2 Apr 2016

குழம்புக்கூழ்

அவசரத்தில் கை கொடுக்கும் குழம்புக் கூழ், வேலைக்குச் செல்லும், தனியே சமையல் செய்து சாப்பிடும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
தேவையான பொருட்கள்:
1.சாம்பார் பொடி(நான் எம்.டி.ஆர்)பொடி பயன்படுத்துகிறேன்
2.ஓடு,கொட்டை இல்லாத சுத்தப்படுத்திய புளி
3.உப்பு
4.தாளிக்க எண்ணை
5.கடுகு
6.வெந்தயம்
7.பெருங்காயக்கட்டி சிறிது
8.மஞ்சள் தூள்

15 நாட்களுக்கு வேண்டிய கூழ் செய்ய எப்படி அளப்பது? பிரமாதமாக ஒன்றும் இல்லை!
தினப்படி குழம்பு செய்ய எவ்வளவு புளி எடுப்பீர்கள்? அதே போல் 15 உருண்டை புளி! அதேபோல பொடி, உப்பு!
அடுத்ததாக இந்தப் புளியை ஒருமுறை தண்ணீரில் கழுவி நன்றாக வடித்துவிடுங்கள்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் ஒரு விசிலுக்கு வைத்து எடுங்கள்! நன்கு ஆற விடுங்கள்.
மிக்சியில் வேகவைத்து ஆறிய புளியை மிருதுவாக ஆகும் வரை அரையுங்கள்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து
கடைசியில் சாம்பார்த்தூள் சேர்க்கவும். வாசனை நாசிக்கு வரும் போது அரைத்து வைத்துள்ள புளிக் கூழை சேர்த்து நன்றாகக் கிளறி, உப்பு சேர்க்கவும். ஆறியதும் பாட்டிலில்போட்டு வைக்கவும்.
குக்கரில் பருப்பும், காயும் சேர்த்து வேக வைத்து அதில் இந்தக் கூழை தேவையான அளவு சேர்த்தால் குழம்பு ரெடி.
என்னம்மா இன்னைக்கு ஒரே உப்பு, புளித்து வழியுது, காரம் தூக்குது என்று யாரும் சொல்ல முடியாது! அதிகப்படியாக,

வற்றல் வறுத்து புளிக்கூழ் சேர்த்தால் வற்றல் குழம்பு.
கொஞ்சம் தனியா, தேங்காய் அரைத்துச் சேர்த்தால் சாம்பார்.
வெண்டை, கத்தரி வதக்கிஒரு மூடித் தேங்காய் அரைத்துச்சேர்த்து கூழையும் சேர்த்தால்  சரவணபவன் ஸ்பெஷல்.ட்
நிலக்கடலையை வறுத்துக் கொண்டு கூழோடு சேர்த்து, சிறிது தனியாப்பொடியோடு கலந்தால் புளியோதரை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வேளைக்குத் தேவையான அளவு சமைத்துக் கொள்ளலாம்.

நான் என் கணவருடன் இரண்டு ஆண்டு காலம் அரவிந்தர் தியானமையத்தில் நடந்த காலை நேர வகுப்புகளுக்கு சென்றுவந்தேன். 9.30க்கு வேன் வந்துவிடும். பருப்பும், காயும் குக்கரில் வைத்துச் சென்று விடுவேன். திரும்ப வந்ததும் ஒரு மணிக்கு சுடச் சுட கூழ் சேர்த்து குழம்பு.

ஒரு வாரத்துக்கு செய்து பாருங்கள்!
நீங்களே தயாரிக்கும் சாம்பார் பொடியையும் உபயோகிக்கலாம்.
பெரும்பாலும் சமையல் செய்வதில் அளவுதான் காலை வாரும்.
ஒருநாள் தயாரிப்பின் அளவு, எத்தனை மடங்கு வேண்டுமானாலும் அதிகரித்துச் செய்து கொள்ளலாம்.

அதிக நாள் தயாரிப்பாயின் எண்ணை அளவு கூடுதல் வேண்டும். தக்காளி, வெங்காயம் சேர்த்து  மணக்க மணக்க திடீர் சாம்பார் ! சுவைத்து மகிழுங்கள்!

No comments:

Post a Comment