேற்று வந்த அவள் விகடன் செய்தி ஒன்று! மருத்துவம் படிக்கும் போது சகமாணவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள் ஒரு பெண். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சந்தேகம் காரணமாக மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தினானாம் அந்த முட்டாள் டாக்டர்.

குடும்பங்கள் எல்லாம் தீவுகளாகிவிட்ட இந்த காலகட்டத்தில்  பரஸ்பரம் நம்பிக்கையும், மதிப்பும், விட்டுக்கொடுத்தலும், மனிதாபிமானமும் குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். அதற்கு எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம்  என்பதையும் மறுப்பதிற்கில்லை.

முதியோர் வழிகாட்டவும், வாழ்த்தவும், உறவுகள் கைகொடுக்கவும் என இருந்தது ஒரு காலம்.
இப்போது முதியோர்களுக்கு வழி காட்டிவிட்டோம்! உறவுகளையே காணவில்லை!

பட்டப்படிப்பு வேறு, மனித உறவுகள் வேறு! இரண்டிற்கும் தொடர்பேயில்லை!  நிச்சயமாக அன்பையும், பரஸ்பர நம்பிக்கையையும், விட்டுக்கொடுத்தலையும், போதிக்கும் மனித உறவுகள் பற்றிய கல்வி அவசியம்தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நீங்க எப்படின்னு கேட்கறீங்க. காதில விழுது!
நாங்க மனித நேயத்திற்கும், அன்பிற்கும் எப்போதோ அடி பணிந்தவர்கள்.

















12 Apr 2012

நந்தன வருஷம்

நல்லா இருக்கீங்களா, என்று நேரிலோ தொலைபேசியிலோ கேட்காதவர்களே இருக்கமுடியாது.   ஏதோ இருக்கேங்க, போயிட்டிருக்கு என்று பதில் சொல்பவர்களாகதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே எதோ ஒரு வடிவில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு நாமே எதையாவது வரவழைத்துக் கொள்கிறோம்.

இந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து விடுதலை பெற மனிதன் பலவாறு முயன்று வருகிறான். இறைவழிபாடு, யோகம், தியானம் எனப் பல பாதைகள் அவன் முன்னே!

 'சும்மா இரு சொல்லற,' என்பார் அருணகிரிநாதர்! அவரே சொல்லிட்டார், 'சும்மா அதப்பண்ணு, இதப்பண்ணு என்காதே, நான் ஒன்னும் செய்யமாட்டேன்,' என்று சொன்னால் அது சோம்பேறித்தனம்.

சும்மா இரு என்றால் மனதை அடக்கவேண்டுமாம்! கோடிப் பணம் கொடுத்தாலும் அந்த ஒன்றை மட்டும் செய்யமுடியாதே!  ஒரு கணத்தில் ஒரு மூட்டை எண்ணங்கள்.

 ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. சந்நியாசி ஒருவருடைய மடத்திற்கு ஒரு வழிப்போக்கர் வருகிறார். அவரை சாப்பிட அழைக்கிறார்கள். இலை போட்டு உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.  அவர் முன்னால் சந்யாசி, கையில் கோலோடு! பக்கத்தில் ஒரு குரங்கு.

இந்தக்குரங்கு இருந்த இடத்தைவிட்டு அசைந்தால் சந்யாசி கம்பைத் தட்டுவார்.  குரங்கு கொஞ்ச நேரம்  சும்மா இருக்கும். பிறகு மறுபடியும்  நகரும். இப்படியாக கொஞ்ச நேரம் போயிற்று. சாப்பிடுகிறவருக்கோ ஒரே எரிச்சல். என்னடா இது, நிமிஷத்திற்கு ஒரு முறை கம்பைத் தட்டினால் ருசித்து சாப்பிடமுடியவில்லையே என்று சந்யாசியிடம் சொன்னார்,    

''சுவாமி, பாவம் குரங்கு! சும்மா அதை ஏன் மிரட்டி அடிக்கிறீர்கள்?
ஐயா, நான் கையில் உள்ள கம்பை கீழே போட்டுவிட்டால் இந்தக்
குரங்கு சும்மா இருக்காது. நீங்கள் பாட்டுக்கு சாப்பிடுங்கள்.
பாவம் குரங்கு. விட்டுவிடுங்கள்!
நிச்சயமாக? அப்புறம் நீங்கள் வருத்தப்படக்கூடாது!" இப்படியாக சந்யாசி கம்பைக் கீழே போட்டார்.

