23 Dec 2012

ஹனுமத் ஜெயந்தி



வசந்தநகர் அநுமன் ஆலயம் அமைதியான சூழ்நிலையில், வானளாவி வளர்ந்துள்ள மரங்களுக்கு நடுவே உள்ளது. சிறப்பான பராமரிப்பு. அருளலைகளின் சக்தியை ஆழ்ந்து தியானம் செய்வோர் உணரமுடியும்.

அஞ்சனா தேவிக்கும், வாயுவுக்கும் மகனாய் அவதரித்தவர் மாருதி. ஆஞ்சனேயன், அநுமன் என்ற பெயர்களும் அவருக்கு உண்டு. இராமாயணம், மஹாபாரதம் இரண்டிலுமே இடம் பெற்றிருப்பவர் அநுமன். வட இந்தியர்கள் அநுமனை சிவனின் அவதாரமாகக் கருதுகிறார்கள்.

சுந்தரகாண்டத்தின் கதாநாயகன் அநுமன்.   இராமாயணத்தின் இதயம் எனக் கருதப்படும் ஐந்தாவது பகுதி,  இராமனின் சுந்தர வடிவை அநுமன் வாயிலாகச் சொல்வதாலும், கற்புக்கரசியான சீதாப்பிராட்டியின் மனப்பண்பின் அழகை வடித்துக் காட்டுவதாலும், சுந்தரன் என அழைக்கப்படும் அநுமனின் உயர் பண்புகளைக் காட்டுவதாலும் சுந்தர காண்டம் என அழைக்கப்படுகிறது.

சாந்துணைப் போதும் மாறாத பக்தி, பணிவு, வீரம், விநயம், சாதுர்யம், புத்தி கூர்மை, உடல் வலிமையோடு  கூடிய மன வலிமை, ஆகியவற்றுக்கு இலக்கணமாய்த் திகழும் அநுமன் சுந்தர காண்டத்தின் தொடக்கத்தில் மகேந்திர மலை மீது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு கடலைத் தாண்டிச் செல்லத் தயாராக நிற்கின்றான்.  

அவன் கண்கள் அப்போது தேவர்களது உலகைக் காண்கிறது. அப்படியென்றால் அந்த உருவம் எத்தனை உயரமாக இருக்க வேண்டும்?! பின் அது விண்ணுலகம் என அறிந்து மீண்டும் கண்களால் துழாவுகிறான். வெகு தொலைவில் இலங்கை மா நகரம் கண்ணுக்குத் தென்படுகிறது. அது மட்டுமா? அந்தப் பழமையான நகரத்தின் வட்டமான கோட்டைச் சுவர், கோபுர வாயில், மாட வீதிகள், சோலைகள், பொன்னாலான மதிலின் பகுதிகள் ஆகியவற்றைக் காண்கிறான். எட்டுத்திக்கும் அதிர தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்கிறான் என்கிறார் கம்பர்.

கூகுள் வரைபடத்தைப் பார்த்து அதிசயிக்கிறோம். கண நேரத்தில் உலகின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்க்கிறோம்.  இமயம் முதல் இலங்கை வரை வழித்தடம்  தெரிந்து கொள்கிறோம்.  அறிவியல் முன்னேறாத காலம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற ராமாயண காலத்தில் தொலை தூரத்தில் இருந்த இலங்கையை, அதன் எல்லாப் பகுதிகளையும் அநுமன் பார்த்ததாகக் கம்பன் சொல்கிறார் என்றால் எத்தனை அதிசயமாக இருக்கிறது?
'கூகுளுக்கு'  முன்னோடி கம்பரும், அநுமனும்தானே?

கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்! அநுமன் தாவிச் செல்லத் தயாராக இருந்த போது, கால்களால் மகேந்திரமலையை அழுத்துகிறானாம்! மலையானது கீழே அழுந்தியதால் வயிறு கிழிந்து குடல் பிதுங்கியது போல் பொன்னால் அமைந்த மலைக்குகைகளிலிருந்து பாம்புகள் வெளிவந்தனவாம்!

