23 Nov 2013

இன்றைக்கு - 23.11. 13

இன்றைக்கு எங்கும் போக வேண்டாம் என்று சோம்பேறியாய் உட்கார்ந்த போது  அலைபேசி அழைப்பு! கொஞ்சம் வந்து போங்கள் என்றது குரல்..
கார் சாரதி இல்லை, ஆகவே ஆட்டோ பயணம்தான்! ராகவேந்திரா மடம் சிக்னலில் செம போக்குவரத்து நெரிசல்! சுமார் ஆறு பேருந்துகள், லாரி, ஆட்டோ, கார்களின் அணிவகுப்பு, இடையே புகுந்து தைரியமாக நிற்கும் இருசக்கர வாகனங்கள்!  சாலையின் இரு புறமும் மருத்துவமனை!
இடது புற நடைபாதையில் இத்தனை சப்தங்களுக்கும் இடையே கண்பார்வையற்ற ஓர் இளைஞன்!
கையில் அவனுடைய நண்பனாய் வழிகாட்டியாய் இருக்கக்கூடிய, நான்காய் மடித்துக் கையில் வைத்துக் கொள்ளும் அமைப்புடைய அலுமினியக் கோல்! தனக்குத் தானே ஏதோ பேசிக் கொள்கிறான் அவ்விளைஞன். அவன் என்ன சொல்லிக் கொள்கிறான்? எப்படி சாலையைக் கடப்பான், அவன் போக வேண்டிய இடம் எதுவாயிருக்கும், என்ற பலத்த சிந்தனையில் கண்களை மூடிக் கொண்டேன்.
பார்வையற்ற அவனைப் பற்றிய சிந்தனையில் என் உள்ளம் நெகிழ்ந்தது. உடனே பார்வையிழந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியின் வாழ்வு நினைவுக்கு வந்தது.  ஸ்ரீ. ரமணமகரிஷி பார்வை இழந்தோர் தொண்டு நிலையம் ஜே. பி. நகரில் உள்ளது. அங்கு இருமுறை சென்றுள்ளேன். இனி பார்வையை மீட்கவே முடியாது என்ற நிலையில் அதைப் பற்றி எதுவும் அறியாத அந்தக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க மனம் வலித்தது. இது என்ன விளையாட்டோ ஆண்டவனுக்கு?

திரும்பி வரும்போது இந்திரா காந்தி சர்க்கிள், 'சாரக்கி' மெயின் சாலையில் போக்கு வரத்து டக்கென்று ஆமை வேகத்தில்! எல்லோருடைய கண்களும் திரும்புகிற பக்கத்துச் சாலையில்!
ஸ்கூட்டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண், கல்லூரி மாணவி போல! அவளைக் காதில் கடுக்கன் அணிந்த நடுத்தர வயது வாலிபன் தலையில் அடிக்கிறான். அதுதான் 'டிராபிக் ஜாம்'.எல்லோருக்கும் இலவச நிஜமான சினிமா! என்னுடைய ஆட்டோ சரியான அந்த சந்திப்பில் ஒரு கணம்  நின்ற   போது go,go-என்று சொல்லிக் கொண்டே பைக்கில் பறந்துவிட்டான். அந்தப் பெண் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு!  ஆட்டோவிலிருந்து இறங்க இருந்த என்னை ஆட்டோ டிரைவர் ''பேடா அம்மா அவரே" என்று சொல்லிக் கொண்டே வேகமாக வண்டியை விட்டார். என் மனம் பதறித் துடித்தது. 'யாராவது உதவி செய்வாங்க, உங்களை ஏதாச்சும் செஞ்சா என்னம்மா செய்யறது, கடவுள் காப்பாத்துவார்' என்றார் ஆட்டோக்காரர். கண்மூடித் திறக்கும் நேரத்தில், இன்னது நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத பொழுதில்..... இன்னும் என்னுடைய பதற்றம் நீங்கவில்லை. 