குரங்குக்குத் தெரிந்து விட்டது எஜமானர் அடிக்கமாட்டார் என்று. மெதுவாக வழிப்போக்கரின் இலையின் பக்கத்தில் போனது. கொஞ்சமாக சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. வழிப்போக்கர் விரட்ட குரங்கு அவர் தலைமேல் ஏறிற்று. அலறி அடித்துக் கொண்டு எழுந்தார் அவர். அவ்வளவுதான் அவருக்கு உணவு.
சந்யாசியிடம் சொன்னார், ஐயா, கையில் நீங்கள் கம்பு ஏன் வைத்திருந்தீர்கள் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது!

நம்முடைய மனமும் இந்தக்குரங்கைப் போன்றதுதான். அதனால்தான் பெரியவர் முதல் குழந்தைவரை எல்லோருக்குமே பிடித்த மிருகம் குரங்கு. எப்பொழுது பார்த்தாலும் நிம்மதியாக இருக்கவிடாமல் ஏதேதோ எண்ணங்கள். மனம் தான் நினைவுகளின் உற்பத்தித்தலம். பழைய நினைவுகளை சேர்த்துவைக்கும் பொக்கிஷ அறை.

இந்த மனதை நம் வசப்பட வைக்க முடியும் என்று முயன்று வென்றவர்கள் காட்டும் பாதைகளில் ஒன்றுதான் பக்தி. ஆயிரம் நாமங்களை மனனம் செய்கிறோம். அது மனதை ஒருமுகப்படுத்தும். கூடவே இறைவனைக் கற்பனை செய்து கண்முன் கொண்டு வருவது அடுத்தபடி.

இந்தப் பிறவியில் நாம் அடையக்கூடிய பெரிய செல்வம் சிவபெருமானின் திருஅருளைப் பெறுவதுதான் என்கின்ற வள்ளலார் சிவபெருமானை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அழகைப் பாருங்கள்.
சற்றே கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள்.  இதோ, காட்சி தருகிறார் முக்கண்ணனார்.

''கங்கைச் சடையழகு! அதைப் பார்த்தவுடன் காதல் பெருகுகிறது. அச்சடைமேல் பிறைநிலா. அதன் மேல் கொன்றைமலர் மாலை. மாலையின் மேல் வண்டுகள் அணிவகுத்து நிற்கின்றன.
சிவபெருமானின்  அழகிய நெற்றியில் திலகம்.  தன்னைப் பார்க்கின்றவர்கள் மேல் அருள்மழைபொழியும் கண்ணழகு.
தன்னை நேசிக்கின்ற அடியவர்கள் இதய மலரின் மணத்தை முகரும் நாசித்திருக் குமிழின் நல்லழகு.
ஒளி நிறைந்த முல்லை அரும்புகளைப் போல் இருக்கிறது புன்முறுவல். பவழம் போல் சிவந்த
இதழ்கள்! அவர் என்ன செய்கிறார்? வந்த அடியார்களை  இனிக்க இனிக்க வாவென்று மலர் போன்ற வாயினால் அழைக்கின்றாராம்.
அடியவர்கள் செய்யும் விண்ணப்பங்களை கேட்டு அருள் புரியும் செவி. அன்பர்களின்  தேன் மொழிகளைக் கேட்கும் சங்கக் குழை அணிந்த காதுகள்.
சைவம் தழைப்பதற்காக அருள் சுரக்கும் திருவழகு நிறைந்த தெய்வமுகம், முகத்திலிருந்து பொழியும் கருணை, அமுதச் சிரிப்பு.
ஆலகால விஷத்தை அருந்தி, அதனை அன்னை தடுத்து நிறுத்த நீலமணி போல ஒளிரும் கழுத்து.
அன்பர்கள் மனதைப் போல தூய்மை ஒளிரும் வெண்ணீறு அணிந்த திருத் தோள்கள்!
சிவந்தகை மலரில் மான்; செங்கமலக் கையில் மழு! அடியவர்களின் அச்சத்தைப் போக்கும் அபயம் காட்டும் மலர்க்கை; சீரும், சிறப்பும், அருளும் பெறச் சரணமடையக் காட்டும் கைத்தலம்.
பாம்பணியும், வெண்ணீரும் அழகு செய்யும் திருமார்பு! யானைத்தோல் ஒளிரும் இடுப்பு.
மெய்யான அன்பர்களின் உள்ளத்தை எல்லாம் சேர்த்துக் கட்டியிருக்கின்ற வீரக்கழல்கள்.
பதினாறு சித்திகளும் அடைந்த யோகியர்கள் சிந்தையிலே தேனெனத் தித்திக்கும் சேவடிகள்!
மாலும், அயனும், வேதங்களும் காண முடியாத செல்வத் திருவடிகள்.
செம் மலையில் காட்சிதரும் பசுங்கொடிபோல், அம்பிகைக்கு இடப்பாகம் அளித்த, செம்பவளத் திருமேனி."

