22 Mar 2013

ஆசையில் ஓர் கடிதம்



22 March 2013
Bangalore - 85



அன்புள்ள என் வலைப்பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்.
                                                                                                                

 நலம் நலமறிய ஆவல். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் ஆச்சுங்க கடிதம் எழுதி. பழக்கம் விட்டுப் போகக் கூடாதுன்னு, யாருக்கு எழுதலாம்னு பாத்தா, ம் -  யோசிச்சு கொழப்பம் ஆயிடிச்சு. இந்தக் காலத்திலே யாரும் கடிதம் எழுதுவதும் இல்லை. அப்பிடியே யாராவது மெனக்கெட்டு எழுதினாலும் படிக்கிற பொறுமை துளிக்கூட இல்லை. அலைபேசியில் பேசினா யாரானாலும் குதிரை ஓட்டற மாதிரி ''ஹை''ன்னு ஒரு அசட்டுச் சிரிப்பு, கேட்டதுக்காக  ''Fine'' தேங்க் யூ!

என்னப்பா எழுதின லெட்டர படிச்சியான்னு கேட்டா நிதானமா ரசிச்சுப் படிக்க பத்திரமா வெச்சுருக்கேன்னு பதில் வருது.
அந்தக் காலத்தில் என்னுடைய பாட்டிக்கு ஆஸ்தான லெட்டர் ரைட்டராக, ஒரு போஸ்ட் கார்ட் எழுத நாலணா சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன்! என் தந்தையார் அரசாங்கப் பணியில்  இருந்து, அடிக்கடி இடம் பெயர வேண்டி இருந்ததால் தோழிகளுடன் கடிதப்போக்குவரத்து நிறைய உண்டு. ஹாஸ்டலில் தங்கி படிக்கும்போது, வாரம் ஒரு கடிதம் எழுதாவிட்டால் அப்பா கோபித்துக் கொள்வார். இப்படியாக என் கடிதம் எழுதும்  திறமை வளர்ந்து வந்தது.

கல்லூரி நாட்கள் கலகலப்பாக போய்க் கொண்டிருந்த வேளையில் என் மூத்த அண்ணனுக்கு கல்யாணம். எனக்கு நான்கு சித்தப்பாக்கள், ஒரு அத்தை. என் தந்தையார்தான் மூத்தவர். கல்யாணம் முடிந்து ஊருக்குப் போய் சேர்ந்தவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கு தபால்காரர் வந்துவிடுவார்.

அன்றும் வந்தார். பலகடிதங்களில் ஒன்று என் பெயருக்கு. அவசரமாக அந்தக் கடிதத்தை எகனாமிக்ஸ் புத்தகத்துக்குள் நுழைத்துக் கொண்டு, மற்ற கடிதங்களை அம்மாவிடம்  கொடுத்து விட்டு கல்லூரிக்குப் போனேன். அன்று எங்கள் வகுப்பு கலகலத்து, பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே சிரிப்பலைகள். என்ன, என் அத்தைமகன் எழுதிய  காதல் கடிதம் தோழிகள் கையில்! ஆளாளுக்கு,''அத்தான் என் அத்தான், அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா,'' என்றெல்லாம் அவரவர் அத்தைபிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! பெரிசா ஒன்னும் இல்லை அந்தக் கடிதத்தில்! ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, எனக்கு உன்னைப் பிடிக்கும், உனக்கு? என்ற கேள்விக்குறிதான்!

கடிதம் அம்மாவழியாக அப்பாவுக்குப் போய், முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்த வரையில் அது ஒரு கடிதம்.'' டிமாண்ட், சப்ளை என்று ஒன்றும் புரியாத பொருளாதாரம், சரித்திரம், அரசியல்'' என மூன்று பாடங்களுடன் அதுவும் ஆங்கிலத்தில் (பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்) மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நேரம் அது. கல்யாணத்துக்கு பயந்து, சண்டை போட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். கடிதம் எழுத நேரமில்லை. காதல் பற்றி நான் சிந்திக்கவும் இல்லை.

