2 May 2015

நினைவலைகள்

இந்தப் பதிவு 'நமது திண்ணை' மே இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


வலைப் பதிவில் அறிமுகமான சிறந்த எழுத்தாள நண்பர் தமிழ் மாதப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி வருகிறார்.  படிப்பதற்காக வாங்கிய அப்புத்தகத்தில், ஒரு பெண்மணி தன் உறவினரான கேன்சர் நோயாளி மைசூரைச் சேர்ந்த ஸ்வாமிஜியிடம் ஆயுர்வேத மருந்து வாங்கி சாப்பிட்டு குணமாகிவிட்டதாகப் பரிந்துரை செய்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காரணத்தால் இப்பதிவை இடுகிறேன்.

நோயாளிக்கு நிஜமாக புற்று நோய்தான் என்று நம்ப முடியவில்லை. மேலும் "கேட்டுக் கொள்வாராம், சொல்வாராம், தங்கவேண்டி வருமாம்," என்று எழுதியிருந்ததைப் படித்துவிட்டு இதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்ற கேள்வி எழுந்தது! இந்த மாதிரி ஒரு மாத மருந்தில் குணமாகிற வியாதியாக கேன்சர் இருந்தால்  பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஸ்வாமிஜியின் ஆஸ்ரம வாயிலில் அல்லவா நிற்கவேண்டும்!

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ உலகத்திற்கு சவாலாக இருக்கிறது புற்று நோய்! நோயின் தன்மை என்ன, எதனால் வருகிறது, நோயின் அறிகுறிகள் ஆகிய பலவற்றையும் கண்டுபிடிக்கவே ஆண்டுகள் பல சென்றுவிட்டன. ஆனாலும் மனிதனுக்கு சவாலாக, நோய்கள் அனைத்திற்கும் அரசனாக மருத்துவர்களை, நோயாளிகளை ஆட்டிவைக்கும் புற்று நோய்க்கு குலம், கோத்திரம், சாதி, மதம், இனம், சிறியவர், பெரியவர், அரசன், ஆண்டி என்ற எந்த வித்யாசமும் கிடையாது.

யார் பேரரசன்? பல நாடுகளுடனும் போர் செய்து லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து வெற்றிவாகை சூடியவன் தானே? உடலிலும் அந்தப் போர் நடக்கிறது! உடலிலுள்ள நல்ல அணுக்கள் அனைத்தையும் அழித்து கடைசியில் வெற்றி பெறுவது புற்றுநோய்தான். தனிமனிதனுடைய தலையெழுத்துதான் அவனை வல்லமை மிக்க இந்த அரசனிடமிருந்து காப்பாற்றுகிறது!

சர்வ வியாபியாக அனைவரையும் அச்சுறுத்திவரும் கேன்சர்-புற்று நோய் -நண்டுக் கொடியுடையது. அதிக சக்தி வாய்ந்த பாதிக்கப்பட்ட செல் அணுக்களுக்கும், பாதிக்கப்படாத நல்ல செல்களுக்கும் இடையே, நம் உடலுக்குள்ளேயே நடை பெறும்  மாபெரும் போர் நிகழ்வே புற்றுநோய்.
(புற்று நோய் என்றால் என்ன போன்ற செய்திகள் வலையில்  நிறையவே இருக்கிறது.)

இந்த நோய் வராத வரையிலும் எல்லோரும் பாதுகாக்கப்பட்டவர்கள். ஆனால் வந்துவிட்டால் இதற்கு அலோபதி எனப்படும் ஆங்கில வைத்திய முறைதான் கதி!  வேறு வழியில்லை! போலிகளை நம்ப வேண்டாம். திக்குத் தெரியாத காட்டில், அமாவாசையன்று இரவில் கதியற்றுத் திகைத்து நிற்கும் ஒருவனுடைய நிலைதான் கேன்சர் நோய் தாக்கப்பட்டவருடைய, அவருக்கு நெருங்கியவர்களுடைய நிலை!

