27 Sept 2012

அம்மா, தாயே!

'மாதம்தோறும் கணவன்மார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு தொகையை இல்லத்தரசிகளுக்கு சம்பளமாகத் தர வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு யோசனையைத் தெரிவித்து இருக்கிறது.' இது செய்தி!

நல்ல யோசனை- மொத்த சம்பளமும் எங்க கைக்கே வந்தா பரவாயில்ல; முதல் மாச சம்பளத்த அம்மாக்காரி கையில கொடுக்கலாம்னா, அடுத்த மாதத்தில இருந்து பெண்டாட்டி கையில கொடுத்தா என்ன தப்பு? என்று மாமியார் எதிரிக் கட்சியிலிருந்து ஒரு மருமகப் பொண் எழுதி இருக்கு.

அடிப்படை சம்பளம், தன்பிறந்த வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததற்கான இழப்பீட்டுத் தொகை, தான் கொண்டுவந்த வெள்ளி, தங்கத்துக்கான  வட்டி, படித்ததற்கான செலவில் ஒரு சதவிகிதம், ஒரு தாயாக, மனைவியாக, சமையல் மற்றும் பிற வீட்டு நிர்வாகம் செய்வதற்கான   ஊதியம்   இதையெல்லாம்  இல்லத்தரசி   கேட்கலாம்.   என்ன   பேராசை!

சரிதான் மனைவியும் நல்ல சம்பளம் வாங்குபவராக இருந்தால் கணவன், வீட்டு வாடகை, வீட்டுச் செலவில் பாதி, இவற்றைக் கேட்டு வாங்கலாம். [கொடுத்தால்]

அட, புருஷன் கிட்ட சம்பளம் வாங்க பெண்டாட்டி என்ன வேலைக்காரியா, விபச்சாரியா?
ஒரு மனைவியாக, தாயாக இருக்க சம்பளமா? 
ஆமாங்க, மாங்கு மாங்குன்னு காத்தால இருந்து, ராத்திரி படுக்கற வரை உழைச்சாலும் என்ன லாபம்? 
ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு மூவாயிரம் ரூபாயை, மாதம்தோறும் கொடுக்க முடியுமானால் மனைவிக்கு சம்பளம் கொடுப்பதில் என்ன தப்பு? என்று கேட்கிறது ஒரு இளம் மனைவியர் கூட்டணி!

Are you a Housewife? என்ற கேள்வி சர்வ சாதாரணமாகக் கேட்கப்படுவதுதான். அது என்ன House wife, office wife? அப்பிடீன்னு இருக்கா என்ன? I am a Home maker, னு  சொன்னேன் என்றாள் செல்வி.
இது ஆங்கில மோகத்தால் வந்தது. தமிழ் மொழியைப் பாருங்கள்! வாழ்க்கைத் துணை நலம், இல்லாள், இல்லத்தரசி என்று ஒரே அடியாக பெண்களைப் பெருமைப் படுத்துகிறது.

இன்றைக்கு வாழ்க்கைத் துணை நலமாயிருப்பவர்களை விட, இல்லத்தரசிகள் தான் அதிகம். என்றைக்கு பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து நம்முடைய கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது. 

பாருங்களேன், காஷ்மீரிலிருந்து, கன்யாகுமரிவரை யார் நாட்டை ஆள்கிறார்கள்? என்னதான் ஆண்மகனானாலும் ஒரு கேலிச் சித்திரமாவது பயப்படாமல் வரைய முடியுமா? தைரியமாகப் பேச முடியுமா?

'மூன்று முடிச்சு' போட்டாலும், 'இரு கோடுகளும்' ஒன்றுக்கொன்று மதிப்பும் மரியாதையும் கொடுத்து, இணைகோடுகளாய் இருந்தால்தான் 'வாழ்க்கை', 'கல்யாணப்பரிசாக', 'அன்னை'யென்னும் 'தங்கப்பதக்கத்தைக்' கொடுத்து, வாழ்த்தும்.

