31 Dec 2013

கூவம் நதிக் கரையினிலே..............

எங்கள் அண்ணாநகர் இல்லம் - அன்னை L7/2
மெரினாவின்  இனிய காற்று வீசும் மாலைப் பொழுது! உனக்காக கூவம் நதிக்கரையில் ஒரு மாளிகை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லியபடி வந்தார் மகாராஜா! ஆகா அங்கே கூவத்தில்  படகில் போக முடியுமா என்றேன்! ஹி...ஹி.. ஹி..ஹி..ஹி..............!ஆகா அது உன்னுடைய தாங்கும் சக்தியைப் பொறுத்தது என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரின் படகு வீட்டில் குழந்தைகளோடு சென்று குதூகலித்தோம். பம்பாயில், அந்தமானில் என்று படகுப் பயணங்கள் நிறையவே  செய்து என் ஆசை பூர்த்தியானது!

பாண்டிச் சேரியில் இருக்கிறது 'ஆரோவில்'. ஆனால் கூவம் நதிக்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் என் கணவரால் பெயர் சூட்டப்பட்ட 'ஆரோவில் குடியிருப்பு'களில் சுமார் 10 வீட்டுவரிசைகள், 40 குடியிருப்புகள். கூவம் நதியிலிருந்து சுமார் நூறடி தூரத்தில்! அதிலே ஒன்று தான் எங்களுடைய மாளிகை. குறைந்த வருமானக் குடியிருப்பு வீடு.

திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனத்தில் குப்பை கொட்டியவர்களுக்குதான் தெரியும் இந்த ஒற்றைப் படுக்கையறை வீடு பிரிட்டிஷ் மஹாராணியின் மாளிகைக்கு சமம் என்று. நல்ல காற்று, வெளிச்சம், முன்னும் பின்னும் நடமாட இடம்! இரவில் ஓயாமல்  தவளைகளின் இன்னிசை, இலவசமாக!

எங்கேயோ தொலைவில் இருக்கிறது , தெற்குப் பார்த்த வீடு  என்றெல்லாம் போகிற போக்கில் உறவுகளின் புகார்கள். போக்குவரத்து வசதிகள் அதிகம் கிடையாது. மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே போக முடியாது, தெரு விளக்குகள் அற்ற சாலைகள். அவ்வப்போது கூவம் மணம் வீசும்! கூவத்தின் மறுகரையிலிருந்து சுடுகாட்டு நாற்றம் மூக்கைத் துளைக்கும். 

பதினேழாம் நூற்றாண்டின் புனித நதி கூவம்.  அதன் கரைகளிலே மூன்று சிவன் கோயில்கள் இருந்ததாகவும், கூவத்தில் நீராடி வழிபாடு செய்தார்கள் அன்றைய தமிழர்கள் என்றும் கூகுள் செய்தி கூறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, பூந்தமல்லி வழியே அரும்பாக்கத்தில் உள் நுழைந்து வங்காள விரிகுடாவில் சென்று சேர்கிற கூவம் இருபதாம் நூற்றாண்டில் அதில் இணைக்கப்பட்ட கழிவு நீர்களால் புனிதம் இழந்து, மக்களால் வெறுக்கப்படும் நிலையில் சீரழிந்து போனது. 

ஒரு நதியை உருவாக்க முடியாவிடினும் எப்பாடுபட்டாவது அழிப்பதிலே வல்லதாயிருக்கும் மானிடம்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகரிலிருந்து பிரிக்கிறது நடுவே ஓடும் கூவம். இணைப்பது தாழ்ந்த பாலம். பெருமழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் நிதானமாக சங்கிலி போல் கை கோர்த்துக் கொண்டு எல்லோரும் பாலத்தைக் கடந்து செல்வோம்.