எங்கோ ஒளிக்கீற்றாய்த் தோன்றி, கவலைப் படாதீர்கள் எல்லா முயற்சிகளும் செய்து குணப்படுத்த முயலலாமென்று தாங்கி நிற்பவர்கள்தான் மருத்துவர்கள். அவர்களுக்குத் தெரியும் நோயாளியின் நிலை மதில் மேல் பூனை என்று! ஒரு பக்கம் மரணம், மறுபக்கம் மறுபிறவி?!!!!! ஃபூ! இவ்விரண்டுக்கும் நடுவேதான் மனித வாழ்வு, ஒற்றையடிப் பாதையில் ''நான், நான்'' என்ற ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டு ....முடிவின் நிலையறியா ஒரு பயணம்.....?

சமீபத்தில்  மருத்துவர்கள் அதிகமாக டெஸ்டுகள் செய்யச் சொல்கிறார்கள்! அவர்கள் வணிக நோக்கோடு செயல் படுகிறார்கள் என்றெல்லாம் நிறைய குற்றச் சாட்டுகளை அள்ளி வீசுவதைக் காண்கிறோம்! சொல்ல வேண்டியது மருத்துவர்கள் கடமை. மாட்டேன் என்றால் பின்னால் வருவதை அனுபவித்தே ஆக வேண்டும் அல்லவா?

ஒரு அநுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இப்படிதான் இந்தப் பிடிவாதக்கார மனிதர் போய்ச் சேர்ந்தார்!  வெற்றிலை பாக்கு போடுவது ஒன்றும் தப்பு இல்லை. ஆனால் ஒரு நாளுக்கு நாலு தடவை போட்டால்? சில சமயங்களில் சுண்ணாம்பு அதிகம் ஆகிவிடும்! வாயில் புண் வரும். சரியாகும்.
ஒரு தடவை  சின்னதாக ஒரு புண் உள் நாக்கில் வந்தது. சரிதான் பயிற்றம்பருப்பு பாயசம் சாப்பிட்டால் சரியாகும் என்று சில நாட்கள், கசகசா தேங்காய்ப் பால் கீர், மணத்தக்காளிக் கீரைக் கூட்டு என்று காலம் போனது.

பிறகு போனால் போகட்டும் என்று அலோபதி டாக்டரிடம் போய்க் காட்ட, வலி நிவாரணி, வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தார். மூன்று வாரங்களில் -- சரியாகவில்லையே, எதற்கும் போய் ஒரு டெஸ்ட் செய்துவிடுங்கள் என்றார். கேட்போமா?

ஆமாம் இவங்களுக்கு வேறே வேலையில்லை, நான் போக மாட்டேன் என்று சொல்லி ஆயுர்வேத மருத்துவரிடம் போய்க் காண்பித்தாயிற்று! அவர் ஒரு பத்து நாள் மருந்து கொடுத்தார். கொஞ்சம் சரியானது மாதிரி இருந்து அங்கேயே ஆணியடித்து உட்கார்ந்தது புண்! நூற்றுநாலு டிகிரி ஜுரம்! வேறு அலோபதி மருந்துகள் வேண்டாம். இந்த ஆயுர்வேத மருந்தை மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்றார் மருத்துவர். வலி அதிகமாகி, ஜுரம் நிற்காமல், இருமலுடன் சாப்பிடமுடியாமல் போனதுதான் பலன்!

அடுத்ததாக ஹோமியோபதியை விடலாமா என்று அவரிடமும் போய்க் காண்பித்து மருந்து வாங்கியாயிற்று. வயதாயிட்டுது சார், புண்ணெல்லாம் ஆற நாள் எடுக்கும். கவலைப் படாதீர்கள் என்ற ஆறுதல் மொழி வேத வாக்கியமாயிற்று.

வங்கி மருத்துவரும் வயதான புராணம் சொல்லி கொஞ்சம் மாத்திரைகள் கொடுக்க ஜாம்ஜாம் என்று கேன்சர் செல்கள் பல்கிப் பெருகுவது தெரியாமல் வளரவிட்ட நிலையில் இரவு நேரங்களில் ஜுரம், இடைவிடாத இருமல் ஆரம்பமாயிற்று.