 என் தந்தை மிகச் சிறந்த ஆங்கிலப்புலமை பெற்றவர். கணவர் தமிழிலும் சொல்வன்மை உடையவர். இருவரும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் சுவாரஸ்யமானவை. என் தந்தை என் திருமணம் ஆனதிலிருந்து இறைவனடி சேர்வதற்கு முதல் நாள் எழுதிய கடிதம் வரை சுமார் 25 கடிதங்கள் இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் தந்தையார் என்னிடம் வைத்திருந்த அன்பு, பாசம், அவருடைய அறிவுரைகள், ஆதங்கங்கள், கவலைகள், எனப் பல செய்திகளைக் கொண்ட அக்கடிதங்களைப் படிக்கும் போது இன்றைக்கும் நேரில் பேசுவது போல அவருடைய குரல் கேட்கிறது.

என் கணவரின் இரண்டாவது தம்பி எதிர்பாராதவிதமாக விபத்தில் காலமானபோது, என் தந்தையார் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்,''In this world of "Maya"it is found impossible to believe that such a thing could happen or happened to us. We are prone to think that, had this thing happened or not happened, the course of life could have been changed and everything could have been alright as we want them to be.  Such ideas are wasteful thinking, as when a child is born, it is written on its head that it would live up to a certain age and no more.
''There is a Divinity that shapes our ends
  Rough hew them as we will
  Not a sparrow falls without HIS knowledge
  If death is not now, it will be afterwards,
  If it is not afterwards, it will be now
  The READINESS is all.''
These are lines from Shakespear 's Hamlet and it is true to life.
Philosophy apart, separation is a thing grievous in nature and unendurable.''......................

எத்தனையோ  சந்தர்ப்பங்களில் இக்கடிதம் ஆறுதல் அளித்திருக்கிறது!

என் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப்பின் என் தந்தை சென்னையிலிருந்து என்னை அழைத்துக் கொண்டு சேலம் சென்றார். அம்மாவுடன் சுவாரஸ்யமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் ''அக்கா உனக்கு லெட்டர்,'' என்றாள் தங்கை. அட, நேற்று சாயங்காலம்தானே வந்தோம் அதற்குள் யார் என்று கடிதத்தைப் பிரித்தால் ........!எங்க வூட்டுக்காரர், எப்போ திரும்பிவருவே, ல ..ல..ல......!
அதற்குள் என்ன என்ன என்று கேள்விகள் வேறு...!

மெரினா பீச்சில் ''நடமாடும் தபாலாபீஸ்,'' ஹம்சா'' வில் மாலை போஸ்ட் செய்தால் காலையில் கடிதம் கையில். அக்கா டிரெயினில் ஏறினவுடனேயே அங்கே வீட்டுக்காரர் லெட்டர் எழுதிடுவார் என்று எல்லோரும் கேலி செய்வார்கள்.
பதில் எழுதாவிட்டால் கோபம் வந்துவிடும். அடடா, இந்தக் கடிதத் தொல்லை தாங்கமுடியாது. ஆனால் இதயத்தின் ஆழத்திலிருந்து எடுத்த சொல் முத்துக்களால் கோர்க்கப்பட்ட அந்தக் காதல் கடிதங்கள் ...
பார்த்தீர்களா இன்றைக்கு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய், ஆறுதலாய்..

என் தோழி வசந்தாவிற்கு நான்கு வெள்ளை முழுத் தாள்களுக்கு குறைவாகக் கடிதம் எழுதத் தெரியாது. அப்படி என்னதான் இருக்கிறது எழுத என அலுத்துக்கொள்வாள் அம்மா.
எழுதாவிட்டால் கோபித்துக் கொள்கிறார்களே என்று ஒரு ''இன்லண்ட்'' முழுதும் தட்ப வெப்ப நிலை, அரசியல் செய்திகளை நிரப்பி நலம் விசாரிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடும்பச் செய்திகள், ஊர் வம்பு, என நுணுக்கி, நுணுக்கி  மனம் விட்டுக்  கடிதம் எழுதுவது கவலைகளை நீக்கும், நேரில் பேச முடியாத கருத்துகளை மனம் விட்டு பிறருடன் பகிர்ந்து கொள்ள உதவும்.