ஒரு முறை பெரு மழையால்   தன்னைப் பார்த்து ஓடும் எங்களை விடாமல் துரத்தி, வீட்டுக்குள் அழையாத விருந்தாளியாய் சர்வ சுதந்திரத்தோடு நுழைந்து, தன்னுடைய அழுக்குகளைப் பரிசளித்து ஒரு நாள் முழுதும் சுத்தம் செய்யும் உபகாரத்தைச் செய்தது! குழந்தைகளை மாடி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்டில் மேல் நாற்கலிகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். தண்ணீரில் நெளிந்து வந்த பாம்புகள் பயமுறுத்த, தண்ணீர்ப் பெருக்கு அதிகமானால் என்ன செய்வது என்ற கிலியுடன் விடியலை நோக்கிக் காத்திருந்த தருணங்கள்!

பாரதியார் பாடியது போல பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் இல்லாவிட்டாலும் மூன்று தென்னை மரங்கள் வீட்டு வாசலில். மருதாணி, கொய்யா, பவழமல்லிச் செடிகள்! அடுக்குச் செம்பருத்தி சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும், நீல, வெள்ளை சங்கு புஷ்பங்கள் வேலி நிறைய அழகு செய்யும். மாடி வீட்டுத் தென்னை மரங்கள்,  பூந்தோட்டம் பக்கவாட்டில்.  கோடை காலத்திலும் வெயில் தெரியாமல் செய்யும் தென்னங் கீற்று நிழல்.

வெளியிலே ஒரு உலகம் இருப்பதே தெரியாமல் அண்ணாநகரில் வாழ்ந்து வந்தோம்! எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டம் அது. அலுவலகப் பணி காரணமாக நாங்கள் சென்னையிலிருந்து இடம் பெயர வேண்டியிருந்தது. ஆனாலும் 19 ஆண்டுகளின் கதைகளை தன்னுள் புதைத்துக் கொண்டு வேறொருவர் வீடாக அது இன்னும் இருக்கிறது. தென்னை மரங்கள்தான் இல்லை! 

சாதாரணமாக கடந்த காலத்தை நான் நினைப்பதில்லை. அந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து விட்டது! நடந்ததை மாற்றியிருக்க முடியுமா? வரப் போவதைத் தடுக்க முடியுமா? இதோ நேற்றுக் காலையில் எங்கள் குடும்பத்தில் ஒருவரின் இதயம் நின்று போனது! யாரால் என்ன செய்ய முடிந்தது? மாறுதல்கள்தான் வாழ்க்கை!

இப்போது என்ன திடீர் ஞாபகங்கள் என்கிறீர்களா?  

 நான் பத்தொன்பது ஆண்டுகள் ஒரு ஆசிரியையாக ஓடிக்  கொண்டிருந்த காலகட்டம் அது. அதிகமாக எல்லோருடனும் பேசி மகிழவோ, மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ நேரமிருக்காது.

எங்கள் மாடி வீட்டின் சொந்தக்காரர்கள்தான் திருமதி. மல்லிகா, சபாநடேசன் தம்பதியர். இவர் நடராஜர், கீழே பக்கத்து வீட்டில் சண்முகம்! திருமதி. மல்லிகா - நல்ல உயரம். எப்போதும் சுங்கடி சேலைதான் உடுத்துவார். முருக பக்தை. அவர்தான் செந்தில் முருகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர். வெஜிடபிள் பிரியாணி, ஆம்லெட், இடியாப்பம், கோதுமை ஹல்வா என எனக்கு அவர் சொல்லித் தந்த சமையல் மெனுக்கள் நிறைய! தோட்டம் போடுவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.நவராத்திரி நாட்களில் பொம்மைக்கொலு அருமையாக வைப்பார்கள்.

பெரும்பாலும் ஜன்னல் வழியேதான் பேச்சு நடக்கும். அவர்களுடைய சகோதரர்  டாக்டர். என் மகனுக்கு மருத்துவம் பார்த்தவர்.

எங்கள் நட்பு வட்டம் பெரியது.   திருமதிகள். ஹேமா, பாப்பா, ஜெயா, ராதா,  சாந்தா, ஜூலா எல்லோர் வீட்டிலும் பண்டிகைகள் சமயத்தில் ஒன்று சேர்வோம். இன்னும் அங்கேயே 43 ஆண்டுகளாக வசிக்கும் இவர்களால் எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறது என்பது சந்தோஷம் தருகிறது.