சிங்கங்கள் மலைக் குகைக்குள் நெரிந்தன. பறவைக் கூட்டங்கள் மேலெழுந்து பறந்து சூரிய ஒளியே தெரியாதவாறு வானை மறைத்தன. யானைகள் அஞ்சி துதிக்கைகளால் மரங்களைச் சுற்றித் தழுவின. புலிகள் கண் திறவா குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு ஓடின. அன்னப் பட்சிகள் அருவி போலக் கீழே விழுந்தன.

மூவரும் தேவரும் மலர் மாரி பொழிந்து வாழ்த்தி நிற்கின்றனர். வாலை வேகமாக வீசி, கால்களை மடக்கி, மார்பை ஒடுக்கி, இரு தோள்களும் பொங்கிப் பூரிக்க, கழுத்தை உள்ளுக்கிழுத்து முன் தள்ளி,  காற்றுப் போல் வேகத்தை உண்டாக்கி  மேல் நோக்கித் தாவி, வேகமெடுத்து வானில் ஒரு கருடனைப் போலப் பறக்கலானான் அனுமன். ஒரு சிறு அசைவைக் கூட விட்டு விடாமல் எத்தனை அழகாக வானில் பறக்கும் வித்தையைக் கம்பர் காட்டுகிறார்! 

இது ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில், ஓட்டப் பந்தயத்துக்கு  தயாராக ஒருகாலை மடக்கி, ஒருகால் நீட்டி,  கழுத்தை முன் துருத்திக் காட்சியளிக்கும் வீரர்களை நினைவு படுத்துகிறது இல்லையா?

வானில் பறந்த அநுமன் திரிகூடமலையும், கயிலையங்கிரியும் பறந்தது போலவும், புட்பக விமானம் போலவும் காட்சியளித்தானாம். வட திசையில் முழுநிலவும், சூரியனும் உதித்தது போல இருந்ததாம் தெற்கு நோக்கிச் சென்ற அநுமனின் தோற்றம். 

பல தடங்கல்களையும் கடந்து,  இலங்கையின் பழைய நகரத்தினைச் சார்ந்த, பவழ மலையில் கால் பதித்தான் அநுமன். தேவர் உலகத்தை ஒத்த இலங்கைமா நகரினைக் கண்டு வியந்து, பின்னர் உள் புகுந்து சீதா தேவியைத் தேடலானான். எள் தங்கும் சிறிய இடமும் விடாமல் தேடி, சீதாதேவியைக் காணாமல்  வருந்தி பறவைகள் தங்கும்  விமானம் போல் இருந்த அசோக வனத்தைக்கண்டு உல்ளே புகுந்தான்.                      

அங்கே வெயிலில் வைத்த விளக்குப் போல ஒளியிழந்து, மயிலின் சாயலும், குயிலின் இனிய இளஞ் சொற்களும் உடைய சீதாதேவி புலிக் கூட்டத்தில் சிக்கிய மானைப் போல் அரக்கியர்  நடுவே  சோகமே உருவாய் இருக்கக் கண்டான். 

இராவணன் வந்து செல்வதையும், தேவி தன்னை மாய்த்துக் கொள்ளத் தயாரானதையும் பார்த்த அநுமன் அரக்கியரைத் தன் மாயையால் உறங்கச் செய்து, பிராட்டியின் முன் தோன்றினான். 'காய்க்கதிர்ச் செல்வன் மைந்தன்' சுக்ரீவன், அவன் மந்திராலோசனைக் குழுவில் நானும் ஒருவன், பெயர் அநுமன் எனத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு இராமனின் கட்டளையால் பிராட்டியைத் தேடி வந்ததையும்  கூறினான்.

உண்மையாகவே இவன் ராம தூதனா அல்லது இராவணனின் ஏமாற்று வித்தையா என அறியும் பொருட்டு சீதா தேவி, 'இராமபிரானின் திருமேனி எப்படித்து' என வினவுகிறாள் என்கிறார் கம்பர்.
அநுமன் சொல்கிறான், தாயே இராமபிரானை நான் எவ்வாறு வர்ணிப்பேன்? ''படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்தன்று'. என்று சொல்லி திருவடி முதல் திருமுடி ஈறாக உள்ள அங்க லட்சணங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.


