25 Jun 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே....

''வினா விடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது தொலைக் காட்சியில்.
கேள்வி: தாலி என்பது என்ன? அது எங்கிருந்து வந்தது.
பதில்: தாலி என்பது ஒரு பெயர். அது இத்தாலியிலிருந்து வந்தது.
மிகச் சரியான விடை. உங்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு."

அங்கிருந்த வடநாட்டுக்காரர், ''தப்பான விடை சார். தாலின்னா தட்டு. வடநாட்டுத்தாலின்னா, சப்பாத்தி உணவுத் தட்டு. தென்நாட்டுத் தாலின்னா 'சவுத் இண்டியன்' சாப்பாட்டுத்தட்டு,'' என்றார்!

தமிழ் நாட்டு முனியன், ''ஐயய்யோ, எல்லாரும்  தப்பு. தாலின்னா எங்க ஊருல மஞ்சக்கயிறு,'' என்றார்.

 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இரண்டு பேர் பேசிக்கிட்டாங்க.
என்னங்க 'இடாலி' ங்கர பெயரப் போயி இத்தாலின்னு சொல்றான்? நெசமாவே 'தாலி' இத்தாலிலேந்து வந்துதாய்யா?!!!!!!
அட, சும்மா இரு. நேத்து நம்ம 'சாந்தி சாகர்ல' வெளிநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தானா! சர்வர் அவங்கிட்ட இட்லி, தோசை வேணுமா என்று கேட்க, அவன் 'இட்டாலி, இட்டாலி' ன்னு  சொல்ல,  சர்வர் இட்லி,  இ.ட்..லி ..ன்னு பாடஞ் சொன்னான். பக்கத்தில இருந்தவரு கேக், கேக், இந்தியன் கேக்
சால்ட் கேக் அப்பிடின்னாரு.

அதனால இத்தாலிலேந்து தாலி வந்தாலும், இட்டாலிலேந்து இட்லி வந்தாலும் நமக்கென்னய்யா?

சாப்பிட உக்காந்தா தட்டுல இட்லி விழுந்தா சரி!

எனக்கு ஒரு சந்தேகம்! அது இட்டலியா, இட்டிலியா, இட்லியா?
இட்டு அவிக்கறதால இட்லின்னு பேர் வந்துச்சுனு சொல்றாங்க. அவ்வளவுதாங்க.

நேத்து என் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து ஒடஞ்சு போச்சா, வேற கண்ணாடி மாத்த
கண்ணாடிக் கடைக்குப் போனேனா,  ஒரு மிஷின் வச்சுருக்கான் இல்ல, அதுல கண்ண 'செக்' பண்ணிட்டு, 'சார் இடது கண்ணுல பவர் ஜாஸ்தி, வலது கண்ணுல கம்மி, கண்ணாடியும், 'ப்ரேமும்'
மாத்தலாம்னு சொன்னான்.



சரிதான் மாத்திடலாம்னு  ஒடஞ்ச கண்ணாடியக் காமிச்சேன். சார், பழய கண்ணாடிய எடுத்துட்டு இதில புதிசு போட முடியாது. புதிசுதான் வாங்கணும் என்று சொன்னான்.
எல்லா 'ப்ரேமும்' நீள்சதுரமாதான் இருக்கு. அப்பா, எனக்கு இது வேண்டாம் வேற குடுன்னு சொன்னேன்.
அவஞ்சொல்றான், எல்லாம் இத்தாலி நாட்டுலேந்து இறக்குமதி பண்ணின ஏ க்ளாஸ் ப்ரேம் சார். எந்தக் கண்ணாடிக் கடைக்குப் போனாலும் இன்ன தேதிக்கு இதுதான் நாகரீகம்னு இதேதான் வெச்சிருப்பான். ''பாருங்க பாருங்க, இந்த ப்ரேமில கண்ணாடி  பொருத்தினா உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
அதப் போட்டுக்கிட்டா இத்தாலி தெரியுமாய்யா?
போட்டுப்பாத்தாதான் தெரியும்!
ஏன்பா, பழய 'ப்ரேம்ல' கண்ணாடிய பொருத்தமுடியாதா?
முடியாது சார். 'ப்ரேம்' உருகிடும்.

