மத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந்தைப் பேறு வேண்டி தியானம் செய்தான். அவன் வேண்டுகோளுக்கு இரங்கி இறையருளால் பிறந்த தெய்வக் குழந்தையே சாவித்ரி.
அவள் பிறந்த அந்த நாளில், எங்கும் மென்மையான இசை ஒலித்தது. வெண்மையான மல்லிகையின் நறுமணம் வீசிற்று. மாமரங்களின் மலர்மணம் நாசியை நிரப்பிற்று. தேனுண்ணும் வண்டுகள் ரீங்கரித்து ரகசியமாய் மலர்களுக்கு சேதி சொல்லியது. சூரிய ஒளி இறைவனின் புன்னகையைச் சுமந்து வந்தது. இயற்கை ஆராதனை செய்ய அழகுக் கோலம் பூண்டது .
இறைவனையும் மனித மனதையும் இணைக்கும் பாலமாய் தெய்வத்தன்மை வாய்ந்த அழகுக் குழந்தையாய்த் தோன்றினாள் சாவித்ரி. அவள் பிரபஞ்ச ஒளிச் சக்தியின் மகள். பேரழகும், அறிவும், கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் நிறைந்து சகலகலாவல்லியாய், அரண்மனையின் ஒளிவிளக்காய், மரியாதைக்குரியவளாய் தன் தெய்வத்தன்மை வெளியே புலப்படாவண்ணம் வளர்ந்த சாவித்திரிக்கு உரிய பருவம் வந்தும் ஏற்ற கணவன் கிடைக்கவில்லை. அதனால் தந்தையான அசுவபதி அவளை பயணம் மேற்கொண்டு அவளுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக்கண்டு வருமாறு கூறுகிறார்.
ரதத்தில் ஏறிய இளவரசி நெடிய பரந்த சாலைகளையும்,, நகரங்களையம், சிறு கிராமங்களையும், சமவெளிகளையும், நதிகளையும், காடுகளையும் கடந்து செல்கிறாள். வானத்து விண்மீன்கள் அவளுடைய நண்பர்களாகின்றனர். இரண்டு ஆண்டு பயணத்தின் பின் அழகியதோர் காட்டின் விளிம்பில் பகைவர்களால் காட்டிற்குத் துரத்தப்பட்ட சால்வ தேச அரசன் த்யுமத்சேனனின் மகன் சத்யவானைக் காண்கிறாள். அவனே தன் 'ஆன்மாவின்சினேகிதன்' துணை என்பதை அறிகிறாள். மயில்கள் ஆட, குயில்கள் கீதமிசைக்க, காட்டுமரங்கள் தலையசைத்து ஆசிவழங்க தென்றல் மந்திரம் மொழிய காட்டுப் பூக்களால் ஆன மாலையை சத்யவானுக்கு அணிவிக்க அவர்களுடைய திருமணம் வானமும் பூமியும் சாட்சியாக நடக்கிறது. மனங்கள் ஒன்று படுவதே மணம் அல்லவா?
தந்தையின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரியின் முடிவைக்கேட்டு அசுவபதி மகிழ்கிறார். ஆனால் அங்கே அந்த சமயம் வந்த நாரதர் சத்யவான் ஒரே ஆண்டில் மரணமடைவான் என்பது விதி என்கிறார். தன்முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாத சாவித்ரி தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் சத்யவான் வசிக்கும் கானகத்தை அடைகிறாள்.
அரசகுமாரி, கானகத்தில், குடிசையில் தன் திருமணவாழ்வைத் தொடங்குகிறாள். சத்யவானின் தாயும் தந்தையும் அவனுடன் வசிக்கின்றனர். அவர்களுடைய தேவைகளை அறிந்து பணிவிடை செய்யும் சாவித்ரி என்ற மங்கையர் திலகம் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்கிறாள். கணவனுடைய காதலில் மெய்மறந்து வாழும் அவளுக்கு சத்யவான் அந்த ஆண்டு முடிவில் இறந்துபோவான் என்ற உண்மை தெரிந்தும் அதை வெளியே காண்பித்துக் கொள்ள முடியாமல், அதே நேரத்தில் தனக்குள்ளே அந்த ரகசியத்தைப் பாது காக்கவேண்டிய கட்டாயத்தில் கடமைகளைச் செய்கிறாள்.
வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது. தன் கணவனின் மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டு,தன் துயரத்தை வெளிக்காட்டாது வாழ்வது என்பது எத்தனை கடினமான செயல்! மானுடம் மரணத்திற்கு அடிமைப்பட்டக் கிடக்கிறது. மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வழியைக் காண்பதற்கே நீ பிறந்தாய்! எல்லோரையும் போல துயரத்தை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறக்கவில்லை. மானுடத்தின் விதியாகிய மரணத்தை எதிர்த்து நிற்கும் வழியை உனது ஆத்மசக்தியால் காண்பாயாக என்ற குரல் அவள் உள்ளத்தில் ஒலிக்கிறது.
பகல் வேளைகளில் பணிவிடையும்,இரவு நேரத்தில் கணவன் உறங்கியபின் சத்யவானை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கான யோகத்தை ஆரம்பிக்கிறாள். அதுதான் ஆன்மாவின் யோகம்! அது என்ன யோகம்? நம்முடைய தினசரி வாழ்வில் நாம் உண்கிறோம், உறங்குகிறோம்.வேலை செய்கிறோம்! ஆனால் உண்மையில் நம்முடைய உடலாகிய அதிசயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நோய் வந்தால் ஒழிய நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயற்சிப்பதில்லை!
நம் உடலின் முக்கிய செயலான மூச்சை உள் வாங்கி வெளிவிடும் பிராணமய உறுப்புகளை, உண்பவற்றை சீரணித்து சமநிலைப் படுத்தும் அன்னமய தேகத்தை, சிந்தித்துச் செயல்பட உதவும் மூளையின் அறிவு சார்ந்த செயல்களை நடத்தும் மனமய உறுப்புகளை, நரம்பு மண்டலத்தை இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் சக்தியை, அதற்கு பக்கபலமாக இருக்கும் ஆன்மாவை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.
சாவித்ரி ஒருமைப்பட்ட மனதுடன் தன்னுள்ளே ஆழ்ந்து நோக்குகிறாள். முதன் முதலில் மிகமிகப் பெரிய வெறுமையிலிருந்து தோன்றிய ஏதோ ஒன்று மெல்லமெல்ல ‘நான்’ எனும் முனைப்பை ஏற்படுத்துகிறது. “நான்” என்ற முனைப்பைச்சுற்றி எண்ணங்கள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் உருவாகின்றது. இதற்குப் பின்னால் ஆன்மா உள்ளது! ஐம்புலன்களின் வசப்படும் மனது காலமெனும் அலைகடலால் அமைதி இழக்கிறது. அதனால் தன் ஆழ்மனதின் தனிமையில் இறைவனின் ஒரு பகுதியாகிய விளங்கும் ஆன்மாவைக் கண்டறிய மனிதனால் முடிவதில்லை. ஆயின் ஆன்மாவைக் கண்டவனால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை சாவித்ரி உணர்கிறாள். அளப்பறிய அமைதியும், ஆனந்தமும், வலிமையும் பெறுகிறாள்.அவள் முகத்தில் அமைதி பிரதிபலிக்கிறது.
மறுநாள் சத்யவான் இறக்கவேண்டிய தினம். என்றுமில்லாத அதிசயமாக சத்யவானுடன் அனுமதி பெற்றுச் செல்கிறாள் அவள். காட்டின் அதிசயங்களையெல்லாம் அவளுக்குக் காண்பித்துக் கொண்டே செல்கிறான் சத்யவான். மரம் வெட்டுகையில் கீழே சாய்கிறான்.உலகத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்தவன் மரணதேவன்தான். பிறவி எடுத்தவர்கள் அனைவருமே அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவனுடைய பாசக் கயிற்றிலிருந்து யாருமே தப்பமுடியாது.