கண்ணற்ற ஒருவன்! கண்களிருந்தும் சக ஜீவனை அடித்துத் துன்புறுத்தி ஆனந்தம் காணும் கயவன்! கண்டும் சும்மா இருக்கும் கண்ணிருக்கும் குருடர்கள் பலர். 
என்ன வேடிக்கை?!................. 











19 Nov 2013

ஒட்டும் பொட்டு - ஒட்டாத உறவு!

சமீபத்தில் ஒரு வலைப்பதிவு, பெண்கள் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளும் விரதம் பற்றியதைப் படிக்க நேர்ந்தது. பின்தூங்கி முன் எழுந்து, கணவன் எழுந்தவுடன் தாமதம் செய்யாமல் டீயை நீட்டி, தாசியாய், தாயாய்,வேலைக்காரியாய், மதிமந்திரியாய், வாழும் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பரிசு என்ன? நல்ல மனைவி, பதிவிரதை, என்ற பட்டங்கள்! ஆனாலும் சோதனைகள் என்னவோ எப்போதும்பெண்ணுக்கு!
எண்பது வயது! அறுபதாவது திருமணநாளைக் கொண்டாடிய ஒரு தாய் கணவனை இழக்க நேர்கிறது! அவள் கதி என்ன தெரியுமா? ஒரு நிமிடம்………..

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எத்தனைஆனந்தம்! வித விதமாய் அலங்காரம் செய்து, ஆபரணங்கள் பூட்டி, கண்களுக்கு மை தீட்டி, திலகம் இட்டு, மருதோன்றியால் அழகு செய்து, தலை நிறைய பூ வைத்து ஒரு தெய்வ சந்நிதானத்தை உணர்ந்து ஆனந்தமடையும்  பெற்றோர்கள்! ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே,’ எனக் கொஞ்சுகிறான், கொண்டாடுகிறான் எங்கள் பாரதி. ஓடி வருகையிலே உள்ளம் குளிர்கிறது, மேனி சிலிர்க்கிறது, உன்மத்தமாகிறது! சொல்லும் மழலையில் துன்பங்கள் தீரும், முல்லைச் சிரிப்பைக் கண்டால் மூர்க்க குணம் ஓடும்! ஒரு குழந்தையின் அன்புக்கு நிகராக அன்பு செலுத்தும் தெய்வம் கூட ஏதுமில்லையாம்! ‘மார்பில் அணிவதற்கே உன்னைப் போல் வைரமணிகளுண்டோ? சீர் பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல் செல்வம் பிறிதுமுண்டோ?’ என்று தன் கவிதை நெஞ்சால் உருகி உருகிப் பாடுகிறான்.

அந்தப் பெண்ணின் வாழ்க்கைதான் எத்தகையது?

திருமணம் ஆகிறது பெண்ணுக்கு!  பிறந்த வீட்டின் அன்புப் பிணைப்பிலிருந்து வெளிவந்து தன் குடும்பம், குழந்தைகள் எனப் புதிய வாழ்வின் ஆலமரமாய் ஆகிறாள். முதுமை வருகிறது. வாழ்க்கைத் துணையை இழந்த ஆண்மகனின் வாழ்வில் மாற்றங்கள் இல்லை.  ஆனால் ஒரு பெண்ணை என்னமாய்க் கஷ்டப்படுத்துகிறார்கள்!

சிறு குழந்தைப் பருவத்திலிருந்து நெற்றியைஅலங்கரிக்கும் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாதாம். இன்றைக்கு  சுத்தமான மஞ்சளால் செய்யப்படுகிற குங்குமம் கிடைப்பதில்லை. அவ்வாறே கிடைத்தாலும் வேர்வையில் கரைந்துவிடும் என யாரும் உபயோகிப்பதும் இல்லை.!  பெரும்பாலும் மைதாமாவினால் செய்கிற குங்குமம்தான்!