 ஶ்ரீ இராமபிரானின் திவ்ய தரிசனத்தை அநுமன் வாய்வழிக் காண்போம்!

பாய்ந்தோடும் அலைகளையுடைய  கடலில் தோன்றும்  பவழமும் குவளைப் பூப் போல நிறங் குன்றிக் கருத்துக் காட்சி அளிக்கும் அளவுக்கு ஒளிவீசும் சிவந்த திருவடிகள்,

கற்பக மரத்தின் அரும்புகளுக்கும், இளம் பவழக் கொடிக்கும் ஒப்பிட முடியாத, காலையில்
உதித்த சூரியனின் இளங்கிரணங்களைப் போலப் பொலியும் கால் விரல்கள்,

நிலவொளியும், ஒளிவீசும் வயிரமும்  ஈடாகாத 'சிறியவும் பெரியவும் ஆகி,' மாசற்று ஒளி வீசும் கால் நகங்கள்,

'நிலனோடு  பொருந்திப் போந்து கானிடை வருந்தி' அன்று ' மூவடி கேட்ட வாமனனுக்கு
மூதண்டகூடம் முகடு முட்டச் சேவடி நீட்டிய' பெருமையை உடைய பாதங்கள்,

அக்ஷயம் என்னும் அம்புப் புட்டிலுக்கு ஒப்பாகும் கணைக் கால்கள்,

பறவைகளுக்கு  அரசனாகிய  கருடனின் உயர்ந்து விளங்கும் கழுத்தினை ஒக்கும் தொடைகள்,

மகிழ மலர் போன்ற உந்திச் சுழிகள்,

திருமகள் பிரியாது விளங்கும் மரகத மலையொத்த திருமார்பு,

கீழ்த்திசையைத் தாங்கி நிற்கும் ஐராவதம் எனும் யானையின் துதிக்கை போல முழந்தாளைப் பொருந்தி நிற்கும் கரங்கள்,

'பச்சிலைத் தாமரை' சூரியனைக் கண்டது போல் சிவந்த நகங்கள்,

சந்தனக் குழம்பும் அகிற் குழம்பும் தடவப் பெற்ற அகன்ற திருத்தோள்கள்,

இளமையான கமுக மரம் போன்ற மிடறு,

தாமரைமலரென விகசிக்கும் திருமுகம்,

மலர்க் கண்கள்,  

புன்முறுவலோடு, இன்மொழி பயிலும் திருவாய். அதிலே முத்துக்களோ, முழுநிலவைத் துண்டுக்களாக்கிக் கோர்த்த வரிசையோ, அமிழ்தத் துளிகளோ, சத்தியத்தின் அரும்புகளோ என முளைத்து விளங்கும் பல் வரிசை,

இந்திரகோபப் பூச்சியின் சிவப்பைப் பெற்று விளங்கும் அதரங்கள்,

உவமையே சொல்ல முடியாத வளைந்த அழகிய புருவங்கள்,

அஷ்டமிச் சந்திரனையொத்த நெற்றி,

நீண்டு, சுருண்டு, இருண்டு, நெடுநீலம் பூண்டு, நுனிசுருண்டு, தெய்வத்தன்மையோடு கூடிய நறுமணம் கமழும் கூந்தல்,

மத்த யானையையும், ஏற்றினையும்  ஒத்த கம்பீரமான நடையோடு கூடிய எம்பிரானை வர்ணிக்க வார்தைகளும், உவமைகளும் உண்டோ? என அநுமன் ஶ்ரீ ராமபிரானின் திருவழகை எடுத்துச் சொல்கிறான்.     

