30 Jun 2013

சரியா? தவறா?

''காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.'' 
என்று காலனுக்கு சவால் விட்டவர் பாரதி. ஆனால் பாரதியையே யானையின் காலால் மிதிக்க வைத்த காலனின் சாமர்த்தியம் கண் கலங்க வைக்கிறது அல்லவா? ஆனாலும் பாருங்கள் காலன் தன் கை வரிசையைக் காட்டவோ, வாலாட்டவோ  முடியாத அளவு பாரதி தன் கவிதைகளில் வாழ்கிறான், வாழ்வான். மேலுலகில் அந்தக் காலனைப் பார்த்து, ''ஓய், எமனே, என் உயிரைத்தானே நீ எடுத்தாய், ஆனாலும் பார் நான் மானிடரிடையே எத்தனை புகழுடன் வாழ்கிறேன், '' என்று மீசையை முறுக்கி பெருமிதத்துடன் சிரிக்கிறானோ என்னவோ? ஆனால் அத்தகைய வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

என்ன அத்தை எதையும் எழுதவில்லை, என்று அண்ணன் மகள் அலைபேசியில் கேட்க, எதையும் எழுதும் மன நிலையில் இல்லை, என்செய்வது என்றேன்.  எல்லாம் இந்தக் காலனால் வந்ததுதான்! காலன் கவர்ந்து போன இரு உயிர்களை, சூழ்நிலையை நினைத்தேன். அப்போது கண்ணில் பட்டது ஒரு கதை.

சூரியனின் பொற்கிரணங்கள் வானவில்லின் வர்ணஜாலங்களால் பனி மூடிய கயிலைமலையின் சிகரங்களைத் தழுவும் மாலை நேரம்! மகாவிஷ்ணு கருட வாகனத்தில் தன் நண்பரான சிவபெருமானை தரிசிக்க வருகிறார். கயிலையின் நுழைவாயிலில் கருடன் சுற்றுப்புரத்தின் அழகினைப் பருகியவாறு
ஓய்வெடுத்த நேரத்தில் அவர் கண்களில் படுகிறது ஒரு அழகான பறவை! எத்தனை வர்ணங்கள் அதன் சிறகுகளில்! கழுத்தின் அழகென்ன, கண்களின் விவரிக்க முடியாத ஒளியென்ன, தலைசாய்த்துப் பார்க்கும் ஒய்யாரம் என்ன என வியக்கிறார் கருடன்! கயிலை மலைதான் அழகென்றால், இந்தப் பறவையின் அழகை என்னென்பது என ஆச்சரியப்பட்ட அந்த வேளையில் எமமகாராஜன்  நுழை வாயிலில் நுழைகிறார். சட்டென்று அந்தப்பறவை அவர் கண்களில் படுகிறது. புருவம் உயர ஆச்சர்யப் பார்வையொன்றை வீசிக்கொண்டே போகிறார்.

இவை அனைத்தையும் கவனிக்கிற கருடனுக்கு மனத்தில் ஒரு சந்தேகம், பயம். அடடா, இந்த எமனின் பார்வையில் வீழ்ந்துவிட்ட இந்தப் பறவையை எப்படிக் காப்பாற்றுவது? நம்மால் முடியுமா? வேறு எங்காவது இந்தப் பறவையைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைக்கலாமா? அது விவேகமான செய்கையா? அல்லது அநாவசியமான பயமா? பாவம், இந்தப் பறவை! 
கருடனின் மனம் பரிதவிக்கிறது. பறவையிடம் இரக்கம் தோன்றுகிறது. எப்படியாவது இந்தப் பறவையைக் காப்பாற்ற வேண்டும். நான் செய்கின்ற செயல் தெய்வ சங்கல்பத்தில் ஒரு சிறு துளியாக இருக்கட்டும்! என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்த கருடன் மறுகணம் அந்தப் பறவையை அப்படியே தூக்கி வெகு தூரத்திலுள்ள  தண்டகாரண்யவனத்தில் பாயும் சிற்றருவியின் பக்கத்திலுள்ள பாறை மீது  வைத்துவிட்டுத் திரும்பினார்.

விஷ்ணு வருவார் என எதிர் பார்த்த கருடனுக்கு முன்னால் எம தர்மராஜன்  வெளியே வந்தார்.  கருடனைப் பார்த்ததும் சிரித்தார். கருடனும் தன் வந்தனங்களைத் தெரிவித்து,'' உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்றார். அதற்கென்ன கேள் என்றான் எமராஜன். 
''ஐயா, நீங்கள் உள்ளே நுழையும் போது இங்கே அமர்ந்திருந்த பறவையைப் பார்த்து நெற்றியைச் சுளித்தீர்கள்! அதன் காரணம் என்னவோ?''