கடித உலகில் அலுவலக லீவு லெட்டர்களுக்குதான் முதல் பரிசு. முல்லா நஸ்ருதீன் அழுது கொண்டு இருந்தாராம். ஏன் அழுகிறாய் என்றதற்கு பாட்டி செத்ததுக்கு லீவு கேட்க முடியாம எல்லா பாட்டியும் செத்துட்டாங்க, இனிமே எப்பிடி லீவு கேட்பேன்னு அழுவறேன்னு சொன்னாராம்.

இந்தக் காலத்தில் ஒரு நொடியில் பிறப்பு, மரணம், காது குத்தல், கல்யாணச் செய்திகள் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலும் டெலிபோன் பில்லும், அழைப்பிதழ்களும்தான் தபாலில்!
மொத்தத்தில் கடிதம் எழுதுவதை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 பாரதத்தின்   மானசரோவரில்  மலர்ந்த வெண்தாமரை மகான்  ஶ்ரீ அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் மனதை உருக்கும். அவர் எழுதுகிறார்,''மூன்று விஷயங்களில்  எனக்குப் பைத்தியம். 
1.தேவைக்கு அதிகமாக எனக்கென செலவிடுவதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழைகளுக்கும், பசியால் துடிப்பவர்களுக்கும் செலவிடவே நான் விரும்புகிறேன். நீயும் இதில் பங்கு கொள்ள வேண்டும். 
2. கடவுளைக் காணும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன். அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ளமுடியாது.
3. நம்முடைய தாய்த் திருநாட்டை எல்லோரும் வெறும் மண்ணாகவும், காடாகவும், வயலாகவும், ஒரு ஜடப்பொருளாகவும் பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரை இந்த நாடு என் உயிருள்ள தாய். என் தாயின் ரத்தத்தை உறிஞ்சுபவனைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது. என் தாய் நாட்டை விடுதலை அடையச் செய்வதே என் ஒரே லட்சியம்.'' SriAurobindo - His Life Unique


அப்புறம் என்ன? எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். மழைபொழிய வேண்டும். தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். 
வணக்கம்.

அன்புடன், கமலா                  
பெங்களூரு





                                                என் தந்தையார் அளித்த செல்வம்.  


                           திரு.சொக்கன், திரு ஜி. ராகவன்,திரு. மோஹன கிருஷ்ணன் மூவரும்
                          இணைந்து எழுதும் 4 வரி நோட்டு வலைப்  பதிவைப்  படித்துப்   படித்து
                           என்ன   எழுதினாலும்     திரைப் படப் பாடலை மனம் தேடுகிறது. இதோ
                           கடிதம் வரும் பாடல்.
                                       
                                           படம்: குழந்தையும் தெய்வமும்
                                           பாடல்: கண்ணதாசன்
                                           குரல்: டி.எம். எஸ், சுசிலா
                                           இசை:எம்.எஸ்.வி
                                           நடிப்பு: ஜமுனா, ஜெய்சங்கர்



















17 Mar 2013

சதுரகிரியில் கோரக்க சித்தர்


( படித்ததில் பிடித்தது )


சமீபத்தில் என் சகோதரியும் மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து சதுரகிரி சென்று வந்தனர்.   அவர்களுடைய அநுபவங்களைக் கேட்டபோது நேரில் போக முடியாத குறையை நீக்கிக் கொள்ளும் பொருட்டு  அவளிடமிருந்து நான் பெற்ற புத்தகம் :

சதுரகிரியில் கோரக்க சித்தர்
ஆசிரியர்: பா. கமலக்கண்ணன்
பக்கங்கள்:268
வானதி பதிப்பகம்
விலை:  ரூ. 100 .00

