இந்த வேலம்மா வருகிற வழியைப் பார்த்து கண்ணே வலி எடுத்துவிட்டது பர்வதத்துக்கு. ஆயிற்று மணி பதினொன்று! இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும்! ஒரு வண்டிப் பாத்திரங்கள்!
சாதாரணமாக பத்து மணிக்கு வந்துவிடுவாள் வேலம்மா. வரமாட்டா போல என கன்னத்தில் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் வாசல் கேட் திறக்கும் சப்தம் இனிமையாகக் கேட்டது. வேலம்மாதான்! அம்மா உடம்பு முடியல,ஜொரம். அதுதான் ஏதாவது மாத்திரை இருந்தால் வாங்கிட்டு, சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.
சூடா காப்பியும், மாத்திரையும் தரேன். பாத்திரம் மட்டும் செஞ்சுடும்மா, என்றாள் பர்வதம்.
சரிம்மா, நாளைக்கு முடிஞ்சாதான் வருவேன்.
இரவு எல்லாரும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தவளை,
''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே," என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். "ஏம்மா நாளை வேலம்மா வரமாட்டாளா?" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.
''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே," என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். "ஏம்மா நாளை வேலம்மா வரமாட்டாளா?" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.
ஆமாம், அவளுக்கு உடம்பு சரியில்லே. நாளைக்கு வரமாட்டேன்னா. இந்த வாரம் பூரா மட்டம்னுதான் நினைக்கிறேன்..........................
என்னங்க, நான் சொன்னா காதிலயே போட்டுக்க மாட்டீங்க. போனவாரம் சரோஜா வீட்டில பாத்திரம் தேய்க்கிற ''டிஷ் வாஷர்'' வாங்கியிருக்காங்க. நான் பாத்தேன். எவ்வளவு நல்லா பாத்திரம் எல்லாம் பள பளன்னு புதுசு கணக்கா ஆயிடிச்சு தெரியுமா! வாங்கிக் குடுத்தா என்னவாம்?
"அது என்ன வெலை தெரியுமா உனக்கு? ரொம்ப சுலபமா சொல்லிட்டே! 47,000 ரூபாயாம். சரோஜா புருஷன் சொன்னார். மாசம் வேலம்மாக்கு 500 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு 6000/- மிஷினுக்கு?........மிஷின் வேஸ்ட்." என்றார் துரை. இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ? ரிப்பேர் செய்யற ஆளுக்கு 'போன்'போட்டே என் உயிர் போயிடுமில்ல!
இதோ பாரம்மா, தள்ளி நில்லு, நான் வேணா நாலு நாள் லீவு போட்டுட்டு பாத்திரம் கழுவறேன் என்றார்.
"இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, எதுக்கெடுத்தாலும் கணக்கு," என்று முகம் திருப்பினாள் பர்வதம்.
வேலம்மாக்கு 'டெங்கு' காச்சல், வரமுடியல. வேற ஆளுங்களும் சரிப்பட்டுவரல! ஒன்னா நேரம், இல்ல சம்பளம், என்னதான் செய்யமுடியும்?
'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கேற்ப துரையும் விட்டுக் கொடுத்தார்.
அடுத்ததாக கடைகளுக்குப் படையெடுப்பு நடந்து விலை, உயரம், அகலம் இத்யாதி விவரங்கள் எல்லாம் கேட்டு வாங்கி, அலசி ஒருவழியாக ஒரு மிஷினைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பர்வதத்திற்கு மகாசந்தோஷம். அப்பாடா இனிமேல் வேலம்மாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். இரவு சாப்பாடு ஆனால் எல்லா பாத்திரங்களையும் மிஷினுக்குள்ளே அடுக்கி விட்டால் அது பாட்டுக்குத் தேய்த்துவிடும்.
ஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாம்ஜாமென்று வந்து இறங்கியது ''டிஷ் வாஷர்.'' கூடவே தேய்க்க உப்பு, பொடி, லிக்விட்........! சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள்! வந்த அன்று பாத்திரங்கள் அப்படி இப்படி என்று எப்படியோ அடுக்கப்பட்டு பர்வதத்தால் "ஸ்விட்ச் ஆன்" செய்யப்பட்டது. அடடா பாத்திரங்கள் எல்லாம் பளபளக்கின்றன என்று எல்லோரும் வாய் பிளந்தார்கள்!
ஒரு வாரம் ஆயிற்று! என்னம்மா சந்தோஷமா? மிஷின் நல்லா வேலை செய்யுதா? என்றார் துரை.
ம்..ம்.. என்றாள் பர்வதம். அவர் போனவுடன், என்ன மிஷினோ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
பாத்திரங்களை எல்லாம் அப்படியே உள்ளே வைக்க முடிவதில்லை. அடி பிடித்தவை, பால் பாத்திரங்களின் ஆடைகள், எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்தாலே பாதி தேய்த்தாகி விடுகிறது. அதற்கு மேலே சும்மா மிஷின் இருக்கிறதே என்று போட வேண்டியிருக்கிறது. பாத்திரங்களை எல்லாம் ஊற வைத்து, ஒருமுறை கழுவி மிஷினுக்குள் போடுவதற்கு பதில் நாமே தேய்த்துக் கொண்டிருக்கலாம்! என்ன செய்வது ? சரோஜா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லவே இல்லையே!இதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும்? சும்மா இருப்பதே சுகம் என்று பேசாமல் ஆகிவிட்டாள் பர்வதம்.
அழைப்பு மணி அடிக்கிறது. அவள் சினேகிதிதான். வா பங்கஜம், வாங்க ரத்னம்மா, என்று வரவேற்றாள் பர்வதம். நீயும் என்னவோ பாத்திரம் தேய்க்கிற மிஷின் வாங்கிட்டியாமே? சரோஜா சொன்னாங்க! நல்லா இருக்கா? எத்தனை பாத்திரம் வைக்கலாம்? குக்கர் தேய்க்க முடியுமா? எங்க வீட்டிலும் இந்த முனியம்மா சரியாவே வரதில்ல. ஒரு மிஷின் வாங்கிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன். அதுதான் விஷயம் தெரிஞ்சுகிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றாள் பங்கஜம்.
ஆமாங்க மிஷின் வாங்கிட்டேன். சூப்பரா இருக்கு. நல்லா எல்லா பாத்திரமும் பள பளன்னு மின்னுது.
வேலை மிச்சம். தேய்ச்ச பாத்திரத்தையெல்லாம் துடைக்க வேண்டாம். அதுவே சுடசுட காய வெச்சு குடுத்துடுது. ரொம்ப நல்லாருக்கு என்றாள் பர்வதம் மனதுக்குள் சிரித்துக் கொண்டே!பிரச்னைகளைச் சொன்னால், 'பாத்தியா நாம்பளும் வாங்கிடுவோம்னு பொறாமைக்காக பொய் சொல்கிறாள்' என்று நினைப்பார்கள்.
வாங்கிவிட்டால் அவர்களும் கெளரவமாக எங்க வீட்டில 'டிஷ் வாஷர் ' இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொள்வார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!