ஆறு மாதங்களுக்குமுன் ஒரு நாள் சகோதரி மல்லிகா என்னை அலை பேசியில் அழைத்தார். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒருவருடன் ஒருவர் மீண்டும் பேசிய அந்தக் கணம் தந்த சந்தோஷத்தை எழுத்துக்களால் வர்ணிக்கவும் முடியுமோ? நல்ல நண்பர்கள் கடவுள் மாதிரி! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அன்பை மட்டுமே நாடி நிற்கும்  பேச்சுத் துணைவர்கள். மூச்சு நிற்கும் மட்டும் எங்கள் நட்பு தொடர்வதாக!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகருடன்  இணைத்த பாலம் உயரமாகக் கட்டப்பட்டு விட்டது.
ஆனால் கூவம் நதி மட்டும் சாக்கடை நாற்றம் வீசும்,  கழிவுகளின் மையமாய், கொசுக்களின் உற்பத்தித் தலமாய் அமைதியாய் தன்பாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சிவனே என்று நடை பயில்கிறது! அதற்கு ஏது விமோசனம்?

எது எப்படியோ, கூவமும் கூவம் நதிக்கரையும் அப்படியே இருந்தாலும் எங்கள் வீடுகள் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே வீடாக மாறிவிட்டது. ஆம், புதிதாக அந்த வீட்டை வாங்கியவர் கீழ்,மேல் என இரண்டையும் வாங்கி ஒன்றாக்கி விட்டார். எங்களுடைய நட்பும் புதிப்பிக்கப் பட்டு இடையே நடந்த கதைகளை இன்று பேசிவருகிறோம்.

என்றென்றும் மறக்க முடியாத கூவம் (நதிக்கரை)!............................. அண்ணாநகர்!எங்களுடைய வரலாற்றின் ஒரு பக்கம்!

அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். 2014 ஆம் ஆண்டில் நோய் நொடியற்று, ஆரோக்யமாக அனைவரும் அனைத்தின்பங்களும் பெற்று இன்புறுவார்களாக!






23 Dec 2013

திருப்பாவை - ஆண்டாள்

மார்கழி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பாவை. விடியலின் பஜனைப் பாட்டு, வாசல்கள்தோறும் அலங்கரிக்கும் அழகிய பெரிய கோலங்கள். கோயில்களில் கிடைக்கும் சூடான பொங்கல்!
தனுர் மாதம் எனப் போற்றப்படும் மார்கழி - மார்கசீர்ஷம் என்ற பெயரும் பெற்றுள்ளது. (மார்கம் - வழி, சீர்ஷம் - முதன்மையான) இவ்வுலகில் பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் எல்லாவற்றுக்கும் மேலான, எவராலும் அறிய முடியாத இறைவனை அறிந்து கொள்ள முயல்கிறோம். அவசர உலகில் அல்லல் படும் அனைவரும் பின்பற்றி அடையக் கூடிய மிக எளிய வழியை நமக்குக் காட்டுகிற மாதம்  மார்கழி.
பலவிதமான யோகங்கள், பக்தி மார்க்கங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் பரம் பொருளைப் பற்றிப் பேசுகின்றன. இறைவனுடை நாமத்தைச் சொல்லுதல், மலரிட்டு வணங்குதல், முழுமையான நம்பிக்கையை அவனிடம் வைத்தல் அடங்கிய பக்தி மார்க்கமே அந்த எளிய வழி என்கிறது  முப்பது பாசுரங்கள் அடங்கிய திருப்பாவை. இசையோடு
இயைந்த செந்தமிழ். திருமாலின் திருநாமங்கள்! மாயக்கண்ணனின் விளையாட்டு லீலைகள். ஒருஅழகிய நாடகத்தை அற்புதமாகப் பாடி அரங்கேற்றுகிறாள் கோதை நாச்சியார். ஆயர்பாடியில் தன்னோடு சேர்ந்து பாசுரம் பாட வைக்கிறாள். இந்திய பக்தி வானிலே ஒளிரும் நட்சத்திரங்களாக பெயரும் புகழும் பெற்ற பெண்டிர் இருவர். வட நாட்டில்  கண்ணனையே காதலித்து, மேவார் மன்னனின் பட்ட மகிஷியான பின்பும் சுக போகங்களில் திளைக்காமல், இசையால் கிரிதரகோபாலனைக் கட்டுவித்து அவனுடன் ஒன்றிய பக்த மீராபாய் முதல்வர். மீரா பஜனைப் பாடல்கள் இன்றும் வடநாட்டினரால் போற்றப்படுகின்றன.
 இரண்டாவதாக, கருவிலே தோன்றாமல், விஷ்ணு சித்தரின் துளசி வனத்தில் தோன்றி, அவருடைய செல்லப் பெண்ணாய் வளர்ந்த சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, திருவரங்கத்து திரு அரங்க நாதனின் இதயத்தையும், நம்முடைய மனதையும் ஆள்பவள் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார். கோதை நாச்சியார் கண்ணனிடம் கொண்ட காதல் நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாகும்.
கோதை யார்? திருமாலின் பத்து அவதாரங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது  வராக அவதாரம்.  ஹிரண்யாட்சன் என்ற அரக்கனிடமிருந்து ஆழ்கடலில் ஒளித்து வைக்கப்பட்ட பூமியை திருமால் மீட்டெடுத்தான். வராஹத்தின் மூக்கிலே ஒட்டிக் கொண்ட பூமி தேவி அழ, காரணம் கேட்கிறார் வராஹமூர்த்தி. தன்னைக் காப்பாற்றியதுபோல் அவஸ்தைப்படும் மற்றவர்களும் அழைத்தால் நீ சென்று காப்பாற்றுவாயா?  என்று கேட்கிறாள் பூமித்தாய். என்னை வழிபட்டு, என்னை அழைத்தால் காப்பாற்றுவேன் என்கிறான் திருமால். 
அது சரி. உன்னை வழிபட எளிதாக எல்லோராலும் பின்பற்றமுடிந்த வழியைச் சொல் என்கிறாளாம் அன்னை.
என்னை வழிபட என்ன செய்ய வேண்டும்? என்னைக் கூப்பிட வேண்டும், மலரிட்டு என்னை வணங்க வேண்டும், சரணாகதி பண்ண வேண்டும். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் என்கிறான் திருமால்.
பெரிய மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் மிகவும் மரியாதையாக அவர் பெயரைச் சொல்கிறோம்; பூச்செண்டு கொண்டு போகிறோம். உங்களை விட்டால் யாரால் செய்ய முடியும் என்று சொல்கிறோம்.அது போலதான் இதுவும்.

எல்லா அவதாரங்களும்  முடிந்தபின் வைகுந்தத்தில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன் தான் உபதேசித்த 'கீதா' சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறான். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறானாம். அவள் மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி! ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்!

கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரிவில்லிபுத்தூர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லி புத்தூர் வேதக் கோனூர்.

கோதையின் தமிழ்ப்பாசுரம் எப்படியானது? 'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும்.' இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! 'கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்
அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.'

கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை! திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள்.

வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.
திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது.
திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.


''திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே''

                                                          -------------------------------














16 Dec 2013

குருவிக் கூடு........

அடேயப்பா, எத்தனை புத்தகங்கள்! எப்படி சேர்த்தீர்கள்? எத்தனை வருடமாக?  அந்த புத்தகத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா? என்று எங்கள் வீட்டு நூலகத்தைப் பார்த்து மூக்கின் மேல் கை வைத்தவர்கள் ஏராளம் பேர். புத்தகம் மட்டும் கடன் கொடுத்தால் திரும்ப வராது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை!
அதனால் புத்தகம் கேட்டால் வேறு ஏதாவது பேச்சை மாற்றுவது என் வழக்கம். ஆனால் அதையும் மீறிக் கொடுத்ததும் உண்டு. ஒரு சில திரும்ப வரும். சில வராது. சில புத்தகங்கள் மடக்கப் பட்டு, நுனி முக்கோணமாகி, கசங்கி வரும். அடி பட்ட குழந்தை!