ஆயிரக்கணக்கான சித்தர்கள் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இடம் சதுரகிரி.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் அன்னை அநுசுயாதேவி குழந்தைகளாக சபித்த இடம் சதுரகிரி.
அத்திரி மகரிஷியும் அநுசுயாதேவியும் மார்க்கண்டேயரைப் பெற்றதலம் சதுரகிரி.
அகத்திய மாமுனிவர் சிவலிங்க பூசை செய்து ஈசனைத் திருமணக் கோலத்தில் தரிசித்த இடம் சதுரகிரி.
உலக அன்னை உமாதேவியார் கடுந்தவம் புரிந்தும், சிவலிங்க பூசை செய்தும் ''அர்த்த நாரீஸ்வர'' நிலையை அடைந்த இடம் சதுரகிரி.
இராம- இராவண யுத்தத்தின் போது, அநுமார் எடுத்துச் சென்ற, இறந்தோரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைச் செடிகள் வீழ்ந்த இடம் சதுரகிரி.
பல்லாயிரம் ஆண்டுகளாக சித்தர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வரும் இவ்விடத்தை தாணிப்பாறை என்ற கிராமத்தின் மூலிகை வனம் என்ற வளைவு உள்ளே நுழைந்து 14 கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் நடந்தால் அடையலாம். இரண்டு நாய்கள் பயணிகளுக்கு வழி காட்டுகின்றன.

சமதரையான, சுமார் 64 ஏக்கர் பரப்பில் நான்கு பக்கங்களிலும் நான்கு நான்கு மலைகளால் சூழப் பெற்றிருப்பதால் சதுரகிரி என சித்தர்களால் பெயரிடப்பட்டது.

கோரக்க சித்தர் சதுரகிரி மலையை அடையும் வழிகளைக்கூறியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.
தாணிப் பாறையிலிருந்து  அம்புவிடு தூரத்தில்(ஒரு கிலோமீட்டர்) கறுப்பண்ண சாமி கோயிலும், ஒரு கிலோ மீட்டரில் அத்தி, மாமரச் சோலையும், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அத்தி ஊற்றும், அங்கிருந்து 2 கிலோமீட்டரில் பசுமிதிப் பாறையும், பின் கோரக்கர் குகையும், ஆலிலை வடிவ குண்டாவையும் காணலாம். இதன் ஆசிரியர் யோகப் பயிற்சியுடையவராதலால் பல சித்த புருஷர்களின் தரிசனம் பெற்றதாகவும், அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் கூறுகிறார். 

இங்கு இரட்டை மகாலிங்கம், வனதுர்கை, கறுப்பண்ணச்சாமி, சுந்தரமூர்த்தி ஆலயம், சுந்தர மகாலிங்கர், சந்தன மகாலிங்கர் ஆகியோரை தரிசிக்கலாம்.

இங்கே மின்சார வசதியோ, உணவு வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது எனவே நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

வேதங்கள், உபநிஷத்துகள், பைபிள், குரான் ஆகிய எல்லா மத நூல்களையும் படைத்தவன் ஒரே இறைவன்தான். தவம் செய்து  சீவனை தரிசித்து, அதோடு தமது சூக்கும சரீரத்தை ஐக்கியப் படுத்தி பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் கூறிய செயல் முறை விளக்கமே சித்தாந்தம்.

தென் தமிழ் நாட்டில்தான் சுமார் 179 சித்தர்கள் தவச்சாலைகள் அமைத்து மூலிகைகளிலிருந்து காயகல்பம் தயாரித்து மரணமில்லாப் பெரு வாழ்வு  வாழ்ந்தனர் எனவும், சஞ்சீவி மூலிகையை தெரிந்து வைத்திருந்தனர் எனவும் தெரிகிறது. 

அநுமான் சஞ்சீவி மலையை திருப்பி எடுத்துக் கொண்டு போகும் போது, சித்தர்கள் அதன் ஆற்றலை உணர்ந்து ஒரு பகுதி சதுரகிரியில் விழ வேண்டுமென நினைத்தனர் என்றும், அவ்வாறே பெருங்காற்று எழுந்து சஞ்சீவி மலையின் சிறுபகுதி இங்கே வீழ்ந்தது எனவும் சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை, யார் கண்ணிலும் புலப்படாமல் விண்வெளிப்பயணம் செய்யும் கலை அறிந்தவர் எனவும், பல மூலிகைகளையும் பயன்பாடுகளையும் அறிந்தவர் எனவும் ஆசிரியர் கூறியுள்ளார்.