வாழ்க்கையில் சில சமயங்களில் எந்தப்பக்கமும் போக முடியாமல் எல்லாவழிகளும் அடை பட்டுவிடும்! எப்படியோ, எங்கிருந்தோ நீளும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு போக வேண்டிய கட்டாயம்! கடைசியில்......

வேறு வழியில்லை என்றவுடன் மீண்டும் அலோபதி மருத்துவரிடம் போனோம்! புற்று நோய் என்பது நிச்சயமாகத் தெரிந்துவிட்டது! இது விதியா, கர்மாவா?

அடுத்தவர்கள் வாழ்வைப் பற்றி வாய் கூசாமல் நம்முடைய எண்ணங்களைச் சொல்லி விடுகிறோம்! நல்லவன், கெட்டவன், அதனால், இதனால் என்று ஒரு மனிதனைக் கூறு போட்டு அறுத்து, மிதித்து அவமானம் செய்யும் வல்லமையை மனிதன் தன் அகங்காரத்தால் செய்கிறான்!

 மின்னல் வேகத்தில் முடிந்துவிட்ட வாழ்க்கை!  நம்பிக்கையின் தோள்களிலே தலை சாய்த்து, நோயுற்றோர் உட்புகும் ஹெச்.சி.ஜியின் நுழை வாயில், அங்கே மீன் தொட்டியில் விளையாடும் வண்ணமீன்களின் மெளன கீதம். அந்த வரவேற்பறையில் காத்துக் கிடக்கும் புன்னகை முகமூடியணிந்த எத்தனையோ நோயாளிகளின் உறவும் சுற்றமும்.

ஆரம்பத்திலேயே அலோபதி மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்து கொண்டிருந்தால் நோய் குணமாகியிருக்கலாம்! ஒரு பக்கம் பயம், மறுபக்கம் பிடிவாதம்! ஆனால் ஒரு முறை இழந்த அதே மனித வாழ்வு மீண்டும் கிடைக்குமா? எனவே மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ளத் தயங்காதீர்கள்! உடல்தான் தெய்வம். நோயற்ற வாழ்வுதான் செல்வம்.

 ------------------------------------------------------------------------------------------------------------------------
பிறந்ததுமே மனித வாழ்க்கை மரணத்தை நோக்கிப் பயணிக்கிறது! எங்கு, எப்படி, எப்போது என்பதைதான் யாரும் அறிய மாட்டார்கள்!
--------------------------------------------------------------------------------------------------------------------------
              1. உங்களுக்கு இடைவிடாத இருமல்
              2. இருமித் துப்பினால் இரத்தம்,
              3. மூன்று வாரங்களுக்குள் குணமாகாத உடல் புண்கள்,
              4. எடை குறைதல், பலவீனம், சோர்வு,
              5. உடலின் எந்தப் பகுதியிலிருந்தாவது திடீர் இரத்தக் கசிவு,
              6. மூச்சு விடுவதில் சிரமம்,
             -----------------------------------------------------------------------------------------
             இவையெல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
             ------------------------------------------------------------------------------------------
             அதிகமாக வெற்றிலை, பாக்கு போடாதீர்கள்.
             புகையிலை  உபயோகிக்காதீர்கள்.
             மது வேண்டாம்!
             சிகரெட் பயன்படுத்தாதீர்கள்.

அலோபதியால் முழுமையாக எல்லோரும் குணமாவார்கள் என்ற உறுதி மொழி கொடுக்கமுடியாது. புற்று நோய்க்கான சிகிச்சையின் கீமோதெரபியும், ரேடியேஷனும் மிகுந்த வலியைக் கொடுக்கக் கூடியவைதான். வலியைத்தரும் வலிமையான மருந்துதான் வலியிலிருந்து விடுதலைதரும் என்னும் போது வேறு வழியில்லை! வருமுன் காப்பீர்!