பிரிவுத் துயரிலே வாடும் சீதையின் மனம்  ஆறுதல் அடையும் பொருட்டு அடையாள உரைகளைக் கூறி கணையாழியைக் கொடுக்க,"வாங்கினள், சிரத்தில் தாங்கினள், மலர்க் கண்மிசை ஒத்தினள்." அநுமனோ சீதைக்கு அம்மையாய், அப்பனாய், தெய்வமாய்க் காட்சியளித்தான்.

வாழிய வள்ளலே என அழைத்து, பதினான்கு உலகங்களும் அழியக் கூடிய மகாப் பிரளய காலத்திலும் உனக்கு அழிவில்லை, சிரஞ்சிவீயாய், அழிவில்லா ஆயுள் உனக்குத் தந்தேன் என அருள் செய்தாள்.

அடுத்து இவ்வளவு சிறிய உருவத்தோடு  கடல் கடந்து வந்தது எவ்வாறு என வினவ, அநுமன் மீண்டும் தன் பேருருவைக் காட்டுகிறான். அநுமனின் விஸ்வரூபத்தை  தரிசனம் செய்வோமா?

''தொழுத  கையினன், விரிந்த தோளினன்,''ஆகாயத்தில் மேலும் உயர்ந்தால் அண்ட கோளத்தின் உச்சித்தளம் தலையில் முட்டி, அண்டம் இடியும் என்று எண்ணி வளைந்த மூர்த்தியான்.

ஓங்கி வளர்ந்த மரங்களில் காணப்படும் மின்மினிப்  பூச்சிகளென  நட்சத்திரக் கூட்டங்கள் சுற்றிக் காட்சியளிக்கும் பொன் மேனியான்,  

இரு  சூரிய மண்டலங்களைப்  போல் சுடர்விடும் பொற்குண்டலங்கள் அசையும் காதினான்.

எட்டுத் திக்குகளிலும், எல்லா உலகங்களிலும், எல்லா உயிர்களும் அநுமனைப் பார்த்தன. அநுமனும், தேவர்கள் அனைவரையும் பார்த்தான். 

பெருமை பொருந்திய தன் விஸ்வரூபத்தைக் காட்டிய பெரியோனான அநுமனின் இரு பாதங்களும் பூமியை அழுத்தினபடியால், இலங்கைத் தீவே ஆழ் கடலில் மூழ்கியது போலாயிற்று. வெண்மையான அலைகள் பூமியின் மேலே படர்ந்து பெருக, மீன்கள் புரண்டு ஓடின.

சீதாப்பிராட்டியின் வேண்டுகோளுக்கிணங்க அநுமன் மீண்டும் பழைய உருவம் கொள்கிறான். சூளாமணியைப் பெற்றுக் கொண்டு,  அசோக வனத்தை அழித்து, அரக்கர்களை வதைத்து, இராவணனை சந்திக்கிறான். 
''வாலியோடு வாலும் போயிற்று,'' என்று கம்பர் கொஞ்சம் நகைச்சுவை விருந்து படைக்கிறார்.  இலங்கையைத்   தீக்கிரையாக்கி,    இராமதூதுவன் என்ற பெருமையுடன், திரும்பும் அநுமன் தென் திசை நோக்கிய தலையையும், கைகளையும் உடையவனாய் ,''வையகந் தழீ இ நெடிது'' அதாவது பூமியைத் தழுவியது போலப் படிந்து வணங்கினான். குறிப்பினால் தான் சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லாமல் சொல்லி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினான் அநுமன்.



2 comments:

  1. அனுமனுக்கு அவர் தாயார் இட்ட பெயரும் சுந்தரன் தான். அவர் புகழை பாடும் படலம் ஆதலால் சுந்தர காண்டம் என்றும் சொல்வர் :-)

    சூப்பரா எழுதியிருக்கீங்க! :-) சுந்தர காண்டத்தை சுருக்கமாகப் படித்த திருப்தி. நன்றி :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கல்லூரி நாட்களில் வாங்கிய புத்தகம்! அப்போ தேர்வுக்குப் படித்தது.அனுமார் கோவிலுக்குப் போய் வருவதால் மீண்டும் படிக்க ஆஅரம்பித்தேன்.அதன் விளைவு.

      Delete