கோரக்கசித்தரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பாடல்கள் சொல்லும் ஞானமார்க்கம், ''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'' என்ற குறுந்தொகைப் பாடலின் விளக்கம் சிந்தனைக்குரியது. அண்ணாமலை தீபத்தை தரிசிக்க வேண்டியது மனித உடம்பிலாகும் என்று கூறி  திருமந்திரம், பெரிய புராணம், அப்பர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா பாடல்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளமை படித்து இன்புறத்தக்கதாகும்.

கலியுகத்தில் நாட்டு நடப்பு பற்றி கோரக்கர் சொல்லும் செய்திகளுக்காக 16 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் மூன்றாண்டுகால விடா முயற்சியின் பயனாக வெளிவந்துள்ள இந்நூலில் சித்தர்களைப் பற்றிய பல உண்மைகள் தெளிவாகப்  புலப்படுகின்றன.
கோரக்க சித்தர் இன்றும் சதுரகிரியில் தவம் செய்து வருவதாகக் கூறும் ஆசிரியர் அவருடைய உருவப்படத்தையே புத்தக  முகப்பிலும் அமைத்துள்ளார்.

''யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
  யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமந்திரம்252 

பொதுவில் இந்த நூலைப் படிக்கும்போதே சதுரகிரிக்கு நேரில்போன அநுபவம் ஏற்பட்டது. மேலும் சித்தர்களையும் இந்த எழுத்துகள் மூலம் தரிசித்த மனநிறைவு  உண்டாயிற்று என்பதையும் மறுக்க முடியாது. பல புதிய செய்திகளை நமக்கு விளக்கிச் சொல்லும் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாகும்.















11 Mar 2013

மோரோ மோர் - More

அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் என்றாள் மகள். மதியத் தூக்கக் கலக்கத்தில்,'மோரைக் குடிக்கதான் செய்வார்கள், அதிலிருந்து எப்படி சாமான் வாங்குவது' என்று கேட்டேன். 'போம்மா, ராமகிருஷ்ணா மடம் பக்கத்தில் பெரிய ''mega more'' திறந்திருக்கிறார்கள்,  போகலாம் வா,' என்றாள்.

மோர் என்றவுடன் குடிக்கின்ற மோர் நினைவுக்கு வந்துவிட்டது. அறுபதுகளில் மாலை நேரத்தில் மோர்தான் குடிப்பதற்குத் தருவாள் அம்மா. இரவு நேரங்களில் ஒரு கிண்ணம் மோர் எப்போதும் திடீர் விருந்தினர் வந்தால் இருக்கட்டும் என எடுத்து வைத்து விடுவாள். குளிர் சாதனப் பெட்டி கலாசாரம் இல்லாத நாட்கள் அவை.

காலை நேரத்தில் மோர்க்கூடையைத் தலையில் சுமந்து கொண்டு மோரோ, மோரு என்று கூவிக் கொண்டு வருவாள் மோர்க்காரி. கூடையினுள் மூன்று பானைகள் இருக்கும். ஒன்றில் மோர், இரண்டாவதில் கட்டித் தயிர், மூன்றாவதில் வெண்ணெய் வைத்திருப்பாள்.  நல்ல உயரம், பெயருக்கேற்ப கரிய நிறம், கையிலே வெள்ளியினால் ஆன கெட்டிக்காப்பு  கையை இறுக்க, காலிலே வெள்ளித் தண்டை அணிந்திருப்பாள். புடவைத் தலைப்பை சுருட்டி சும்மாடாக்கி அதன் மேலே கூடை கொலுவிருக்க கொடியிடை அசைய வருவாள்.

அவள்  வந்தவுடன் அம்மா முன்பக்கம் பிடித்துக் கொள்ள கூடை கீழே இறக்கப்படும். பாத்திரமும் கையுமாக அம்மாவும் உட்கார்வாள். மோரோ, தயிரோ, வெண்ணையோ வாங்குவாள்.  பள்ளிக்கூடம் போவலையா ராசாத்தி கைய நீட்டு என்பாள் கருப்பாயி.  பிடி வைத்த கொட்டாங்காச்சி கரண்டியால் தயிரைக் கையில் கொடுப்பாள். மண்பானையில் பிறையூற்றிய தயிரின் மணமும் ருசியும் ருசித்த நாக்குகளுக்கு மட்டுமே தெரியும். கீழே சிந்தாத கெட்டித்தயிர். தலை பாதி கீழே வர, கைபாதி மேலே போக லபக் என்று வாயில் போகும் தயிர் தான் என்ன ருசி, என்ன ருசி!

