11 Mar 2013

மோரோ மோர் - More

அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் என்றாள் மகள். மதியத் தூக்கக் கலக்கத்தில்,'மோரைக் குடிக்கதான் செய்வார்கள், அதிலிருந்து எப்படி சாமான் வாங்குவது' என்று கேட்டேன். 'போம்மா, ராமகிருஷ்ணா மடம் பக்கத்தில் பெரிய ''mega more'' திறந்திருக்கிறார்கள்,  போகலாம் வா,' என்றாள்.

மோர் என்றவுடன் குடிக்கின்ற மோர் நினைவுக்கு வந்துவிட்டது. அறுபதுகளில் மாலை நேரத்தில் மோர்தான் குடிப்பதற்குத் தருவாள் அம்மா. இரவு நேரங்களில் ஒரு கிண்ணம் மோர் எப்போதும் திடீர் விருந்தினர் வந்தால் இருக்கட்டும் என எடுத்து வைத்து விடுவாள். குளிர் சாதனப் பெட்டி கலாசாரம் இல்லாத நாட்கள் அவை.

காலை நேரத்தில் மோர்க்கூடையைத் தலையில் சுமந்து கொண்டு மோரோ, மோரு என்று கூவிக் கொண்டு வருவாள் மோர்க்காரி. கூடையினுள் மூன்று பானைகள் இருக்கும். ஒன்றில் மோர், இரண்டாவதில் கட்டித் தயிர், மூன்றாவதில் வெண்ணெய் வைத்திருப்பாள்.  நல்ல உயரம், பெயருக்கேற்ப கரிய நிறம், கையிலே வெள்ளியினால் ஆன கெட்டிக்காப்பு  கையை இறுக்க, காலிலே வெள்ளித் தண்டை அணிந்திருப்பாள். புடவைத் தலைப்பை சுருட்டி சும்மாடாக்கி அதன் மேலே கூடை கொலுவிருக்க கொடியிடை அசைய வருவாள்.

அவள்  வந்தவுடன் அம்மா முன்பக்கம் பிடித்துக் கொள்ள கூடை கீழே இறக்கப்படும். பாத்திரமும் கையுமாக அம்மாவும் உட்கார்வாள். மோரோ, தயிரோ, வெண்ணையோ வாங்குவாள்.  பள்ளிக்கூடம் போவலையா ராசாத்தி கைய நீட்டு என்பாள் கருப்பாயி.  பிடி வைத்த கொட்டாங்காச்சி கரண்டியால் தயிரைக் கையில் கொடுப்பாள். மண்பானையில் பிறையூற்றிய தயிரின் மணமும் ருசியும் ருசித்த நாக்குகளுக்கு மட்டுமே தெரியும். கீழே சிந்தாத கெட்டித்தயிர். தலை பாதி கீழே வர, கைபாதி மேலே போக லபக் என்று வாயில் போகும் தயிர் தான் என்ன ருசி, என்ன ருசி!

தண்ணீரை வாங்கிக் குடித்தபின் மண்ணிலே விரலைத் தோய்த்து சுவரில் ஒரு பதிவு வைப்பாள். எத்தனை ஆழாக்கு என்ற கணக்கு! மாதக் கடைசியில் எல்லா விரல் பதிவும் எண்ணப்பட்டு பணம் கொடுக்கப்படும்.

இந்த நேரத்தில் காளமேகப் புலவரின் பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. சிலேடை பாடுவதில் வல்லவரான புலவர் மோர்க்காரி கொடுத்த மோரைப் பார்த்து கிண்டலடிகிறார். ஓ மோரே, ஆகாயத்தில் நீ இருந்த போது உன்னை மழை மேகம் என்றனர், பூமியில் மழையாய் பெய்த போது நீரென்றனர், இந்த ஆய்ச்சியின் பானைக்குள் வந்ததும் பேர் மாறிப் போச்சே! மோர்னு பேர் வைச்சுடுச்சே இந்த அம்மா. உனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல மூணுபேர், பலே பலே என்கிறார். மோருல அவ்வளவு தண்ணி இருக்காம்!

பாடலைப் பாருங்கள்:
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும் போது
நீரென்று   பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப் பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

காளமேகப் புலவரின் நகைச்சுவை, நக்கல், கிண்டல், சாமர்த்தியம் எல்லாம் வெளிப்படும் இந்தப் பாடலில்தான் எத்தனை சுவை?

