சூரிய ஒளியில் பளபளக்கும் இளந்தளிர்களோடு கம்பீரமாய்க் காட்சி அளிக்கும் மரங்கள். இளவேனிற்கால வரவை பறைசாற்றும் வேப்பமலர்களின் நறுமணம். அணில்களின் கொக்கரிப்பு, காக்கைகளின் கட்டைக் குரலொலி! அமைதியில் ஆழ்ந்து உறங்கும் இருப்பிடங்கள்.
அங்கே ஒரு மருத்துவமனை!
மருத்துவமனையின் நுழைவாயிலில் போடப்பட்டுள்ள நாற்காலிகள்!
அதில் உலகத்துச் சோகங்களையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி உண்டதுபோல் காட்சியளிக்கும் முதியோர்கள்.
குட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடி, இரவு உடை எனப்படும் நீளஅங்கி.
சிறிதளவு ஒப்பனை செய்யப்பட்ட முகமலர்கள். அதில் பிரதிபலிக்கும் துயரம். அம்மாவென்று அழைத்து ஒரு நிமிடமாவது நம்முடன் பேசமாட்டார்களா, நம்மைப் பார்த்து அதிக பட்சம் ஒரு புன்னகை செய்யமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு! ஏக்கம்! அன்பின் ஆதரவு தேடி நீளும் கரங்கள். கலங்கும் கண்கள்!படிக்கவே வருத்தமாக உள்ளது அல்லவா?
அமைதியின் சன்னிதியில், புற உலகத்தாக்கங்கள், உணவு, உடை, உறைவிடம் ஆகிய எதற்கும் கவலை கொள்ளத்தேவையற்ற ஒரு வாழ்வு ! ஆனால் மனிதமனமோ அன்புக்கு ஏங்கி, அலைபாய்கிறது!
மரணத்தின் தலைவாயிலில், பிறருடைய உதவியை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் நிலைமை கொடுமையானது.
அது மரணத்தை யாசிக்கும் நேரம்!
மனித வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மிச்சம் இருப்பது மரணத்தின் மீது மானுடம் செலுத்தும் அன்பு!
என்ன வேடிக்கை, காலனின் கரங்களைப் பற்றிக் கொள்ள விரும்பும் நேரம்.......ம்....!
எனது குடும்பத் தோப்பின் மரம் ஒன்று சாய்ந்துகொண்டிருக்கிறது!