தண்ணீரை வாங்கிக் குடித்தபின் மண்ணிலே விரலைத் தோய்த்து சுவரில் ஒரு பதிவு வைப்பாள். எத்தனை ஆழாக்கு என்ற கணக்கு! மாதக் கடைசியில் எல்லா விரல் பதிவும் எண்ணப்பட்டு பணம் கொடுக்கப்படும்.

இந்த நேரத்தில் காளமேகப் புலவரின் பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. சிலேடை பாடுவதில் வல்லவரான புலவர் மோர்க்காரி கொடுத்த மோரைப் பார்த்து கிண்டலடிகிறார். ஓ மோரே, ஆகாயத்தில் நீ இருந்த போது உன்னை மழை மேகம் என்றனர், பூமியில் மழையாய் பெய்த போது நீரென்றனர், இந்த ஆய்ச்சியின் பானைக்குள் வந்ததும் பேர் மாறிப் போச்சே! மோர்னு பேர் வைச்சுடுச்சே இந்த அம்மா. உனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல மூணுபேர், பலே பலே என்கிறார். மோருல அவ்வளவு தண்ணி இருக்காம்!

பாடலைப் பாருங்கள்:
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும் போது
நீரென்று   பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப் பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

காளமேகப் புலவரின் நகைச்சுவை, நக்கல், கிண்டல், சாமர்த்தியம் எல்லாம் வெளிப்படும் இந்தப் பாடலில்தான் எத்தனை சுவை?

இந்தப் பால், தயிர்னு சொன்னவுடனே ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருது. பாலில பாசுரமா?  ஆமாங்க, கடவுள், கடவுள்னு சொல்றோமே அவரக்காட்டுன்னு பிடிவாதம் பிடிச்சானாம் சீடன்.
குரு கேட்டாராம் சாப்பாட்டுல தினந்தோறும் நெய் ஊத்துவாங்களே அது எங்கேந்து வருது தெரியுமான்னு!வெண்ணையிலிருந்து நெய் காச்சுவாங்க.
சரி வெண்ணை எங்கிருந்து வந்தது? என்னங்கய்யா பாலில் மோர் ஊற்றினால் தயிராகும்,தயிர் கடைந்தால் வெண்ணை வரும்.
பாலைப் பார்த்தா வெண்ணையோ, நெய்யோ கண்ணுக்கு தெரியுதா? அதுபோல தான் கடவுளும். மறைந்து இருக்கிறார்! நாம்தான் அவரைக் கண்டு கொள்வதில்ல என்றாராம்.

''விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே''

வெயில் காலங்களில் சிறிது உப்பும், பெருங்காயமும் சேர்த்த மோர்த்தண்ணிக்கு ஈடு இணையான பானம் ஏதாவது உண்டா? சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, கசக்கிப் போட்ட கருவேப்பிலையுடன், கடுகு தாளித்த மோர்தான் ராமநவமியன்று பிரசாதம். மோருடன் பழையசாதம் கலந்த நீராகாரத்துக்குதான் எத்தனை ருசி!

சரிதான் "மோருக்குப்'' போனோம். கீழே சாமான்கள் வாங்கிவிட்டோம். மாடியில் ஒரு ரவுண்ட் போகலாம் என்றால் படிக்கட்டைக் காணும். இந்த புஷ்பக வண்டியை,''Escalator'' பார்த்தால் ஒரு பயம். நான் வரமாட்டேன் என்றேன். நானிருக்க பயமேன் வா என்று சொல்ல அதன் மேல் ஏறிவிட்டேன். 
பக்கவாட்டில் இருக்கும் பிடிமானத்தைப் பிடித்துக் கொள்ள, ஒன்,டூ, த்ரீ காலை மேலே வை என்றாளா, காலை வைத்தேன் கைப்பிடியை ஒரு கணம் விடாததால் ஒரு ஆட்டம் ஆடி ......பாவம் என் இதயம் பயத்தால் ஆடிப் போய்விட்டது.