புத்தகங்களை மடக்கினாலோ, கவிழ்த்து வைத்தாலோ வருத்தமாக இருக்கும்.. புத்தகங்களின் பக்கங்களை அடையாளம் வைக்கவென்றே அழகான வடிவில் கத்தரிக்கப்பட்ட 'விரலளவு அடையாளக் குறியீடுகள்,' புத்தகங்களிலேயே வைத்து விடுவோம்.

சென்னை மாநகரத்தின் அத்தனை புத்தக விற்பனை நிலையங்களுக்கும் பள்ளி நூலகத்திற்காக புத்தகங்கள் வாங்கப் போயிருக்கிறேன். 'ஹிக்கின்பாதம்ஸ்' எனக்கு மிகவும் பிடித்தமான புத்தக விற்பனை நிலையம். ஆண்டு விழா பரிசுகள் வாங்க  ஒரு நாள் முழுதும் செலவிடுவோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் சுற்றிச் சுற்றி கால் வலி வந்துவிடும். ஆனாலும் அடுத்த நாள் வரமுடியாது என்பதால் விடாமல் கண் வலிக்க புத்தகங்களை மேய்வோம்.

சிறுவர்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், ஆங்கில இலக்கியங்கள், பொது அறிவுக் களஞ்சியங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!.....! புத்தக உலகம் மிகப் பெரியது. நான் வேலை செய்த இரு பள்ளி நூலகங்களின் புத்தகங்கள் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதை எதற்காக எழுதுகிறேன்? என்னை புத்தக உலகிற்கு அறிமுகப் படுத்தியது என் பொறுப்பில் விடப்பட்ட அதிகப்படியான நூலக வேலைதான். எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட.

மதிய நேர உணவுக்குப் பின் ஆசையுடன் வரும் மாணவர்களுக்கு அம்புலிமாமா, கோகுலம், அமர சித்திர கதைகள், சம்பா ஆகிய குழந்தைகள் பத்திரிகைகளைக் கொடுப்பதிலும், அவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும்  மகிழ்வேன்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரி முனையில்! சங்க இலக்கியங்கள் முழுதும் அங்கே கிடைக்கும். லிப்கோ பதிப்பகம், தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, நேஷனல் புக் டிரஸ்ட்,
பாரி நிலையம், வானதி பதிப்பகம், பழனியப்பா பதிப்பகம், .... தி. நகரில்., சென்னையின்
எல்லா பதிப்பகங்களுக்கும் போயிருக்கிறேன்.

மெரினாவில் காற்று வாங்கி விட்டுத் திருவல்லிக்கேணி  நடை பாதைக் கடைகளில்
வேர்க்க விருவிருக்கத் தேடித் தேடி வாங்கிய புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து....பாண்டிச்சேரி கடற்கரைக் காற்றை விட்டுப் பிரிய மனமின்றி, பெட்டி நிறைய வாங்கிய புத்தகங்களைத் தூக்க முடியாமல் சுமந்து சேர்த்த புத்தகங்களின் குவியல்! எங்களுடைய செல்லக் குழந்தைகள்!

பாண்டிச்சேரி 'ஹிக்கின்ஸ் பாதாம்' புத்தகக் கடை ஒன்றும் ரொம்ப பெரிதில்லை! ஆனால் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைக்கும். 'திருவருட்பா ஆறாம் திருமுறையும், திரு.கோவிந்த சாமி ஐயா அவர்களின்  அகவல்  உரை இரண்டு பகுதிகளும் அங்கு வாங்கியதுதான்.

'சப்தா' ஆசிரமத்துப் புத்தக விற்பனை நிலையம்! ஶ்ரீஅரவிந்தர், அன்னை, ஆசிரமத்தைச் சார்ந்த வர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். எதைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றும்!

வீட்டிற்கு வந்ததும் அவற்றில் பெயர், வாங்கிய இடம், நேரம் பதிவு செய்து, அட்டை போட்டு அதற்கான இடத்தில் இன்னும் படிக்கப் படாத புத்தகங்களின் தனி வரிசையில் சேர்த்து.........!
தமிழ், ஆங்கிலப் புத்தக வரிசையில் பிரித்துப் பிரித்து.....!

