23 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் - 13


பிராணாயாமம் / மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம் என்பது வடமொழிச் சொல்.
ப்ராணன் - என்றால் உயிர்க்காற்று.
அயாமம்என்றால் கட்டுப்படுத்துதல்.
மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே ப்ராணாயாமம்.
மூச்சுப் பயிற்சியால் என்ன பயன்?
ஆயுள் நீடிக்கும்
நோய் நொடி அகலும்,
மூளை புத்துணர்ச்சி பெறும்
ஞாபக சக்தி  அதிகரிக்கும்
படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும்.

பிராணாயாமம் பற்றிய மற்ற செய்திகள் நமக்குத் தேவையில்லை எனவே ஶ்ரீஅரவிந்தர் பிராணாயாமம் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

நர்மதை நதிக்கரையில் உள்ள ஊர் 'சாந்தோத்'. அங்கு வசித்தவர் ஸ்வாமி பிரம்மாநந்தா. அவருடைய சீடர் 'தேவ்தர்' என்பவர். அவரிடம் அரவிந்தர் பிராணாயாமம் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்தார். பிராணாயாமம் செய்யாமல் யோகா கற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு அபிப்ராயம் இருந்தது. இருக்கிறது.
ஆனால் "தன்னை அறியும் "முயற்சிக்கு அது ஓரளவுதான் உதவுகிறது என்பது அனுபவ உண்மை! அரவிந்தர் சொல்கிறார்,

" பரோடாவில் இருக்கும்போது நான் பிராணாயாமம் கற்றுக்கொண்டேன். ஒரு நாளைக்கு காலையில் மூன்று மணி , மாலயில் மூன்று மணி நேரம் பயிற்சி செய்வேன். அதனால் என் மனம் மிகுந்த அறிவாற்றலுடனும்சக்தியோடும் வேலை செய்ததுஎன் மூளையில் ஒளியும், மின் அதிர்வுகளும் ஏற்பட்டன. பிராணாயாமப் பயிற்சிக்கு முன் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வரிகள் கவிதைகள் எழுதுவேன்
பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தபின் அரை மணி நேரத்தில் இருநூறு வரிகள் எழுதும் திறமை வளர்ந்தது. சர்வ சாதாரணமாக தடங்கலின்றி, கட்டுக் கோப்பாக வார்த்தைகள் அமைந்தன
என் உடல் நல்ல ஆரோக்யம் பெற்றது. நான்கு ஆண்டுப் பயிற்சிக்குப் பின் நான் அரசியல் வேலைகளால் இப்பயிற்சியைக் கை விடும்படி நேர்ந்தது."

அடுத்து நம் அறிவுக்கு எட்டாத  யோகசக்தியின்  மேன்மையை எவ்வாறு அறிந்தார் என்பதைக் காணலாம். அரவிந்தரின் சகோதரர் பாரின் (Barin). இவர் அன்னை பவானிக்குக் கோயில் எழுப்ப ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக விந்திய மலைக் காடுகளில் சுற்றினார். அதனால் அவருக்கு மலைக் காய்ச்சல் ஏற்பட்டது. எந்த மருந்தும் சிகிச்சையும் பலனளிக்காத அந்த சமயத்தில் ஒரு நாக சன்னியாசி வந்தார். அவர் பாரினைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்றார். ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வரச்சொன்ன அவர் அந்தத் தண்ணீரின் மேல்  ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கத்தியால் குறுக்குக்கோடு வரைந்தார். அந்தத் தண்ணீரை பாரின் அருந்தும்படிச் செய்தார். மறுநாள் பாரினின் காய்ச்சல் குணமானதுஆக யோகசக்திக்கு பலனுண்டு என்பதை உணர்ந்தார் அரவிந்தர்.

அடுத்து குஜராத் மாநிலம், நர்மதை நதிக்கரையில் உள்ள சாந்தோத்  (chandod) என்னும் ஊருக்கு அரவிந்தரும் நண்பர்களும் சென்றனர் அங்கு யோகி பிரம்மானந்தரின் ஆசிரமம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் அவரை நமஸ்கரிக்கும் போது எப்போதும் அவர் கண்கள் மூடியபடி தான் இருக்கும்! ஆனால் அரவிந்தர் அவரை வணங்கச் சென்றபோது அவர் தன் அழகிய கண்களைத் திறந்து ஏதோஅற்புதத்தைக் கண்டார் போலும்  வியந்து நோக்கினார்.

நர்மதை நதிக்கரையில் ஒரு காளி கோயில் உண்டு. அங்கு நண்பர்களோடு சென்றார் அரவிந்தர். அவருக்கு கடவுள் நம்பிக்கையும், உருவ வழிபாடும் விருப்பமானதல்ல. உண்மையில் அவர் உருவ வழிபாட்டை வெறுத்தார். அன்று அவர் அந்தக் கோயிலில் நுழைந்ததும் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றார்.ஆம், அங்குள்ள காளியின் உருவம் உயிரூட்டப்பட்ட ஒன்றென அவருக்குக் காட்சியளித்ததுதன் அனுபவத்தை ஒரு கவிதையாக வடித்தார்.

"புனிதமான 
நர்மதை நதி,
கரையில்
காளியின்  ஆலயம்!,
 உள்ளே நான் 
கண்டதென்ன?
கல்லோ,  
சிற்பியின் 
கை வண்ணமோ
கல்லல்ல
அவள்
உயிரோடு காண்,
முகமலரில் ஓர் சக்தி,
ஊடுருவும் பார்வை!
இதயத்தில்
கணநேரத்தில் 
அன்னை முகம்!"( இது மொழி பெயர்ப்பு அல்ல)

இந்த அனுபவத்தால் உருவ வழிபாட்டின் உண்மையை அவர் உணர்ந்தார்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் பவதாரிணியின் சிலை உயிர்த்தெழுந்ததைக் கண்டாரல்லவா?

(அரவிந்தர், ஆன்மிகம், பிராணாயாமம்,நாகசன்னியாசி, சாந்தோட் காளி,சுவாமி பிரம்மானந்தா)
1 comment: