அரவிந்தாவையும்,சகோதரர்களையும் இங்கிலாந்தில் வில்லியம் ட்ரெவிட் அவர்களிடம் ஒப்படைத்த பின் கிருஷ்ணதான் கோஸ் வங்கம் திரும்பினார்.
அரவிந்தரும், சகோதரர்களும் சுமார் நான்காண்டுகள் டிரெவிட் குடும்பத்தாருடன் வசித்தார்கள். டிரெவிட்டும், அவர் மனைவியும் ஆஸ்திரேலியா சென்றதால் சகோதரர்கள், டிரெவிட்டின் தாயுடன் லண்டன் மாநகரில் வசிக்கவேண்டி வந்தது.
அங்கு செயிண்ட் பால் பள்ளியில்1884 ஆம் ஆண்டு அரவிந்தர் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த டாக்டர். வாக்கர்(walker) அரவிந்தரின் நற்குணத்தையும், திறமையையும், லத்தீன் மொழியில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும் உணர்ந்து கிரேக்க மொழியை அவருக்குப் பயில்விக்க முன்வந்தார்.
கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடையவரான திருமதி. டிரெவிட் தினமும் பிரார்த்தனை நேரத்தில் பைபிளிலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டும் என்ற வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.சகோதரர்கள் மூவரும் அதில் கட்டாயமாகக் கலந்து கொள்ளவேண்டும். பினாய் பூஷனே அதைப் பெரும்பாலும் முன்னின்று நடத்தினார். ஒரு நாள் மன்மோகன் சொன்ன ஒரு அபிப்ராயத்தால் திருமதி டிரெவிட், கோபமடைந்தார்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் தன்னால் வாழமுடியாது என வருந்தினார். அது அவர்களுடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.அதுவரையிலும் வாழ இடம் இருந்தது. உணவுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. பாதுகாப்பான கூட்டை விட்டுப்பறந்து செல்லும் சிறகு முளைத்த பறவைகளைப் போல அவர்கள் ட்ரெவிட் அவர்களின் தாய் வீட்டை விட்டு வெளியேறினர்.
நல்ல வேளையாக அது விடுமுறைக்காலமானதால் மூவரும் 'Lake district' என அழைக்கப்பட்ட ஏரிகள் நிறைந்த ஊருக்குச் சென்றனர். அந்த ஊர் நம் நாட்டின் காஷ்மிரைப் போல இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஊர். 'டேஃபடில்ஸ்' என்ற பெயருடைய மலர்கள் பூத்துக்குலுங்கும், சிறு குன்றுகளும், சிற்றோடையும்,மரம்,செடி கொடிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும் ஊர். மேலும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் 'வேர்ட்ஸ்வொர்த்' (Wordsworth) பிறந்த ஊர்.
அங்குள்ள புறநகர்ப் பகுதியில் விளைநிலங்களுக்கு அருகாமையில் வீடுகள் இருந்தன.குறைந்த வாடகையில் அங்கே பயணிகள் தங்க முடியும்.எனவே அவர்கள் மூவரும் அத்தகைய ஒரு வீட்டில் தங்கினார்கள். காலைச் சிற்றுண்டிக்குப்பின் மூவரும் வனப்பகுதிகளில் சுற்றி இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள். இரண்டாவது சகோதரரான மன்மோகன் தன்னை மறந்து கவிதைகள் புனைவார். அரவிந்தரும் அதில் பங்கேற்பதுண்டு.
விடுமுறைக்காலம் முடிந்ததும் மூவரும் கிருஷ்ணதான் கோசின் நண்பரின் சகோதரரைச் சென்று சந்தித்தார்கள். அவர் பெயர் ஜேம்ஸ்காட்டன் என்பதாகும்.இவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையை அறிந்த அவர் கிருஷ்ணதான் கோசிடமிருந்து பண உதவி வரும்வரை அவருக்குச் சொந்தமான 'க்ளப்' எனப்படும் பொழுது போக்கு மனையில் வசிக்க இடம் அளித்தார். மூத்தவரான பினாய்பூஷனுக்கு தனக்கு வேலைகளில் உதவி வாரம் ஐந்து ஷில்லிங் சம்பளமாகப் பணமும் கொடுக்க முன் வந்தார்.
ஒரு வயதுக்கு மேல் ஒவ்வொருவரும் சுதந்திரமாக தனக்கு வேண்டிய பொருளைத் தானே தேடிக்கொள்ள வேண்டும். இடர்களையும், வறுமையையும், துன்பங்களையும் சந்தித்தால்தான் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் முன்னேறவும் முடியும். அனுபவங்களே வாழ்க்கை என்பது ஐரோப்பியர்களுடைய வாழ்க்கைத் தத்துவமாகும். எனவே ஜேம்ஸ்காட்டன் 'பினாய் 'வேலை செய்து பணம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியதில் வியப்பில்லை.
'க்ளப் ஹவுஸ்'லண்டனின் மிக நாகரிகமான சவுத் கென்சிங்டன் என்ற பகுதியில் இருந்தது. மாலை நேரங்களில் பல பெரிய மனிதர்கள் வரும் சப்தம் மிகுந்த இடமாக இருந்தாலும் அங்குள்ள நூலகம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
சுமார் ஐந்தாண்டுகாலம் அரவிந்தரும் சகோதரர்களும் மிகுந்த வறுமையில் வாழவேண்டி வந்தது. அவர்களுடைய தந்தை கிருஷ்ணதான் கோஸ் பண உதவி எதுவும் அவர்களுக்கு செய்யாததால் பள்ளியில் கிடைத்த (ஸ்காலர்ஷிப்) நிதிஉதவி
யில் எளிமையாக அவர்களுடைய வாழ்வு நகர்ந்தது.
இங்கிலாந்தின் கடுமையான குளிரில் போர்வைகளும்,குளிர் தாங்கும் கம்பளி ஆடைகளும் அவர்களிடம் இருக்கவில்லை!காலையில் வெறும் இரண்டு ரொட்டி சாண்ட்விச்சுகளும் ஒரு கோப்பைத் தேனீர் மட்டுமே உணவு! மதிய உணவும், இரவு உணவும் வாங்க பணம் இல்லையாதலால் மாலையில் குறைந்த விலையில் கிடைத்த சூப், ரொட்டித்துண்டுகள் ஆகாரம்.
எல்லாத் துன்பங்களுக்கிடையிலும் அரவிந்தர் தொடர்ந்து பிரெஞ்ச் இலக்கியம், இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ் சரித்திரங்களைக் கற்றார். சகோதரர்களுக்கு கவிதைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் பொழுது போயிற்று.
1890 ஆம் ஆண்டு அரவிந்தர் மிக உயர்ந்த, கடினமான ஐ சிஎஸ் தேர்வில் 11ஆம் இடத்தில் தேர்வுபெற்றார். இளம்வயதில் யாருடைய வழிகாட்டலும், உதவியும் இன்றி அவர் பெற்ற வெற்றியால் அவருக்கு சிறிது அதிகமான நிதிஉதவி கிடைத்தது. ஆனால் பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்கு நான்கு முறை அனுமதி கிடைத்தும் அவர் செல்லவில்லை.
முதலில் குதிரை ஏற்றத் தேர்வுக்குத் தேவையான பயிற்சியை எடுத்துக் கொள்ளத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை. ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு அலுவலராகப் பணியாற்ற அவர் விரும்பவும் இல்லை. அதையே தனக்குக் கிடைத்த அங்கீகாரமாக எண்ணி வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டார்.
1879ஆம் ஆண்டு தொடங்கி 1893ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் அரவிந்தரும், சகோதரர்களும் மிகுந்த துன்பங்களுக்கு இடையே கல்வி கற்றார்கள். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாவிடினும் இலக்கியங்களே அவர்களுக்கு ஆறுதலாகவும், உற்ற துணையாகவும் இருந்தது.
அறிவிற்சிறந்தவராகவும், ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவராகவும்,மிகக்கடினமான ஐசிஎஸ் தேர்வில் தன்னுடைய திறமையால் சிறப்பிடம் பெற்றவராகவும் விளங்கிய அரவிந்தருக்கும், இந்திய அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
(அரவிந்தர், வாழ்க்கை வரலாறு, இங்கிலாந்துக் கல்வி (1879 -1893 )