ஒன்றென்றனர், இரண்டென்றனர், மூன்றென்றனர்!
ஆணென்றனர், பெண்ணென்றனர், அலியென்றனர்!
ஆனைமுகத்தான் பானைவயிற்றான் எலிமீதென்றனர்,
ஆறுமுகத்தான் அழகன்முருகன் மயில்மீதென்றனர்,
பாம்பணையில், பாற்கடலில் பள்ளியென்றனர்!
கயிலை வாசன், ஆற்றுச் சடையான், அரவணிந்தான்,
சிவமே சிவமே சிவமே சிகரம் என்றனர்.
சபரிவாசன் புலிப்பால் கொணர்ந்தான்;
கருடன் மீது கணத்தில் வருவான்,
துச்சாதனர்களைத் துரத்தி அடிப்பான்,
எங்கும் உள்ளான் எவரும் அறியான்
உனக்குள் உள்ளான் அறிவாய் என்றனர்.
தேடினேன், தேடினேன் தேடிக் கொண்டே
இருகின்றேன்.
புயல் அடித்தது, பூகம்பம் வந்தது, சுனாமி
அரக்கனடித்துப் போட்டது. சுழற்றிச் சுழற்றி
சுழற்காற்று, சுருட்டி அடித்தது. கொட்டும்
மழையோ அடியோடு வாழ்வை சிதைத்துப்
போட்டது! எங்கும் இருப்பவன் எங்கே எங்கே
தேடினேன் தேடினேன், தேடிக் கொண்டே இருக்கின்றேன்.
ஓ, மானுடனோ, மதியான் பிறரை
பயங்கரவாதியாய், துப்பாக்கி கையில்
தூக்கிவிட்டான், துணையாய் குண்டுகள்
வீசுகின்றான். சொந்த சகோதரர்கள்
துன்பத்தைக் கண்டு இன்பம் பெரிதும்
காண்கின்றான்.
அடித்து நொறுக்குகிறான், அடிமையாய்ப்
பூட்டி வைக்கின்றான்.
சிறைச் சாலையிலும், போர் என்ற போர்வையின்
மறைவினிலும் செய்யும் கொடுமைதனை
எழுதக் கூசுதையா, இதயம் வாடுதையா.
நோயும், வறுமையும், பசிப்பிணியும்
நோகச் செய்யும் துன்பங்களும்
எண்ணிலடங்காவே அடச் சொல்லிமுடியாதே!
எங்கும் இருப்பவன் எங்கே எங்கே?
தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருக்கின்றேன்.
No comments:
Post a Comment