ஆனால் எல்லோரும் வைத்துக் கொள்வதோ ஒட்டும் பொட்டு! இந்த ஒட்டுகிற பொட்டைக் கண்டு பிடித்து, ஒரு யுகப் புரட்சியை ஏற்படுத்திய அந்த மகா மேதாவியை வணங்குகிறேன். சமுதாய ஏற்றத் தாழ்வை நீக்கி அனைவரும் ஒன்றே எனப் பறையறைவிக்கும் ஒட்டுகிற பொட்டுக்கு ஜே!  ஒட்டுகிற பொட்டு சர்வ சுமங்கலித்வம் வாய்ந்தது தெரியுமா?

குளியலறைப் பைப்பே,  சுவரே,  கதவே, அலங்காரக் கண்ணாடியே, அண்ணியின் கைப்பையே எப்போதிருந்து நீங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறீர்கள்? கலர்கலராய், கோடாய், பாம்பாய், முக்கோண, நாற்கோணமாய், வட்டமாய் எல்லாஇடங்களையும் அலங்கரிக்கிறது ஒட்டும் பொட்டு

தாலி புனிதமானது! மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் சேர்த்து அணிந்து கொள்வது நம் நாட்டுப் பண்பாடு. பார்த்தவுடனே இந்தப் பெண் திருமணமானவள் என்பதை அறிவிக்கதான்அவ்வாறு ஏற்பட்டது. காலம் மாறிவிட்டது! பலநாடுகளிலும் வசிக்கும் நம் நாட்டுப் பெண்கள் அந்த அந்த நாட்டுக் கலாசாரத்திற்கு தகுந்தாற்போல் மாறதான் வேண்டியுள்ளது.நம் நாட்டிலேயே மஞ்சள் கயிறு போய் தங்கச்சங்கிலிக்கு மாறிவிட்டோம். இன்னும் மஞ்சள் கயிறு மட்டுமே ஆபரணமாய், அதன் புனிதத்தைக் காத்து கணவனுக்காகவே  வாழும், எளிய  பெண் தெய்வங்களுக்கு என் வந்தனங்கள்.

இன்றைய இளந்தலைமுறையினரின் தாலிச்சங்கிலி பாத் ரூம் பைப்பில் தொங்கும்! தலையணைக்கடியில் தூங்கும். வெளியெ நடைப் பயிற்ச்சி, நீச்சல், யோகா வகுப்புகளுக்கு போகையில் பெட்டிக்குள்ளே அடைக்கலம் புகும். பணத்தைத் தங்கமாக்கி கழுத்திலே தொங்கவிட்டோம்! பந்தத்தின் சின்னம்தான்! ஆனால் பவித்திரத்தைவிட பணமதிப்பு அதிகமில்லையா?அன்பெனும் பந்தம் அதிகச் சிறந்ததன்றோ? அதை யாராவது திருடமுடியுமா?

திருமணம் என்பது இரு மனங்களின் உடன்பாடுகளில்தான் உள்ளது என்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். அழுக்காகிப் போகும்  கயிற்றிலும், வாடிப்போய் தூக்கி எறிகிற பூவிலும், தினம் தினம் அழித்து மீண்டும் வைத்துக்கொள்கிற பொட்டிலும் தான் திருமணபந்தம் உள்ளதா? ஒரு தங்கச் செயினுக்குள்ளே ஒரு கணவனுடைய உயிர் தொங்குகிறது என்று சொல்லாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். உயிருள்ள கணவனை இழந்த பெண்ணிடம் போய் உயிரற்ற ஒரு ஆபரணத்தைப் போட்டுக் கொள்ளாதே என்று சொல்வது அபத்தமில்லையா?

இன்று பெண்கள் பலரும் நீண்ட தலை முடியை விரும்புவதில்லை. பூவும் அணிவதில்லை.
காலணிகள் (ஸாண்டல், ஷூ) அணியும் போது இடைஞ்சலாயிருக்கிறது என்று மெட்டி அணிவதில்லை.சினிமா கதாநாயகிகள்தான் அவ்வாறு சித்தரிக்கப் படுகிறார்கள். அப்படியானால்?!