சரி சரி வீட்டிற்குப் போனதும் கொழு மோர் காய்ச்சித்தருகிறேன் குழந்தை மாதிரி பயந்து போய் விட்டாயே என்று என் கைகளைத் தன் கைகளில் இணைத்துக் கொண்டாள் என் மகள். இதற்காகவாவது கொஞ்சம் பயப்படலாம் போல! என்ன சொல்றீங்க?




















10 Mar 2013

பசிப்பிணி நீக்குக


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

இயற்கை விளக்கமாய் அனைத்து உயிரிலும் விளங்குகின்ற இறைவன் திருவடி மலர்களுக்கு வணக்கம். இந்த மானுட உயிரை உண்டாக்கிய அந்த சக்திக்கு எத்தனை நுண்ணிய திறமை என்று வியந்து நிற்கிறது என் மனம்! இந்த உடலின் அவயவங்கள்தான் எத்தனை சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன? எண்சாண் உடல்! பிரதானமாக இருப்பது வயிறு! வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவதுபோல உணவினால் வாழும் உடல்!

ஒரு நாளில் காலையில் எழுந்ததும் காப்பி, பின்பு நாவுக்கு ருசியாய் சிற்றுண்டி, பகலில் அரிசிச் சோற்றுடன் அவியல், பொரியல், கூட்டு, கறி, இரவில் மீண்டும் என பசி தோன்றும் போதெல்லாம் எதையாவது நிரப்பினால்தான் சும்மா இருக்கிறது வயிறு. 
இதனை ''அவா அறுப்பு'' என்ற தலைப்பில் பதின்மூன்று பாடல்களில் அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறார் வள்ளலவர்கள்.

''காலையாதிய முப்போதினுஞ் சோற்றுக் கடன் முடித்திருந்தனன் எந்தாய்'' எனவும், ''சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எல்லாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப்போம் என அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன்'' எனவும் மனிதர்களுக்கு உணவின் மீது உள்ள ஆசையை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
நிறைய சாப்பிட்டாலும், ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தாலும் இறைவனைப் பற்றிய சிந்தனை ஒருவனுக்குத் தோன்றாது. எதற்கு இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தானே பிறந்திருக்கிறோம்! 

வள்ளலார் வாய்மொழியிலே கேளுங்கள்,''நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து,  நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து'' இறைவனை உணர்ந்தால் என்ன ஆகும்? கண்ணீர், ஊற்றெழும், அதனால் உடம்பெல்லாம் நனைந்து போய் நாக்குழற, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல, இன்னமுதே, நல்ல செல்வமே, ஆனந்த நடனமிடும் என்னுடைய அரசே என்றெல்லாம், 'வனைந்து வனைந்து' சொல்லவேண்டுமாம்! அப்போது இறையருள் சித்திக்குமாம். மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமானால் இறைவனை உங்களில் உணருங்கள் என அழைக்கிறார்.
ஆனால்......

இறைவன் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது இல்லையா? துன்பம் நேர்கையில் ஐயோ, கடவுளே நீ எங்கே இருக்கிறாய் என்று புலம்புகிறோம்! கடவுள் எங்கே இருக்கிறார்?
அணுவிற்கு அணுவாய், நுணுக்கறிய நுண்ணறிவாய் எங்கும் விளங்குகிறார்.
கடவுளை எப்படி அறிந்து கொள்வது?
அதற்கு ஆன்ம அறிவு வேண்டும்.
ஆன்ம அறிவு எப்போது வெளிப்படும்?
ஜீவகாருண்யத்தால் வெளிப்படும். 
ஜீவன் என்றால் உயிர். 
கருணை என்றால் இரக்கமும், தயையும், அன்பும் கொண்டு விளங்குதல்.

உயிருள்ள அனைத்து உயிர்களும் பசியினால் வாடக்கண்டாலும், தாகத்தினால் வருந்தக்கண்டாலும், நோய்களால் துன்புறக்கண்டாலும் மனம் உருகி, அன்பு நிறைந்து அத்துன்பத்தை நீக்குவதே தெய்வ வழிபாடாகும். அதுவே ஆன்ம உருக்கம். இதனால் அறிவும் அன்பும் உடனாக நின்று உபகார சக்தி விளங்கும். 