இத்தகைய பொன்மேனித் திருக் கோலத்தை  தினமும்  பார்த்திருந்தால்  அல்லல்கள் நீங்கும், அவன் புகழைப்  பாடுகின்றவர்கள்  பக்கத்திலே  நின்று  கேட்டால்  வினைகள்  விடை  பெற்றுப்  போகும், துயரமெல்லாம் போகும், தீமையெல்லாம்  ஓடிவிடும்  என்கின்றார்  வள்ளல் பெருமான்  திருஅருட்பாவில்.

இந்தக்  கேசாதி பாத வர்ணனையை மெதுவாக மனக் கண்களினால் கண்டு உள்ளமும், உயிரும், அறிவும் ஒன்றாக நிலைத்து நிற்க நாமே அவன் என்ற பாவனையோடு செய்தால் நிச்சயமாக மனம் நம் வசப்படும்.

இந்த நந்தன வருஷத்  தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழ 
ஜோதி  ஸ்வரூபமான தெய்வசக்தியை வணங்குகிறேன். 

         
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!








2 Apr 2012

தேடித் திரிகின்ற கண்கள்



 மடியிலே பால்மணம் மாறாத பச்சைக்  குழந்தையை வைத்துக்கொண்டு புன்னகை முகத்துடன் பூக்கட்டி,  வருவோர் போவோரையெல்லாம்,'' வாசனை  மல்லி வங்குங்கம்மா,'' என்று கூவி அழைக்கும் பொன்னம்மா!

மடக்குக் கட்டில் மேல் புத்தகங்களைப் பரப்பி வைத்து யாராவது வாங்க மாட்டார்களா என்று முகம் பார்க்கும் கன்னையன்!

சாக்குப் பையை மண்ணிலே விரித்து பச்சைமிளகாய், இஞ்சியை கூறுகட்டி விற்கும், காலத்தின் கோடுகளை முகத்தினிலே பிரதிபலிக்கும் வயதான பாட்டியம்மா!

கால்களில் செருப்புக்கூட இல்லாமல் கோணிப்பையை தோளிலும், நாய்களை விரட்டவும்,குப்பையைக் கிளறவும் நீண்ட கழியைக் கைகளிலே பிடித்துக்கொண்டு  ஒரு மஹாராணியைப் போல் கம்பீரமாக நடந்து போகும்  குப்பையில் பேப்பர்களையும், அட்டைகளையும் பொறுக்கி விற்கும்  சின்னத் தாய்!

சீசனுக்கு ஏற்ற மாதிரி ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் விற்கும் தமிழ் நாட்டுத் தங்கராசு!

மாமூலாக பச்சை வாழைப்பழம் வாங்கும் பஸ் நிலைய, தள்ளு வண்டிக்காரா  அப்துல் பாய்!

