அண்ணா, எனக்கு மிகவும் பிரியமானவர். சின்னவயதில் அண்ணாவுடன் சைக்கிள் வாகனத்தில் நிறைய சுற்றியிருக்கிறேன். சைக்கிளில் ஹேண்டில்பாரைப் பிடித்துக் கொள்ளாமல் கையை இரண்டுபக்கமும் நீட்டிக்கொண்டு சைக்கிள் மிதிப்பார். வெகு வேகமாகப் பறக்கும் சைக்கிளின் பின் சீட்டில் பயமும், சிரிப்பும், பெருமிதமுமாக உட்கார்ந்து செல்வது ஒரு அனுபவம்! குழந்தைகள் படத்திற்கு என்னைமட்டும் ஸ்பெஷலாக அழைத்துப் போயிருக்கிறார். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் என்னை விட்டுவிட்டுதான் கல்லூரிக்குப் போவார்.
பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அண்ணாவுக்கு வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது! அடடா அண்ணா பஸ் ஏறிவிட்டால் இந்த இருட்டில் எப்படி தனியே வீட்டுக்குப் போவது என்று யோசிக்கிறேன். அதற்குள் அண்ணா சொல்கிறார், 'வா போய் ஒரு காப்பி குடித்துவிட்டு வருவோம். பஸ் எப்போது வரும் என்று தெரியவில்லை.' அண்ணாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கவேண்டும். ஒரு அரை டம்ளர் காப்பி என்று அரைமணிக்கு ஒருமுறை சமையலறையில் குரல் கேட்கும்..... பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குள் நுழைகிறோம்.
காப்பி குடித்து வரும் போது அண்ணா சொல்கிறார் போய் அந்த ஆனந்தவிகடனை வாங்கிவாயேன். நான் பஸ் வருகிறதா என்று பார்க்கிறேன்.
நான் போய் விகடனை வாங்கி வருவதற்குள் கனவு கலைந்துவிட்டது!ஆனால் கனவு போலவே இல்லாத இதய நிறைவு!
நீலகிரியில், குன்னூரில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அண்ணா பிஏ, படித்து முடித்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடியற்காலையில் இருவருமாய் நடக்கப் போய்விடுவோம். மெல்லிய பனித் திரை போர்த்த இயற்கையையும், பறவை ஒலிகளையும், மெளனத்தின் ஆனந்தத்தையும் ரசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது அண்ணாதான். நடைப் பழக்கம் எனக்கு அவரால்தான் வந்தது.
தமிழ் வாணனின் கல்கண்டு பத்திரிகையை தவறாமல் வாங்கி வருவார். இயற்கை உணவுப் பழக்கங்கள் அந்தக்காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டதற்கு காரணம் கல்கண்டு பத்திரிகைதான்.
தமிழ் வாணனின் கல்கண்டு பத்திரிகையை தவறாமல் வாங்கி வருவார். இயற்கை உணவுப் பழக்கங்கள் அந்தக்காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டதற்கு காரணம் கல்கண்டு பத்திரிகைதான்.
தினமும் காலையில் ஆசனங்கள் செய்வார். அதைப் பார்த்து பத்மாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை அவரிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
''மேல் குன்னூரில்" சிறிது காலம் கணக்கு வாத்யாராகப் பணிபுரிந்த போது தான் வாங்கிய முதல் சம்பளத்தை என்னிடம்தான் கொடுத்தார். புதிய உறவுகளை உயிர்ப்பிக்கும் திருமணங்கள் பழைய உறவுகளை வெட்டி விடுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பாதைகள் மாறினாலும், இதயத்தின் அன்பு மாறுவதில்லை.
அண்ணா எப்போதுமே அதிகம் பேசமாட்டார். நான்கு வயதில் தாயை இழந்தவர். இன்னும் ஓராண்டில் எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணிய வேளையில் மருத்துவ மனையில், நண்டின் பிடியில்! மனம் வருந்துகிறது!
பச்சை இலைகள் முதிர்ந்து சுருங்கி கீழே வீழ்ந்து மண்ணோடு மண்ணானாலும் தாய்மரத்தின் முத்திரை எப்போதும் நீங்காதிருக்கும் அல்லவா?
அண்ணனிடம் கொண்ட அன்பின் நினைவலைகளில் குளிர் காய்கிறது மனம்.
பச்சை இலைகள் முதிர்ந்து சுருங்கி கீழே வீழ்ந்து மண்ணோடு மண்ணானாலும் தாய்மரத்தின் முத்திரை எப்போதும் நீங்காதிருக்கும் அல்லவா?
அண்ணனிடம் கொண்ட அன்பின் நினைவலைகளில் குளிர் காய்கிறது மனம்.