18 Dec 2012

வேண்டுமா, வேண்டாமா?

   சென்னை கந்தகோட்டத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக்  கொண்டிருப்பவன் முருகன். அவனைப் புகழ்ந்து வள்ளல் பெருமான் பாடிய பாடல்களில் அழியாப் பெருவாழ்வு  பெற்ற பாடல் ''ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற'' என்ற பாடலாகும். இந்தப் பாடல் பிறந்ததற்குப் பின்னணியாக ஒருகதை சொல்லப்படுகிறது. 

ஒரு நாள் இராமலிங்கம் மதிய வகுப்புக்கு காலதாமதமாக வருகிறார். வகுப்பின் முதல் மாணவன் 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்' என்ற பாடத்தினைச் சொல்ல மற்ற மாணவர்கள் பின்தொடர்ந்து  சொல்கிறார்கள். வேண்டாம் என்பது அமங்கலச் சொல் ஆதலால் அதனைச் சொல்ல மறுக்கிறார்  இராமலிங்கம்.

'வேண்டாம்' என்ற அவ்வை வாக்கு அமங்கலமானால் 'வேண்டும்' என்று நீ பாடு பார்க்கலாம் என்ற சவால் வருகிறது.. உடனே 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற  உத்தமர்தம் உறவு வேண்டும்,' என்ற பாடல் பிறந்தது. இந்தப் பாடலில் என்ன சிறப்பு? 

திருவள்ளுவரின் திருக்குறளில் ''ஒருமை'' என ஆரம்பிக்கும் குறட்பாக்கள் 4. ''ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல்," "ஒருமைக் கண் தான் கற்ற கல்வி'',  " ஒருமைச் செயலாற்றும் பேதை,"  என்ற மூன்று பாக்களிலும் ஒருமை என்ற சொல் ''ஒரு பிறவியில்'' எனப் பொருள் தரும்.
''ஒருமை மகளிரே போல,'' என்ற பாவில்  ''ஒருமை'' கற்பினைக் குறிக்கும்.

வள்ளலார்  பாடல் என்ன சொல்கிறது? இறைவனுடைய திருப் பாதங்களை நினைக்கும் போது ''ஒருமையுடன்'' நினைக்கவேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள்தான்  உத்தமர்கள், ஞானிகள். அவர்களுடைய உறவு மட்டும் கண்டிப்பாக வேண்டும்.
ஓ, ஓ ஓ, அப்படியா? நாங்கள் மட்டும் என்ன அப்படிதானே செய்கிறோம்? பூமாலை போடுகிறோம், அர்ச்சனை செய்கிறோம், ஒருமணிநேரம்   பாட்டுப் படிக்கிறோம். நைவேத்யம் செய்கிறோம், எல்லோருக்கும் கொடுக்கிறோம். நினைக்கிறோமே! 
எப்படி?
ஒரு வீட்டில் இறைவனை வழி பாடு நடக்கிறது. ''கைகள் இரண்டும் கனகவேல் காக்க"என்ற கந்தசஷ்டி கவசம் பாடிக்கொண்டு இருக்கிறார் வீட்டுத் தலைவர். செல் பேசி ஒலிக்கிறது.
'யாருன்னு பாரம்மா'' என்கிறார். அடுத்த வரி முடியும் முன்னால் வாசல் மணி அடிக்கிறது. ''இதோ வந்துவிட்டேன்னு சொல்லு. ''  ஜெட் வேகத்தில் வழிபாடு முடிகிறது.

சில வீடுகளில் கேசட் அல்லது சி.டி.யில் பாட்டு ஒலித்துக் கொண்டு இருக்கும். வீட்டு அம்மா, சமையல் செய்துகொண்டே கூடப் பாடுவார். நடு நடுவே கட்டளைகள் பறக்கும்.
ஆயிரம் கவலைகள் மனிதனுக்கு. மனம் குவிய, இறைவனை வழிபட, யாருக்கு நேரம் இருக்கிறது!

இதெல்லாம் இந்தக் காலத்தில் தான் என்று நினைக்காதீர்கள். பட்டினத்தார் பாடலைக் கேளுங்கள்,''

''கையொன்று விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
 பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
 மொய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
 செய்கின்றபூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே''

சரிதான்! ஒருமை என்றால் என்ன என்றுதான் சொல்லுங்க.
போட்டி நடக்கிறது!
மரத்திலே இருக்கும் பொம்மைப் பட்சியை அம்பெய்து வீழ்த்த வேண்டும். குரு கேட்கிறார், 'துரியோதனா, மரத்தைப் பார், என்ன தெரிகிறது?''
கிளைகளும், இலைகளும்,காய்களும் தெரிகின்றன, என்றான் துரியோதனன்
அர்ஜுனன் சொன்னான், குருவே, எனக்கு பட்சி மட்டும்தான் தெரிகிறது.
அவனுடைய மனம், இலக்கை நோக்கி, உடல் அம்பெய்தத் தயாராக, எண்ணம் முழுவதும் குவிந்து கிடக்கிறது. அதுதான் ஒருமை.
உலகையே மறந்து  சிலவேலைகளைச் செய்கிறோம்.  பாட்டுக் கேட்கிறோம், திரைப்படம் பார்க்கிறோம்.  

இறைவனை மட்டும் இதயத்திலே நிரப்பிக்கொண்டு, உடலாலும், மனதாலும், வாக்காலும் குவிந்த மனதோடு வழிபாடு செய்வதுதான் யோகம். அவர்கள்தான் யோகிகள். அதைத்தான் வள்ளலார் 'ஒருமையுடன்' என்கிறார். "என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருள்"
என்றும், ''கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து,''என்றும் பல பாடல்களில் இந்த ஒருமை என்ற சொல்லுக்கு விளக்கமளிக்கிறார் வள்ளல். யார் வேண்டுமானாலும் கடவுளை வழிபடலாம். ஆனால் அனைவராலும் ஒருமையுடன் வழிபடமுடிவதில்லை! அவ்வாறு வழிபடுகிறவர்கள் உத்தமர்கள். உன்னால் முடியவில்லை என்றால் பரவாயில்லை. அவர்களுடன் உறவாவது வைத்துக் கொள். பூவோடு சேர்ந்த நார் போல் ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் உன்னாலும் உன் மனதைக் குவித்து வழிபட முடியும்.

உத்தமர்கள் எப்படி இருப்பர்? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார்கள்.பெருமை உடைய இறைவனின் புகழ் பேசுவர், பொய் பேசார், சாதி மதம் என்ற பேய் பிடியாதவர்களாக, அவற்றுக்கு அப்பாற்பட்டவராக, உயர்ந்த ஒழுக்கம் உடையவராக, காமம் அற்றவர்களாக, இறைவனை எப்போதும் மறவாதவர்களாக,  இருப்பார்கள். அவர்களோடு உறவு கொள்ளும் நல்ல புத்தியைக் கொடு. உன் கருணையாகிய பெருஞ் செல்வத்தைக் கொடு. நோயற்ற வாழ்வைக் கொடு.

''தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே, சண்முகத் தெய்வமணியே,''
 வேண்டும் எனக் கேட்பவர்க்கு வேண்டியதைத் தருவாய்.

வள்ளலார் போல் சென்னையைப் பெருமைப் படுத்தியவர் வேறு யாராவது இருக்கிறார்களா?

வள்ளல்பிரானின் மலரடிகளை ஒருமையுடன் நினைத்து வணங்குவோமாக.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.















1 comment:

  1. இன்று தெரிந்த ஒர் நல்ல தகவல் வள்ளல் பெருமானைப் பற்றி நன்றி

    ReplyDelete