பச்சைக் கிளிபோல, பளபளக்கும் காவிரிப் பாசன வெற்றிலையும், காரமடிக்கும்  மைசூர், கும்பகோணம் வெற்றிலைகளை  ஈரத்துடன் கூடை கூடையாக,  பக்கவாத்ய   சுண்ணாம்பு, பாக்குடன்  விற்கும் பழனி!

சிவத்த நிறமும்,வெளுத்த சிரிப்பும்  வரவேற்க, பர பரவென  குரல் கொடுத்து, விறுவிறுவென பில் போட்டு மடமடவென  காசை வாங்கி கல்லாவை நிரப்பும்  அன்னபூரணா அரிசிக் கடை பசவராஜ்!

''என்ன சார், நல்லா இருக்கீங்களா ?'' எனப் புன்முறுவல் பூக்கும் மருந்துக் கடைக்காரர்.

காலை நேரத்தில் காதுக்கு பூபாளம், நாவுக்கு டிகிரி காப்பி; ''பீபெரியா, ரோபெஸ்ட்டாவா, மிக்ஸா, பில்டரா, நைசா,'' என்று கேட்கும் காப்பிப் பொடிக் கடை அனந்தா!

''பார்வதி, பரமேஸ்வரா பந்தாயித்து, ஏனு ஸார் சமாச்சாரா,''எனப் புன்னகைக்கும் தாட்சாயணி!

ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்தில் தலையில் முண்டாசுக் கட்டுடன் சைக்கிளில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கும் 70 வயது இளைஞர்  தாசப்பா!

 இருக்கும் இடம் தேடித்தேடி, மானுடக் கண்களுக்குத் தெரியாது மறைந்து கிடக்கும் மதுவை, மலர்கள் தோறும் சென்றணைத்துக் கவர்ந்து வரும் தேனியின் கூட்டை, நெருப்பிட்டுக் கலைத்து, தேனெடுக்க அனுமதி கொடுக்கவில்லை என்று கோபத்துடன் முகம் சிணுங்கும் பீஹாரி!

அன்பைப் பொழிந்து செய்த ரவாகேசரியும் கையுமாக அப்பா என்று ஆழ்மனதின் நேசமுடன்  பாசக்குரல் கொடுக்கும் ரமா!

ஆன்மீக தாகங் கொண்டு அனுதினமும், அன்னைக்கு மலர்களினால் அலங்காரம்! அரவிந்த மாமுனியின் தெய்வீக வாழ்க்கை வழிவகுக்கும் சாவித்ரி வழிநடக்கும் அன்பர் வட்டம்!

வள்ளலார் புகழை மடைதிறந்த வெள்ளமெனப் பாடும் கார்த்திகேயன்!இத்தனை நட்புக்கும்  நடுவே........

 உடற்பயிற்சிக்கு நடைபாதை, ஓய்வெடுக்க சிமெண்ட் இருக்கை, விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம், முதியோரும், இளையவரும் முன்னாலே வந்து முகம் பார்த்துச் சிரித்து, அரசியல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை அலச  ஆசனங்கள் போடப்பட்ட வட்டச் சிறு கூடமுள்ள  அழகான பூங்கா...

விடியலிலே முகம் காட்டி, காலை  வணக்கத்தை தென்றலின் துணையோடு மெல்லெனப் புகலும் சில்வர் ஓக் மரம்!

ஓயாமல் ஓடுகின்ற வாகனங்களின் ஓசை  நடுவே, செவியற்ற மகிழ்ச்சியினை சொல்லாமல் சொல்லி, ஆனந்தமாய் வான் பார்க்கும் எங்கள் குடியிருப்பு!

சின்னக் குழந்தையைப் போல் மாடிப் 'பால்கனியில்,' வருகின்ற வழி மேலே விழி வைத்துப் பார்த்து நிற்பாய்!

இப்போதோ,

போவையிலே வருவையிலே வெள்ளைச் சிரிப்போடு, கையும் பையுமாய் உன்  நரைத்த தலை எங்காவது தெரிகிறதா என்று  பார்த்துத் திரிகின்றன என்  கண்கள்!!!!!!!!