ஶ்ரீஅரவிந்தர் -9
ஶ்ரீஅரவிந்தர் பாரதத்தின் மறுமலர்ச்சி, விடுதலை இவற்றிற்கு அரசியல் பங்கேற்பு இன்றியமையாததாகும் என்பதை அறிந்தவர். ஆனால் அனைத்துக்கும் பின்னால் ஒரு சக்தியின் துணையும் இருந்தால்தான் இது நிறைவேறக்கூடும் என நம்பினார்.
இந்த அடிப்படை சக்தியைப் பற்றிய ஏதோ ஓர் உண்மை எங்கேனும் இருக்க வேண்டும் என்பதை அறிய யோகம் பயின்றார். தனக்கு யோகம் கைகூடும் நிலையில்
அந்த சக்தியிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.
"நீ இருப்பது உண்மையானால் என் உள்ளத்தை அறிவாய்,
நான் முக்தியைக் கேட்கவில்லை,
பிறர் கேட்கும் வேறு வரங்களைக் கேட்கவில்லை,
இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்கு வேண்டிய
பலத்தையே நான் உன்னிடம் கேட்கிறேன்!
நான் அன்பு செய்யும் இந்த மக்களுக்காக
வாழவும், உழைக்கவும், எனது வாழ்வை அர்ப்பணிக்கவும்
அனுமதி கொடு என்று மட்டுமே நான் உன்னைப் பிரார்த்திக்கிறேன்."
பாரத நாட்டுக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக, உயர்வுக்காக திரை மறைவில் ஒரு மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஶ்ரீ அரவிந்தர்.
இந்திய மக்களின் விடுதலை வேட்கைக்கு எதிராக ஆங்கில அரசு எல்லா வகைகளிலும் அடக்கு முறையைக்கை யாண்டது. இந்து, முஸ்லிம் மக்களைப் பிரித்தாளும் வங்கப் பிரிவினையைக் கொண்டு வந்தது.
அதனால் விடுதலை இயக்கத்தை தீவிரப் படுத்தவும், மக்கட் சக்தியை ஒருங்கிணைக்கவும் பாரத சக்தியாக, சுதந்திர தேவியாக அன்னை பவானி உருவெடுத்தாள்.
அன்பு, ஞானம் இவற்றை வழங்கும் வலிமை மிக்கவள் துர்கை!
எடுத்த செயலை திறம்பட நிறைவேற்ற வல்லவள் மகாலட்சுமி!
உறவு, சக்தி இவைகளை இணைப்பவள் மகாசரஸ்வதி!
இந்த மூவரின் ஒரே வடிவமாகத் திகழ்பவள் அன்னை பவானி!
விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற இளஞர்களை உக்கிரம் வாய்ந்த மக்கட் சக்தியாகக் கண்டார் ஶ்ரீ அரவிந்தர். அதனாலேயே அமைதி நிறைந்த மலைப்பகுதியில் அன்னை பவானிக்கு கோவில் எழுப்பி, நாட்டுப் பற்றும், பிரம்மச்சரிய விரத ஆர்வமுடைய இளைஞர்கள் வழிபாடு செய்து விடுதலை இயக்கத்தில் சேர வேண்டுமென விரும்பினார்.
(அரவிந்தர் இதில் பங்கேற்கவில்லையென்றும், அவருடைய இளைய சகோதரர் பாரின் என்பவரே பவானி மந்திர் தோன்றக் காரணமாவார் என்பவரும் உண்டு.)
பங்கிம் சந்திர சட்டோபாத்தியா ஒரு வங்காள எழுத்தாளர், கவிஞர்.( 1838 - 1894)
இவர் எழுதிய நூல் "ஆனந்தமடம்". தேசத்தாயின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற உட்கருத்தைக் கொண்டது இந்நூல்.இதில் இடம் பெற்ற பாடலே " வந்தேமாதரம்" என்னும் அன்னை வாழ்த்துப் பாடல்.
இப்பாடல், அன்றைக்கு ஏழு கோடி மக்கட் தொகையைக் கொண்டிருந்த வங்கம் அதன் பதினான்கு கோடிக் கரங்களில் வாளேந்தியிருந்ததாகச் சித்தரித்தது.
கடினமான அடக்கு முறைகளால் விடுதலைப் புரட்சியாளர்களைத் துன்புறுத்தி வந்த ஆங்கிலேயர்களை நடுநடுங்கச் செய்த "வந்தேமாதரம்" என்ற உரிமைக் குரல் பாரதத் தாயை தீயோரை அழிக்கும் வாளேந்திய காளியாகவே காண்பித்தது.
விடுதலை இயக்க வீரர்களை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடத் தூண்டும் சக்தியாக, எதிர்ப்போரைப் பொடிப்பொடியாக்கும் பவானியாக, துர்க்கையாகப் போற்ற வழிவகுத்தது.
'வந்தேமாதரம்'என்று உரக்கச் சொல்பவர்களைக் கைது செய்தது ஆங்கில அரசு. சிறையில் அடைத்தது!
ஆனால் இந்தியா முழுவதும் மக்கள் வந்தேமாதரம் என முழங்கி தங்கள் விழிப்புணர்வை, சுதந்திர தாகத்தை உலகறியச் செய்தார்கள்.
இந்திய தேசிய விடுதலை இயக்கம் தீவிரமடையக்காரணமாக இருந்த மந்திரச்சொல் " வந்தேமாதரம்".
(ஶ்ரீஅரவிந்தர்,பவானிமந்திர், ஆனந்தமடம்,வந்தேமாதரம்,சுதந்திரதேவி, நாட்டுப்பற்று)