ஶ்ரீரமணருக்கு ஓரிடம். ஶ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்வாமி விவேகானந்தர், ராமகிருஷ்ன பரமஹம்சர், வள்ளலார், பாரதி, வா.ரா, கல்கி, எல்லோருக்கும் தனித்தனி இடங்கள்.சிறுகதைகள், புதினங்கள், ஆன்மிகக் கட்டுரைகள், மூன்று அலமாரிகள் முழுக்க முழுக்க!

வாங்கிய புத்தகங்கள் போதாதென்று சேமித்து வைத்து, பைண்ட் செய்தவை பல.

பாதி இரவு பன்னிரண்டு மணிக்கு ஏதாவது நினைவுக்கு வரும்! உடனே விளக்கைப் போடாமல்
எடுக்க முடிந்த அளவுக்கு பரிச்சயமான புத்தகங்கள். சப்தங்கள் அற்ற இரவில்  படிக்கும் போது,
புத்தக உலகம் இரவைப் பகலாக்கும்; பகலை இரவாக்கும்!

திருவண்ணாமலை போகும் போதெல்லாம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும். எத்தனை குழந்தைகள் இருந்தால் என்ன?

அத்தனையும் தித்திக்கும் அறிவுக் கருவூலங்கள், நண்பர்கள்!
தாங்கிப் பிடிக்கும் தோழர்கள்.
வழிகாட்டும் ஆசான்கள்.
கதை சொல்லும் குழந்தைகள்!!
கற்பனை உலகத்தில் சஞ்சாரம் செய்ய வைக்கும் மந்திரவாதிகள்.
பயப்படுத்தும் ராட்சசர்கள்?
அழ வைக்கும் பயங்கரவாதிகள்.
அன்போடு அணைக்கும் தாய்மார்கள்!
எல்லா உறவுகளும் கதை உலகில் உண்டு!

அது மட்டுமா? சூரிய மண்டலத்தின் வெப்பத்தில், சந்திரனின் குளிர்ச்சியில் உலாவரலாம்!
நட்சத்திர மண்டலத்தின் அதிசயங்களைக் கண்டு வாய் பிளக்கலாம்.ஆகாயத்தில் பறக்கலாம்! ஆழ்கடலின் ரகசியங்களைக் கண்டு மகிழலாம். அடர்ந்த கானகத்தில் பயமின்றிச் சுற்றலாம்.
அரசனாய், அரசியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆணையிடலாம்! இன்னும் எத்தனையோ?!

தேம்பித் தேம்பி அழவைக்கும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், நினைந்து நினைந்து உருக வைக்கும், கோழையாய் பயந்து ஓட வைக்கும், வீரனாய்ப் போர்க்களம் புக வைக்கும்!
துயரத்தில், துக்கத்தில், கோபத்தில், மனச்சோர்வடையும், தன்னம்பிக்கை இழக்கும் தருணங்களில் கை கொடுக்கும் தெய்வங்கள் பாரதியும், பாரதிதாசனும், சித்தர்களும், வள்ளலும்தான்.

அலைபேசியில் பதிவு செய்த பாடல்களை எங்கும், எப்போதும் கேட்கக் கூடிய மகத்துவம் இப்போதுதானே வந்துள்ளது.

நாங்கள் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவதில்லை. நூலகத்திலிருந்து எடுத்துப் படிப்பதோடு சரி, அவற்றைப் பாதுகாப்பது பெரிய வேலை என்ற ஞானம் உள்ளவர்களைப் பாராட்டதான் வேண்டும்.
ஆனாலும் பெற்ற குழந்தையைப் போல் கையில் வைத்து, பார்த்துப் பார்த்து,  விரும்பிய போதெல்லாம் சுவைக்கும்  சுகம் நம்முடையதாக இருந்தால் தானே முடியும்?

மானுட பந்தங்களைப் போல் புத்தக பந்தங்களும் சக்தி வாய்ந்தவை என்பதை மறுப்பதற்கில்லை.

குஞ்சுகள் அற்ற குருவிக்கூடு ஒன்று எங்கள் தோட்டத்தில் உள்ளது. வெறும் கூடு!
அந்தக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் புத்தகங்களை நினைத்துக் கொள்கிறேன்.







10 Dec 2013

ஒரு உண்மைக் கதை!- கல்யாண வைபோகமே!

