6 Apr 2014

சும்மா இருங்க?

பள்ளிக்கூடம்  என்றாலே மாணவர்களுக்கு நினைவு வருவது, 'சத்தம் போடாதீங்க! அமைதி! வாய்மேல விரல் வையுங்க,' என்று ஆசிரியர் அலறுவதுதான். மாணவர்கள் வாயிலோ துள்ளிக் கீழே விழத் தவிக்கும் வார்த்தைகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு சும்மா இருக்கிறார்கள். ஆசிரியர் முகத்தில் நட்பான ஒரு புன்னகை போதும், மீண்டும் நீர் வீழ்ச்சியாய் சளசளவென்று பேச்சு.
''சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே" என்கிறது கந்தரனுபூதி. மனிதனால சும்மா இருக்க முடியுமா? ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம்? எவ்வளவு படிச்சாலும், எழுதினாலும், பாட்டுக் கேட்டாலும், இறைவனை பிரார்த்தித்தாலும் கடைசியில் மனிதனுக்கு யாரிடமாவது பேசாமலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.
சமீபத்தில் ஒரு 'ஆஸ்கார் அவார்ட்' படம், சிறந்த நடிப்புக்குக் கொடுக்கப்பட்டது. கதாநாயகி பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். அவளுடன் பேச யாருமில்லை. எல்லோரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். மிகச்சிறப்பாக நடித்திருக்கும் 'நீல மல்லிகை' திரைப்பட கதாநாயகிக்குதான் சிறந்த நடிக்கைக்கான பரிசு.
எங்கள் வீட்டு ஜன்னலில் சதா புறாக்கள் தொந்தரவு. நானும் சில சமயங்களில் அவற்றுடன் பேசுவேன்! எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா? அதுதான் புறாவிடம் சொல்கிறேன் என்று சிரிப்பேன். ஆம் தனக்குத் தானே பேசிக் கொள்வது குறித்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேச்சு!
 எல்லாக் கடமைகளும் முடிந்து, பிள்ளைகள் கூட இல்லாமல்'தனிக்குடித்தனம்' இருந்தால் கேட்கவே வேண்டாம்! டெலிபோன் மணி அடித்தால் நிறையப் பேச ஆள் கிடைத்தது என்று சந்தோஷப்படும். நண்பர்களை வழியில் பார்த்தால் ஆனந்தப்படும். உறவுகள் வரும்படி அழைத்தால் உற்சாகப்படும்.
பூங்காவில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பவர்களைக் கண்டு பொறாமைப்படும்!
பேசுவது என்பது மூச்சுவிடுவது போல! இளமையில்  வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும்! முதுமையில் பேச ஏங்கும். உறவுகளைத் தேடும்!

 யாரிடமும் பேசாமல் இருப்பவர்களுக்கு உம்மணாமூஞ்சி என்று பெயர்! சிலர்  வாங்க என்று ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்வார்கள். 'வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் போல,' பேசாமல் நம்மையும் பயமுறுத்தி எழுந்து போகவைத்துவிடுவார்கள்!
ஒரு சிலர் கேள்வியும் நானே பதிலும் நானே என்று திறந்த வாயை மூட மாட்டார்கள்.  சமீபத்தில் தெரிந்த சினேகிதியிடம் மாட்டிக் கொண்டேன். ரத்த அழுத்தம் இருக்கா? சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார்! இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தால் மாயமாய் மறைந்து போகலாம்னு தோணும்.
கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில் வீடு எப்போதும் கலகலப்பாய் இருக்கும். தனித் தீவுகளாகிவிட்ட இன்றைய குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது அரிதாகிவிட்டது.
என் சகோதரர் மனைவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போயிருந்தேன். வயல் வெளிகளுக்கு
நடுவே ஊரிலிருந்து சற்றே தள்ளி, அமைதியின் மடியில், பறவைகளின் இசைத் தாலாட்டில், தென்றல்
கிசுகிசுக்கும்  சொல்லற்ற செய்திகளின் மறைவில் குடியிருப்புகள்! சவுகரியங்களின் தேவையை உணர்ந்து பக்காவாகக் கட்டப்பட்ட விடுதிகள்.
எல்லோராலும் கைவிடப்பட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு - விட்டு விடுதலையாகித் தன்னந்தனியே எல்லோருடனும்  வாழும்  வாழ்க்கை! வேளாவேளைக்கு  சாப்பாடு! படிக்க ஆங்கில, தமிழ்  பத்திரிகைகள், மாத இதழ்கள், நாவல்கள் அடங்கிய நூலகம்!
பல்லாங்குழியிலிருந்து  விளையாட ஓர் அறை, நடை பழக  மைதானம்! ஆண்டவனைத் துதிக்கவோர் கோயில்! சகல வசதிகளும் செய்து கொடுத்து எல்லோருக்கும் உறவாக ஒற்றை மனிதர்!
ஒவ்வொருவரிடமும் ஒரு கதை. சம வயதுடையவருடன்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓ நம்மைப் போல நிறையபேர் இருக்கிறார்கள் என்று ஒரு சமாதானம். இதுதான் நமக்கு என்று ஒரு ஆறுதல்! சில நாட்கள் இருந்தால் தனிமை பழகிவிடும்.
பேச்சுத் துணைக்கு நிறைய பேர். பேச ஆளில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வாழ்நாளைக் கழிப்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்பிரசாதம்.
என்னதான் சொல்லுங்கள் கடைசியில் மனிதனுடைய வாழ்வு அவனுள் தோன்றி அவனுள் தனியே மறைந்துவிடுகிறது. தனியே பிறக்கும் மனிதன் தனித்தே வாழ்கிறான். மறைகிறான். அதுதான் உண்மை.

3 comments:

  1. A very heart felt thought put into words.
    I have seen many elderly couple living in retirement villages in Australia as well. They have all the activities and they enjoy it mixing with others too.

    I enjoyed reading your article.

    Kind regards
    Saba

    PS: Sometimes I have difficulty converting to Tamil fonts in my computer hence writing in English

    ReplyDelete
    Replies
    1. Thank you very much. These are the feelings of old people,some are my friends. Thanks to technology, cell phones extends a helping hand.Indian old age homes are also good. Again thank you.

      Delete
  2. Very true. Loneliness is dangerous and needs to be handled carefully. I get time in trying to understand what and who am I and what am i doing here. i can see the trails i have left and where i am. i get time to contemplate and look back.
    Nice article.

    ReplyDelete