மரணதேவன் அவனுடைய ஆன்மாவைக் கவர்கிறான். பெரியதோர் மரத்தின் கீழ் கணவனுடைய உடலை மடிமீது தாங்கிய சாவித்ரி, உயிரற்ற சத்யவான்! சத்யவானின் ஒளிஉடலாகிய ஆன்மாவை கவர்ந்து செல்லும் எமனின் பின் தன்னுடைய *“உட்சோதியில் கலந்து உலகத்தை மறந்து, ஒருமையுற்று” பயணிக்கிறாள் சாவித்ரி.
மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை பகவத்கீதை காட்டுகிறது. ஆனால் உலக மாதாவாகிய அதிதி என்னும் ஆதிபராசக்தியின் தரிசனத்தை ஶ்ரீ அரவிந்தர் தன் “சாவித்ரி” மகாகாவியத்தில் அற்புதமாகக் காண்பிக்கிறார்.
சாவித்ரியின் இதயக் கோயிலில் குடிகொண்டிருக்கும் அன்னை அவளுடைய யோகத்தால் எமனுக்கு தரிசனம் தருகிறாள். எப்படி?மரண தேவன் திகைத்து நிற்குமாறு, ஒளிமயமாக காட்சியளித்துத் தன் முகத்திரையை நீக்குகிறாள். நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கண்கள், பிரபஞ்சத்தையே ஆடையாய் அணிந்த மகாசக்தி. அறிய விரும்பும் யோகியரின் மூலாதாரத்திலிருந்து, சகஸ்ரகமலத்தை அடைந்து, மூளையின் அணுக்களைத் தங்க மயமாக்கி ஆனந்த அமுதத்தைப் பொழியும் அன்னை!
*“வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்
மூலமாசக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மகாமாயை தானாவாள்
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மகா ராணி.
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆதி பராசக்தி -"
மரணமற்றவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாத அதிதி தேவியின் தரிசனத்தை சாவித் ரியிடம் பெறுகிறான். மனிதனால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழமுடியும் என்பதற்கு முதற்படியாக சத்யவானின் ஆன்மாவைக் கொடுக்கும்படி ஆணையிட சாவித்ரி சத்யவானுடைய உயிருடன் பூமிக்கு வருகிறாள்.
சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்த நாளாகக் கருதப்படும் மாசி- பங்குனி மாதங்கள் சேரும் நல்ல நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்டிர் காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள்.
யமனோடு சாமர்த்யமாகப் பேசிய பெண் என்ற வகையில் சாவித் ரி பேசப்படுகிறாள். அதே போல நோன்பு நாளில் விரதம் இருந்து, அரிசிமாவினால் செய்த அடையை நிவேதனம் செய்து நோன்புக் கயிறு அணிந்து கொள்வதுதான் சாவித்ரி விரதம் என நம்பப்படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் இயற்கையிலேயே தன்னுடைய குடும்பத்திற்காக திருமணமானபின் பிறந்த வீட்டையும் வாழ்ந்த வாழ்வையும் துறந்தவர்கள். பின் பெற்ற குழந்தைகளுக்காகவும் கணவனுக்காகவும் வாழ்பவர்கள்! அதுவே தவம்.
ஆன்மாவை அறிய, ஒருமையோடு தூய்மையான வழிபாடு செய்யும் சக்தியுடையவர்கள் பெண்கள். ஆண் பெண் இருவரிடமும் சக்தியாய் அன்னை விளங்குகிறாள். அவளை வழிபடுவோம். ஆணின்றிப் பெண்மை முழுமையடைவதில்லை. பெண்மையின் அன்பு இன்றி ஆணின் வாழ்வு ஒளி பெறுவதில்லை!
இந்தக் கதை மகாபாரதத்தில் வருவதாகும். மகாபாரதத்தின் திரெளபதி, இராமாயணத்து சீதை, அகலிகை, மண்டோதரி, தாரை ஆகிய அனைத்து மாந்தரையும் விட மிக உன்னதமானவளாக, யோக வாழ்வினால், தன் தவத்தால் கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்ரி பெருமைக்கு உரியவள்.
(மகான் மகாயோகி ஶ்ரீஅரவிந்தரின் மந்திரச் சொற்களால், படைக்கப்பட்ட காவியம் “சாவித்ரி”. அவருடைய கருத்துக்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.)
- பாரதியாரின் பாஞ்சாலி சபதம்