வாசலில் கேட் திறக்கும் சப்தம். அழைப்பு மணியின் ஒலி; இந்நேரத்தில் யாராய் இருக்கும்? கதவைத் திறந்தாள் பாக்யம்.
இது சங்கரன் வீடுதானே? கேட்டது போலீஸ்.
ஆமாங்க, நாங்க ஒன்னும் புகார் கொடுக்கலையே? என்ன விஷயம்?
உங்க மருமக பேரு ரம்யாவாம்மா? எங்க அவங்க குடுத்த காரைக் காணும்?
காரா? அவங்க கார் ஒன்னும் வாங்கலையே! புரியும்படி சொல்லுங்கய்யா? என்ன ஆச்சு?
அம்மா, உங்க மருமக, உங்க மேலயும், உங்க வீட்டுக்காரர் மேலயும், 'டவ்ரி புகார்' கொடுத்திருக்காங்க. உங்க மகன் சதீஷா? அவரு பேருலயும் ஒரு புகார். மொத்தம் ஏழு புகார்! இன்ஸ்பெக்டர் உங்களைஅரஸ்ட் செய்ய வந்திட்டு இருக்காரம்மா!

அதிர்ந்து போனாள் பாக்யம். வீட்டுக்காரரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல, மீண்டும் அவர் போலீசாரை 'உண்மைதானா?' என்று கேட்டு நிச்சயம் செய்து கொண்டார்.
'பாத்தா நல்லவங்க மாதிரி தெரியுது! உடனே வேற எங்கியாச்சும் தலை மறைவா போயிடுங்க. இல்லைனா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க!' என்றார்கள்.
உடனே  தன் நண்பரை அழைத்தார் சங்கரன்.  ஆபீஸுக்குப் போயிருந்த இரண்டாவது பையனிடம் விஷயத்தைச் சொல்லி, நண்பன் வீட்டில் தலைமறைவாக இருக்கச் சொன்னார். தனக்குப் பரிச்சயமான வக்கீலிடம் பேசினார்.  உடனடியாக இடம் மாறும்படி வக்கீல் சொல்ல 90 வயதான தாயாரை அவசரம்  அவசரமாக சொந்தக்காரர் வீட்டிற்கு அனுப்பினார்கள். கையில் கிடைத்த துணிகளை ஒரு பையில் அடைத்துக் கொண்டு அலமாரியில் இருந்த ஐந்தாயிரம் ரூபாயுடன்  வீட்டைப் பூட்டி, பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நண்பர் வீடு சென்றனர். அங்கிருந்து சென்னை! ஓடி ஒளிந்து தலை மறைவாக, கையில் காசின்றி நிற்கும் அவலம்!

சங்கரன் வங்கியில் மேலதிகாரியாயிருந்து ஓய்வு பெற்றவர். அதிர்ந்து பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று வம்பு தும்புகளுக்குப் போகாதவர். அடுத்தவர் விஷயத்தில் தலை நுழைக்காதவர்.அவருடைய மனைவி பாக்கியம் அவருடைய அக்காள் மகள். அவர்களுக்கு அறிவும், அழகும், நற்குணங்களும் நிறைந்த இரு மகன்கள்.

இருவருக்குமே ஐ. டியில் நல்ல வேலை ! பெரியவனுக்குதான் ஒரு மாதம் முன்பு திருமணம் செய்தார்கள். படித்த பெண், அமெரிக்கா போவதில் ஆட்சேபணை இல்லை.  எல்லாம் நேரில் பார்த்துக் கூடிப் பேசி பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட கல்யாணம்தான்.

திருமணமான முதல் நாள் இரவே ரம்யாவுடைய ரகளை ஆரம்பித்து விட்டது. எடுத்த உடனேயே சொல்லி விட்டாள் 'உன்னை எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. என்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்து விட்டார்கள் 'என்று. முப்பது வயது ராகவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அவன் நினைத்தது என்ன, நடப்பது என்ன?
மறுநாள் மதியம் ஒரு மணிக்கு எழுந்து வந்த ரம்யா, 'இந்த வீடே எனக்குப் பிடிக்கவில்லை,
அம்மா வீடு  போகிறேன்' என ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மனநிலை குன்றிய பெண்ணைத் தலையில் கட்டி விட்டார்களோ?பாவம் அம்மா அப்பாவைப் பிரிந்து இருக்க முடியவில்லை போல என்று நினைத்தார்கள்.