 உருப்படியில்லாத யோசனைகளைத் தெரிவிக்காமல் புத்திசாலித்தனமான, ஆக்கபூர்வமான யோசனைகளை அமைச்சகங்கள் தெரிவிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

ஆ, ஒரு விண்ணப்பம்! பேசாமல் அரசாங்கமே எல்லா இல்லத்தரசிகளுக்கும் சம்பளம் கொடுத்தா என்ன? 




24 Sept 2012

இரண்டு மணி நேரம்

                                      குழந்தை ரம்யா எங்கே? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு வந்தேன், என்றேன்  பக்கத்து வீட்டு பார்வதி அம்மாவிடம்.  ஓ, உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேனா, அதைக் கொண்டுபோய் ஸ்கூல்ல சேத்தாச்சு, ஒரு வாரமாப்  போகுது என்றார்.

ரம்யாவுக்கு இரண்டு வயசுதானே ஆகுது! அதுக்குள்ள ஸ்கூலா? என்று நான் ஆச்சரியப்பட, சிரித்தார் அவர். உங்க வீட்டில சின்னக் குழந்தைகள் இல்ல, அதனால உங்களுக்குத் தெரியல! இன்னும் கொஞ்ச நாளானா பிறந்த குழந்தையையே ஸ்கூலில விட்டுவிடுவாங்க போல.

பார்வதி அம்மாவுக்கு ஒரே பையன். மருமகளும் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்கிறாள். குழந்தை பார்வதி அம்மா வளர்ப்பில். வீட்டையும் நிர்வாகம் செய்துகொண்டு, குழந்தையையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று புலம்பியதால் வந்த வினை இது.

 கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் உங்களுக்கு, மத்யானம் வரைதானே ஸ்கூல்?

அத ஏன் கேட்கறீங்க, காலைல எட்டரையில இருந்து, பத்தரை, பதினொன்னில இருந்து ஒரு மணி அப்பிடின்னு இரண்டு பகுதி இருக்கு. அவ்வளவுதான். எட்டரை மணின்னா யாராச்சும் கொண்டு விடுவாங்க! நாம திரும்ப கூட்டியாந்தா போதும். பதினொன்னுனா போகவர  நாமதான் ததிகிணதோம் போடணும்.
அப்பிடியா, அட ராமா! ஆமாம் எவ்வளவு பணம் கட்டறீங்க?
இருங்க, உள்ள போய் ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வரேன். மயக்கம் போட்டு கீழே விழுந்திட்டீங்கன்னா நான் ஓட வேண்டாம் என்று சொல்லி ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்தார் பார்வதி அம்மா.

அப்பிடியொன்னும்  பெரிசா இல்லீங்க, மாதம் மூவாயிரம் ரூபாய்தான். வருடம் முழுவதற்கும் முப்பத்தாறாயிரம்  ரூபாயைக் கட்டினால்தான்  சேர்த்துக்குவாங்களாம். இல்லைன்னா சீட்டு கிடையாது நேத்து பாருங்க, முடியலன்னு ரம்யாவ வீட்டிலயே வைச்சுக்கிட்டேன். மருமக ஒரே கத்தல்.
இவ்வளவு  பணத்தைக் கட்டி அனுப்பலன்னா  என்ன அர்த்தம்னு.

ரெண்டு மணி நேரத்துக்கு ஆயிரம்னா இருவத்துரெண்டு மணி நேரத்துக்கு எவ்வளவு? ஒன்றாம் வகுப்பிலிருந்து, முதுகலை பட்டப்படிப்புவரை கூட மூவாயிரம் செலவு செய்யவில்லையே என்று எண்ணிக்கொண்டே வீட்டுக்குப் போனேன்.

இரண்டு வயதுக் குழந்தையின் மழலையைக் கேட்டு, மகிழ்ந்து, விளையாடி, முத்தமிட்டுக் கொஞ்சி, அணைத்து மகிழாமல் தாய்க் குலங்கள் செல்வம் தேடுகிறார்கள் என்று வருந்தும் அதே வேளையில், சிறு வயதிலேயே பந்த பாசச் சுழலில் சிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?