எந்தப் பொருளாலும் மனித மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் உணவு உண்ணும் போது மட்டுமே போதும் போதும் என்று சொல்ல முடிகிறது. 
சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி! நம் நாட்டில் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும் பசியினால் வாடுகின்ற ஏழை எளியவர்கள் நிலை என்ன?

பல இடங்களிலும் பசியினால் வாடும் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில், வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் புகையிலைச் சாற்றினை சிறிது கொடுப்பதாகவும், சற்றே வளர்ந்த குழந்தைகளாயின் அடித்து தூங்க வைப்பதாகவும், நன்றாக இருக்கிற உடம்பை விகாரப்படுத்தி பிச்சை எடுக்கச் செய்வதாகவும்  மனதை நெகிழச் செய்யும் செய்திகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட நிலையில் நடைபாதையிலே தள்ளாடி வந்தார் ஒருவர். தற்செயலாக விழுந்தோ, கெட்டுப் போனதால் எறியப்பட்டோ ஒரு பொட்டலம் முறுக்கு நடைபாதையில் சிதறிக்கிடக்க, வந்தவர் அதைக் குனிந்து எடுத்துத் தின்றதைப் பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்தது.

பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது பழமொழி. பசியினால் உடலுக்கு மயக்கம் உண்டாகிறது. மனம் தடுமாறிச் சிதைகின்றது. புத்தி கெடுகின்றது சித்தம் கலங்குகின்றது. இந்தத் துன்பங்கள் எல்லாம் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. உள்ளம் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் ஜீவகளை உண்டாகிறது.

பசியுடன் இருப்பவரின் பசி நீக்குதலாகிய புண்ணியச் செயலைச் செய்பவர்கள் கடவுள் அம்சமென்று அறிய வேண்டும் என்பது வள்ளல் பெருமான் கூற்றாகும். 
''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்கிறது மணிமேகலை.
'' தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்' என்பது பாரதி வாக்கு.
''இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
 கெடுக உலகியற்றி யான்'' என்கிறார்  வள்ளுவர்.

''வையிற் கதிர்வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும் 
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்- நுங்கட்கிங்கன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா வெறுநிழல் போல் 
கையிற் பொருளும் உதவாது காண் கடை வழிக்கே.'' 

''பிடி சோறு இட்டு உண்டு இருமின், வினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே'' எனவும் வாழ்க்கை நிலையாமையைச் சொல்லும் அருணகிரியாரின் வாக்கினை எண்ணிப்பார்ப்போமாக.

''யாதும் கொள்வாரில்லாமையால் கொடுப்பார்களுமில்லை'' என கோசலநாட்டின் சிறப்பைப் பாடுகிறார் கம்பர். அத்தகைய வறுமையற்ற பாரத நாட்டை என்றாவது காணும் பேறு கிடைக்குமா?

எங்கே எப்போது பசியுடன் இருப்பவரைப் பார்க்க நேரினும்  அங்கேயே அப்போதே உங்களால் ஆன அளவுக்கு அவர்கள் பசியை நீக்குங்கள். அதனால் கிடைக்கும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அப்போது அறிந்து கொள்ளலாம்.

 ஏழையும்  பணக்காரர்களுமில்லாத ஒரு புது உலகம்!? நம்பிக்கை வரவில்லை! ஆனால் நம்மால் முடிந்த அளவு தேவையானவர்களுக்கு உதவி செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.

இன் தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறும்
இரக்க நடை கொள்ளும் பதம்.

இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோறு அருந்த முன்
இருந்துபின் நடக்கும் பதம்.

என்இருகண் மணியான பதம் என் கண் மணிகளுக்கு
இனியநல் விருந்தாம்  பதம்.

என்குரு வெனும்பதம் என் இட்ட தெய்வப்பதம்
எனது குல தெய்வப் பதம்.                 ---திருவடிப்புகழ்ச்சி

                                                          
--------