கண்ணாடியும், இத்தாலிய ப்ரேமும் சேர்ந்து ஆறாயிரம் ரூபாய் பில்! புதிய கண்ணாடிக்கு தண்டம் அழுத பின் கண்ணாடிக் கடைக்காரர்கிட்ட,'' சார், பழய 'ப்ரேம்'ல இன்னொன்னு செஞ்சு குடுக்கறீங்களா என்று கேட்டேன். அதுக்கென்ன செஞ்சா போச்சுங்கறார். இப்ப உருகாதா ப்ரேம்? காசு எப்படிப் பண்றாங்க பாத்தீங்களா?
நம்ம ஊர் கண்ணாடி ப்ரேம்கள் எங்கேயாவது கிடைக்கிறதா? அடுத்ததடவ ஒடஞ்சா உபயோகப்படும்!

எல்லார் வீட்டிலயும் டாய்லெட் எவ்வளவு நல்லா வெச்சுஇருக்காங்க. சுத்தம் செய்யரது சுலபமா இருக்கு. நம்ம வீட்டிலயும் மாத்துங்கன்னு மேலிடித்திலிருந்து பல நாள் தொந்தரவு. சரிதான் தேவையான கம்மோட், வாஷ் பேசின் விலை கேட்கப்போனேன். பல நிறங்கள், வடிவங்கள், பளபளப்பு.
விலையெல்லாம் கேட்டு பேப்பர்ல எழுதிக்கிட்டேனா! சார், இதெல்லாம்  இந்தியன்' கம்பெனிது தானே?

எந்த நூற்றாண்டில சார் இருக்கீங்க?  பழைய 'ப்ராண்ட்' எதுவுமே இப்ப மார்க்கெட்ல இல்ல. எல்லாம் இத்தாலிலேந்து வந்திருக்கிற முதல்தரமான பொருட்கள். எந்தக் கடைக்குப் போனாலும் இது தான் கிடைக்கும். இந்தியக் கம்மோட் உடஞ்சு போயிடும் சார்!
அட ராமா,  டாய்லெட்லகூட இத்தாலியா?

என்னடி இது பொரியல் கசக்குது?
எங்க மாதர் சங்கத்தில நேத்து சமையல் கத்துக் குடுத்தாங்க. நம்ம ஊர் நல்லெண்ணை சாப்பிட்டா உடம்பில கொழுப்பு ஜாஸ்தி ஆவுதாம். அதனால இத்தாலி நாட்டு 'இம்போர்ட்டட்'ஆலிவ் ஆயில் உபயோகப்படுத்தணுமாம். வாரம் ஒரு முறை ஆலிவ் ஆயில் சமையல் கலை வகுப்புக்கு ஆயிரம் ரூபாய்தான். நம்ம வீட்டில இனிமே ஆலிவ் ஆயில்தான். ஆஆஆஆஆஆஆஆ!

சமையல் கட்டிலும் இத்   தாலியா?  விளக்கெண்ணை போல இருக்கும்மா ஆலிவ் எண்ணை வாசனை! அதை நீயே சாப்பிடு என்ன! ஆளவிடு, தாயே, எனக்கு இருக்கு ஆனந்த பவன்.

''நெஞ்சு பொறுக்குதில்லையே,'' என்று பாடத் தொடங்கினேனா, எங்க வீட்டு அம்மா வந்துது.'' என்னங்க நம்ம பேரனுக்கு பிறந்த நாள் வருது. அவனுக்கு அழகான டிரஸ் வாங்கணும்.''

இதோ பாரும்மா, ஒம் பையன், மருமகளோட நீ போ. எனக்கு முடியாது.

பையன் சொன்னான்,''என்னப்பா, காருல ஒக்காந்து வர என்ன பிகு பண்றீங்க?''
நீங்க போற இந்த பெரிய்ய்ய கடைக்கெல்லாம் வந்தா என் தலை சுத்தும். அதுதான்.

மூணு வயசுப் பையனுக்கு டவுசரும், சட்டையும் ஆயிரம் ரூவா!
எல்லாம் இறக்குமதி பண்ணின துணிங்க! ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்!

பால் வாங்க கடைக்குப் புறப்பட்டேன். பாதி வழியில உசிர விட்டுது காலணி. நம்ம நேரஞ்சரியில்ல! சாயங்காலம்  புதுசா திறந்திருக்கும் செருப்புக் கடைக்குப் போனேன். சார், எல்லாம் புதுசா அமெரிக்கா, இத்தாலிய நாட்டிலேந்து நேத்துதான் வந்தது. வாழ்நாள் பூராவும் பிஞ்சு போகாது.

சார், அம்மாவுக்கு 'ஹேண்ட் பேக்,' வாங்குங்க, ரொம்ப நல்லா இருக்கு. எல்லாம் 'இம்போர்டெட்,'
இரண்டாயிரம் ரூபாய்தான் சார்.