என் கணவரோடு வசித்த எங்கள் சொந்த இல்லம்!  பதினைந்து ஆண்டுகள் பக்கத்து அபார்ட்மெண்டில் வசித்தவர்  அந்த அம்மாள். ஒருநாள் மகள் வீட்டிலிருந்து என் வீட்டை சுத்தம் செய்யச் சென்றேன்.  பத்தடி முன்னால் வந்தவர் என்னைப் பார்த்தவுடன் டக்கென்று திரும்பி விடுவிடுவென்று போனார். மற்றொரு சினேகிதி சொன்னார், ‘அவங்க ஏதோ நல்ல விசேஷத்துக்காக போகப் புறப்பட்டாங்க. நீங்க எதிரில் வந்ததும் திரும்பிட்டாங்க.’ நான் சிரித்துக் கொண்டே கேட்டேன், ‘ஏன் எனக்கென்ன? நல்லாதானே இருக்கிறேன்’ என்றேன்.

பல ஆண்டுகளாக சேவை செய்து வந்த தியானமையம் சென்றிருந்தேன். உங்களுக்கு கடிதம் அனுப்பும் போது, ”மிஸ், மிஸஸ், ஸ்ரீமதி,” என்ற அடையாள வார்த்தை சேர்க்க வேண்டுமா தெரியவில்லையே என்று அலுவலகப் பணியாளர் கேட்டார். அவருக்குத்தெரியவில்லை! கண்டிப்பாக ‘திருமதி’ என்று போடுங்கள், ஒரு முறை திருமணமானவர் எப்போதும் திருமணமானவர்தான் என்றேன்.

நான் என்னையே கேட்டுக் கொண்டேன்? நான் யார்? பிறந்ததில் இருந்து இன்று வரை நான், நான் யாரென்ற புரிதலை உடைய நான், நானாக,  எதையும் எவரிடமும் எதிர்பார்க்காமல் அன்பும், கருணையும், பரிவும் பாசமும், உடையவளாய்தானே இருக்கிறேன்? என் துணைவரை இழந்தேன் என்பது உண்மைதான். அது என் ஆன்மாவின் அந்தரங்கத் துயர்! அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும்?

சிவபெருமானை ”அர்த்தநாரீஸ்வரன், உமையொரு பாகன், பெண்ணோடு ஆணாகிய பெம்மான், தையலோர் பால்மகிழ்ந்தோங்கிய சீரான்,” என்றெல்லாம் பாடிப் பணிகிறோம். அர்த்த நாரீஸ்வரர் என்றால் என்ன பொருள்? வலது பாகம் ஆண், இடது பாகம் பெண்!?  அப்படியானால் இரண்டும் தனித்தனியா? ஒன்றா, இரண்டா, இரண்டில் ஒன்றா, ஒன்றில் இரண்டா?

சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்

ஒரு திருமணத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம்? இருவர் ஒருவராக உடலால், உள்ளத்தால், உயிரால், அறிவால், ஒன்றுபடுவதுதான் திருமணபந்தம். இதில் ஒன்றின் உயிர் போனாலும் அதன் சுவடுகள், அழிவதில்லை. ஒன்று மற்றொன்றில் உயிர்ப்பித்திருக்கிறது. இருவரில் ஒருவர் உடல் நீத்தாலும் மற்றவரின் இதயத்தில் அவர் மரணமடையும் மட்டிலும் உயிர் வாழ்கிறார்! இறந்தவர்க்கு  மரணமில்லாப் பெரு வாழ்வு!ஒரு தாலியிலும், பூவிலும், பொட்டிலும் ஒரு புருஷனின் உயிர் இருக்கிறது என்ற மகத்தான (மடத்தனமான) உண்மை தெரிந்திருந்தால் அன்பு நிறைந்த மனைவி அவற்றை அவன் உயிரோடு இருக்கும் போதே தியாகம் செய்திருப்பாள் இல்லையா? சிந்தியுங்கள்!

(உங்கள் மேலான கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள்)