ஶ்ரீஅரவிந்தர்- 14 (காஷ்மிர்)
"எண்ணங்களை அமைதிப்படுத்துவதே யோகம் எனப்படும்" என்று யோகத்திற்கு வரையறை செய்கிறார் பதஞ்சலி முனிவர்.
எல்லா யோகங்களின் நோக்கமும் ஒன்றே! எண்ணங்களை அழித்தல் அல்லது நிறுத்துதல்.
"எண்ணமே மனிதனின் முதல் எதிரி; எண்ணத்திலிருந்தே எல்லா பிரச்னைகளும் தோன்றுகின்றன" என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.
மவுனமாய் இருத்தல் எண்ணங்கள் இல்லாத நிலையா? இல்லவே இல்லை! மவுனமாய் இருக்கும் போதும் எண்ணங்கள் உற்பத்தியாகிக் கொண்டேதான் இருக்கும். மவுனத்தில் உணர்வை நுழைத்து அங்கேயே தங்கும் போது எண்ணங்கள் நீங்கிவிடும், அதுவே மாமவுனம் எனப்படுகிறது.
இந்த மாமவுனநிலையை அறிய முடியுமா? அரவிந்தருக்கு இந்த நிலையை அறிய உதவியது அவருடைய காஷ்மிர் விஜயம்.
பரோடா மகாராஜா ஒருமுறை காஷ்மிருக்குச் செல்ல விரும்பினார். உடன் அரவிந்தரையும் வரும்படிப் பணித்தார். அப்போதுதான் திருமணம் செய்து கொண்டிருந்த அரவிந்தர் தன் மனைவியுடனும், சகோதரியுடனும் 1903 ஆம் ஆண்டு காஷ்மிர் சென்றார்.
அங்குள்ள ஶ்ரீநகரில் சங்கரர் குன்று உள்ளது.
(Takht-e- Suleiman, THRONE OF Solomon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இக்குன்று 'கோபதாரி' என்னும் பெயரும்,1000 அடி உயரமும் உள்ளது. ஆதிசங்கரர் இவ்விடம் வந்ததால் சங்கரர் குன்று எனப்படுகிறது. புத்தர்கள் இக்குன்றை புனிதமாகக் கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்கள் ஆண்ட போது இங்கே சிவலிங்கம் பதிக்கப்பட்டது.
இக்குன்றின் மீது ஏறுவதே ஒருபுதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஒவ்வோர் இடத்திலிருந்தும் காட்சிதரும் இயற்கையின் கைவண்ணம் தன்னை மறக்கச் செய்யும். இக்குன்றில் ஏறி அதன் விளிம்பில் நின்ற அரவிந்தருக்கு வெட்ட வெளியில் பிரம்மத்தை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. வானம் முழுதும் வெண்மையான மேகங்கள் கண்ணுக்கு எட்டும் தூரம் முழுதும் பரந்திருக்க சுத்த சைதன்யத்தின்,
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றேயான பரம்பொருளின் அனுபவத்தை அரவிந்தர் பெற்றார்.எண்ணங்கள் அடங்கி, மனம் ஆன்மாவில் நிலையுற்ற தவசீலர்களுக்கே இவ்வனுபவம் வாய்க்கும் என்கிறது திருவருட்பா!"பரசிவம் சின்மயம் பூரணம்" எனத்தொடங்கும் திருவடிப் புகழ்ச்சியில் இவ்வனுபவத்தைப் பெறலாம்.
இவ்வனுபவத்தை"அத்வைதம் " என்ற கவிதையால் வெளிப்படுத்துகிறார் ஶ்ரீ.
இதன்பின் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட அரவிந்தருக்கு சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின் தன்னத்தான் அறியும் யோக வாழ்வில் மீண்டும் நாட்டம் ஏற்பட்டது. எனவே தன் சகோதரர் பாரின் உதவியுடன் 'லேலே' என்ற யோகியை சந்திக்கிறார் அரவிந்தர்.
( யோகா, மனம், காஷ்மிர், சங்கராச்சார்யர் குன்று, அத்வைத அனுபவம்,லேலே)