14 Sep 2016

உண்ணாவிரதமும் காவிரியும்

உண்ணாவிரதமும் காவிரியும்

 1993 ஆம் ஆண்டு, ஜூலை மாதம்.
இரு திருமணங்கள் நிறைவாய் நடந்த திருப்தியில் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நேரில்சென்று எங்கள் நன்றியைச்சொல்லி வணங்கப் புறப்பட்டோம். வழக்கம்போல் மதுரையில் இறங்கி பஸ் பயணம்.
மதுரையிலிருந்து தூத்துக்குடியின் உப்பளங்களைப் பார்த்துக் கொண்டேசெல்லும் பயணம் இனிமையானது. திருச்செந்தூரை நெருங்கநெருங்க மருக்கொழுந்தின் நறுமணம் வீசும், கடற்கரைக்காற்று நாசியை வருடும். சண்முகனின் திருவடிகளை தியானித்து இருக்கும் மனம்.

கடற்கரைக்கோயில் திருச்செந்தூர் சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.எப்படி அவ்வளவு அழகான கோயிலை கடற்கரையில் கட்டினார்கள் என்பது ஆச்சர்யத்திற்குரியது.  சூரனை வென்ற முருகப்பெருமான் கையில் தாமரை மலரை ஏந்தி சிவபூசை செய்யும் திருக்கோலம்.  அபிஷேக ஆராதனைகள் செய்து, கண்குளிர தரிசனம் செய்தோம்.பன்னீர் இலையில் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டு  விடுதிக்கு திரும்பினோம்.

பெங்களூரில் வயதான மாமியைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்ததால்
அன்றே மாலையில் திரும்ப முடிவுசெய்திருந்தோம்
விடுதியை ஒப்படைத்து பேருந்து நிலையம் சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எந்த பஸ்ஸும் ஓடாது! தமிழ்நாட்டில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். உணவகங்களை மூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டைத்தவிர பேருந்துகள் எல்லாவற்றையும் பணிமனைக்கு கொண்டு போய் விட்டார்கள்.

பேருந்து நிலையத்தில் என்ன செய்வது என்று திகைத்துப் போய் சுற்றிவந்த எங்களுடைய நிலையைப்பார்த்த பேருந்து நிர்வாகி, " சார், மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து பெங்களூருக்கு ஒரு பேருந்து செல்கிறது. எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்றாலும் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால், உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன் என்றார். சரிதான், துணிந்து போய்விடுவோம் என முடிவு செய்தோம்.

பேருந்தில் கண்டக்டர் தவிர நாங்கள் இருவர்தான் பயணிகள். மத்தியில் உள்ள சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள். ஜன்னலை மூடிவிடுங்கள் என்றார் ஓட்டுனர்.
பேருந்து எங்கும் நிற்காமல் சேலம்டவுன் பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் ஓய்வுக்காக, ஐந்து நிமிடங்கள் நின்றது.

சுமார் பன்னிரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் பெங்களூரை அடைந்தோம். எப்படியோ முருகப் பெருமான் காலியான ஒரு பேருந்தை எங்களுக்காக அனுப்பினான் என்று, அடுத்தவருடம் கண்டிப்பாக வந்து உன்னை தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.

இந்தக் காவேரி நதித்தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைதான் எத்தனை நினைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!!


No comments:

Post a Comment