9 Apr 2013

ஆனந்தம்


மலைசூழ் மாநகராகிய சேலம் ஒரு காலத்தில் மிக அழகிய ஊர். அடர்ந்து, குடை கவிழ்த்தினார் போலும் பசிய இலைகள் சலசலக்க, மஞ்சள் நிறத்தில் சின்னஞ்சிறிய பூக்களில் அழகு காட்டி, பிஞ்சாய்த் துவர்த்து, காயாகி, அரைப்பழமாய் இனித்து, புளித்துத்தித்திக்கும் பழங்களுடைய புளிய மரங்கள் இரு பக்கங்களிலும் கவரி வீச, சாலையின் இரு பக்கங்களிலும் பச்சைப் பட்டாடை அணிந்த மண்மகள் அழகுத் திருக்கோலம் காட்டி, தென்றலிசைப் பாட்டில் மயங்கி நிற்பாள். ஆங்காங்கே வானுயர்ந்து நிற்கும் மரமல்லி மரங்கள் மணம் பரப்ப, ஏற்றம் இறைக்கும் உழவர்களின் இசைப்பாட்டு  ஏலேலோ என முணுமுணுக்கும்.

பெளர்ணமி  நாளின் மாலைப் பொழுதில் இலைகளுக்கு இடையே ஊடுருவி  கண்ணாமூச்சி ஆடும் ஒளிக்கீற்றுக்களுக்கு இடையே தோழிகளுடன் உலாவிவர அனுமதி கிடைக்கும்! கனவுகளின் பகிர்தல்கள், மெல்லிய சிரிப்பொலியுடன் கைகோர்த்து நடக்கும்.

இன்றைக்கு உலாவுவதற்கு  இடமின்றி  நெருக்கடியுடன், மரங்களற்ற மொட்டைச் சாலைகள்!

பெங்களூர் வாசிகளுக்கு கிடைத்துள்ள  மிகப் பெரிய வரம் இங்குள்ள பூங்காக்கள். மலர்ச் செடிகள்  கண்களுக்கு விருந்தளிக்க, கால்களுக்கு  நடைப் பயிற்சி! சிறுவர்களுக்கு  விளையாடும் இடம் !அமர்ந்து ஆர அமரப் பேச இருக்கைகள்! நல்ல பொழுது போக்குக்கு உகந்த இடம்.

தினந்தோறும் வானத்தையும்  பூமியையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளியாய், எண்ணங்களற்ற அமைதி நிறைந்த மனதுடன்,  நானே நானாய், என்னுள் ஒன்றி பூங்காவை நோக்கி  நடக்கையில் எல்லாமே அழகு. காற்றின் தழுவலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் போது பொங்கி வழியும் அந்த நிமிடத்தின் உயிர்ப்பு, சுவாசத்தில்!  மாலைக்கதிரவன் மேற்குத் திசையில் வாரி இறைக்கும்  சிந்தூர வர்ணஜாலங்களைச்   சுமந்து, கணத்துக்குக் கணம் வடிவம் மாற்றி விந்தை காட்டும் மேகப் பொதிகள் அன்றையப் பொழுதின் செய்திச் சுருக்கம்.

செயற்கை அழகின் கலப்புக் கலவாது பொலியும் வெண்ணிற நாரைக்கூட்டங்கள்! பச்சைமேனியின் சிவப்பு ஆரம் பளிச்சிடப் பறக்கும் தத்தைகள் ! கன்னங்கரிய மேனியுடன் கட்டைக்குரல்  எட்டுத்திக்கும்
ஒலிக்க அச்சமின்றித் திரியும் காகங்கள்!  ஒன்றாய்ச் சேர்ந்து வட்டமிடும் புறாக்கள்.

வானளாவிய மரங்கள், பலவிதமான செடிகள், மலர்களற்ற அழகுப் புதர்கள் நிறைந்திருக்க, ஆங்காங்கே போடப் பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பார்க்கும் முகங்களில் ஒரு சிறு புன்னகையைத் தேடும் 
மனிதர்கள்.  அரசியல் பேசியவாறு நண்பர்கள்! 
ஒரு பக்கம்  பெண்கள் 'சிரிப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்' நின்றவாறே பல உடற்பயிற்சிகளைச் செய்து, அவ்வப்போது 'ஹ ஹ' எனச் சிரித்துக் கொண்டிருப்பர். மறு பக்கம் விநாயகர் கோயிலின் முன் உட்கார்ந்தவாறே மூச்சுப் பயிற்சியுடன் இணைந்து செய்யும் உடற் பயிற்சி செய்வோர் 90% பெண்கள்!இன்றைய பெண்களுக்கு உடல் நலம்  பேணுதலில் உள்ள ஆர்வம் பாராட்டற்குரியதாகும்.

பல வண்ண இடுப்புப் பட்டிகளுடன் கராத்தே கற்றுக் கொள்ளும் சிறுவர் சிறுமிகள்!

பூப்பந்தாட்டம் ஆடும் வாலிபர்கள். சறுக்கு மரத்தில், ஊஞ்சலில், சீசாவில் விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள்!    தங்கள் மழலைச் செல்வங்களின் விளயாட்டைப் பார்த்து மகிழும் பெற்றோர்கள்.

காதில் பாட்டுக் கேட்கும் கருவியுடன் கால்சராயும், சட்டையும் அணிந்த யுவதிகள் போட்டி போட்டுக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க ஓட்டநடை பயில்வர்.  சமையலிலிருந்து தூக்கம் வரை சகல செய்திகளையும் உரக்கப் பேசும் நடமாடும் வானொலிகள், ஒற்றையாய், பேசத் துணையின்றி அமைதியின் மடியில் மெளனமாய் வேடிக்கை பார்க்கும் முதியோர்கள். பல முகங்களின் தரிசனங்கள்.

 பலவகைச் செடி, கொடி, மரங்களின் ஊடே மெளன பாஷையின் சுகத்தில் நானும் ஆனந்தமாக ஒரு செடிமரமாய்!










2 comments:

  1. I have decided to read this blog whenever I want to visit the park... you took me through a serene visit to the park.. the Passively active spectator.. Covered all aspects of life in a park... Fabulous

    ReplyDelete
  2. ஒதுங்கி நின்று ரசிப்பதில் இருக்கும் சுகத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.

    அற்புதமான வர்ணனை.

    ReplyDelete