எமராஜன் சொன்னான்,'' ஓ, நான் அதைப் பார்த்தவுடன், தண்டகாருண்ய வனத்தில், சிற்றருவியின் பக்கத்திலுள்ள பாறையில் மலைப்பாம்புக்கு இறையாக வேண்டிய இந்தப் பறவை இங்கே எப்படி உட்கார்ந்திருக்கிறது? வெகு தூரத்திலுள்ள அவ்விடத்திற்க்கு எப்படிப் போகப் போகிறது என நினைத்தேன். அந்தப் பறவை வேறு பிறவி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்படியாவது போயிருக்கும். வருகிறேன்.''

கருடன் திகைத்துப் போய் நின்றான். நல்லது செய்ய நினைத்து ஒரு பறவை இறக்கக் காரணமாகிவிட்டோமே என வருந்தினான். இறைவனே, உன்னுடைய விளையாட்டில் நான் ஒரு கருவியாய் மட்டுமே இருந்தேன். சும்மா இருக்கும்போதும், செயல்களைச் செய்யும் போதும் நான் உன் கருவியே. எதுவும் காரணமின்றி நடப்பதில்லை என மனம் தேறினான்.

கருடன் செய்தது சரியா, தவறா?

சும்மா வலிக்குக் காரணம் கேட்கப் போய் பரிசோதனை மேசைமேல் இருந்தவனின் இதயத்தை நிறுத்திவிட்டான்! பொல்லாதவன்! மரணதேவன்!

மருத்துவரிடம் போனது சரியா? தவறா?

யாரும் வேண்டாம், தனித்து வாழ்வதுதான் சுதந்திரம் என்ற மனப் பான்மை பெருகிவருகிற காலகட்டத்தில் வாழ்கிறோம் நாம். ஒரு பக்கம் முதுமையின் பிடிவாதம்! மறுபக்கம் இளமையின் சுதந்திர வாழ்க்கை. பேசுவதற்கு அலை பேசி, பொழுது போக்க டீ. வீ., உணவுக்கு ஓட்டல்கள் ! வாழ்க்கை இனிதாகவே இருக்கிறது. காலன் வருகிறவரையில்.......!

சாப்பிட்டு வந்தவர் கால்தடுக்கி  கீழே வீழ்ந்தார். எழுந்திருக்க முடியவில்லை! எவருக்கும் தெரியாமல்  இறந்தே போனார். மூன்று நாட்களுக்கு மேல் காற்று சொன்ன செய்தி..........................!

உயிர் இருக்கும் வரைதான் உடலுக்குப் பெருமை! 
''ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே'' என்பார் அருணகிரிநாதர்!
அழுது என்ன செய்வது? யாரை நோவது?
இது விதியா? இயற்கையா?

தனித்து வாழ்ந்தது சரியா, தவறா? 

உத்தராகண்ட் மாநிலத்தில் நான்கு புனித இடங்களை  தரிசிக்க  யாத்திரை மேற்கொண்டனர் லட்சக்கணக்கானோர்.  நிலச் சரிவு, வெள்ளம் என ஆயிரக்கணக்கில் மரணதேவன் வசமானார்கள்!
ஏதோ புண்ணியம் செய்தவர்கள் பிழைத்தார்கள் என்கின்றனர் ஒரு சிலர். ஓ, தெய்விக யாத்திரையின் போது இறைவனின் பாதமலர்களை அடைந்த புண்ணியவான்கள் என்கின்றனர் ஒரு சிலர். என்ன பாவம்
செய்தார்களோ யாத்திரையின் போது இப்படி ஆனதே என்கின்றனர் ஒரு சிலர். 

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்வானேன்? எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பெருமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படுவானேன்? சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை!

எந்த நேரத்தில் எப்படி இறுதி நேரம் வரும் என்பதை யார் அறிவார்? 

''அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்;
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது; இதுவே திண்ணம் ''
என்பது பகவான் ஶ்ரீ ரமணரின் உபதேசமாகும். 




                               சூரிய ஒளியில் பொன்வண்ணமாய் ஜொலிக்கும் கயிலையங்கிரி.


                               ''உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சியோங்க
                                          உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
                                கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
                                          கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
                               விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
                                          வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
                               தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
                                           சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.''
                                                
                                                             -   திருவருட்பிரகாச வள்ளலார் 

              அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!