சரிதான் அமெரிக்கா  போனால் சரியாகிவிடும் என்று நம்பினார்கள்.  விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே ,'எனக்கு அழகு நிலையம் போகணும் என்று  ரம்யா சொல்ல, அழைத்துப் போனான் ராகவன். வெளியே வந்தவளை அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. தலை முடி வெட்டப்பட்டு, உதட்டுச் சாயமும் அதுவுமாய்.......! வீடு போய்ச் சேர்ந்தால் அவளுடைய தோழி காத்திருந்தாள்! இருவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தார்கள். வாயில் வந்தபடி ஆங்கிலத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் ஒரு பெண்ணால் சொல்ல முடியுமா என ஆச்சரியத்துடன் அசந்து போய் நின்றான்அவன்! "அம்மா தாயே உனக்கும் எனக்கும் சரிப்படாது, என்றவன் கண்ணீரோடு நண்பன் இல்லம் சென்றான். ரம்யாவோ வீட்டைப் பூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு தோழி வீடு சென்று விட்டாள்.
வீட்டிற்கு விவரம் சொல்லி, ரம்யாவின் பெற்றோருடன் பேசி, வீட்டுச் சாவியை வாங்குவதற்குள் போதுமடா சாமியென்றானது ராகவனுக்கு.

திரும்ப இந்தியா வந்த ரம்யா, ராகவனை அழைத்தாள். என்னை திருப்பி அனுப்பினே இல்லையா? உன்னையும் உன் வீட்டாரையும் நான் என்ன செய்கிறேன் பார்!  வரதட்சணைக் கொடுமைப் புகார் கொடுத்திருக்கிறேன். இப்போது போலிஸ் உங்கள் வீட்டு வாசலில்!

ஒரே பெண். வேலைக்குப் போகும் அம்மா! வாய் திறவாத அப்பா! தன் விருப்பம் போல் எதையும் செய்யும் பிடிவாதம் நிறைந்த ரம்யா!
நல்வழி நடத்த நேரமில்லாத பெற்றோர்! பிடிவாதம் நிறைந்த குழந்தைகள்! விரும்பியவாறு நடக்க தைரியம் தரும் கல்வி, கை நிறைய சம்பளம், பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுக்கும் ஆணவம்,...............! அறிவு மேம்பாட்டுக்கும், தன்னம்பிக்கைக்கும், உதவிக்கரம் நீட்ட வேண்டிய கல்வியும், அதன்பயனாகிய செல்வமும் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுத்து விட்டது என்பது நிதர்சனமான உண்மையாகும். மனித நேயமும், அன்பும், நட்பும் பொலிய வேண்டிய இடங்களில்,பொறுமையின்மையும், வெறுப்பும், அகங்காரமும் காணப்படுகின்றதே?

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தலை மறைவாய் இருந்த சங்கரன் தன்மேல் தொடர்ந்த வழக்கு பொய்யானது என்று வக்கீல் மூலம் நிரூபித்தபின் மனைவியுடன் வீடு திரும்பினார். விதியின் வலிமையைப் பாருங்கள். அடுத்த மகனுக்குக் கல்யாணம் என்றாலே ஐயய்யோ வேண்டாம் என்கிறார்.


இது சும்மா பொழுது போகாமலெழுதிய பதிவல்ல. நிஜமாக சமீபத்தில்  நடந்தது. அந்தப் பெண் ரம்யா நல்லவள். விவாகரத்து நோட்டீசில் ராகவனின் விரல் நுனி கூட தன் மேல் படவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டாள். அந்தவரை புண்ணியம்தான். இன்றைய பாலியல் பலாத்காரச் செய்திகளுக்கு இடையில் இது ஒரு நல்ல விஷயம்தானே?

பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் முன் நிதானமாக யோசியுங்கள் பெற்றோர்களே!