சேலத்தில் எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்து வீடு திரு. நரசிம்மனுடையது. அவருக்கு ஐந்து பெண்கள், இரு மகன்கள். அவர்கள் வீட்டுப் பக்கம் இலந்தைமரம், கோணப்புளியங்காய் மரம்,மகிழ மரம், புளிய மரம் என நான்கு மரங்கள்! இலைகள் எல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் விழும்.
அதை சுத்தப் படுத்துவது கஷ்டம். செய்யாவிட்டால் கீழே விழும் இலைகளால் சாக்கடை அடைத்துக் கொண்டு தண்ணீர் போகாது. தினந் தோறும் பெருக்க வேண்டும். பெருக்கும் வேலையைப் பெரும்பாலும் அப்பாதான் செய்வார். அம்மாவுக்கு நேரம் இருக்காது.
சார், கொஞ்சம் இந்தப் பக்கத்துக் கிளையையாவது வெட்டுங்க. இந்த இலைக்குப்பையை சமாளிக்க முடியல என்பார் அப்பா!
அதுக்கென்ன வெட்டிட்டா போச்சு என்பார் நரசிம்மன் 'அங்கிள்.'ஆனால் வெட்டமாட்டார்!
இந்த மரக் கிளைகள் இந்தப் பேச்சைக் கேட்டு பயப்படுமோ என்னவோ தெரியாது. எனக்கு பயமாயிருக்கும்.
பயம் என்ன பயம், வெட்டினால் இலவசமாக மரம் அன்பளிப்பாகக் கொடுக்கும் இலந்தப் பழம், கொடுக்காபுளி, புளியம் பழம் இதெல்லாம் கிடைக்காது! லீவு நாட்களின் மதியப் பொழுதுகளில் மதில் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, இந்தப் பழங்களை ருசித்துக் கொண்டே கதைப் புத்தகம் படிக்கும் சுகம் போய்விடும்!
காலையில் கண்விழித்ததும் ஓடிப் போய் சின்னக் கூடையில் மகிழம் பூக்களை சேகரித்து, இலந்தைப் பழம் பொறுக்கி என்னவோ வாழ்க்கையில் பெரியதாக சாதித்துவிட்ட திருப்தியில் மனம் முழுக்க சந்தோஷமாய், ம்.... .., என்ன நிறைவு!
இந்த மகிழம் பூ இருக்கிறதே அதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ஒவ்வொன்றாகப் பொறுமையுடன் பொறுக்கி, நூலில் நிதானமாகக் கோர்த்து, ஆச்சர்யத்துடன் பார்ப்பேன்! எவ்வளவு சின்னப் பூ! எங்கே இருக்கிறது இந்த நறுமணம்? எப்படித் திருப்பிப் பார்த்தாலும் மணம் இருக்கும் இடம் தெரியவில்லையே?
விதவிதமான பூக்களில் வெவ்வேறு விதமான நறுமணங்களை இரண்டற இயைத்து எவ்வாறு
இறைவன் படைக்கிறான்? எத்தனை வண்ணங்கள், எத்தனைஅழகு!
நேற்று மாலை சாலையோரத்தில் ஓர் மகிழ மரம்! சாலையெங்கும் மகிழம்பூ! வாகனங்களால் நசுக்குண்டு....பாவம், பார்த்ததும் துளிர்த்தது பழைய நினைவு! கண்ணில் பட்டதும் மலரெடுக்காமல் வருவேனா?
இறைவன் படைக்கிறான்? எத்தனை வண்ணங்கள், எத்தனைஅழகு!
நேற்று மாலை சாலையோரத்தில் ஓர் மகிழ மரம்! சாலையெங்கும் மகிழம்பூ! வாகனங்களால் நசுக்குண்டு....பாவம், பார்த்ததும் துளிர்த்தது பழைய நினைவு! கண்ணில் பட்டதும் மலரெடுக்காமல் வருவேனா?
அடடா சாலையில் நடந்து போவையில்
காற்றுத் தேவன் வந்தான்
கையைப் பிடித்துச் சற்றே நிறுத்தி
நறுமணப் பன்னீர் தெளித்தான்
பொன் வண்ணச் சின்னக் காதோலை
மணக்கும் மகிழம் பூவாம்.
பூவோ சிறிது மணமோ பெரிது
பொறுமை* தந்திடும் அழகு
காலையில் பூத்து மாலையில் வீழ்ந்து
காலங்கள் மாறிப் போச்சு
வாடி வதங்கி வற்றிச் சுருங்கி
நிறமது மாறி நின்றும்
நறுமணம் மாறா நல்ல சிறுமலர்
மணக்கும் மகிழம் பூவாம்.
--------------------------
பொறுமை* பாண்டிச்சேரி அன்னை மகிழம் பூவுக்கு கொடுத்துள்ள பெயர்.