ESCAPE!
காய்கறிக் கடைக்குப் போனால் சீட்டு  ஒட்டிக்கொண்டு வெளிநாட்டு ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், குடை மிளகாய்கள்,  குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கும் 'பீட்ஸா,' உருளைக் கிழங்கு சிப்ஸ் வகைகள்.
அட உள்ளாடைகள் கூட வெளிநாட்டுதுதாங்க!
               
      '
எனக்கொரு  கிறித்துவத் தோழி உண்டு. கிராமப் புறங்களிலே எத்தனை பெண் குழந்தைகள் கொல்லப்பட்டன என்று பட்டியலிட்டுக் கொடுத்தால், கிராமங்களின் வறுமையை, அதை நீக்க செய்யவேண்டியவை இவை என்று எழுதிக் கொடுத்தால் வெளி நாட்டுக் கிறித்துவ அமைப்புகளிலிருந்து
அம்மணிக்கு பணம் வருகிறது. வறுமையைக் காட்டிக் கையேந்துவதை எப்படி இவ்வளவு பெருமையாக நினைக்கிறார்கள்? யாரும் வறுமையை ஒழிக்கவோ, முன்னேற்றம் ஏற்படுத்தவோ செயல் படுவதில்லை! வளர்க்கதான் பார்க்கிறார்கள்.

 ''கண்ணிலாக் குழந்தை கள்போல்~ பிறர்
   காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
    நண்ணிய பெருங்கலைகள்~பத்து
    நாலாயிரங் கோடி நயந்து நின்ற,
    புண்ணிய நாட்டினிலே~இவர்
    பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.
    நெஞ்சு பொறுக்குதில்லையே!''

ஓ பாரதி, நீதான் எத்தனை பெரிய தீர்க்கதரிசி? எப்படி ஐயா  அப்பவே இப்படி ஆகும்னு கண்டுபிடிச்சே?

மதமாற்றங்களும், கலாச்சார சீரழிவுகளும், அமைதியின்மையும், நிரம்பிக் கிடக்கும் இந்த நாளிலே பாரதியை எங்கே போய்த் தேடுவது? நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடதான் முடியும்.











 











13 Jun 2012

தேடிக் கொண்டே இருக்கின்றேன்.



ஒன்றென்றனர், இரண்டென்றனர், மூன்றென்றனர்!
ஆணென்றனர், பெண்ணென்றனர், அலியென்றனர்!
ஆனைமுகத்தான் பானைவயிற்றான் எலிமீதென்றனர்,
ஆறுமுகத்தான் அழகன்முருகன் மயில்மீதென்றனர்,
பாம்பணையில், பாற்கடலில் பள்ளியென்றனர்!
கயிலை வாசன், ஆற்றுச் சடையான், அரவணிந்தான்,
சிவமே சிவமே சிவமே சிகரம் என்றனர்.
சபரிவாசன்  புலிப்பால்   கொணர்ந்தான்;
கருடன் மீது கணத்தில் வருவான்,
துச்சாதனர்களைத் துரத்தி அடிப்பான்,
எங்கும் உள்ளான் எவரும் அறியான்
உனக்குள் உள்ளான் அறிவாய் என்றனர்.
தேடினேன், தேடினேன் தேடிக் கொண்டே
இருகின்றேன்.

புயல் அடித்தது, பூகம்பம் வந்தது, சுனாமி
அரக்கனடித்துப் போட்டது. சுழற்றிச் சுழற்றி
சுழற்காற்று, சுருட்டி அடித்தது. கொட்டும்
மழையோ அடியோடு வாழ்வை சிதைத்துப்
போட்டது! எங்கும் இருப்பவன் எங்கே எங்கே
தேடினேன் தேடினேன், தேடிக் கொண்டே இருக்கின்றேன்.

ஓ, மானுடனோ, மதியான் பிறரை
பயங்கரவாதியாய், துப்பாக்கி கையில்
தூக்கிவிட்டான், துணையாய் குண்டுகள்
வீசுகின்றான். சொந்த சகோதரர்கள் 
துன்பத்தைக் கண்டு இன்பம் பெரிதும்
காண்கின்றான்.
அடித்து நொறுக்குகிறான், அடிமையாய்ப்
பூட்டி வைக்கின்றான்.
சிறைச் சாலையிலும், போர் என்ற போர்வையின்
மறைவினிலும் செய்யும் கொடுமைதனை
எழுதக் கூசுதையா, இதயம் வாடுதையா.

நோயும், வறுமையும், பசிப்பிணியும்
நோகச் செய்யும் துன்பங்களும்
எண்ணிலடங்காவே  அடச் சொல்லிமுடியாதே!
எங்கும் இருப்பவன் எங்கே எங்கே?
தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருக்கின்றேன்.