இந்தப் பால், தயிர்னு சொன்னவுடனே ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருது. பாலில பாசுரமா?  ஆமாங்க, கடவுள், கடவுள்னு சொல்றோமே அவரக்காட்டுன்னு பிடிவாதம் பிடிச்சானாம் சீடன்.
குரு கேட்டாராம் சாப்பாட்டுல தினந்தோறும் நெய் ஊத்துவாங்களே அது எங்கேந்து வருது தெரியுமான்னு!வெண்ணையிலிருந்து நெய் காச்சுவாங்க.
சரி வெண்ணை எங்கிருந்து வந்தது? என்னங்கய்யா பாலில் மோர் ஊற்றினால் தயிராகும்,தயிர் கடைந்தால் வெண்ணை வரும்.
பாலைப் பார்த்தா வெண்ணையோ, நெய்யோ கண்ணுக்கு தெரியுதா? அதுபோல தான் கடவுளும். மறைந்து இருக்கிறார்! நாம்தான் அவரைக் கண்டு கொள்வதில்ல என்றாராம்.

''விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே''

வெயில் காலங்களில் சிறிது உப்பும், பெருங்காயமும் சேர்த்த மோர்த்தண்ணிக்கு ஈடு இணையான பானம் ஏதாவது உண்டா? சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, கசக்கிப் போட்ட கருவேப்பிலையுடன், கடுகு தாளித்த மோர்தான் ராமநவமியன்று பிரசாதம். மோருடன் பழையசாதம் கலந்த நீராகாரத்துக்குதான் எத்தனை ருசி!

சரிதான் "மோருக்குப்'' போனோம். கீழே சாமான்கள் வாங்கிவிட்டோம். மாடியில் ஒரு ரவுண்ட் போகலாம் என்றால் படிக்கட்டைக் காணும். இந்த புஷ்பக வண்டியை,''Escalator'' பார்த்தால் ஒரு பயம். நான் வரமாட்டேன் என்றேன். நானிருக்க பயமேன் வா என்று சொல்ல அதன் மேல் ஏறிவிட்டேன். 
பக்கவாட்டில் இருக்கும் பிடிமானத்தைப் பிடித்துக் கொள்ள, ஒன்,டூ, த்ரீ காலை மேலே வை என்றாளா, காலை வைத்தேன் கைப்பிடியை ஒரு கணம் விடாததால் ஒரு ஆட்டம் ஆடி ......பாவம் என் இதயம் பயத்தால் ஆடிப் போய்விட்டது.

சரி சரி வீட்டிற்குப் போனதும் கொழு மோர் காய்ச்சித்தருகிறேன் குழந்தை மாதிரி பயந்து போய் விட்டாயே என்று என் கைகளைத் தன் கைகளில் இணைத்துக் கொண்டாள் என் மகள். இதற்காகவாவது கொஞ்சம் பயப்படலாம் போல! என்ன சொல்றீங்க?




















7 comments:

  1. நாம் நீர் மோர் என்பதை மலையாளத்தில் சம்பாரம் என்பார்கள். வெறும் இஞ்சி, கறிவேப்பிலை மட்டுமன்றி விதம் விதமான மசாலாக்களுடன் இந்த சம்பாரத்தை உருவாக்குவார்களாம் . எனது பாலக்காட்டு நண்பர் ஒருவர் 9 விதமான சம்பாரம் செய்வாராம். [ எல்லாம் சிலதைக் கூடி, சிலதைக் கழித்துத்தான் ] . அறுபத்து மூவர் திருவிழாவின் போது வழி எங்கிலும் நீர் மோர் தருவார்கள். வாங்கி குடிக்கத்தான் பயம்.

    சுவையான [!] பதிவு.

    ReplyDelete
    Replies
    1. Sir,

      My name is Chinmay and I live in Pune, Maharashtra. I cannot read Tamil, but I guess the above comment mentions the word சம்பாரம். Can you please tell me in what context this word has been used?

      Thank you,
      Chinmay

      Delete
  2. ஆமாம். எலுமிச்சை இலைகளைக் கசக்கிப் போடுவது ஒருவகை. ஜம்முனு இருக்கும்.

    ReplyDelete
  3. In the land of Lord Krishna (Dwaraka), I subsisted on butter milk (Amul MASTI) to survive the hot afternoon.
    Follow the Lord.

    ReplyDelete
  4. Thank you. It is available even in Bangalore.

    ReplyDelete
  5. Brilliant....
    அப்படியே கண் முன்னே கருப்பாயி வந்து நின்றது போல் ஒரு உணர்வு. லபக் என்று கட்டித்தயிர் ஒரு வாய், மண்பானையில் பிறையூற்றிய தயிர், காளமேகப் புலவரின் பாட்டு, எங்கள் தமிழ் ஆசிரியர் சிலேடையின் உதாரணமாக எங்களுக்கு உரைத்தது, என் நண்பர்களுடன் அமர்ந்து ரசித்தது, பழைய நினைவுகளின் சாரலில் சில்லென்று நனைந்து, சிலிர்த்து நின்றேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Ms.Chinmay, 'sambaram' is a word used in Kerala Tamilians to mention buttermilk. Buttermilk is added with salt, ginger, crushed lemon leaves. It will be added with lot of water. Some times seasoned with curry leaves. There are many ways of preparing it. They call it 'neer more' in Tamil. Thank you.

    ReplyDelete